திங்கள், 24 மார்ச், 2014

சனி, 8 மார்ச், 2014

யாரென்று என்னவென்று

யாரென்று என்னவென்று

எனக்கு வந்த
பரிசுப் பொட்டலங்கள் ஒன்றில்
வெரும் காலியிடம் விரவிக் கிடந்தது
அனுப்பியவரின் சீட்டுக் குறிப்பு:
"உனது மறுபுறத்தின் சமிக்ஞைகளை
இத்துடன் அனுப்பியிருக்கிறென்"

நண்பர்கள் கற்பனை வசப்பட்டவர்கள்

நேற்றுக்கூட இப்படித்தான்
வீட்டுவாசல் வெறிச்சென்றீருந்த
மதிய வேளையில்
வெயிலும் நிழலுமாய்ப்
பேசிக்கொண்டிருந்தேன்
எதிபாராது வந்து நின்ற
நண்பன் சொன்னான்:
"இதோ நீ இருண்டு கொண்டிருக்கிறாய்"

ஏதும் நினைவுகளற்று
நின்று கொண்டிருந்த
ஒரு தனியிடத்திலும்
ஒருவன் தோன்றிக்
குறியின்றிக்
கேள்விகளை வீசுகின்றான்

யாரென்று என்னை
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
யார்யாரும்?

விட்டுப்போன வலிகளும்
இதங்களும்

வேறெங்கோ இருந்துகொண்டு
தந்திரமாக
ஒன்று கூடியிருக்கலாம் என்று
நினைத்துக்கொண்டிருக்கும் போதே
நீ வந்து பேசுகிறாய்:

"நீ ஒன்றுகூட வில்லை
உன் சொல் ஒன்றுகூடவும் நாளாகலாம்
கூடாமலும் போகலாம்" என்கிறாய்

யாரென்று என்னவென்று
நினைக்கிறீர்கள்
எல்லாரும்

எஞ்சிய பகுதி

எஞ்சிய பகுதி

அந்தக் கொடூர கனவின்
ஒரு பகுதியின் மிச்சம்
இன்று பகல் கண்ணயர்வில்
தலயாட்டிப் போனது

இருள் கவ்வியிருந்த
அதன் ஓரங்கள் பற்றிய
நினைவுக்கூட்டல்
தோழ்வியில் முடிந்து
அசதி தந்தது

அதன் கூரிய துகள்கள் சில
மாலை உலாவின் போது
செருப்பினுள் நுழைந்திருந்தன

அதன் கொலைநிழல்
மங்கி மயங்கி
என்னைச் சூழ்ந்து
வந்துகொண்டேயிருந்தது

போக்குவரத்து அடர்த்தியின் நடுவே
கூடினின்ற கூட்டத்திற்குள்
எட்டிப் பார்த்தபோது
கனவின்
விலாப்பகுதி நைந்து
ரத்த வெள்ளத்தில் குடல்சரிந்து கிடந்தது

கனவில் வந்தறியாத
அதன்
எஞ்சிய பகுதி
இப்படிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது

பொதுமை

பொதுமை

நீங்களே பாருங்கள் இந்த
எண்ணத்தின் தவிப்பை
யாரைப்போய்ச் சேர்வதென்று
திகைக்கிறது

கூடவே
தன் ஆரம்பம் முடிவு என்று
எவற்றையோ
பிடித்துவைத்துக்கொள்ளப்
பரபரக்கிறது

சுதந்திரம் வழக்கமாக விதிக்கும்
கட்டுப்பாடுகளை
மனனம் செய்துகொண்டிருக்கிறது

புதிது பழையது என்று
வேறு காண முடியாத
மெல்லொலி மேட்டில்
புல்வெளியாக
விரிந்து கொண்டிருக்கிறோமோ என்று
சந்தேகித்துக் கொள்கிறது

வானத்தின்
பலவீனப் பகுதியிலிருந்து
தனக்கு ஏதோ
அசறீரி வந்தது போலவும்
நினத்துக் கொள்கிறது

எனவும் எனவும் நினைக்கிறது

நான் சொல்லத் துடிப்பது:
"ஏன் அலைக்கழிக்கிறாய்
உனது இருப்பின்
அசைவற்ற பொதுமையை
ஏன் கலைக்கப் பார்க்கிறாய்?"

