வியாழன், 30 நவம்பர், 2017


மாற்றல்

பின்னணி உண்டு
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ

மாற்றிக் கொண்ட இடைப்பொழுது
பின்னணி இல்லாதது
இடைப்பொழுதுகளையும்
மாற்றிக் கொள்வோம்
உன்னுடையதை நான்
என்னுடையதை நீ

பின்னணிக்குத் தளங்கள் உண்டு
மாற்றிக் கொண்டபின்
மாற்றிக் கொள்வோம்
தளங்களை

தளங்களில் நடமாட்டங்கள் உண்டு
மாற்றிக் கொள்வோம்
நடமாட்டங்களை

நடமாட்டங்களில்
பின்னணி
சூழலாக
மாறியிருக்கக் கூடும்
சூழலில்
எனது உனது சாயைகள்
நிர்ணயம் நோக்கி
வீண்முயற்சிகளில்
அலைந்து திரியக் கூடும்
மாற்றிக் கொள்வோம்
சாயைகளை

எனது உனது இன்றி
எதாவதாகவோ
இருக்க நேரிடும்
மாற்றிக் கொள்வோம்
எதாவதுகளை
வேகம் வேகமாக

மாற்றல் நிரந்தரப் படுகிறதா
உடனே
மாற்றிக் கொள்வோம்
மாற்றல்களைவெள்ளி, 24 நவம்பர், 2017

நிலா முற்றம்--கவிஞர் அபியின்   குமுதம்       
                                                                                           இதழ் பேட்டி-2, 1-11-17

 
  
  படிமங்களை அளவோடும் சிறப்போடும் கையாள்பவர் அவ. இவரை ‘எச்சரிக்கையுடனும் இயைபு கெடாமலும் படிமங்களைப் பக்கவமாகக் கையாள்பவர்’ என்று பாலா குறிப்பிடுகின்றார்.

    அபியின் படிமங்கள் ‘அணிகளாகவோ ஆடைகளாகவோ இன்றி அங்கங்களாகவே படைக்கப்படுகின்றன.’ என்று அப்துல் ரகுமான் பாராட்டுகின்றார்.

    “அழகின் உச்சிபடிமம் என்றால் அதை முறைப்படி தொட்ட பெருமை இவருக்குரியது. இராமன் கை வில் போலவும் இராவணன் கை யாழ் போலவும் இவரிடம் படிமம் சொன்ன படியெல்லாம் கேட்கிறது”. என்று அபியின் திறமையை மீரா மனந்திறந்து போற்றுகின்றார். இவ்வளவு பாராட்டுகளுக்கும் அபி தகுதியானவர் என்பதை ‘மௌனத்தின் நாவுகள்’ என்ற கவிதைத் தொகுதியைப் பார்க்கிறபோது அறியலாம். நீலாம்பரி, ராப்பிச்சைக்காரன், ஒரு நம்பிக்கை செத்துக்கிடக்கிறது ஆகிய கவிதைகளைப் படிம அழகுள்ள கவிதைகளாய் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
    சங்க அக இலக்கியத்தில் முல்லைத்திணை தலைவன் வரவுக்காகத் தலைவி காத்திருந்ததலைக்  காட்டுவது. அதற்குரிய பொழுது மாலை. எனது மாலைகள் ஒரு புதிய முல்லைத்திணையாகப் பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு பிரம்மாண்ட முடிவிலி அனுபவமாக ஆக்கிக் கொடுத்தன. (1989-2003) கவிதைகள் என்ற மொத்தத் தொகுப்பில் இடம் பெற்றது.


    வாசிப்பு, அனுபவம்…. எது உங்கள் கவிதையாகிறது?

    கவிதைபற்றிய என் படிநிலை நகர்வுகளுக்கு ஓரளவு மட்டுமே என் வாசிப்பு பொறுப்பாகும். பெரும்பாலும் என் படைப்பு அனுபவமே என் கவிதையியலைத் தீர்மானிக்கிறது. இப்போது பார்க்கையில், என் கவிதை, உணர்வுகளின் ரூப நிலையிலிருந்து அரூப நிலைகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அனுபவ நிலையிலிருந்து அனுபவங்களற்ற நிலையை நோக்கிப் போக முயல்கிறது..”

    புரியவில்லை?

