வியாழன், 6 நவம்பர், 2014
 கவிஞர் மீரா தனது நூலின் முன்னுரையில் ....

கவிஞர் அபி குறித்து ......

"அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும், மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ. சேஷாசலம், க.வை. பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது. வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார் - இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம். நான் செத்தாலும் வாழ்வேன்." 
-----கவிஞர் மீரா  .


"லா.சா.ரா" வோடு பேசிக் கொண்டிருந்தேன் .

                                               --அபி --
                                                            (லா. சா. ராவுக்கு அஞ்சலி)

                                                        { தீராநதி டிசம்பர் 2007 -ல் வெளி வந்த கட்டுரை }

அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இரவு இரண்டரை மணியாயிற்று. பேச்சு நீடித்து நின்று கொண்டிருந்தது. உறங்கும் பம்பரம் போல, ஒரே புள்ளியில், விரிவு, விளக்கம் அலசல் இல்லை. முடிவை நோக்கிய துளி அடையாளமுமின்றிப் பேச்சு நின்று விட்டது. அப்போதுதான் அவர் பார்வையில் பட்டார். உயர்த்திய கைகள் கீழிறங்கி முகம் சற்றுத் தாழ்ந்து கனத்து இருந்தது. அவர் பேச்சு, அவரை அவரது ஆழத்தில் செருகியிருக்க வேண்டும். அங்கு நிலவிய மௌனத்தை நாங்கள் (என்னுடன் என் நண்பர்கள் பாலசுந்தரம், பாலகிருஷ்ணன்) கலைக்கவில்லை அவர் பேசிக்கொண்டிருந்த போதுகூட அதே மௌனம்தான் எனக்கு அனுபவமாயிருந்தது. அப்போது எனக்குப் புரிந்தது. அவர் எழுத்தில் உள்ள உரத்த குரல்களும் ஆயிரம் உணர்ச்சி அறை கூவல்களும் மௌனத்தின் மாற்று வடிவங்களே என்பது இப்படித்தான் நான் லா. ச. ராவை முதன்முதலாகச் சந்தித்தேன். 1975 இல், தென்காசியில் அவர் இருந்த வீட்டு மாடியில் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக அந்தச் சந்திப்பு அதற்கப்புறம் பலமுறை பல இடங்களில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவரே அதிகம் பேசுவார் கூடுதலாக நகைச்சுவை பேச ஆரம்பிக்கும் போது அவர் இருப்பார். தொடர்ச்சியில் சற்றுப் பின்வாங்கிக் கொள்வார். உணர்ச்சித் தகிப்பில் கொஞ்சம் கம்மிப்போய்விடும். குரலில் அவர் எண்ணங்கள் தம் வார்த்தைகளைக் கொத்திக் கொண்டு பறந்து திரியும். அடித்தல் திருத்தல் செய்ய அவ்வப்போது அவர் முன்வந்து குறுக்கிடுவது தெரியும். அது ஒரு அனுபவம் எழுத்து எப்படியோ பேச்சு அவரிடம் ‘இஸங்கள்’ பற்றிக் குறிப்பிட்டேன்.

லா. ச. ரா. இலக்கணம் அறியாதவர்(நல்ல வேளையாக) இலக்கணம் அற்றவர் (சரியாகச் சொன்னால்) இலக்கணம் என்று நினைக்கப்படுகிற இஸங்களைச் சொல்கிறேன். புதிது புதிதாக இஸங்கள் வரும்போதெல்லாம் இலக்கிய உலகம் பரபரப்படைகிறது. பொருந்திக்கொள்ளத் துடிக்கிறது. அவர் எழுத்தில் சில இஸங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியபோது அவர் பொருட்படுத்தவேயில்லை. தோன்றி மூத்துக் கழியும் இஸங்கள் பற்றி அவர் கவனம் கொள்ளவில்லை. அவருடைய தன்னிச்சைத் தன்மையே அவரை வழிநடத்தியது. இஸங்கள் மக்கிப்போகின்றன. இலக்கியங்கள் வாழ்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய இஸங்களுடன் சம்பந்தப்படுத்தி அவரை விமர்சிப்போர் உண்டு. ‘சின்ன வயதில்’ அவருடைய நடையின் கவர்ச்சியில் பிரபித்துக் கிடந்ததாகவும் பிறகு சலிப்பேற்பட்டு விலகிவிட்டதாகவும் இந்த மாதிரியில், தமது ‘வளர்ச்சி’ பற்றிய பெருமிதத்தைச் சொல்வோர் சிலர் உண்டு.

