திங்கள், 26 அக்டோபர், 2015

கவிஞர் அபி கவிதைகள் குறித்துப்   "புதுக் கவிதைகளில் படிமங்கள்" நூலில்  உள்ள திறனாய்வு

படிமங்களை அளவோடும் சிறப்போடும் கையாள்பவர் அபி. இவரை ‘எச்சரிக்கையுடனும் இயைபு கெடாமலும் படிமங்களைப் பக்குவமாகக் கையாள்பவர்’ என்று பாலா குறிப்பிடுகின்றார்.

அபியின் படிமங்கள் ‘அணிகளாகவோ ஆடைகளாகவோ இன்றி அங்கங்களாகவே படைக்கப்படுகின்றன.’ என்று அப்துல் ரகுமான் பாராட்டுகின்றார்.

‘"அழகின் உச்சிபடிமம் என்றால் அதை முறைப்படி தொட்ட பெருமை இவருக்குரியது. இராமன் கை வில்  போலவும் இராவணன்  கை  யாழ் போலவும் இவரிடம் படிமம் சொன்ன படியெல்லாம் கேட்கிறது". என்று அபியின் திறமையை  மீரா மனந்திறந்து போற்றுகின்றார். இவ்வளவு பாராட்டுகளுக்கும் அபி தகுதியானவர் என்பதை ‘மௌனத்தின் நாவுகள்’ என்ற கவிதைத் தொகுதியைப் பார்க்கிறபோது அறியலாம். நீலாம்பரி, ராப்பிச்சைக்காரன், ஒரு நம்பிக்கை செத்துக்கிடக்கிறது ஆகிய கவிதைகளைப் படிம அழகுள்ள கவிதைகளாய் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
உறக்கம் பற்றிய நீராம்பரியில்,
“பகல்வெளியில் எங்கோ
பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து
விழிக் கூட்டிற்குத் திரும்புகிறது.
இமை ஊஞ்சலில் சற்றே
இளைப்பாற ஆடிவிட்டு
மௌனத்தின் மிருதுவின்மேல்
சிறகு பரப்பி,
என்னுள்ளிருக்கும் தன் குஞ்சுகளுக்கு
என் இதய அடியறைச் சேமிப்பை
எடுத்தூட்டி,
தன் உவகை
எனக்குள் விரிக்கவென
விழிக் கூட்டிற்குத் திரும்புகிறது….”

என்ற வரிகளில் படிமம் சிறப்பாகவும் பொலிவாகவும் அமைந்து கிடக்கிறது. உறக்கம் ஒரு பறவையாக உருவகமாக்கப்பட்டு இயைபு கெடாமல் படிமக் காட்சி வரையப்பட்டிருப்பது வனப்பாய் உள்ளது.  பறவையின் இயல்போடு பொருந்தி வரும் படிம அழகு மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.
‘ராப்பிச்சைக்காரன்’ என்ற கவிதையின் காமத்தை ராப்பிச்சைக்காரன் ஆக்குகின்றார் அபி. மன்மதன், தேவன், காமன், என்றெல்லாம் வழிவழியாக வருணிக்கப்பட்டதை மாற்றி  ராப்பிச்சைக்காரனாக்கியிருப்பது துணிச்சல்தான்..
“எவ்வளவிடினும் நிரம்பாத
உன் ஓட்டைப் பாத்திர நாற்றத்தில் என் சுவாசங்கள்
கூசுகின்றன……
கொடுப்பவர்கள் வறண்ட பின்னும்
நீ கேட்பவன்
வறண்டவர்கள்
கொடுப்பதாக பாவனை செய்கையினும்
நீ
வாங்குவதாக பாவனை செய்பவன்……

சிலர் மட்டுமே
தங்களுக்கென்று சமைத்ததில்
உனக்குப் பங்கு தருகிறார்கள்
பலர்
உனக்கெனவே சமைக்கிறார்கள்…”
என்ற வரிகள், படிமத்தைக் கவிஞன் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்குச் சாட்சிகளாகின்றன. ‘எவ்வளவு இடினும் நிரம்பாத ஓட்டைப் பாத்திரம்’ ‘கொடுப்பவர்கள் வறண்ட பின்னும் கேட்பவன்’ ‘பலர் உனக்கெனவே சமைக்கிறார்கள்’ என்ற படிமங்கள் மனித வாழ்க்ககையின் யதார்த்தத்தை அப்படியே புலப்படுத்துகின்றன.
‘ஒரு நம்பிக்கை செத்துக் கிடக்கிறது’ என்ற கவிதையில்,

  “ஒற்றையடிப் பாதை…..
   எந்த ஊரிலும்
   இரை எடுக்காமல்
   இளைத்து இளைத்து
   எங்கோ போகிற
   ஒற்றையடிப் பாதை…..”

என்று பாடுமிடத்தில் உள்ள படிமம் அலங்காரமில்லாமல் இயல்பாய் வந்துள்ளதை அறிவு கண்டு கொள்கிறது. ஊரும் பாம்பாக ஒற்றையடிப்பாதை உருவகமாகிக் கண்ணில் தெரிகிறது. இங்கே ‘ஜாடியில் உள்ள பூவைப் போல் இல்லாமல் கொடியில் உள்ள பூவைப் போல் அபியில் கவிதைகளில் படிமம் இயற்கையாய் இருக்கிறது’ என்ற மீராவின் வார்த்தைகள் சரியானவை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நூல்          : "புதுக் கவிதைகளில் படிமங்கள்"
ஆசிரியர் : ந.முருகேசன்
முகவரி   :மணிவாசகர் பதிப்பகம்
                    முதல் பதிப்பு  டிசம்பர்  1986
பக்கம்  :   29-32வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...