    “என் கவிதை புரியவில்லை என்று பரவலான ஒரு பேச்சு உண்டு. அது வேறு சிலர் கவிதைகளுக்கும் பொருந்தும். சுpல எழுத்தாளர்களின் வசன இலக்கியங்களுக்கும் பொருந்தும் லா.ச.ரா., மௌனி புரியவில்லை என்று சொல்கிறவர்களும் உண்டு. உலக இலக்கியம் முழுவதிலும் புரிந்து கொள்ளச் சிரமம் தருகின்றவை இருக்கவே செய்கின்றன. என் கவிதையையும் உள்ளடக்கிப் பொதுவாகச் சொல்கிறேன். படைப்பாளிகள் சிலரின் மிகத்தனித்தன்மையான மன இயக்கம் படைப்பில் செயல்படும்போது, அந்த இயக்கம் புரியாததன் காரணமாக அங்கு ஒரு இருள் படர்கிறது. மொழி வடிவத்துக்கும் சிந்தனை வடிவத்திற்கும் வருவதற்கு முந்தையதான நுட்ப உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். அருவமும் மௌனமும் அகாலமும் அகாதமும் ஆகிய முடிவிலிகள் கவிதைக்குள் பிரவேசிக்கின்றன. கவிஞனின் மேல்மனமே கூடத் துல்லியமாக உணர்ந்திராதவற்றை அவனுடைய உள்ளுணர்வின் துணை கொண்டு கவிதை வெளிக் கொண்டு வருகிறது. ‘இருத்தல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘இல்லாதிருத்தலே இருத்தல்’ என்கிறது கவிதை. இது என்னவகை தர்க்கம்? ‘சிறு தெருக்கள்… அடக்கமாக மகிழ அவைகளுக்குத்தான் தெரியும்’ இது என்ன வகை  காட்சி? ஏப்படிப் புரிந்து கொள்வது?

    நவீன கவிதையைப் பொறுத்த வரை ‘புரிந்துகொள்ளல்’ என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கவிதையைப் புரிந்து கொள்வது அதன் மொழிபூர்வமான (சொற்பொருள்) அர்த்தம் பார்த்து அறிவதா? உள்ளடக்கம் (கருத்து) என்ன என்று தெரிந்தால் மட்டும் கவிதை புரிந்ததாகிவிடுமா? உள்ளடக்கம் ‘கவிதை’ யின் ஒரு கூடுமட்டும்தான். கவிஞனின் அனுபவக்கூறு, உணர்வு, சொல்லில் அவன் அடக்கிக் காட்டும் த்வனி, சூசகம்… எல்லாம் சேர்ந்ததுதான் கவிதையின் மொத்த இருப்பு. பழைய கவிதைகளில் அக்கால மொழி புரியாததால் உரைகளைக் கொண்டு ‘அர்த்தம்’ பார்க்கிறோம். ஒரு விஷயம் அர்த்தமாக்கப்படும் போது அது விஷயமல்ல, விஷயத்தின் அர்த்தம்: அதாவது அது மற்றொன்று. உழகைள் அக, புற இலக்கண வரம்பிற்குள்ளும், உரை எழுதப்பட்ட காலத்தின் ஒரு பகுதிக்குள்ளும் கவிதையைக் கட்டிப் போடுகின்றன. பதவுரை பொழிப்புரை திருப்திகளில் கவிதையைச் செரிக்க முடியாது. கவிஞனது கைக்கு வந்தவுடன், மொழியின் சொல் தன் அகரத்தில் தொடர்பை முறித்துவிட்டு அவனது அனுபவ வெளியீட்டுக் கருவியாகி விடுகிறது. ‘உயிர்நன்று, சாதல் இனிது’, ‘அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று!’ ‘உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று’ - இப்படி மொழி வரம்பைத் தாண்டி வேறு வேறு தளங்களில் சஞ்சரிக்கும் கவிதை மொழிக்கு ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.

    எந்த அர்த்தமும் புலப்படாமலே ஒன்றை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும் இவை, ஓவியம், போன்ற கலைகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம்? அர்த்தம் காண்பதில்லை: அனுபவம் காண்கிறோம். கவிதையில் மொழி ஊடகமாக இருக்க நேர்ந்த தவிர்க்க முடியாமை காரணமாக ‘அர்த்த தேடல்’ நேர்ந்து விடுகிறது. ‘கவிதைச் சொற்களின் உச்சபட்ச செறிவு கவிதையை இசைக்குள் செலுத்தி விடுகிறது’ என்றார் ஜார்ஜ் ஸ்டெய்னர். வாசகன் கவிதையை வாசிக்கட்டும்: மொழியின் கட்டுகளைத் தாண்டி கவிதை அவனுக்குள் புகுந்து சலனம் எழுப்புவதையோ, இருக்கும் சலனம் எழுப்புவதையோ, இருக்கும் சலனம் அடங்குவதையோ காணட்டும். ஆகக் கவிதையைப் புரிந்துகொள்வது என்பது கவிதையைத் தன் அனுபவமாக்கிக் கொள்வதுதான். அர்த்த மதிப்பினால் அல்லாமல் அனுபவ மதிப்பினால் தான் கவிதைகள் உயிர்த்திருக்கின்றன.