கவர்ச்சியும் மயக்கமும் வெளிப்பார்வை பார்ப்பவர்களுத்தான் லா.ச.ராவின் சரியான வாசகன் நடையழகுகளை, படிமங்களை, சங்கேதங்களை, சைகைகளை, நனவோடை பிரமிப்புகளைத் தாண்டி உள்நுழையும் பக்குவமும் பொறுமையும் கொண்டவன்.

உள்ளிழுக்கப் பட்டவன் முதலில் தன் திகைப்பைப் புரிந்து கொள்வான். தான் நிற்க வைக்கப்பட்டிருக்கின்ற இடமற்ற இடத்தின் தட்ப வெப்பம் உணர்வான். தன் கையறுநிலை உணர்வான். இன்னும் கனத்தைத் தாங்கும் சாத்தியம் கூட இருக்கிறது எனக் காண்பான். லா. ச. ராவின் எழுத்துக்குள் எந்தப் பிரிவினைக்கும் இடந்தராத மனிதாபிமானம் முழு அமைதியில் பனிபோல் நிலவும் அன்பு, சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இலங்கும் ஆன்மீகம் இவற்றைப் பார்ப்பான். தனக்குள் தண்ணெண்ற ஒரு சாந்தம் உணர்வான். இந்த சாத்தியங்களெல்லாம் உண்மை என்பதைத் தான் லா. ச. ரா. 50 ஆண்டுகளாகச் சொல்லிவந்தார். 

ஒருநாள், பேசிக்கொண்டிருந்தவர் இடையே நிறுத்தி விட்டு ‘இதெல்லாம் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறதா?’ என்றார். ‘இல்லை’ என்றேன். ‘எனக்குள்ளிருக்கிற அமைதியை நான் அடைகிறேன்’ என்றேன். லா. ச.ரா அப்படி கேட்டது உரையாடலிலும் கடிதத்திலும் வாசகர்கள் பலரிடமிருந்து அவருக்கு வந்து குவிந்த எதிர்வினைகளை ஒட்டியதாயிருக்கலாம். என் பதில், அவர் என்னைத் தகுதியான ஒரு வாசகன் எனக் கண்டுகொள்ள உதவியதாக இருக்கலாம். உண்மையில் வாசகனிடம் அவரது எதிர்பார்ப்பு வாசகன்  அவர் வழியாக அவரைத் தாண்டிப் போக வேண்டும் என்பது தான். அவரது அனுபவ உலகம், அவரவர் அனுபவ உலகுகளைச் சீண்டிக் கிளர்விக்க வேண்டும் என்பதுதான். எல்லா நல்ல எழுத்தும் வா, வந்து என்னுள் நுழைந்து தாண்டிப்போ’ என்று அகம் திறக்கின்றன. வெளிவேடிக்கை பார்த்து நின்று விலகிப் போவதை அவை விரும்புவதில்லை.

வாழ்வின் எதார்த்தத்தை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும்; பாத்திரங்களும் நிகழ்வுகளும் நம்பகமானவையாக இருக்க வேண்டும். இது இலக்கியத்தில் சற்று  நீண்டகாலச் செல்வாக்குடைய கோட்பாடு. லாச. ராவின்  கதைகளில் இந்த வரையறைகள் மீறப்பட்டிருக்கின்றன. பழங்கதைப் பாணியும் இயற்கை இகந்த தன்மைகளும் தெரிகின்றன. பாத்திரங்களிடம் அதீதம் தெரிகிறது. மித மிஞ்சிய உணர்ச்சி வெளிப்பாடுகள் நேர்கின்றன. தத்துவ ஆன்மீக சஞ்சாரங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றைக் கடுமையாகச் சிலர் விமர்சித்து வந்தார்கள்.

