குமுதத்தில் சங்க இலக்கியத்தை தொடர்பு கொண்ட சிறுகதை ஒன்றை படித்தேன். நான் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்தபோது எங்கள் பேராசிரியர் டாக்டர் அபிபுல்லாநடத்திய குறுந்தொகை அழகை நினைத்துப் பார்த்தேன்.
பெரிதும் மகிழ்வாக இருந்தது.அவருக்கென்று ரசிகர் கூட்டமே இருக்கும்.அவர் வகுப்பறைக்குள் நுழைந்தால் அவ்வளவு அமைதி நிலவும்
.நள்ளன்றன்றே யாமம் என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலுக்கு அவர் தந்த விளக்கத்தை இன்றும் நினைத்தால் நெல்லிக்காயைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடித்தாலும் இனிக்கும் சுவைபோல் இன்றும் இனிக்கிறது.
இலக்கணத்தை இலக்கியம் போல் இனிமையாக நடத்துவார்.பாடம் நடத்தும் ஆசிரியரைப் பிடித்தால் அவர் நடத்தும் பாடமும் பிடிக்கும் என்ற உளவியல் சிறுவயதிலேயே எனக்குப் புரிந்தது.டையும் ஷூவுமாக அவர் வகுப்பறைக்குள் நுழையும் தோற்றம் ஆங்கிலப் பேராசிரியரையும் வென்றுவிடும்
அவரது மெளனத்தின் நாவுகள் என்ற கவிதைத் தொகுப்பு அற்புதமான நூல்.என் உள்ளம் கவர் பேராசிரியரின் புகழ் வாழ்க.இரவுக்கு நள் என்ற ஓசை உண்டென்ற சங்கப் புலவனின் கருத்தை நிறுவிய பேராசிரியர் அபி இன்றும் என் உள்ளத்தில் சங்க இலக்கியமாக வாழ்கின்றார்
இவருக்கெல்லாம் செம்மல் விருது தேடி கொடுக்கப்பட வேண்டும்.
டாக்டர் அபிபுல்லா இவர் குறித்து...
(சேலத்தில் 1970-73 இல் என்னிடம் பயின்ற மாணவி.அண்ணாமலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெயர் வல்லரசி.)
அபி பிறப்பு 1942 போடிநாயக்கனூர், தமிழ் நாடு, இந்தியா தேசியம் இந்தியன் பணி பேராசிரியர், கவிஞர் பணியகம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரி பிள்ளைகள் மகன்கள் அஷ்ரப் அலி, ரியாஸ் அஹ்மது. மகள் பர்வின் பாத்திமா[1] ========================================================================================================================= அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞராவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]
வாழ்க்கை
1942 ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில் பிறந்தவர். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவரது நூல்கள்
மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5] அந்தர நடை (1978) என்ற ஒன்று (1987) அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்
விருதுகள்
2004: கவிக்கோ விருது 2004: கவிக்கணம் விருது 2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1] 2011: சிற்பி இலக்கிய விருது[6] 2019: விஷ்ணுபுரம் விருது[2] --------- மேற்கோள்கள் "கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல !". தீராநதி. ஆகஸ்டு 2009. பார்த்த நாள்: 30 July 2019. "கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 30 July 2019. 6.2 இக்காலச் செய்யுள் இலக்கியங்கள். த.இ.க.. "கவிஞர் அபி – நேர்காணல்". சமரசம். ஜனவரி 2000. பார்த்த நாள்: 30 July 2019. "கவிஞர் மீரா". தென்றல். பார்த்த நாள்: 30 July 2019. "சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு". தினமலர். பார்த்த நாள்: 30 July 2019.
இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதை மரபில் தனித்துவமான கவிஞர்களுள் ஒருவரான அபி, தமிழ்ச் சூழலில் போதுமான அளவு கவனம் கிட்டப்படாதவராகவே இருக்கிறார். இதற்கு இலக்கிய அரசியல் பாதிக் காரணமாக இருந்தாலும் அபி கவிதைகளின் தன்மைக்கும் பாதிக் காரணம் இருக்கிறது. பிரம்மராஜன், ஜெயமோகன், தேவதேவன் உள்ளிட்ட சிலர்தான் அபியைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஜெயமோகனால் சமீபத்தில் அபிக்குச் சற்றுக் கவனம் கிடைத்துவருகிறது.
அபியின் கவிதைகளைப் பற்றி விவரிப்பதற்கு தேவதச்சனின் கவிதை வரிகளைத் துணைகொள்ளலாம்: ‘ஒரு சொட்டு/ தண்ணீரில்/ மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள்’ (பரிசு). ஒரு சொட்டு என்பது எளிமையானது; ஆனால், அதற்கு ஆயிரம் சொட்டுக்களின் அடர்த்தி என்றால் எப்படி இருக்கும். இதை அபியின் வரிகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம். இந்த அடர்த்தியான எளிமைதான் பூடகத்துக்கும் இருண்மைக்கும் இட்டுச்செல்கிறது. அபி மிகமிக எளிமையான சொற்களைப் பயன்படுத்தியே பூடகத்தையும் இருண்மையையும் அடைந்திருக்கிறார்.
அபியின் கவிதை உலகம் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது? என்றெல்லாம் யோசித்துப்பார்க்கிறேன். கவிதை கணிசமாக மங்கலான உணர்வுநிலையிலும் அனுபவ நிலையிலும் இயங்குவது. ஆனாலும், அதற்குத் திட்டவட்டமான உருவங்கள், தெளிவான சொற்கள், துல்லியமான பெயர்கள் தேவை. ஆனால், உணர்வுகளும் அனுபவங்களும் நாம் நினைக்குமளவுக்குத் திட்டவட்டமான வரையறை கொண்டவை அல்ல. ஏன், பொருட்களைக் கூட நுணுகி நுணுகிச் சென்றால் அவற்றின் துல்லியமும் திட்டவட்டமும் மறைந்து அநிச்சயம் உருவாகிறது என்கிறது அறிவியல். இந்த அநிச்சயப் பிரதேசத்தில் அநேகமாக தமிழில் தனித்து இயங்கும் கவிஞர் அபி. உணர்வுகளின், அனுபவங்களின் எண்ணற்ற சாத்தியங்களுக்குப் பெயர் இருக்கிறதா? உலகில் பெயரிடப்படாத வண்ணங்களும் இருக்கின்றன அல்லவா! மானுட வசதிக்காகத் தெளிவான, திட்டவட்டமான ஒருசில அடிப்படைப் பொருள்களுக்கும் விஷயங்களுக்கும் மட்டுமே நாம் பெயர் வைத்திருக்கிறோம்.
அந்தப் பெயர்களுக்கிடையிலான உறவிலேயே நம் மொழி இயங்குகிறது. அபியின் கவிதைகள் இயங்கும் இடம் தெளிவற்ற அனுபவங்கள், நம்மால் எடுத்துக்கூற முடியாத உணர்வுநிலைகள். இருக்கும் மொழியின் எளிய வார்த்தைகளைக் கொண்டு இவற்றை அவர் கோக்கும்போது நமக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.
‘இருளிலிருந்து (தெளிவின்மையிலிருந்து) ஒளிக்கு (தெளிவுக்கு) கூட்டிச்செல்வாயாக’ என்கிறது பிருஹதாரண்ய உபநிடதம். ஆனால், அபியோ நம்மைத் தெளிவிலிருந்து தெளிவின்மைக்குக் கூட்டிச் செல்கிறார். தெளிவின்மை என்பது ஏதோ எதிர்மறையான விஷயம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. பிரபஞ்சத்தின், பொருட்களின், அனுபவங்களின் பேரியல்பு அது. ஒரு வசதிக்காக நாம் தெளிவின்மையில் இயங்குகிறோம். ஒரு அணு எங்கு முடிகிறது என்பதில் ஆரம்பித்து, இந்தப் பிரபஞ்சம் எங்கு முடிகிறது என்பது வரை தெளிவின்மையே நிலவுகிறது.