கவிஞனின் அனுபவம் கவிதையாகிறது. கவிதை வழியாக வாசகன் கவிஞனின் அனுபவத்தை அடைய முடியுமா? முடியாது. அனுபவம் அவரவருடையது. ஒருவருடையது மற்றொருவருக்குப் போகாது. மொழி மேல்தளக் கருத்துப் பரிமாற்றங்களில் மட்டுமே ஒரே பொருள் தரலாம். அனுபவ தளத்தில் கவிதைமொழி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவே அனுபவப்படும். ஒரு கவிதை எழுப்புவது ஒரு துயரம் என்றிருப்பது எல்லார்க்கும் ஒத்ததாகலாம். ஆனால், துயரத்தின் எடை அது உருவாக்கிய அனுபவ விசிறல் ஆளுக்கு ஆள் வேறுபடும். படைப்பாளியின் நுட்ப உணர்வுகள் தூண்டிப் பிறந்த ஒரு படைப்பு வௌ;வேறு உணர்வுஃஅனுபவத் தரங்களுடைய வாசகர்களிடம் வேறுவேறு மாதிரியாகத்தான் அனுபவமாகும். ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணலாம்’ என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது முடியாது. கவியுளம் ‘ஆழ்ந்திருக்கிறது’ என்பதை மட்டுமே உணர முடியும். அந்த ஆழம் எத்தகையது என்று கேட்டால், வாசகன் தனது ஆழத்திற்குப் போய் அதைத்தான் பார்த்துக் கொள்ள முடியும். கவிதை, வாசகனுக்குள்ளிருக்கும் அவனது கவிதையைத்தான் எழுப்புகிறது. படிப்பே படைப்பு ஆகிவிடுகிறது. கவிதையைப் புரிந்து கொள்ளல் என்பது இதுதான். ஆக, ஒரு கவிதை ஒரு கவிதையன்று: எத்தனை வாசகரோ, அவர்கள் வாசிப்பது எத்தனை முறையோ, அத்தனை கவிதை.”


லா.ச.ரா?

    “லா.ச.ரா. என்ற மிகப்பெரிய ஆளுமையை ஒரு நேர்காணலில், ஏன் ஒரு நூலில் கூட விளங்கிவிட முடியாது. எனது முனைவர் பட்ட ஆய்வுக்கு அவர் படைப்புகளை எடுத்துக் கொண்டேன் (1975). ஆதை ஒட்டித்தான் அப்போது அவர் வசித்துவந்த தென்காசியில் முதன் முதல் அவரைச் சந்தித்தேன். அதன்பிறகு பலமுறை, பல இடங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன். நிறையப் பேசியிருக்கிறோம். எல்லாமே அனுபவ ஊடாட்டங்கள். எதைப் பேசினாலும் முதல் வார்த்தையிலேயே விஷயத்தின் உடனடித் தன்மையில் அவர் நுழைந்துவிடுவார். அவர் படைப்புகள் பற்றி… பலர் அறிந்தவை, நிறையப் பேசப்பட்டவை. இப்போது வேண்டாம்.

    ஓன்று சொல்ல நினைக்கிறேன். கவிதைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி. ஆவரை முதல் முறை சந்தித்தபோது, அப்போது வெளிவந்திருந்த என் முதல் தொகுப்பு ‘மௌனத்தின் நாவுகளை’ அவரிடம் கொடுத்தேன். மறுநாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டேன். ‘படித்தேன். அதில இசை இல்லையே!’ என்றார். இசை என அவர் குறிப்பிட்டது யாப்போசையாக இருக்கலாம். தொடர்ந்து சொன்னார். ‘எனக்குக் கவிதைகள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஓரளவு பாரதி தவிர.’ எழுத்திலும் பேச்சிலுமாக ந.பிச்சமூர்த்தி பற்றிப் பரவசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பவர் லா.ச.ரா. ஆனால் புதுக்கவிதையின் முன்னோடியான பிச்சமூர்த்தியன் கவிதைப் பற்றி அவர் பேசியதேயில்லை. கவிதை வார்ப்பு அவரிடம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அவரிடம் ‘உங்கள் வாசகர்கள் உங்கள் படைப்புகளில் ஏராளமான கவித்துவம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதுவே அவர்களை உங்கள் எழுத்தில் கட்டிப் போட்டிருக்கிறது’ என்று சொன்ன போது வியந்துபோனார். அவர் பிரக்ஞையில் கவித்துவ நோக்கம் என்று எதுவுமில்லை. உணர்வுகளின் ஆழமான உறைநிலைகளிலும் சலனங்களிலும் ‘உண்மை’ இடங்கொண்டிருக்கிறது. அதைத் தொடுபவர் எவராயினும் அது கவிதையாக வெளிப்படுகிறது. அதை உணராமலேயே – கவிதை தம் படைப்பில் இசைவு கொள்கிறது என்பதை உணராமலேயெ – லா.ச.ரா. எழுதி வந்திருக்கிறார்.