தோல்வி

தோல்வி

தோல்விக்குப்பின் வந்த நாட்கள்
கலவரப் படாமல் கடக்கின்றன

அலையடங்கிய நீர்ப்பெருக்கின்
மேலாக
மெல்ல நடந்துசெல்வதில் சுகம்

பழக்கமில்லாத தவரங்களுடன்
ஜீவராசிகளுடன்
வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன்
தனியே விடப்பட்டிருப்பதில்
ஆறுதல்

வாசனை எதுவும் இல்லை
சுவாசம் சிணுங்காமல் போஇவருகிறது

சாம்பல் நிறம் மட்டும்
மெருகேறியிருக்கிறது
வேறு நிறங்கள் இல்லை

மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது

இந்தத் தருணங்களின்
விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு

பார்ப்பவைகளுடன்
பார்க்க முடியாதவைகள்
பிரித்துணர முடியாதவை
ஆகிவிட்டன

என் விதி

என் விதி

எண்ணத் தொலோஇயாத
வடிவமைப்புகளைச்
சுற்றி சுழல்வது
என் விதி

நினைக்க நினைக்குமுன்
அவை உருவாகிவிடுகின்றன
நினைவின் தொடுதல்
அறியாதவை அவை

ஒன்றும் செய்யாததுபோல் இருந்து
எல்லாம் செய்துகொண்டிருப்பேன்

வடிவம் எனக்கின்றி
வடிவமைப்புகளைச்
சுற்றிக் கொண்டிருப்பேன்
என்விதி

என் சுற்றலுக்குத் தேவையான
இருளையும் ஒளியையும்
பாய்ச்சி உதவுவான்
என் தோழன்

ஆள்கலவாத தோற்றத்தில்
அவனை மட்டும்
தனியே பிரித்தெடுத்து
வைத்துக் கொண்டிருக்கிரேன்

ஒளியும் இருளும் தீர்ந்துபோகும் வரை
நினத்தலுக்கு முன் ஆய
நிலை விரிவு
நிரம்பும் வரை
வடிவமைப்புகளைச்
சுற்றிக் கொண்டிருப்பேன்
என் விதி

பேச்சு

பேச்சு

பேச்சாளரின்
கவனம் முழுவதும்
தன் லயிப்பின்
நடுப்புள்ளியில்

புள்ளியின்
அனந்தகோடி அணுக்களுள்
திசயற்று இருந்தார்

அனந்த கானகத்தினுள்
நிசப்தமாக வீசி மோதும்
புயல்களென் இருந்தது
அவர் பேச்சு

பேச்சின் விசயம் தொகுத்தெடுக்க
வெளிச்சமாய் முகம்காட்டி
இருந்த
முன்வரிசை
முதலில் எழுந்து போனது

யாரின் யார் இவர்
என்று துருவ இருந்த
அடுத்த வரிசை
வினாக்களைத் தட்டி உதிர்த்து
எழுந்து நடந்தது அடுத்தார்போல்

மூலங்களை
பாவனை கண்டு
விழிகளில் உறைந்த
பரவச கனத்துடன் காத்திருந்த
தனித்தனி நபர்கள்
வேறுவேறு
மூலைகளிலிருந்து
புறப்பட்டு போயினர்

பேச்சென்று காணாமல்,
இருப்பதுபோல் தொன்றிய
நான்குபேர் மட்டும்
இருந்தனை
அறியாமையின் பேரன்பு கமழ

கவிதை படிக்கும் போது

கவிதை படிக்கும் போது

குரல்
தெளிவாக
திருத்தங்கள் தேவையற்று
இருக்குமாம்

சிமிட்டலின் மின்னொளி பட்டு
உலகம் பிளந்து
உள்ளே தெரியுமாம்

எதையோ தொட்டுவிட்டதான
திருப்தியில்
விரல்களைப் புதிதாக
நேசிக்கத் தோன்றுமாம்

இதயத்தச் சுற்றி
இளஞ்சூட்டில்
காற்று நிரம்பும்;
த்வனிகளைக்
கண்டடைந்து விட்டதால்
பத்ற்றம் தணியும் ...