அனுபவத்தின் தெளிவற்ற பிராந்தியத்தில் உலவினாலும் வெளிப் பார்வைக்கு ஸ்படிகத் தெளிவு கொண்டதுபோல் இருக்கின்றன அபியின் கவிதைகள். இதற்குக் காரணம் அர்த்தச் சுமையற்ற சொற்களும் சொற்செட்டும்தான். ஒரு அனுபவத்தை எவ்வளவு குறைவான சொற்களால் படம்பிடிக்க முடியுமோ அவ்வளவு குறைவான சொற்களில் படம்பிடிக்கும்போது வரிகள் ஒரே சமயத்தில் சுமையற்றவையாகவும் அடர்த்தி மிகுந்தவையாகவும் ஆகின்றன. கூடவே, பார்வைக்கோணங்களையும் வேறு திசையில் வைத்தால் அதற்கு அபாரச் செறிவு கிடைக்கிறது. இதற்கு அபியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்றான ‘குருட்டுச் சந்து’ கவிதையை எடுத்துக்காட்டலாம்.
கவிதைசொல்லி குருட்டுச் சந்து ஒன்றில் போய்த் திரும்பிவருகிறார். ஒரு வீட்டில் இசை கேட்கிறது: ‘தந்தியைப் பிரிந்து/ கூர்ந்து கூர்ந்து போய்/ ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி/ நீடிப்பில் நிலைத்தது/ கமகம்’ என்கிறார் அபி. இசை என்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை இதைவிட யாராவது சிறப்பாக வார்த்தைகளால் படம்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே கவிதையில் குருட்டுச் சந்தில் போய்த் திரும்பிவருவதை ரத்தத்தின் போக்குடன் ஒப்பிடுகிறார்: ‘ரத்தம் எப்போதும்/ குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்/ திரும்ப வேண்டியதே.’ இதனால் குருட்டுச் சந்தில் போய்த் திரும்பும் சாதாரண நிகழ்வு மேலும் உயர்ந்த தளத்தை எட்டுகிறது. கவிதைசொல்லி இறுதியில் சாலையை அடைகிறார். ‘எதிரே/ அடர்த்தியாய் மினுமினுப்பாய் / ஒரு கல்யாண ஊர்வலம்,/ வானம் கவனிக்க’. இந்த வரிகளில் ‘வானம் கவனிக்க’ என்ற வரி மட்டும் இல்லாதிருந்தால் இந்தக் கவிதைக்குப் பாதி முக்கியத்துவம் குறைந்திருக்கும். இரண்டு சொற்களைக் கொண்டு விவரிக்க முடியாத அனுபவத்தை இந்தக் கவிதையில் தந்திருக்கிறார் அபி. இந்தக் கவிதையில் மொத்தம் நான்கு பரிமாணங்கள் ஒன்றுடன் ஒன்று இழைந்திருக்கின்றன. நேரே இருக்கும் குருட்டுச் சந்து ஒரு பரிமாணம், ‘கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து/ தோரணப் பச்சை/ கடைக்கண்ணில்/ சந்தேகமாய்ப்பட நடந்து/ சாலையை அடைந்தேன்’ எனும்போது, பக்கவாட்டுப் பரிமாணம், ‘வானம் கவனிக்க’ எனும்போது உயரம் எனும் பரிமாணம், இதற்கிடையே ‘நீடிப்பில் நிலைத்தது கமகம்’ எனும்போது, காலம் எனும் பரிமாணம். இந்தப் பரிமாணங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று இசைவாய் இழையோடியிருக்கின்றன.
அடுத்ததாக, பிரபஞ்சம் அளாவும் பார்வை ஒன்று அபியிடம் இருக்கிறது. ‘நெடுங்கால நிசப்தம்/ படீரென வெடித்துச் சிதறியது’ (நிசப்தமும் மௌனமும்) எனும்போது இது ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியதாகவும் இசையனுபவத்தைப் பற்றியதாகவும் இருக்கிறது. ‘நெடுங்காலம்’ கடுகாகிக்/ காணாமல் போயிற்று’ என்கிறார். இந்தக் கவிதை ‘பூமியில்/ ஒலிகளின் உட்பரிவு/ பால் பிடித்திருந்தது/ வெண்பச்சையாய்’ என்று முடிகிறது. வேறு எந்த மொழிக்கும் மொழிபெயர்க்க முடியாத எளிமை நிரம்பிய அழகு இந்த வரிகள்.
இதே பிரபஞ்சம் அளாவும் பார்வையை ‘வினை’ கவிதையிலும் பார்க்க முடியும். ‘அண்டம், தன்/ தையல் பிரிந்து/ அவதியுற்றது’ என்ற வரிகள் இதற்குச் சாட்சி என்றாலும், ‘இந்தப் பிரளயத்தில்/ மிதந்தவர்களைப் பற்றி ஒரு/ நிச்சயம் பிறந்தது’ என்ற வரிகளும் ‘மூழ்கிக்/ காணாமல் போனவர்கள்/ கண்டுபிடிப்பார்கள்/ என்றும் வதந்தி பிறந்தது’ என்ற வரிகளும் நம் அர்த்தப்படுத்தும் முயற்சியையும் தாண்டி எங்கோ செல்கின்றன. இந்தப் புதிர்த்தன்மையும் அபியின் தனித்துவங்களில் ஒன்று. விதையொன்றைப் பற்றிய கவிதையில் (வெளிப்பாடு) ‘மரமாய்க் கிளையாய் விழுதாய்/ அன்றி/ ‘வெறும் விதையாகவே’/ வளர்கிறது/ இன்னும் இன்னும்’ என்ற வரிகள் இந்தப் பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்துகொண்டிருப்பதை உணர்த்துவதுபோல் இருக்கின்றன.
தனித் தொகுப்புகளாக ‘மௌனத்தின் நாவுகள்’, ‘அந்தர நடை’, ‘என்ற ஒன்று’ ஆகிய தொகுப்புகளை அபி வெளியிட்டிருக்கிறார். தொகுப்புகளில் சேராத ‘மாலை’, ‘மற்றும் சில கவிதைகள்’ ஆகிய கவிதைகள் அவரது முழுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முழுத் தொகுப்பில் ‘மௌனத்தின் நாவுக’ளிலிருந்து சில கவிதைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றன. ‘மாலை’ கவிதைகளும் ‘மற்றும் சில கவிதைக’ளும் அவரது கவித்துவத்தின் முக்கியமான தருணங்கள். குறிப்பாக, ‘மாலை’ வரிசையில் பல கவிதைகள் அபூர்வ அழகு கொண்டவை. ‘மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது / இருந்த இடத்திலேயே . / முடிவின்மையின் சேமிப்புக்கு / ஒரு புள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது’ எனும் வரிகள் மாலையைப் பற்றிய விளக்க முடியாத ஒரு உணர்வை நம் மனதுக்கு ஏற்றிவிடுகின்றன. மாலையைப் பற்றியும் மாலை கவிந்திருக்கும் பொருட்கள், அனுபவங்கள் பற்றியும் தனக்கேற்பட்ட பிம்பங்களைத் தனக்கேயுரிய மொழியழகுடன் அபி விவரித்திருப்பார்.
அபியின் கவிதை உலகம் மொத்தம் 130 சொச்சம் கவிதைகளுக்குள் அடங்கிவிடும் என்றாலும் அதற்குள் தமிழின் சத்தான ஒரு பரப்பு அடங்கியிருக்கிறது. அபியை ஆங்கிலத்தில் முறையாக மொழிபெயர்க்க முடிந்தால், ‘செங்குத்துக் கவிதைகள்’ எழுதிய ரொபர்த்தோ ஹுவரோஸுக்கு இணையான ஒரு கவிஞராக மதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அபியின் அழகு மொழிபெயர்ப்புக்குள் சிக்குமா என்பதுதான் கேள்வி. அபியின் கவிதைகள் உலக அளவுக்குச் செல்வதற்கு முன் உள்ளூரில் பலரிடமும் செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அவரது கவிதைகளைப் படிக்கவில்லையென்றால் இழப்பு நமக்குத்தான்!
தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான அபி 1942-ல் பிறந்தவர். அவரது இயற்பெயர் பீ.மு. அபிபுல்லா. நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அபி தற்போது மதுரையில் வசிக்கிறார். இதுவரை ‘மௌனத்தின் நாவுகள்’ (1974), ‘அந்தர நடை’ (1979), ‘என்ற ஒன்று’ (1988), ‘அபி கவிதைகள்’ (2013) ஆகிய தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அபி கவிதைகளின் முழுத் தொகுப்பை சமீபத்தில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து…
உங்களின் முதல் தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுகிறதல்லவா? இது கவிதைரீதியிலான பரிணாம வளர்ச்சியா, அகரீதியிலான மாற்றத்தின் விளைவா?
இரண்டும்தான். பெரிய வேறுபாடு என்று நீங்கள் குறிப்பிடுவதைப் பலரும் உணர்ந்திருப்பார்கள். என் தொடக்க காலக் கவிதைகளின் பொது இயல்பு ஒருவித சோகம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சொந்த வாழ்வு அழுத்தங்களுக்கும், வாசிப்பில் நான் கண்ட, என் உள்ளகத்தோடு வேர்முடிச்சுத் தொடர்புடைய தத்துவ தரிசனங்களுக்கும் இடையே ஆன ஊசல் நிலை அது. ஆனால், அதை வெளிப்படுத்த அப்போதிருந்த சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த மொழி அலங்காரமும் படிம அடுக்குகளும் நிரம்பியதாக இருந்தது. ஒரு இடைவெளிப் பார்வையில் என் பயண இலக்கும் பயணப் பாதையும் துல்லியப்பட வேண்டும் என உணர்ந்தேன். என் அடுத்த நகர்வு, மூலங்கள், முரண்பாடுகள் இன்றித் தூய்மையில் இலங்கும் தொலைவாழத்தை நோக்கிய நகர்வு. இப்போது என் கவிதை உண்மையுறும் என உணர்ந்தேன்.
கவிதை வெளிப்பாட்டில், மொழியின் சர்வாதிகாரத்துக்குப் பணிய மறுத்தேன்; என் சொல் தனது அர்த்தத்தைத் தாண்டி வெளிவந்தது; சொல், வடிவிலிருந்து அனுபவத்தின் வடிவிலி நிலையை நோக்கிச் சென்றது. படிமங்கள் மனசிலிருந்து மனசுக்கு எந்த ஊடகமும் இன்றிப் பாயும் புதிய அழகியல், கவிதையை எளிய செறிவாக்கிற்று.
உங்கள் கவிதைகள் பெரிதும் அக உலகக் கவிதைகளாக இருக்கின்றன. ஏன்? உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் இதற்கான தடயங்கள் உண்டா?
உண்டு. அதிகம் பேசாத, பெருமளவுக்குத் தன்னுள் அடங்கிய என் தந்தையின் இயல்பு எனக்குப் பிறவிக் கொடையாக வந்திருக்கலாம். அகநோக்காளன் அகவுலகைத் தன் கவிதைக்கு வரித்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லை. எனக்கு இயல்பாகவும் எளிதாகவும் இருந்தது, இருப்பது அகவுலக நடமாட்டம்.
பிரபஞ்சம், அதில் மனிதனின் இருப்பு பற்றிய விசாரணைகளை உங்கள் கவிதைகளில் காண முடிகிறது அல்லவா?
மனித இனம் அது தோன்றியதிலிருந்தே பிரபஞ்சத் தேடலை நிகழ்த்திவருகிறது. விஞ்ஞானமும் தத்துவமும் அதனதன் கருவிகளின் துணைகொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிற்றடி எடுத்துவைத்துவருகின்றன. என்ன, எப்படி, எதற்காக என்ற கேள்விகள் அறிதோறும் கிடைக்கின்ற புதுப் புது அறியாமைகளைச் சுமந்து கனக்கின்றன. இந்த முடிவிலிகளைத் துழாவும் முயற்சியில், ஒருவகையில் முடிவிலியாகிய கவிதையும் இணைந்துகொள்கிறது. ஆனால், கவிதையின் நோக்கம் கண்டுபிடிப்பதல்ல; முடிவு காண்பதல்ல; முடிவிலிகள் தரும் திகைப்பில் திளைத்திருப்பது.
உங்களின் மாலை கவிதை வரிசை தனித்துவமானது. இந்தக் கவிதைகள் உங்களிடம் எப்படி வந்துசேர்ந்தன?
வந்துசேரவில்லை. என் பிள்ளைப் பருவத்தில், மனத் தனிமையில், விவரம் புரியாத அனுபவமாக என்னிடமே இருந்தவை இவை. அப்போது மலைக்குவடுகள், காடுகள், சுனைகள், சிற்றோடைகள், கடுங்குளிர் இவற்றோடு – என்னை நிரந்தரமாகப் பற்றிவைத்திருந்த என் மாலைப் பொழுதோடு – விளக்க முடியாத உறவு கொண்டிருந்தேன். சாதாரண வெளிப்படைகளுடன் அசாதாரண விநோதங்கள் குழம்பிக் கனத்திருந்தன, அந்தப் பிள்ளைச் சிறு மனதில். கவிதையிலும் மேலான அந்தத் தூய அனுபவங்களை இன்று அப்படியே வெளிப்படுத்த முடியாது.
சங்கக் கவிதையில் முல்லைத் திணையின் உள்ளடக்கம் இருத்தல்; தலைவி தலைவன் வரவை எதிர்நோக்கித் துயரடக்கிக் காத்திருத்தல். அந்தத் திணைக்குரிய பொழுது மாலை. அந்த மரபை விரிவுசெய்து ஒரு புதிய முல்லைத் திணையாகப் பிறப்பெடுத்தவை ‘மாலை’ கவிதைகள். பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு தரிசனமாகக் கண்டவை; என் வருகைக்குக் காத்திருக்கும் ‘நான்’ ஆக என்னை ஆக்கியவை; யோசிப்பும் நின்றுபோன மௌனத்தை, என் வடிவில் இருந்த மௌனத்தை எனக்குக் காட்டியவை. மொத்தத்தில் அழுகை, கண்ணீர் இல்லாத ஒரு மகத்தான துயரத்தை – பிரபஞ்ச சோகத்தை எனக்குக் காட்டியவை.
தமிழ்க் கவிதை மரபு எந்த அளவுக்கு உங்கள் படைப்புலகத்துக்குப் பங்களித்திருக்கிறது?
எனக்கு மிகவும் உவப்பானது சங்க இலக்கியம். சற்றுக் குறுகலான இலக்கண மரபுக்குள் இயங்க வேண்டிய நிலையில் கூடக் கவிதை அல்லாத எதுவும் தன்னை அண்டாதபடி காத்துக்கொண்ட அதன் தூய எளிமையின் மீது எனக்கு ஈடுபாடு. அந்த மொழிச் செறிவும் வெளிப்பாட்டுக் கூர்மையும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். தத்துவத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பேசிய சித்தர்கள் என் கவிப்பொருளில் பாதிப்பு நிகழ்த்தியிருக்கலாம் என விமர்சகர்கள் ஊகம் கொள்கின்றனர்.
உங்கள் கவிதைகள் பலவும் பொதுவாசகர்கள் அணுகுவதற்குச் சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?