    கவிதையைப் பற்றி அவர் சொன்னதையும் நினைத்ததையும் விட்டுவிடுவோம். ஆவரை அறியாமலே அவருக்குள் கவிதை பற்றிய உலகமரபான ஓர் உயர்ந்த எண்ணம் இருந்திருக்கிறது. ஒரு மாலை – மேகங்கள் - இயற்கை அழகு அதை வர்ணிக்கும்போது ‘அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்து கொண்டிருக்கின்றன’ என்கிறார். வேறோhடத்தில் ‘காண்பதும் கண்டதில் இழைவதுமன்றிக் கவிதையில் புரிந்த ஆக வேண்டியது என்ன?’ எனக் கவிதைக் கோட்பாட்டையே சொல்லியிருக்கிறார்.

    தமிழுக்குக் கிடைத்த அபூர்வமான கலைஞர் லா.ச.ரா. எளிமையும் இனிமையுமான மனிதர்.”

கவிஞராகவும் பேராசிரியராகவும்….?

    “கவிஞனானது எனக்கு நேர்ந்தது: பேராசிரியரானது நான் விரும்பி அடைந்தது. பள்ளிப் பருவத்திலேயே தமிழ்ப் பேராசிரியராவதுதான் எனக்கு லட்சியமாக இருந்தது. இந்த இரண்டையும் நான் சம்பந்தப்படுத்திப் பார்த்ததில்லை.

    ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று சொன்னாலும் பாரதி பத்திரிகைத் தொழிலில் இருந்தார். மிகப் பெரும்பாலான படைப்பாளிகள் தத்தம் வாழ்க்கைக்கென படைப்புக்குத் தொடர்பில்லாத ஏதாவது ஒரு தொழிலைத் தேடிக் கொண்டவர்கள்தாம். ஆனால் என்னுடைய தமிழ்ப் பேராசிரியத் தொழில் கவிதை வாழ்வுடன் ஒட்டுறவு உடையதுதான். ஏன் மாணவாகள் இலக்கியங்களைப் பாடத்திட்டக் கூறுகளாக இல்லாமல் உயிர்ப்புள்ள படைப்புகளக நுகர்ந்திருக்க வாய்ப்புண்டு. இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் படிக்க படைக்க என்னால் வழிகாட்ட முடிந்தது.

    நாற்பதாண்டுகளுக்கும் அதிகமான பேராசிரியப் பணியில், என்னோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர்களில் பெரும்பாலோர் என் கவிதைகளை வாசித்ததில்லை. கவிதை தொடர்பாக என்னுடன் பேசியதுமில்லை. மேலே நான் சொன்ன ஒட்டுறவு இல்லை போலவும் தோன்றுகிறது!”

குடும்பம்?

    “1971இல் திருமணம். கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் ஆர்வமில்லாமல் இருந்த நான் என் மனைவியின் வற்புறுத்தலால் அவற்றை அப்துல் ரகுமானுக்கும் மீராவுக்கும் அனுப்பி வைத்தேன். மூன்று ஆண்டுகள் கழித்து ‘மௌனத்தின் நாவுகள்’ வெளிவந்தது. எங்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மூவரும் திருமணமாகிக் குழந்தைகளுடன் வாழந்து கொண்டிருக்கிறார்கள் எனக்கு நான்கு பேத்திகளும் ஒரு பேரனும்.

    மனைவி பாரிசா 2005-ஆம் ஆண்டு காலமாகி விட்டார். இப்போது என் இளைய மகனோடு மதுரையில் இருக்கிறேன்.”

நன்றி ; குமுதம் வார இதழ்  

வியாழன், 23 நவம்பர், 2017

நிலா முற்றம்--கவிஞர் அபியின் குமுதம் இதழ் பேட்டி
 

    தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கென தனித்துவமான இடத்தை வரித்துக் கொண்டிருப்பவர் மூத்த கவிஞர் அபி. ‘அர்த்தங்களின் பளுவினால் ஆன்மாவின் உள் புதைந்த கவிதைகளை நாக்குத் திரைகளில் ஓவியமாக்கிக் கொண்டு” பயணம் செய்கிற கவிஞர் அபி பேராசிரியத்தனமற்ற ஓர் பேராசிரியர். லா.சா.ரா.வின் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி டாக்டர் பட்டம் பெற்ற இவரது இயற்பெயர் அபிபுல்லா.