சொல்கிறார்கள்

மெலும்
அருகில் எங்கோ இருந்துகொண்டு
தர்க்கம் கவனித்தவாறு இருக்குமாம்,

கவிதை படிக்கும் போது

கனவு - அன்று - கனவு

கனவு - அன்று - கனவு

எல்லாம் குடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்று
அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது

ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்

கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்த்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது

சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றீருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றீருக்கலாம்

ஆயினும்
உரக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடினிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்

கனவு அன்று எண்டத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்

ராகம்

ராகம்

விரல்கள் தாளமிடத் தொடங்கியதும்
அந்த ராகம்
எங்கிருந்தோ
மனசுக்குள்
நுழைந்தது

கிளை பிரிந்து பிரிந்து
கடலடித் தாவரங்களை
அசைத்து இசைகொண்டது

பவளப்பாறை இடுக்குகளில்
குளிரிந்து கிடந்த வயலின்கள்
உயிர்த்து வீறிட்டன
00

எல்லாப் புறங்களிலிருந்தும்
ஒரே காற்று
வீசியடித்தது

கற்பனைகள் முற்றிலும்
கலைந்து போயின

பல தேசத்துக்
குழந்தைகளின் முகங்கள்
ஒரே அழுகையின் கீழ்
ஒன்று கூடின

பாதைகளற்றுப் போனது உலகம்
நேரம் கூட நகர்வதற் கின்றி

கவிதையின் மூச்சு ஒன்று
கவிதையை மறுத்துக்
கடல்வெளி முழுவதையும்
கரைக்கத் தொடங்கிற்று

தேடல்

எதைத் தேடினேன்?

000

கைவிடப்படும்போதெல்லாம்
நுரையீரல்களில்
குளிர் ததும்புகிறது

கடைசி வார்த்தைகளின்
சில துகள்கள் மட்டுமே
எழும்பித் திரிகின்றன

பின்வாங்கிப் போன உக்கிரம்
உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிற
சிறிய குழிகளை
விட்டுப் போயிருக்கிறது
000

தீர்மானித்துக்கொண்டும்
தலைப்பிட்டுக்கொண்டும்
ஆடம்பர அலைச்சல்
எதை அலைந்தேன்?

நாள் மாதம் வருஷம் எல்லாம்
அகன்று பரவத் தெரியாதவையாய்க்
கோடுபாய்ந்து போகின்றன

எங்கிருந்து எனத்தோண்டாது
மேலே கவியும் உரத்த அடர்த்தி
பிரக்ஞயின் வேரில்
பேசிக்கொண்டே நழுவி இறங்குகிறது

சுற்றிலும் திகைப்புகள்
இயல்பே என
ஒடுங்குகின்றன
000

திசைப்பாய்ச்சல் அற்று
இயக்கம் தன் உச்சியில்
உறைவு காண்கிறது

உள்னுழைய அறியாமல்
முதலும் முடிவும் மூச்சொன்றில்
கூம்பிச் சேர்ந்த அம்புனுனியில்
தேம்பி அடங்குகிறது
தேடல்

எலும்புகளின் நூலகம்

பாழடைந்த சிற்றூர் அது

விளையாட்டாய்
ஒரு கல்லைப் பெயர்க்க
அடியில் ஊர்ந்தன
நூறு வயது
விஷப்பூச்சிகள்

வெறும்
முள்செடி விரிப்பின்மீது
வெயில் கிழிந்துகொண்டிருந்தது

எரிந்த குழந்தைகளின்
உடல் விறைப்பைப்
பார்த்துக் கொண்டிருந்தன
கரிந்த சுவர்கள்

மொழிகளை மறந்துவிட்ட
மனசுக்குள்
தூர தூர தேசங்களின்
ரத்தம் வந்து
பாய்ந்துகொண்டிருந்தது