‘புரிந்துகொள்ளல்’ என்பதற்கான புதிய அர்த்தம் இன்று தேவை. புரிந்துகொள்வது என்பது சொற்களின் அகராதி அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அல்ல. பொழிப்புரை கவிதை ஆகாது. சொல்லின் த்வனி என்ன, படிமங்கள் எங்கே கொண்டுசெல்கின்றன, மனசில் கவிதை உருவாக்கும் சலனங்கள் எவ்வுணர்வு சார்ந்தவை – என்ற ரீதியில் வாசகன் தன் அனுபவங்களைத் திரட்டிப் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவப்படுத்திப் பார்த்துக்கொள்வதுதான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரே கவிதை பல்வேறு அனுபவங்களைக் கிளரச் செய்யும். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் கவிதையின் அர்த்தம். உங்கள் பக்குவத்துக்கேற்ப கவிதை வேறொரு நாள் வேறோர் அனுபவம் தரும்.
உங்கள் ஒட்டுமொத்தக் கவிதையுலகமும் 130 சொச்சம் கவிதைகளில் முடிந்துவிட்டதுபோல் தெரிகிறதே. சமீப ஆண்டுகளில் கவிதை எழுதவில்லையா?
நீண்ட இடைவெளிகளைக் கொண்டது என் படைப்புலகம். எந்த அர்த்தங்களையும் ஊகங்களையும் கொண்டிராத அந்த இடைவெளிகளே என்னுள்ளிருக்கும் கவிதைகளோடு நான் திளைத்தும் உளைந்தும் தனித்திருக்கும் பொழுதுகள். நான் ‘சும்மா இருப்பது’ இவ்வகையில்தான். நான் எழுதுகிறேன் என்ற பிரக்ஞையோ நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகமோ என்னிடம் இல்லை. என் குறை / நிறை இது. எந்த ஒரு பிரம்மாண்டத்தையும் ஒற்றைச்சொல் / ஒற்றைவரி தொட்டுவிட முடியும் எனும்போது சொற்களைப் பெருக்கும் அவசியம் ஏது? சரி, நானும் உணர்கிறேன். இப்போதைய இடைவெளி சற்று நீண்டுவிட்டது.
ஒற்றை வரியில் ஒரு பிரம்மாண்டத்தைத் தொட்டுவிட முடியும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வரி ஒன்றைக் காட்ட முடியுமா?
‘சூன்யம் என்ற ஒன்று இருந்தவரை எல்லாம் சரியாயிருந்தது’ - இந்த வரி உங்களை அலைக்கழிக்க அனுமதித்துப் பாருங்கள்.
உங்களின் சம காலக் கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்கள் யார்?
நிறைய பேரைச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஞானக்கூத்தன், பிரமிள், சி.மணி, தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்.https://www.hindutamil.in/news/literature/594660-abi-interview-4.html
நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமானால் குழந்தைமையின் தூய அறியாமைகளோடு அணுகிப்பாருங்கள்” என்று பதிலளிக்கிறார். இதுவொரு கவித்துவமான பதில் என்றே தோன்றுகிறது. “தூய அறியாமை” போதாதென்றே படுகிறது. அந்தக் குழந்தைமையில் கொஞ்சம் ஞானத்தின் தாடி மண்டியிருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. முகுந்த் நாகராஜன் சொல்லும் குழந்தைமையும் அபி சொல்லும் குழந்தைமையும் ஒன்றல்ல. இரண்டிற்கும் நோக்கங்கள் வேறு.
அபியின் கவியுலகை ஆழங்கண்டு சொல்ல என்னால் ஆகுமா என்று தெரியவில்லை. அதற்கான கண்கள் என்னிடமில்லை என்றே நம்புகிறேன். எனவே அதைத் தொட்டுத் தொட்டுத் தடவும் ஒரு எளிய முயற்சி இது. கண்மூடித் தடவுபவன் உண்மையில் எல்லையின்மைகளைத் தான் தடவுகிறான். ஆனால் அதைச் சொல்லுகையில் ஒரு எல்லை பிறந்து விடுகிறது. தடவுதலில் கைகளுக்கு ஒரு எல்லையும் அதன்வழி கருத்தில் விரியும் கற்பனைகளுக்கு ஒரு எல்லையின்மையும் உருவாகிறது. எனவே ஒருவன் தடவிக் கண்டு சொல்வதற்கு கொஞ்சம் காது கொடுப்பதில் பிழையொன்றுமில்லை தான். அபியின் அநேக கவிதைகளையொட்டி எனக்கு உளற எதோ இருக்கிறது. அந்த உளறலில் இருந்து வாசகருக்கு ஏதேனும் கிடைத்தால் மகிழ்ச்சியே.
அபியின் கவிதைகளில் வருகிற “ நீ” என்கிற முன்னிலை ஒருவித தற்சுட்டே என்று தோன்றுகிறது. அவரோடு அவர் பேசும் பேச்சுக்களாக ஒலிக்கின்றன இக்கவிதைகள். நவீன மனிதன் பேஃஸ்புக்கில் இருக்கிறான். வாட்ஸ்அப்பில் இருக்கிறான். டிக்-டாக்கில் இருக்கிறான். அவன் தன்னோடு தானிருக்கும் நேரங்கள் வேகமாகக் குறைந்து வருகிற இந்நாட்களில் அபியின் இந்தத் “தற்பேச்சு” கூடுதல் முக்கியத்துவமுடையதாகிறது.
சமையல்
என்
புகைக்கூண்டின் வழியே
என் சதைக்கருகலை
மோப்பம் கொண்டு
விருந்தெனக் கூச்சலிட்டு
உள் நுழைந்தன,
தம் அலகுகளைத் தின்று தீர்த்த
அராஜகப் பசிகள்.
(அபி கவிதைகள் பக்கம். 33)
இந்தப் பசியோடு அபி நடத்தும் யுத்தங்கள் தான் அவரது கவியுலகு.
“அரூபக் கவிஞர்” என்று பெயர் பெற்றவர் அபி. ரூபம் தான் அரூபமாகிறது. அபியின் கவிதைகளில் பத்மினியும் சரோஜாதேவியும் இல்லையா என்று கேட்டால், “ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்“ என்று சொல்லலாம்.
இக்கவிதைகளில் ஒன்று இன்னொன்றாக மாறுவது தொடர்ந்து நடக்கிறது. அதாவது சத்தம் வண்ணமாக, வண்ணம் ஸ்பரிஸமாக, ஆகாயம் ஊசிமுனையாக. இப்படி ஒன்று இன்னொனறாக மாறுகையில் என்ன நடக்கிறது? ஒரு புதிய உலகு பிறக்கிறது. நாசமாய்ப் போன, சலித்த இந்த உலகிற்கு மாற்றாக இன்னொரு உலகு… இரண்டு நிமிடமே நீடிக்குமென்றாலும் எனக்கு அது அவசியமே. சமீபத்தில் வந்திருக்கும் பிரான்சிஸ் கிருபாவுடைய கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்”. ஒளி ஒலியாகிப் பிறக்கும் அந்தச் சின்னஞ்சிறு உலகைக் காண இந்தத் தலைப்பை நான் அடிக்கடி சொல்லிப் பார்ப்பதுண்டு.
அபி எழுகிறார்..
சுருதி தோய்ந்து
வானும் நிறமற்று
ஆழ்ந்தது மெத்தென
பூமியில்
ஒலிகளின் உட்பிரிவு
பால் பிடித்திருந்தது
வெண் பச்சையாய்.
(அபி கவிதைகள் பக் . 6)
இந்தக் கவிதைகளில் இருப்பு, இன்மை ஆகியவை தொடர்ந்து பேசப்பகின்றன. சதா இருந்து கொண்டே இருக்கும் இருப்பிற்கு எதிராக “இல்லாதிருக்கும் இருப்பைப்” பேசுகிறார் அபி.