    கவிஞர் பிரம்மராஜன் போன்ற கவிஞர்;கள் இவரது மாணவர்களே. இவரது ‘மௌனத்தின் நாவுகள்’ (1974), ‘அந்தரநடை’ (1979) ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகள் தன்னிலிருந்து தொடங்கி தன்னையே தேடிப் புறப்பட்டு அபூர்வக் காட்சிகள் பலவற்றை வெளிப்படுத்துப்பவை. அபியின் கவிதைகளில் காணப்படும் மொழிநடை தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரக்கூடியது.
    ‘அபி’ என்னும் பெயர்..... புனை பெயரா?

    ‘புனை பெயரில்லை. புனை பெயர் ஏதோ ஒரு அர்த்தத்திற்குள் என்னை வரையறுத்து விடக் கூடும்: செயற்கையாகப் பெருமைப்படுத்தும் முயற்சியாகத் தோன்றவும் கூடும். இதில் எனக்குச் சம்மதமில்லை. இயற்பெயர் ஹபீபுல்லா. தமிழ் ஒலி வடிவில் அபிபுல்லா. கல்லூரிப் பருவத்தில் நண்பர்கள் என்னை ‘அபி’ என்று ‘சுருக்கி’ அழைத்தார்கள். ஒருநாள் நண்பர் என்னை அழைத்ததைக் கேட்டுக் கொண்டே வந்த பேராசிரியர் ஒருவர் ‘நல்லாயிருக்கு ஐயா. உங்களை அவர் ‘அபி அபி’ என்று அழைக்கிறார்’ என்றார். அன்று இந்தப் பெயர் எனக்குப் பிடித்துப் போனது. படைப்பு வெளியீட்டுக்கு முன்பிருந்தே சுருக்கக் கையொப்பமாக நான் பயன்படுத்திவரும் பெயர் இதுதான்.”
பிறப்பு - ஊர் - குடும்பம் - பையல் பருவத்தின் படைப்புணர்வு விதை பற்றிச் சொல்லுங்களேன்.
 
 
 

    ‘நான் பிறந்த ஊர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள போடிநாயக்கனூர். அந்த நாளில் இனிமையான தண்ணீருக்குப் புகழ்பெற்றது போடி. எனக்கு மட்டுமல்ல, எனது எல்லா உலகங்களுக்கும் பிறந்த ஊர் போடிதான். நினைவு தெரிந்த நாளில் என் ஊர் என் நினைவில் பதிந்த பதிவை இன்னும் அழுக்குப்படியாமல் வைத்துப் பாதுகாத்து வருகிறேன். சுற்றிலும் மலைகள், அடர் காடுகள், தோப்புத்துரவுகள், வயல்கள், அவசரமில்லாத ஓடைகள்... என் ஊரின் (அன்றைய) கடும் பனியும் அன்றாட மருள் மாலைகளும் எனக்குள் இருந்த எனக்குத் தனிமையின் கனத்தைப் போதித்தன என்று இப்போது தெளிகிறேன். (தனிமை: தாய், தந்தை, சிறிய தந்தை, சிறிய தாய், ஆறு சகோதரிகள், ஒரு சகோதரர் கொண்ட குடும்பத்தில்).

    என் தாய்வழிப் பாட்டனார் (அவர் வீட்டில் நிறைய ஓலைச்சுவடிகள் பார்த்திருக்கிறேன்) சீறாப்புராணச் சொற்பொழிவாளர். நிகழ்ச்சியில் என் தந்தை இனிமையான குரலில் அந்தப் பாடல்களைப் பாடுவார். இந்தக் காட்சி தூக்கக் கலக்கத்து நள்ளிரவில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் நான் பார்த்ததா அல்லது யாரும் சொல்லக் கேட்டதா, தெரியவில்லை.

    ஆறாம் வகுப்பு ஆசிரியர் என் மீது தனி அன்புடையவர். பள்ளிக் கலை நிகழ்ச்சிகளுக்குத் திரைப்பட மெட்டுகளில் பாட்டெழுதுவார். என்னை உடன் வைத்துக் கொள்வார். நான் சொல்லும் சில வரிகளையும் சேர்த்துக் கொள்வார்: நிறையத் தூண்டுவார். ஏழாம் வகுப்பு ஆசிரியருக்கு கொஞ்சம் இசைஞானம் உண்டு. செய்யுள்களைப் பாடியே (ராகமும் சொல்வார்) நடத்துவார். எனக்குப் பாடும் பொறுப்பும் வந்தது. அப்போது பிடிபட்டது ‘மோகனம்’. இவையெல்லாம் என் படைப்பு உந்துதலுக்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