விளையாட்டாய்
வீதிகளைப் புரட்டியபோது
அடியில்
நரபலி தேவதைகளின்
நடன மண்டபம்
நீச்சல் குளம்
ஆமைமுதுகுபோல் சாலை
எலும்புகளின்
மிகப்பெரிய நூலகம் ...

மறையத் தவறிய

தோன்றி மறைந்து தோன்றி
திரும்ப மறையத் தறியது
அந்தக் கற்பனை

அதன்படி ...
எரிகொள்ளிகளின் நடுவே
துடித்து நெளிந்தது உலகம்
நெளிந்த புழுக்கள் சொல்லின,
"இது நாளைய காட்சி" என்று

எண்ணத் தொலையாத
கோணப் புதர்களில்
சிக்கிச் சிதறுவது வாழ்வு என்றார்
நீண்ட அங்கியும் தாடியுமாக ஒருவர்
அங்கியும் தாடியும் தெரிவித்தன
"இது நேற்றிய உண்மை" என்று

எரிகொள்ளிகள்
கருக்கிருட்டில் எழுந்து ஆடிச்
சுட்டிக் காட்டிய
கோணப் புதர்களில் நுழைந்தே
எல்லாரும் போயாக வேண்டும்
"எல்லாரும்" என்பது சொல்லிற்று
"எனினும் சட்டம் எதுவுமில்லை
கோணங்களின் முந்தைய, பிந்தைய
இன்மைகளின்
வழியாகவும் போகலாம்."

ஆகாயம்
தன் ஊசிமுனைக் கால்களாய்
நிகழ்கணத்தின் மீது
நிகழ்கணத்தின் மீது

நின்று தடுமாறீற்று
ஊசிமுனைக் கால்கள்
சொன்னதாவது:
"முன்-பின்களுக்கு நடுவில்
ஊன்றி நிற்கக் கிடைப்பத்யு
மறையத் தவறிய கற்பனை"

தெரிந்துகொள்வது

நண்பர்கள் பகைவர்கள்
உற்றார் உறவினர் ஊறார்
என்னை முடிவு செய்தார்கள்

கல்லும் கானலும் ஒளிவேகங்களும்
உலகின் அனைத்து அசைவுகளும்
என்னை முடிவு செய்தன

இதுவே உண்மை
என நினைத்தேன்

விசித்திரங்களால் பின்னிய அங்கி அணிந்த,
சொல் செயல் விலகிய
பேறூருவங்களோடு புழங்கினேன்
அவை என்னை
உருவு செய்திருக்கலாம்
என்று நினைத்தேன்

நான் உரு ஆகக் காத்திருந்தது
மேலே சொன்ன
யாருக்கும் எதற்கும் தெரியாது

காத்திருந்த போதிருந்த
எனது உருவமே
இந்த எல்லாவற்றியும்
முடிவு செய்திருக்கலாம்
என்று நினைத்துக்கொண்டேன்

நினைவின் அஷ்திவாரம்
என்னுடையதல்லாத அடர் இருள்
என்று கண்டிருந்ததால்
அதற்கும் ஏதாவது பங்கிருக்கும்
என்று நினைத்தேன்

என்னுடையதல்லாதவற்றின்
எந்தத் துகள்கள்
என்னுடையவற்றின் துகள்களுடன்
கலந்தன என்று தெரியவரும்போது
என் உரு வரலாறு
சற்றுத் தெளிவாகலாம்

என்னுடையவை என்பவை
என் உருவை எதிர்னோக்கி
எனக்கு முன்னரே இருந்ததால்,

அப்போது அவை யாருடையவை
என்று தெரியவரும் போது
நான் உரு ஆகினேனா
என்று தெரிந்து கொள்வேன்