நெடுங்காலம் கடுகாகிக்
காணாமல் போயிற்று
சுருதியின்
பரந்து விரிந்து விரவி..
இல்லாதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்கலாக.
(அ. க. பக். 5)
சிலப்பதிகாரம் சொல்லும் ”வினைவிளை காலம்” என்பது புரட்சிக்கு எதிரானது. கொஞ்சம் வளைத்தால் அதை ஆதரவானதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். அபியோ,
வினை அறுப்போர்
எவருமில்லை
எங்கும் எங்கும் வினைமயம்
(அ. க. பக். 7)
என்கிறார். அதாவது வினை தான் நிச்சயம். அது எப்படி விளையும் என்பது நிச்சயமில்லை. இந்த வரிகள் புரட்சிக்கு அப்பால் இருக்கின்றன. புரட்சிக்கு அப்பால் இருக்கும் ஒன்றைக் காண்பது ஒரு எளிய இடதுசாரி மனத்திற்கு தொல்லை தருவது. அதைக் கடும் குழப்பங்களில் ஆழ்த்துவது. உலகைத் தற்செயல்களின் நாடகமாகக் காண அதனால் இயலாது.
பாவம் X புண்ணியம், நன்மை X தீமை, அழகு X அழுக்கு என்கிற இருமைகளிலிருந்து வெளியேற முயல்பவராக இருக்கிறார் அபி. ஒரு மனித உயிர்க்கு அது அவ்வளவு சாத்தியமானதில்லை. அது உழல்வது இந்த இருமைகளில் தான்.
இக்கவிதைகள் “கண்டறிதலில்” முனைப்பு கொண்டு ஓடி ஓடித் தேடுகின்றன. அப்படித் தேடி அடைந்ததை கேலி பேசி நிராகரித்து மீண்டும் தேடத் துவங்குகின்றன. நமது உலகம் நமக்கு நாமே போர்த்திக் கொண்டது தான். அதன் அர்த்தம் அப்படியொன்றும் நிச்சயமானதில்லை. சமயங்களில், கசப்பு, இனிப்பு, வெறுப்பு, விருப்பு ஆகியவை பெயரளவில் மட்டுமே வேறானவை எனக் கண்டுகொள்கிறோம். அபியின் கவிதைகளில் “நார்க்காடு” என்கிற உருவகம் பலமுறை இடம் பெறுகிறது. உரிக்க, உரிக்க வந்து கொண்டே இருக்கும் முடிவற்ற, தெளிவற்ற ஒன்று அது.
“காலம்” பொதுவாக நாம் காண மறுப்பது. விரும்பாததும் கூட. அபி அதை விதவிதமாகக் கண்டு எழுதியிருக்கிறார். என்ன தான் நாம் ஒளிந்து கொள்ள விரும்பினாலும் காலத்திற்கு தப்பிப் பிழைக்க என ஒரு இடம் பூமியில் இல்லை. கஞ்சாத்தூளை உள்ளங்கையில் வைத்து அப்படி அழுத்தி அழுத்தி தேய்ப்பது எதற்கு? காலத்தை மயக்கத்தான். அது நேற்றும், இன்றும், நாளையுமற்ற ஒரு உலகிற்குள் அவனை அழைத்துச் செல்கிறது. காலம் மங்கினால் சகலமும் மங்கி விடுகிறது.
எதையாவது தொட்டால் தானே ஏதாவது நிகழும். எதையாவது கடைந்தால் தானே அமுதோ நஞ்சோ வெளிப்படும். எதையும் தொட்டு விடாத சுகமொன்றைப் பேசுகிறார் அபி.
எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன.
(அ. க. பக். 75)
வெளிப்பாடு, உள்பாடு என்று இரண்டு கவிதைகள் அடுத்ததடுத்து உள்ளன. “உள்பாடு” கவிதைக்கு வரிக்கு வரி உரை சொல்ல என்னால் முடியாது. சொன்னால் ஏதோ ஒன்று வழுக்கி விடும். அபியின் பல கவிதைகளும் இப்படி உரை சொல்ல எத்தனிக்கையில் வழக்கி விடுகின்றன. ஆனால் அதைப் படிக்கையில் அடைந்த பரவசம் உண்மை.
உள்பாடு
இந்தப் பழக்கம்
விட்டு விடு.
எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்கக் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்
குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்…
இந்தப் பழக்கம் விட்டுவிடு
முடிந்தால்
புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள் நுழைந்து
விடு.
(அ. க. பக். 48)
நமக்குப் புள்ளியைக் காண்பதே அரிது. முதலில் புள்ளியைக் கண்டு, பிறகு அதன் முடியைக் கண்டறிந்து அதையும் திறந்து உள்நுழைவதென்றால்…. சார், மனிதர்களிடம் எதிர்பார்ப்பதற்கும் ஒரு அளவிருக்கிறதல்லவா?
அபியின் “மாலை கவிதைகளில்” உள்ள மாலை நமது வழக்கமான மாலையல்ல. நாம் அறிந்த பொன் மாலைப் பொழுதல்ல. அவை கண்ணிற்குத் தோன்றும் ரம்மியமான காட்சியாக இல்லாமல் நமது கற்பிதங்களின் அபத்தங்கள் இறங்கி வரும் களமாக மாறியிருக்கின்றன. வாழ்வு ஓர் ஓட்டப் பந்தயம் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருக்கும் நமக்கு புதிய பாடங்களைச் சொல்லி, வேறு வேறு வெளிச்சங்களைக் காட்டும் இக்கவிதைகள் “முன்-பின்” என்பதைக் கலைத்துப் போட்டு விடுகின்றன.
அபியின் லட்சியம் ஒரு “காலியிடம்”. லட்சியம் என்று சொல்ல முடியாது. லட்சியம் என்று உச்சரித்த மாத்திரத்திலேயே அந்தக் காலியிடம் காணமல் ஆகக் காண்கிறோம். ஒரு எளிய மனித உயிரால் வெகு நேரம் அந்தக் காலியிடத்தில் நிலைத்திருக்க இயலாது. அவனைச் சுற்றிலும் ஆயிரம் விசயங்களின் மினுக்காட்டம். ஏதோ ஒரு ஆட்டத்தில் கலந்து விடவே அவன் விரும்புகிறான். அவனால் அவ்வளவு தான் தாக்குப் பிடிக்க முடியும்.
எனக்கு வந்த
பரிசுப் பொட்டலங்கள் ஒன்றில்
வெறும் காலியிடம் விரவிக் கிடந்தது.
(அ. க. பக். 197)
என்று துவங்குகிறது ஒரு கவிதை.
எப்படியோ நாம் உருவாகித் தொலைத்து விட்டோம். அதன்பின் நடக்கிற கூத்தில் கவனம் செலுத்துவது தான் பொது இயல்பு. ஆனால் அபி எல்லாவற்றிற்கும் “உருவாகும் விதம்” தான் காரணம் என்று நம்புகிறார். எனவே “உருவாகும் வரலாற்றை” ஆழத்திற்குச் சென்று தேடுகிறார். ஆனால் அங்கு அவர் காண்பது அடர்ந்து செறிந்த ஒரு இருள். தீராத குழப்பங்கள்… வெறும் வினாக்கள். இந்த உருவாகும் வரலாறும், அபி சொல்லும் காலியிடமும் ஒரு விதத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். அடர்ந்த இருளைக் கண்டு வந்தாலும் வாழ்வின் மெய்மையைத் தேடி திரும்பத் திரும்ப வேறு வேறு ஆழங்களுக்குச் செல்வதை அபி நிறுத்துவதில்லை. அவரது கவியுலகின் ஆதார இயல்பாக இருக்கிறது அது. அவரது கட்டுரை வரியொன்று இப்படிச் சொல்கிறது.. “கவிதை என்பது இவனுக்குக் கற்பனை இல்லை. மூலங்களைத் தொட்டு முடிவிலிகளின் வழியாக செல்லும் முயற்சி”.