    எங்கள் பலசரக்குக் கடையில் பொட்டலம் கட்டுவதற்காக வந்த பழைய புத்தகங்களில் ஒரு சிறிய யாப்பிலக்கணப் புத்தகம் பார்த்தேன். எளிமையாக இருந்தது. ஆசிரியத் துணையின்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. 14-15 வயதில் வெண்பாக்கள் எழுதினேன். கண்ணதாசனின்  ‘தென்றல்’ இதழில் நடந்து வந்த வெண்பாப் போட்டியில் என் வெண்பாக்கள் என் பெயரிலும் நண்பர்கள் பெயரிலும் வெளிவந்தன. கட்டளைக் கலித்துறை யாப்பில் 40 பாடல்கள் கொண்ட ஒரு நூல் கூட (என் அக்கா குழந்தை பற்றியது) எழுதினேன்.

    என்  உடனாளிகளிடமிருந்து நான் ஏதோ வேறுபட்டவன் என்பது போல என்னை உணரச் செய்தது என் பையல் பருவம். இப்போதைய பார்வையில் அது ஒரு இனிய பேதைமை.”

    பள்ளி - கல்லூரிப் பருவங்கள் - படைப்புச் சூழல் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு….

    ‘9-ம் வகுப்பிலிருந்தே எனக்கு இனிய நெருங்கிய நண்பர் ந.காமராசன். நாங்கள் இருவரும் என் தெருவிலிருந்த பெரும்புலவர் கான்முகம்மதுவிடம் அவ்வப்போது சென்று பல்வேறு யாப்புச் சந்தங்கள் பற்றித் தெரிந்து கொண்டோம். கல்லூரியிலும் (மதுரை தியாகராசர் கல்லூரி) எங்கள் நட்புத் தொடர்ந்தது. அந்நாளில் (1959-63) அந்தக் கல்லூரியில் மாணவக் கவிஞர்கள் பலர் இருந்தோம். எங்களுக்கு மூத்த அப்துல் ரகுமான், மீரா, இளையவர்களான இன்குலாப், மேத்தா இன்னும் சிலர். பெரும்பாலும் எங்கள் கவிதை முயற்சிகள் கல்லூரிக் கவியரங்குகள், ஆண்டு மலர்கள் அளவில் நின்றன. ரகுமானும் மீராவும் மாணவப் பருவத்திலேயே கூட்டாகக் கவிதைத் தொகுப்பு வெளியிட்டார்கள். ஏறத்தாழ எல்லாரிடமுமே திராவிட இயக்க வேகம் இருந்தது. பாரதிதாசன் கவிதா மண்டலத்தில் இருந்தது. பாரதிதாசன் கவிதா மண்டலத்தில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நான் எழுதிய துடிப்பான கவிதைகள் சில இன்னும் சில நண்பர்களின் மனப்பாடப் பகுதியில் உள்ளன. என் பழைய யாப்பு மரபுக் கவிதைகள் சிலவற்றை என் நண்பர் சீனிவாசன் தேடிச் தொகுத்து வைத்திருக்கிறார். கடந்த கால நினைவுக் கிளர்ச்சிக்காக மட்டுமே அவை உதவக்கூடும்.”

    நவீன இலக்கியம், புதிய கவிதை பற்றிய தங்களின் தெளிவு என்ன?

    “இன்னும் சற்று முன்பாகவே நேர்ந்திருக்கலாம்: கல்லூரிப் பணியில் சேர்ந்த போது தான் எனக்கு நவீன இலக்கிய அறிமுகம் கிடைத்தது. அதுகூட அப்போதிருந்த கவிதைகள் மூலமாக அல்ல, (சி.சு. செல்லப்பா தொகுத்திருந்த முதல் புதுக்கவிதைத் தொகுதி என்னைக் கவரவில்லை). வசன இலக்கியங்களே கவர்ந்தன. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா. என. மௌனியும் லா.ச.ரா.வும் என்னை மிகவும் பாதித்தார்கள். அதற்கும் மேலான பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டது. அப்துல் ரகுமான் என்னிடம் கலீல் ஜிப்ரான் பற்றி வியந்து பேசினார். அவரிடமே புத்தகங்கள் கிடைத்தன. ஜிப்ரானுடைய அற்புதமான பூமென்மைப் புனைவுலகம் எல்லாரையும் போலவே என்னையும் ஈர்த்தது. அவருடைய வெளிப்பாட்டின் ஒளிவண்ணங்கள் மட்டுமல்ல: அதற்கடியே தேங்கி சொல்லுக்குப் பிடிபடாதிருந்த இருள் வண்ணங்களாலும் உறிஞ்சப்பட்டேன். ஜிப்ரானுடைய பாதிப்புக்குட்பட்டு எழுதிய பெரும்பாலோர், தத்தமது உள்ளடக்கங்களுக்கு அவரது நடையை மட்டும் வரித்துக் கொண்டனர். ஆனால், என்னிடம் இயல்பாகவே இருந்த அகநோக்கு - தன்னுள் துருவுதல் - ஜிப்ரானை வாசித்தபோது பெரும் கிளர்ச்சி கொண்டு எழுந்தது. சுழஅயவெiஉளைஅ என்பதன் உண்மையான பொருள் அதுதான் மனப்போக்குக்கு, தனிப்பட்ட அனுபவத்துக்கு ஒத்தான ஒன்றைப் பற்றிக் கொண்ட உரிமை உணர்வில் திளைத்தேன்.