பிரிதல் - பிரிவுறுதல்

விரல்களிலிருந்து
இறங்கி வெளியேறி
அந்தப் பாதை
போஇக்கொண்டிருந்தது

அதன் கபடற்ற விறைப்பில் தெரிந்தது
அதனிடம் மர்மம் எதுவும்
இல்லை என்பது

வயல்வெளிகள் தாண்டி
தென்னந்தோப்புகள் தாண்டி
சுனை நிரம்பி வழியும்
ஓடைகளில் இறங்கி ஏறிப்
போனது

அதன் தயக்கமின்மையில் தெரிந்தது
அதனிடம் அர்த்தம் எதுவும்
இல்லை என்பது

மலைமீது பாதிதூரம் ஏறும்வரை
தெரிந்தது பிறகு
காடுகள் சூழ்ந்து
மறைந்துவிட்டன

அதன் மறைவில் தெரிந்தது
பிரிந்து சேரிந்து பிரியும்
யுகங்களின்
இருள் அரசாட்சி

விரல்கள் இப்போது
தவிக்கின்றன
வெளியுகத் தொடர்பு
துண்டிக்கப்பட்டு

விரல்கள் இப்போது
களிகொள்கின்றன
வெளியுகத் தடர்பு
துண்டிக்கப்பட்டு

இந்த அறையில்

இந்த அறையில்


என்றென்றும் இல்லை இனி
அலுத்த சுவடுகள்;
அவற்றின்
கறுத்து வெடித்த காலபூமி

முதலில் மிரண்டு
பின் கமனப்படும் வண்ணம்
நுழைவோர் கண்களில் வெறிக்கும்
சுத்தமான வெற்றிடமே இனி

நான் இருப்பதாக
நினைத்துக்கொண்டிருப்பவர்களோடு
இந்த அறையில்
ஏதேனும் பேச்சு நிகழலாம்
தொட்டால்
நாடித்துடிப்பு தெரியாத
பேச்சு

சாட்சிகள் இல்லாத நிகழ்வுகள்
தினிந்து கிடக்கலாம்
வெற்றிடம் சேதப்படாமல்

இந்த அறையில்
வினாக்கள் விளக்கங்கள்
முற்றிலும் அற்ற
தூய்மை நிகழலாம்

வெளிச்சப் போஓச்சற்ற ஒளியின்
இருப்பில்
என் இளவயது பிம்பம் மட்டுமே அறியும்
கோடிக்கணக்கான வடிவுகள்
குவிந்துகொண்டே இருக்கலாம்
வெற்றிடம் சேதப்படாமல்
இந்த அறையில்

பொதுப் பார்வை

பொதுப் பார்வை

பிரயாணங்களின் ஊடே
தயங்கித் தயங்கி ஒட்டிக்கொண்டது

என்னைப் பார்க்கத் தெரிந்துகொண்டிருந்தது

எனது உடைமைகளைக்
கணக்கிட்டு வைத்திருந்தது

என்கால் தரியில் ஊன்றும்போது
தெம்பு கொண்டது

விளையாட்டுப் போட்டிகளுக்கு
என்னை அழைத்துச் சென்றது;
நீலகங்களுக்கும்

என் ரத்த அழுத்தம்
சமன்பட்டிருப்பதை
சோதித்தறிந்து
அமைதிகொண்டது

என் கவனிப்பு வட்டத்திர்குள்
நிரந்திரமாக வந்துகொண்டேயிருந்தது

விவாதங்களில்
எதிர்ப்பட்டோரை
வெற்றிகொண்டு புளகித்து
என்னைக் கடைக்கணித்தது

எனது தனிப்பார்வைகளை
நான் ஒளித்துவைத்திருக்கும்
இடங்கள் தேடி
ரகசியம் செய்தது

அப்படி எதுவும் இல்லை
என்ற 
என் உண்மையைச்
சந்தேகித்தது

பொதுப் பார்வை


வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...