அபியின் சில கவிதைகளை வாசிக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. ( எ.கா: உள்பாடு, அதுதான் சரி ) வாழ்வின் மெய்மையைத் தேடி அவ்வளவு ஆழமாகப் போகையில் சிரிப்பு வருவது இயல்பு தானே?
கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது.
(அ. க. பக். 227)
என்பதாக அவரது முதல் தொகுப்பில் தொடங்கும் அபத்த தரிசனம் சமீபம் வரை தொடர்கிறது. ஆனால் “கசப்பு” என்கிற நிலையிலிருந்து அது “இயல்பு” என்கிற நிலைக்கு நகர்ந்து விட்டதாகத் தோன்றுகிறது. அதாவது அழுகை நின்று விட்டது.
அபி எதையாவது கொஞ்சம் அழுத்துவாரெனில் அது சங்கீதத்தைத் தான். அதையும் கூட நாம் அழுத்துவது போல் அழுத்துவதில்லை அவர். “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை ஒரு சிறுவனைப் பாட வைத்து அதைக் கண்டு கண்டு நெக்குருகியோடி ஒருவரையொருவர் கட்டித் தழுவி அரங்கையே மூக்குச் சளியால் மூடிவிடப் பார்க்கும் “சிங்கர்ஸ் ஷோ”க்கள் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் “நாதத்தை புலன்களில் பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்” என்று கவிதை படிக்கிறார் அபி. “இந்த ஆள வச்சிகிட்டு ஒரு கொல கூட செய்ய முடியாது” என்று தலையில் அடித்துக் கொள்கிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
வாழ்வு குறித்த பிரம்மாண்ட கற்பனைக்கு எதிராக அபி காட்டும் ஒன்றுமற்ற வெட்ட வெளி நம்மைக் கடுமையாக அச்சுறுத்துகிறது. வாழ்வுக்குள் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிகள் உண்டென்றால் நாம் ஆம் என்று தலையாட்டலாம். “இடைவெளியை சுற்றும் சிற்றெம்புகள் தான் வாழ்க்கை” என்று சொன்னால் பீதி கிளம்பாதா என்ன?
இடைவெளிகள்
யாரும் கவனியாதிருந்த போது
இடைவெளிகள்
விழித்துக் கொண்டு
விரிவடைந்தன.
நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் உனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்..
என்று
இடைவெளிகள் விரிவடைந்தன.
வெறியூரி வியாபித்தன.
வியாபகத்தின் உச்சத்தில்
மற்றதெல்லாம் சுருங்கிப் போயின.
ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்ட வட்டமாயின.
வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்தது
பேரொளி
அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு மகத்துவம்.
(அ. க. பக். 122)
மகத்துவத்தின் முன்னே கொஞ்சம் நம்பிக்கை கொள்ளலாம். எதையாவது வேண்டலாம். மண்டியிட்டு கண்ணீர் சிந்தலாம். “நோக்கமற்ற மகத்துவத்தின்” முன்னே என்ன செய்ய? வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர.
மூழ்கினால் முத்தெடுத்து வர வேண்டுமென்பது நமது பொது நியதி. அபி நம்மை இழுத்துச் செல்லும் ஆழங்களில் “ஒன்றுமில்லை”. ஒன்றுமில்லை என்று காட்டத் தான் அவர் நம்மை அவ்வளவு ஆழத்திற்கு இழுத்துச் செல்கிறார்.
அபி இந்த வாழ்வை பொருட்படுத்தாது வேறெதையோ பேசிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை தோன்றுவது இயல்பே. ஏனெனில் நமது அன்றாட வாழ்வின் சித்திரங்கள் இதில் இல்லை. ஆனால் வாழ்வு குறித்த ஆழமான விசாரணைகள் உள்ளன.
“நடைமுறை வாழ்வைச் சந்தித்து உழல்பவன் இவனுடைய ஒரு அவன். இவன் எழுத்து மனிதன். எதை எப்படி எழுத வேண்டும் என்பதைத் தன் சுதந்திரமாகக் கொள்கிறான்” என்று சொல்லும் அபி இன்னொரு இடத்தில் சொல்கிறார்.. “வாழ்விலிருந்து இவன் எதிர்ப்பக்கமாகப் போகவில்லை; வாழ்விற்குள்ளேயே இருளடர்ந்த வேறொரு பக்கமே இவன் போவது”.
பொதுவாக நமது தமிழ்வாசக மனத்திற்கு எல்லாமும் “இரத்தமும் சதையுமாக” வேண்டும். அப்படி அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்வதில் அதற்குத் தயக்கங்கள் உண்டு. இப்படி “இரத்தமும் சதையுமாக” வாழும் நமக்கு “ஒன்றுமற்ற காலியிடத்தை” காண்பது கொஞ்சம் சிரமமானது தான். “ஒன்றுமில்லை” என்பது கூட “சித்தர் பாடல்களில்” ஒலிப்பது போல உரத்து ஒலிக்குமாயின் நாம் அதை மகிழ்ந்து கொண்டாடுவோம். அபியோ “ஒன்றுமில்லை” என்பதை “ஒன்றுமில்லாதது போலவே” சொல்கிறார்.
அபி அரிதாக ஒரு காதல் கவிதை எழுதியிருக்கிறார். அதாவது தெளிவாக அதில் ஒரு பெண் உரு உண்டு. “உலகின் விஷங்களை வெல்லவோ உன் முகத்தில் இரண்டு மகுடிகள்” என்று பிரமாதமாகத் துவங்குகிறது கவிதை. காதலில் உருகி உருகி எழுதிச் செல்பவர். முடிக்கிற தருவாயில் எழுதுகிறார்…
இந்தப் புதிர்கள் முன் பிரமிக்கவே
இத்தனை அறிவிலும்
புகுந்து வந்தேன்.
இப்படியாக இவ்வரிகள் அபியின் இன்னொரு மெய்ஞானக் கவிதையின் வரிகளாக மாறி விடுகின்றன. அந்தக் காதலியை எண்ணிப் பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது.
சில வரிகள் நாம் அர்த்தமேற்றும் முன்னரே நம்மைக் கவர்ந்து விடுகின்றன.
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய் திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது….
(அ. க. பக். 30)
அபியின் சில கவிதைகள் வெறும் உளவியல் கணக்குக்குகளாகவும், தத்துவ விளையாட்டுகளாகவும் தங்கி விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அவற்றில் கவிதையின் வண்ணம் ஏறவில்லை என்றே எனக்குப் படுகிறது.
இனி
இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு
இல்லை என்று
இருக்கும்
(அ. க. பக். 169)
போன்ற வரிகள் அதன் அர்த்தபுஷ்டிகளைக் கடந்தும் கொஞ்சம் எரிச்சலூட்டவே செய்கின்றன.
அபி ஒரு கவி.. “சொற்களின் கும்மாளம்”, “எண்ணங்களின் ஆடம்பரம்” என்றெழுதிச் சொல்லும் ஒரு கவி.
மிக உறுதியாக அபி எமது மொழியின் ஒரு தனித்த ஆபூர்வம். விஷ்ணுபுரம் விருது பெறும் அவர்க்கு என்னுடைய வணக்கங்கள்.