    இந்த உணர்வெழுச்சியில் பிறந்தவையே ‘மௌனத்தின் நாவுகள்” கவிதைகள் (1967-1971). ஆதை வெளியிடுவதற்காகவே மீராவும் ரகுமானும் அன்னம் பதிப்பகத்தை உருவாக்கினார்கள். அப்போது சேலம் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே எனக்குக் கிடைத்த இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் ராஜாராமும் (பிரம்மராஜன்) சிவகுமாரும். இலக்கியச் சூழல் பற்றி, இலக்கிய ஏடுகள் பற்றி அவர்கள் மூலமாக நிறையத் தெரிந்து கொண்டேன். ராஜாராம் மௌனத்தின் நாவுகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். மௌனத்தின் நாவுகள் வெளிவந்தபோது (1974) வரவேற்பு இருந்தது. புதுக் கவிதைக்கு முதல் அடையாளம் கொடுத்த ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பாவிடம் அந்தக் கவிதைகளைப் பாராட்டியிருக்கிறார். சந்திக்க நேர்ந்த போது நேரிலும் பாராட்டினார். ஞானக்கூத்தன் ஒரு பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் எழுதியிருந்தார்.”

    வானம்பாடி இயக்கத்தோடு எப்படி உங்களுக்கத் தொடர்பு ஏற்பட்டது?  

    “என்னை வானம்பாடிக் கவிஞர் என்று சிலர் குறிப்பிட்டார்கள். எழுபதுகளில் ‘வானம்பாடி’ இதழ் வெளிவந்தது. கவிஞர்கள் சிலர் ஒரு குழுவாக அதில் செயல்பட்டார்கள். அவர்களில் யாரும் என்னை ‘வானம்பாடி’ யாகக் குறிப்பிட்டதில்லை. அவர்களோடு எனக்குத் தொடர்பில்லை. ஆயினும் என் நண்பர்கள் அனுப்பி என் இரண்டு கவிதைகள் மட்டும் வானம்பாடியில் வெளிவந்திருந்தன. அந்தக் கவிதைகள் அந்த இயக்க அடிப்படைகளுக்குப் பொருந்தாதவை. வானம்பாடிக் கவிதைகளிலும் என் கவிதைகளிலும் மேம்போக்குப் பார்வையில் தெரிந்த ஜிப்ரானிய மொழி வெளியீட்டுப் பாணி ஒப்புமை காரணமாக நான் வானம்பாடியாகக் கருதப்பட்டிருக்கலாம். என் கவிதை உள்ளடக்கம் அப்போதே முற்றிலும் வேறானது. அது கவனிக்கப்படவில்லை. மற்றபடி வானம்பாடி என்று இல்லை: எல்லாவிதமான கவிதைப் போக்குகளையும் ஆதரவுஃ எதிர்ப்பு இரண்டுமின்றிக் கவனிப்பவனாக மட்டுமே இருந்தேன். கவிதைகளின் தரம், தகுதி தவிர வேறு அம்சங்கள் நான் பொருட்படுத்தாதவை இன்று வரையிலும்.”

    உங்களது அடுத்தடுத்த பரிமாணங்கள்?

     ‘மௌனத்தின் நாவுகள்’ பிறந்த போதிருந்த மனநிலை, முரண்பட்ட இரண்டு அழுத்தங்களிடையே திணறிக் கொண்டிருந்தது. புறச்சூழல்கள் தந்த அவநம்பிக்கை. எதிர்நின்ற இருள் ஒருபுறம்: என் சொந்தக் கவிமனத்தின் திகைப்பூட்டும் அகச்சலனங்களிடையே ஏதோ தரிசனத்தை நாடிச் சலியாமல் அலைந்த பித்துநிலை மற்றொரு புறம். இரண்டின் கலவையாகக் கவிதைகள் அமைந்தன. காரணகாரிய அலசல் இன்றி துக்கத்தின் உள்ளே புகுந்து அனுபவிப்பதே பிரதானமாகியிருந்தது. ‘எதையும் கண்டுபிடிக்க வேண்டாம்: உங்களைக் காட்டிக் கொள்ளுங்கள், அது போதும்’ என்று அப்போது என் கவிதைகளிடம் சொல்லியருந்தேன்.