விமர்சனங்களுக்கு லா. ச. ராவிடம் பதில் இல்லை. ஆச்சரியமே அடைந்தார் ‘எனக்குள் நான் காணாத எதையும் விஷயங்களின் தவனியாகக் கிட்டாத எதையும் நான் எழுதவில்லையே. உண்மையைத்தானே சொல்லுகிறேன்’ என்பதே ஆச்சரியத்துக்குக் காரணம். ஆனால், இன்றைய எதார்த்தவியலின் நிலை தலைகீழாகிவிட்டது. மாயத்தன்மைகளுக்கு மொழி மறுப்பில்லாமல் இயல்பாக விரிந்து இடம் கொடுக்கிறது. கதைமைக்கு முக்கியத்துவம் வேண்டியதில்லை. இது வெளியிலிருந்து வந்த  ஒன்று.  இப்போது அதன்  ஆழமான அர்த்தத்தைச் சொல்ல வந்திருக்கிறது. எதார்த்தத்துக்குள் உள்ளொளிந்திருப்பவற்றைப் புனைவும் கனவும் கொண்டு வெளிப்படுத்திய லா. ச. ராவின் அக எதார்த்தத்திற்கு இதை 50களிலே லா. ச. ரா. செய்திருக்கிறார் என்று ஜெயமோகன் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தேடல் இது முடிவிலி. லா. ச. ராவின் 70 ஆண்டுப் படைப்பு வாழ்க்கை முடிவிலியின் இருள் கதிரைப் பற்றிய பிடித்துப் போய்க் கொண்டிருந்தது. பிற்காலக் கதைகளை விட முந்தியக் கால கதைகளில் அதிகத் தீவிரத்துடன் அவருக்கு அலுப்பு உண்டாகவில்லை. ஒரு சிறு மூலிகைத் தளிரைக் கண்டுபிடிக்க வனாந்தரங்களைச் சலித்தெடுக்கச் சளைக்கவில்லை. என்றோ எங்கோ கிடைத்து, நழுவிப் போய்விடும் தருணங்களை நிலைநிறுத்த முயன்றார். அவரது ஆன்மிகத் தடம் சுழற்றிச் சுழற்றி அவரை அவர் இடத்திலேயே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. அந்த இடம் செறிந்து செறிந்து செறிந்தது.  இந்தக் கடின உளைச்சல்களின் வதை மீண்டும் மீண்டும் அவரை வேதனைக்கு ஆசைப்பட வைத்தது. உரையாடலின் நடுவே எதோ திருப்பத்தில் அவர் சொன்னார். ‘அபி நான் ஒரு masochist’. இந்த ‘மசோக்கிஸம்’ காமத் துய்ப்பின்போது தன்னைத்தான் வேதனைக்குள்ளாக்கித் திருப்தியடைவது என்ற வழக்கமான அர்த்தத்தில் இல்லை.  ‘செடிகள் செழிப்புக் காணும் போதெல்லாம் காமுறுகிறேன்’. “சொற்களுக்கும் பாலுணர்வு உண்டு’ என்றெல்லாம் சொல்பவரிடம் இருப்பது வழக்கமான காமம் இல்லை. தவத்தில் கிடைத்த “தருணங்களைக் கோத்த மாலையை ஆதிமகளின் கால்களில் காணிக்கையாகச் சனர்ப்பிபேனா, கழுத்தில் மாலையாக அணிவிப்பேனா? என்ற இழுபறிக்குள்ளான ஒரு மனம் எத்தனையோ  மறைஞானிகள்(Mystics) போல இறைக்காதலில் தன்னை வதைசெய்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