இவற்றில் பெரும்பாலானற்றை டி.எஸ்.எலியட் தன்னுடைய நவீன கவிதைக்கான விதிகளில் குறிப்பிடுகிறார். எலியட் இதனை நவீன செவ்வியல் (Neoclassicism) என்று சொன்னார். நியோ கிளாசிஸம் ஒருவகையில் ரொமாண்டிசிஸத்துக்கு மாற்றாய் எழுந்தது. கவிதை செயல்பாட்டில் கட்டுப்பாடற்று உணர்ச்சிகளை கொண்டுவந்து குவிப்பதற்கு மாற்றாக, கவிதையில் பிரக்ஞையின் தலையீட்டை முன்வைத்தது. சரியாகச் சொன்னால் உட்கார்ந்து வம்படியாகக் கவிதை எழுதுவதை அல்ல எலியட் சொன்னது. கவிதை எழுதுதல் எனும் செயல்பாட்டை ஒரு தியானம் போல பிரக்ஞையோடு Esoteric பண்புகளோடு அணுகுவது அது. அபி போன்ற சூஃபியிஸத்தில் ஆர்வம் உடைய ஒருவர் இப்படியான கவிதையாக்கத்தில் ஈடுபட்டது மிக இயல்பானது. இந்த Esoteric பண்புகளே அபியைத் தனித்துவம் மிக்க கவிஞராகவும் உருவாக்கியிருக்கிறது.
கோவையில் எனக்கு தேவமகள் அறக்கட்டளை விருது கொடுக்கப்பட்டபோது மூத்த படைப்பாளிக்கான பிரிவில் அவருக்கும் விருது கொடுத்தார்கள். நான் மிகப் பெருமையாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது. கிருஷ்ணன் என்றே என்னை அழைப்பார். நான் ’அது என் அப்பா பேர் சார் என் பேர் இளங்கோதான்’ என்பேன். ’அதனால் என்ன எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு’ என்று குழந்தை போல் சிரிப்பார். அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கியுள்ளது நிஜமாகவே மகிழ்ச்சியான செய்தி. இதை முன் வைத்தாவது அவர் கவிதைகளை புதிய வாசகர்கள் தேடிப் படித்தால் நல்லதுதான். வாழ்த்துகள் சார்…
அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் அழகானவை. வாசகர்களுக்கு அலாதியான அனுபவம் தருபவை.
தமிழ் கவிஞர் பீ.மு.அபிபுல்லாவும் (B.M. Abibullah), இந்தி கவிஞர் சச்சிதானந்த் ஹீரானந்த் வாஸ்த்யாயன் அக்ஞேயும் (Sachithananda Hiranand Vastyayan Agne) ஒரே வயதினரோ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல.
எனினும் அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் ஒருமித்த தன்மை உடையனவாகவும், கவிப்பொருளில் ஒற்றுமை உடையனவாகவும் காணப் பெறுகின்றன.
இருவரின் புனைப் பெயர்களை ஒப்பிடும் போது கூட, ஆழ்ந்த ஞானம், நிரந்தரமானது என்ற பொருளில் வருகின்றது. ‘இன்றைக்கும் கூடே’(அபி),‘ஆழ்ந்த ஞானம்’ (அக்ஞேய்) என்ற குறியீட்டின் (Symbol) அடிப்படையில் அமைந்துள்ளன.
இருவருடைய கவிதைகளிலும் அத்வைதவாதம், இரகசியவாதம், சத்தியத்தை ஆராய்வது, தன்னுணர்வு, அகம்வாதம், கணநேர உணர்வு, இருத்தல், பாலியல் மனோதத்துவம் ஆகியவை தென்படுகின்றன.
கவிதைகளில் ஒரே மாதிரியான வேகமும், சக்தியும் இளையோடுகின்றன. இருவருக்கும் முன் காணப் பெறும் கவிதைத் தொனிகளை (நடை) மாற்றியமைத்து, புதிய தொனியில் இருவரும் காவியங்களைப் (கவிதை) படைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இவற்றை ‘நூதனக் கவிதைகள்’ என்றும் ‘ நவீனத்தில் தீவிரமான’ (Ultra Morden) கவிதைகள் என்றும் கூறுவதற்குத் தகுதியுடையவை எனலாம்.
அக்ஞேய் பல்வேறு இடங்களில் வாழ்ந்து, கல்வியும் இலக்கியப் பணியும் செய்திருக்கின்றார். உதகை, இலக்னோ, சென்னை கிறித்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். அதன் பிறகு சிறந்த பேச்சாளராகவும், பேராசிரியராகவும் விளங்கினார். இவர் 1987-இல் மறைந்தார்.
இவருடைய இலக்கியப் படைப்புக்களாக நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், கவிதை ஆகியவை உள்ளன. அதோடு பல நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். இவருடைய “கித்னி நாவோம் மே கித்னி பார்” (எத்தனை படகுகளில் எத்தனை முறை) என்ற கவிதை நூலுக்கு ‘ஞானபீடப்பரிசு’ பெற்று இருக்கின்றார். இவர் இந்தி இலக்கியக் கவிதை உலகில் ‘நூதனக் கவிதையின் தந்தை’ என்றழைக்கப் பெறுகின்றார். நூதனக் கவிதையைப் ‘பிரயோக வாதம்’ என்பர்.
‘தாரஸப்தக் தூஸரா சப்தக்’ திஸராசப்தக் ஆகியவற்றை உருவாக்கியவர். பக்னதூது. சிந்தா இத்யலம், இந்திரதனு, ரௌவுதே ஹயே யே, அரிவோ கருணா பிரபாமை, ஆங்கண் கே பார் துவார், பகலே மை ஸன்னாட்டா புன்தாஹீம் மகாவிருட் கே நீட்சே ஆகியவை முக்கியக் கவிதைகளாகும்.
கவிஞர் அபியின் கட்டுரைகளும். கவிதைகளும் ஒளிவட்டத்துடன் பிரகாசம் செய்வதை உணர முடிகின்றது.
கவிஞர் அப்துல்ரகுமானால் ‘மௌனத்தின் பிரச்சாரகன்’ என்றழைக்கப் பெறுகின்றார். சிறந்த பேராசிரியராகவும் விளங்கினார். பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவில் உயர் பதவிகளை வகித்தவர். திரு.இராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயத்தில் செயலராகப் பணிபுரிந்தவர்
.‘வானம்பாடி’ இயக்கத்தினர் காலத்தில் தனித்துப் புதுமை இலக்கியத்தை எழுதியவர். இவரின் படைப்புக்களாக ‘மௌனத்தின் நாவுகள்’, ‘என்ற ஒன்று’, ‘அந்தர நடை’ ‘அபி கவிதைகள் தொகுப்பு’ ஆகியவை வெளிவந்துள்ளன.
அபியும், அக்ஞேயும் ‘கவிதைகள்’ குறித்து எழுதிய கட்டுரை, கவிதைகள், ‘இலக்கியம்’ குறித்து எழுதிய கட்டுரை ஒரே தொனியைப் பெற்றிருக்கின்றன.
கவிதை வெளிப்படும் தன்மையும், கவிதை நோக்கமும் முற்றிலும் கவிஞனையே சார்ந்தவை. வாசகர்கள் இதை உணர்ந்து கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது இருவரின் கவிதைக் கோட்பாடாகவே உள்ளன. அதை அவர்களின் கவிதைகளில் இனம் காண முடிகின்றது.
கவிஞர் அபி தன் கவிதையில்
“உங்கள் நாக்குகளை நான்-
கொலம்பசின் திசைகாட்டி முள்ளினால்
செய்யவில்லை
கண்டுபிடிக்க அல்ல
காட்டிக் கொள்ளவே
உங்களை நான் அனுப்புவது” (முத்திரைகள்)
என்கின்றார்.
அதே போல் அக்ஞேய்,
“நான் கவிஞன்
நூதனமானவன்: புதுமையானவன்,
காவிய த்வங்களைத் தேடி நான் செல்லவில்லை
ஆசைப்படுகிறேன் தாங்கள் எனது
ஒவ்வொரு வார்த்தையும்
அலசிப்பார்க்கவும் – ஆனால் நகல்கள்
தாங்களாகவே உணர்ந்து கொள்ளவும்”
(அறிஓ க்ருணா பிரபாமை)
எனக் கூறுகின்றார்.