    ஆயினும், அந்தக் கவிதைகளின் மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கும் ஜிப்ரான், தாகூர் வெளியீட்டுப் பாணியும் எனது உண்மையான உண்மையை வெளியிடத் தடையாக அமைந்தன என்பதை வெகு விரைவிலேயே கண்டுகொண்டேன். கண்டதும், படிப்படியாக அல்ல உடனடியாகப் பாதிப்புகளை உதறித் தள்ளி நின்றேன். தன்னிரக்கமும் அவநம்பிக்கையும் அலங்கார ஆடம்பரங்களும் அகன்றன. பயணம், தேடல், உளைச்சல், எதிரெதிர் உணர்வு நிலைகள் இவை வேறு வேறு அல்லவாயின. மேற்புறச் சலனங்களின் குரல் எட்டாத தொலைவிற்குள் சென்றபின், இதுவரை பாவித்து வந்த உள்-வெளி என்ற பேதம், முரண் மறைந்தது. ‘உன்னைப் பிரித்துப் பிரித்து விலக்கிக் கொண்டே உன்னைத்தேடி உன் தவம் மட்டும் உடன்வரப் போகிறாய்.’ என்ற விதமாக என் எண்ணற்ற பிம்பங்களுடனான ஊடாட்டம் தந்த வெற்றிதோல்விகளைக் கவிதை பதிவு இல்லாமல் அனுபவத்தையே கூட சூசக இருள்களைத் தொடுத்துச் செறிவாக்கிக் கொடுத்தது. ‘இதோடு நில்: அடுத்த வார்த்தைக்குப் போகாதே!’ என்ற என் படைப்பாளியின் எச்சரிக்கை கவிதையில் வளவளப்பை ஒழித்தது. இவ்விதம் பிறந்தவை ‘அந்தர நடை’ கவிதைகள் (1979) இந்தக் கட்டத்தில் என் உழைப்பும் களைப்பும் அதிகம்.

    சற்று இடைவெளிக்குப் பின் அடுத்த நகர்வு என்னையறியாமல் நிகழ்ந்தது. ‘ஏன் இவ்வளவு பாடு? இவ்வளவு பிரயத்தனங்கள்?’ என எழுந்த சுய வினாக்களால் கடின முயற்சிகளைக் கைவிட்டேன். ‘தீவிரங்கள்’ அகன்றன. இப்போது என் கவிதையின் ஆசுவாசம், சுதந்திரம் தெரியவந்தது. அது தன் தன்மையோடு தன்னைப் புதுப்பித்துக் கொள்வதாகியது.

    ‘நான் நிகழ்கிறவன் இல்லை’ என்றோ, ‘நான் இல்லாமலே என் வாழ்க்கை எதேச்சையில் அருத்திரண்டது’ என்றோ என் உள்ளகம் காணச் செய்தன கவிதைகள். எதிர்மறைகள் அற்ற பிரபஞ்ச ஒருமை கவிதையில் முதன்மைப்பட்டது. இப்போது நான் ‘தெளிவைத் தேடிப் பிடிவாதம் பிடிக்கவில்லை.’ ‘தெளிவின்மை தரும் திகைப்பில் திளைக்கப் பழகினேன்.’ கவிதை, தானடைந்த சுதந்திரத்தில் முழு எளிமை கொண்டு வி;ட்டது. உண்மையில் இந்த ‘என்ற ஒன்று’ கவிதைகளே என் எளிய கவிதைகள்(1988). மறுபடி இடைவெளி, மற்றொரு பரிமாணம். என் வாழ்வின் எல்லாப் பருவங்களினூடாகவும் என் ‘பையல்’ பருவத்தை இணைகோட்டில் நடத்தியே வந்திருக்கிறேன். அவ்வப்போது அந்தக் காலத்திற்குத் திரும்பிப் போய்த் திரும்பி வருவது மாறி, அங்கே நீண்ட தங்குதல்களை மேற்கொண்டேன். தான் யாரென விளங்காமல் தானும் இல்லாதிருந்த தனிமையை அனுபவித்த பையல், அப்போது விளக்க முடியாதிருந்த அனுபவங்களை இன்றைய கவிமொழியில் பிடிக்க முயன்றேன். அதற்கப்புறம்? தெரியாது. வேறொரு பரிமாணத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்...” 
நன்றி  ; குமுதம் - லைஃப்  வார இதழ் 25 10 17

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...