லா. ச. ரா. தம்  இசைரசனை, அது தந்த உடல்ரீதி அனுபவப் பாதிப்புகள் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். சமயங்களில் அருகிலிருந்தவர்களும்(நான் உட்பட) அந்தப் பாதிப்புகளைக் கவனித்திருக்கிறோம். அவர் பாடி நான் கேட்டதில்லை. அலுவலக வேலை முடிந்ததும் மெரினாவில் கடலோர ராக ஆலாபனை செய்து கொண்டே அவர் நடந்துபோன காலங்களில் நான் அவருடன் இருந்ததில்லை. அவர் கதைகளில் பல இடங்களில் சங்கீத அனுபவங்கள் வெள்ளமாய்ப் பெருகுகின்றன. ‘தாம்புராக் கட்டை மேல் முகத்தைப் பதித்து  ஓசையை மூர்க்கமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த’ அவர் பாத்திரங்களை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். இங்கே நான் சொல்ல வருவது அவற்றை அல்ல. லா. ச. ரா. வின் உள்ளமைப்பிலும் அவர் எழுத்தமைப்பிலும் உள்ள இசைமை பற்றி ‘I live in terms of music. I speak in terms of music’  என்று அவர் சொன்ன இசைமை பற்றி அவரது சிந்தனை முறையிலேயே இசையின் அருப வடிவழகுகள் படிந்திருந்தன. ஹிந்துஸ்தானியின் நீண்ட நெடு உயரத்து ஆலாபனைகள் அவர் எழுத்தமைப்பில் இருக்கின்றன. சில சமயங்களில் ஆலாபனை விரிவில் எட்டப்படும் உச்சங்களை எழுத்தின் முதல் துடிப்பிலேயே காட்டிவிடுவார். புத்ர நாவல் “அடே” என்ற ஆங்காரப் பொறிச்சிதறலாகத் தொடங்குவது இந்த முறையில்தான்.  ஒருவர் கேட்டார் லா. ச. ராவிடம், ‘எழுத்தில் எப்படி இசை விளைவைக் கொண்டு வருகிறீர்கள்?’ லா. ச. ரா திருப்பிக் கேட்டார்: ‘ஸ்வரங்கள் ஓசையின் ஒழுங்குபடுத்திய arrangementsவார்த்தைகளையும் பிசிறு எடுத்து regulate பண்ணினால் ஏன் musical effect உண்டாக்க முடியாது?.

லா.சா.ராவிடம் அவரது ‘அஹுதி’ கதைபற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆசையுடன் நெருங்கிய காளையை அதன் பசுக்காதலி எதிர்பாராமல் முட்டி மலையுச்சியிலிருந்து உருட்டி விடுகிறது. அந்தக் கதையை வானொலியில் படித்தபோது ‘அம்மா….. என்று அலறியே காட்டினேன்’ என்றார். லா.ச. ரா குழந்தைகளுக்கு மிருகங்களைப் பிடிக்கும் அவற்றை அவை உண்மையாகப் பார்க்கும். வெளிப்படுத்த இயலாமை, புரிந்து கொள்ளப்படாமை என்னும் வகையில் அவை அவற்றோடு ஒத்தவை. லா. ச. ரா. குழந்தைமையின் திகைப்பு மண்டிய பரப்பில் இயங்கியவர். ஆதனால் அவரது உலகில் மிருக நடமாட்டம் சாதாரணம். நமக்குள் இருக்கிற மிருகங்களுக்குள் நாம் இருக்கிறோம் என்று கண்டறிந்தவர் அவர். மனிதக் குரூரங்களோடு மட்டுமல்ல. மனித உன்னதங்களோடும் இணைத்து  அவர் மிருகங்களைப் பார்த்திருக்கிறார். சுதந்திரம், தன்னிச்சை, உணர்ச்சி வெளிப்பாட்டில் தயக்கமின்மை உண்மையை ஒளிக்காமை, சொல்லற்ற வெளிப்பாடு இவை அவர் படைத்த பாத்திரங்களுக்குள் வைத்துக் காட்டப்படும்போது மிருக குணங்களெனக் காட்டுகிறார். மேலான மன ஒன்றிப்பில் எந்தச் சிறு அசைவுமின்றி ஒருவரையொருவர் ஆழத்தில் புரிந்து கொள்கிறார்கள். அதை அவர் ‘மிருக சூசகம்’ என்றார்.  அவர்கள் குரல் தந்தால் ‘விலங்குக்கு விலங்கு கூவல்’ புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று தம்மீது குறை வந்தால் அவர்கள் அவர்கள் சொல்வது: ‘நாங்கள் மிருகங்கள்’ பூச்சற்ற பிறவிகளாக இருக்கிறார்கள்; ‘காட்டிலிருந்து பிடுங்கினவர்கள் போல இருக்கிறார்கள்’ என்பது அவர்கள் பற்றிய வருணனை. துரத்தியடிக்கும் வாழ்வின் மீதான அவர்களின் கடைசிக் கட்ட எதிர்வினை பற்றி: ‘வேட்டையில் எதிர்த்துத் திரும்பிய மிருகங்கள்’, மனிதர், மிருகம், வானம், கடல், மண் என்ற பேதமற்ற
லா. ச.ரா.வின் பரிவு பிரபஞ்சமயமாகி விரிவடைந்தது. அதனால் தான் ‘மின்னல் வானத்தை வெட்டும்  போதெல்லாம் வானம் அடிபட்ட விலங்குபோல் அலறியது’ என்று காண முடிந்தது.