இருவரின் கவிதைகளிலும் இரகசியவாதமும் சத்தியத்தை ஆராய்தலும், அத்வைதவாதமும் அதிகம் தென்படுகின்றன. ஆத்மாவும், பரமாத்மாவும் இணைப்பதும், பிரம்மத்தைப் பற்றியும், உருவமில்லாத மெய்ப்பொருளைப் பற்றியும் கவிதைகளில் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.
சத்தியத்தைத் தேடுவது பிரம்மத்தைத் தேடுவதற்கு ஒப்பாகும். சத்-இயம்-சத்தியம். ‘சத்’ என்றால் மெய்ப்பொருள், நிரந்தமான பரப்பிரம்மம், ‘இயம்’ என்றால் அது சார்ந்தது. அபியின் ‘பிரிவினை’ எனும் கவிதையில்,
“மேலும் மேலும்
உருவம் சுமந்து
போகிறாய்.
உன்னைப் பிரித்து விலக்கிக் கொண்டே
உன்னைத் தேடி
உன் தவம் மட்டும் உடன்வரப்
போகிறாய்” (அந்தர நடை)
என்கின்றார். இந்து சமயத் தத்துவமும், கீதையில் கூறியுள்ள கர்மயோகமும், மோட்சத்தைப் பற்றியும் இதற்குள் காண முடிகின்றது.
வியர்த்தம், உளவாளிகள், காற்று ஆகிய கவிதைகளில் இரகசிய வாதமும், சத்தியத்தை ஆராய்வதும் வெளிப்படையாகவே தெரிய வருகின்றது.
அக்ஞேய் எழுதிய அனைத்துக் கவிதைகளும் இரகசியவாதத்தைச் சுற்றியே அமைந்துள்ளன. இவரது கவிதைச்சிந்தனை அநேக சமயங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் எடுக்கப் பெற்றுள்ளன. அபியின் சிந்தனையும் இதைச் சார்ந்ததாகவே உள்ளது.
அக்ஞேய் தன் கவிதை ஒன்றில்,
“நான் உன்னைத் தேடி வருகின்றேன்
ஓ, எனது சின்னஞ்சிறு சோதியே
எத்தனை தடவைத் தீரனாகச் சோர்வடைந்து
நான் மட்டும்.
ஓ. எனது புரியாத சத்தியமே
எத்தனை முறை…..”
(கித்னி நாவோம் மே கித்னி பார்)
என்கின்றார்.
அபியின் உள்முகப்பார்வை அல்லது பிரம்மத்தைத் தேடுதல் இந்தி பக்தி இலக்கிய ‘சூஃபி’ கவிஞர்களைப் போலவே அமைந்துள்ளது. அதிகமான குறியீடுகளின் மூலமாக இத்தன்மையை வெளிப்படுத்துகின்றார்.
இருவரின் தேடுதல் வேட்டை (கவிதைப் பொருள்) ஒரே மாதிரியாக இருப்பது பெரும் வியப்பாகும். ‘அபி’யின் ‘நாதம்’ என்ற கவிதையிலும் அக்ஞேய்-ன் ‘அசாத்திய வீணை’ என்ற கவிதையிலும் இந்த ஒருமித்த தேடுதல் வெளிப்படுகிறது.
“நாத அலை எனக்
கற்பிதம் கொண்டு
கரையோரங்களில்
தேடுகிறாய்
நாதம்
அலைபாய்வதெப்படி
இருப்பது அது
அலைவதென்று” (என்ற ஒன்று)
என்று அபியும்.
“கேட்கிறேன் நான்
இந்தச் சுரம். இந்த நாதம்
என்னுள் என்னுள்ளாகவே
காற்றைப் போல் நாதமாக நான் உயிர்த்தெழுகின்றேன்
நானில்லை: இல்லை நான்: எங்குமில்லை
ஓ. விருட்சமே: ஓ. கானகமே: ஓ நாதத்தின்
கூட்டுத் தொகையே: நாதத்தின் ஞபாகமே
அலைகின்றேன் அலைகின்றேன்
எங்கிங்கோ அலைகின்றேன்” (அசாத்திய வீணை)
என்றுஅக்ஞேயும் எழுதியுள்ளனர்.
மீனைக் குறியீடாக வைத்து இரகசியவாதத்தை இருவருமே வெளிப்படுத்தியுள்ளனர். அக்ஞேய்னுடைய முக்கியமான குறியீடு மீனாகும். இந்த உலகில் வாழ்வதும், பிரம்மத்துடன் இலயிப்பதுமாக இருப்பதை விளக்குகிறது.
“காலைக் கடித்துப் போகும் மீன் குஞ்சுகள்” (நாதம்) என அபியும் இக்குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளார். மீன் துள்ளுகிறது, கடித்துப் போகிறது. குதூகலமாக இருப்பது எல்லாம் முக்தி தேடுவதற்கே.
தத்துவார்த்த நிலைகளில் பௌத்த தத்துவத்தின் வெளிப்பாடான “சூன்யவாதத்தையும், மௌனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருவரின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அபியின் நிசப்தமும், மௌனமும், ‘வயதும்’ அக்ஞேயின் ‘அசாத்திய வீணை’யிலும் இந்நிலை வெளிப்படுகின்றது.
தன்னுணர்வுக் கவிதைகளாக உள்ள இவைகள் அத்வைதத்தின் மூலமந்திரமான ‘அகம் ப்ரம்மாஸ்மி’யைச் சார்ந்துள்ளன. தன்னைத் தேடுவதும், தனிமனிதத் தத்துவத்தையும், தனிமனிதப் பாதுகாப்பையும் கொண்டு கவிதைகள் எழுதப்படுகின்றன.
‘வடிவங்கள்’ என்ற கவிதையில் அபி ‘குறிப்பிட்ட தேடல்’ செய்கின்றார். ‘அடையாளம்’ என்ற கவிதையில்,
அபியின் ‘கிலு கிலுப்பை’ கவிதை இதை அடிப்படையாகக் கொண்டது. பாலியல் குறியீட்டின் மூலமாக ஒரு மகத்துவம் வாய்ந்த செய்தியைக் கூறியுள்ளார். இதில் ஹிரோஷிமாவில் நடந்த துயரச் சம்பத்தின் உண்மையான சித்திரத்தை, “உள் எங்கும் – கதிர்கள் நனைந்து – நுனி மழுங்கிச் சுருண்டன” என்கின்றார்.
இது போலவே அக்ஞேய் தன்னுடைய ஹிரோஷிமா என்ற கவிதையில் அந்த நகரத்தின் நாசத்தை விவரிக்கின்றார்.
“ அந்தத் திசையெங்கிலும்
காலச சூரியனின் இரதங்களால்
அந்தப் புவி துண்டாகப் பாய்ந்து
பறந்தது” (ஹிரோஷிமா)
அபியும் அக்ஞேயும் கவிதைகளில் மொழியின் பிரயோகத்தை மிக ஆழமாகப் படைத்துள்ளனர். வார்த்தைகளுக்கு மீறித் தருவது இவர்கள் கவிதைகளின் முக்கியமான ஒற்றுமையாகும்.
குறியீடுகளும், படிமங்களும் ஒரே மாதிரியாக இருவரின் கவிதைகளில் காணப்படுவது கூறத் தக்கதாகும்.
அபியையும், அக்ஞேயையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெவ்வேறு தளங்களிலிருந்து (Place) வாழ்ந்து பணி செய்திருந்தாலும் இருவரின் சிந்தனைகளும் கவிதை நடையும், கவிதையின் உத்தேசமும் ஒரே பாணியில் அமைந்திருப்பது அதிசயமாகும்.
தி.சிவப்பிரகாஷ். எம்.ஏ.,எம்ஃபில். இந்தித் துறைப் பேராசிரியர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊட்டி 9445278449
நன்றி : https://www.inidhu.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%9e%e0%af%87%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/