கடைசியாக நான் லா.ச.ரா.வைப் பார்த்து பேசியது அவர் 90 வயதை முடிக்கச் சில நாட்கள் இருந்தபோது யாரைச் சந்தித்தாலும் அவர்களை முதன்முதல் பார்த்த காலத்துக்குப் திரும்பிப் போய்விடுகிறவராக இருந்தார். இலக்கியத் தொடர்புக்கும் மேலாக நட்பை முதன்மைப்படுத்தினார். அவர் நண்பர் மாசு ‘உங்கள் எழுத்து நிமித்தமாக நம் சந்திப்பு நிகழ்ந்தது. உங்களைச் சந்தித்தபின் உங்கள் எழுத்தைவிட நீங்கள்தான் எனக்கு முக்கியம்’ என்றாராம். எழுத்துக்கு வெளியே பார்க்கக் கிடைத்த லா.ச.ரா. பின்னும் மேலான மனிதர்.

இலையில் மோர்ச்சோறு – அதன் மீது லா.ச.ரா.வின் கை விரிந்திருக்கிறது. வாயோரம் அரைப் பருக்கை பார்வை எதிரே யார்மீதோ, எதன்மீதோ இருக்கிறது. முற்ற முதிர்ந்த தோற்றம் இந்த லா. ச. ராவின் தோற்றம். இந்த லா. ச. ரா.வின் புகைப்படம் அவர் வீட்டில்ன் கிடைத்தது. என்னோடு பணியாற்றும் பேராசிரியை அந்தப் படத்தைப் பார்த்ததும் கண்களும் ‘ஐயோ எப்படி ஒரு குழந்தை போல இருக்கிறார்’ என்று ஆசையாக அதை எடுத்து வைத்துக் கொண்டார். ‘புத்ர’ நாவலில் வரும் கிழவர் சாப்பிடும்போது பரிவுடன் நெகிழ்வுடன் ஒரு அச்சத்துடன் குழந்தையைப் பார்ப்பதுபோல அவர் மருமகள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கும் காட்சி நினைவுக்கு வந்தது. இப்படித்தான் லா.ச.ரா. நம்மில் பலர் பிறப்பதற்கு முன்பே நம்மில் பலரைப் படைத்து வைத்திருக்கிறார்.

இப்போது நினைக்க லா. ச.ரா. பற்றிய நினைவுகளில் சாரமாக நிரந்தரப்படுவது தூய்மை குழந்தையின் தூய வெறுமை. அவரே சொல்லியிருப்பது போல ‘தன்னுள் யாவரையும் அடக்கி நிறைந்து கவித்துவமான விசனத்துடன் தனிமை கொண்ட அரூபத்தின் ‘வெறிச்’.... வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...