செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அபியின் கவியுலகம் --பிரவீண் பஃறுளி

கடவுளின் சோதனைச் சாலையை விட்டு என் சொந்த சோதனைச் சாலைக்குச் செல்கிறேன்;
                                           அபியின் யாதொன்றுமற்றுப் போதிலின் ஊழ்:
                                                                                  --பிரவீண் பஃறுளி
‘கடவுளின் சோதனைச் சாலையை விட்டு என் சொந்த சோதனைச் சாலைக்குச் செல்கிறேன்’என்ற அபியின் கவியுலகம் மிகவும் தன் மையமானது. தன் பிரக்ஞைக்கும் பிரபஞ்சத்துக்குமான அதீத தனிமையின் பரிசோதனைகளில் திளைப்பது. தான் என்பதுள் அகழ்ந்து அகழ்ந்து இறுதியில் தானும் அற்றுப் போக விழைவது. அபியின் கவிதை என்பது களிப்பிற்கோ துக்கத்திற்கோ, நிலைப்பாட்டைச் சொல்லவோ, நிதர்சனத்தின் மோதலிலிருந்தான அறம், அழகு ஆகியவற்றை விசாரித்துப் பார்க்கவோ, பல்வேறு நடைமுறை இருப்புகளின் அதிர்வுகளை உள்வாங்கி உமிழவோ அன்றி, தன்னிலையில் பிரதிபலிப்புறும் பௌதிகத்தின் உள்வெளிகளைத் துருவி துருவி இறுதியில் தன்னிலையின் போதமற்று தன் மொத்த எடையையும் இழந்து முடிவின்மையின் மிதக்கத் துணிவது. அபியின்  கவியுலகு லௌகீகத்தின் சப்தங்கள் அற்ற மௌன உலகம். உள்நோக்கிய திரும்பல். வாழ்வின் வர்ணங்களைவ விட, நிறமின்மையின் பூரணத்துவம் என்னும் உருவக இலக்கு நோக்கியது அபி உலகில் தன்னிலை-முடிவிலி என இரண்டே இருப்புகள். ஓன்று ஒரு பிரக்ஞை நிலை. மற்றொன்று ஒரு மீயுலகு.
இதில் பிரக்ஞை தரப்பு என்பது அபியின் தனிப் பிரக்ஞை என்றும் கூறலாகாது. அது வேர்களற்ற பாவனை கொள்ளும் மானுடப் பிரக்ஞை. அது குறிப்பிட்ட எந்த ஒரு வாழ்வனுபவத் தரப்பையோ கருத்தியல் முகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தாது எல்லா சாயல்களையும் அழித்துவிட்ட நிறமற்ற பிரக்ஞை. சிந்தனையின் மிதவை நிலை. மற்றொன்று ஒரு மீயுலகு. அபி கவிதைகளில் மிகத் தூலமாக புலனுணர் விசித்திரத்துடன் எழுந்து நிற்கும் மீ உலகு பௌதிகத்திற்கு அப்பால் நின்று நிகழும் ஓர் அறுதி நிலை அல்ல. பௌதிகத்திற்கு அப்பாலான எந்த ஆன்மீகமோ பேருண்மையோ நித்தியத்துவமோ அதன் இலட்சியமுல்ல. சாதாரண காணுலகின் அசாதாரண உள் நிலைகளே அபியின் மீஉலகு. புற உலகின் மீதான அதீத கண்காணிப்பு, பொருளின் மீதான நிலைத்த வெறிப்பு அதன் சாரத்தையும் சாரத்தை கடந்தும் பாய்தல், எந்த இருப்பிலும் அதனுள்ளான இன்மையின் ஒரு நுனியை, எந்த அசைவிலும் அதனுள்ளான அசைவின்மையின் ஒரு மூலத்தை எட்டிப் பிடித்தல் என பருண்மையான நிலைகளைத் துழாவிய அதன் சூக்கும ஆழங்களில் முயங்க விழைகிறது அபி கவிதை.
பௌதிகம் கடந்த சஞ்சரிப்பு, பௌதிகம் மீறிய திளைப்பு. அனுபூதி நிலை என்பது நவீன கவிதையில் ஒரு காலகட்டத்தின் அம்சமாக இருந்துள்ளது. எழுத்து கவிஞர்கள் அதை வௌ;வேறு பரிமாணங்களில் பிரதிபலித்துள்ளனர். ஆனால் அவை ஒருவித அந்நியத்திலிருந்தும் மறுபுறும் தத்துவ அழுத்தம் கொண்டும் விளைவது. கவிதையில் ஒரு கிளர்ச்சிக் கூறாக அன்றி பெரும் அறிதல்களை எழுப்புபவை இல்ல. அபி கவிதையில் மட்டுமே முடிவிலியுடனான அலைக்கழிப்பு தத்துவ பிரமைகள் இன்றி முற்றுண்மைகளின் திட்டங்களற்று மிக இலகுவாக சாதாரண உலகின் உள் மெய்மைகளை அனுபவமாக்குகிறது. அந்த அருவ உலகம் புலனுலகின் செறிவிலிருந்தும் புலனனுபவத்தின் அதீத கூர்மையிலிருந்துமே நிகழும் ஒரு தன்வயமான அறிமுறையின் வழி பிறப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
அபி கவிதைகள் தமக்குத் தாமே பேசிக் கொள்பவை. ஒரு உத்தேச வாசகனை எதிர்நோக்கிய எந்தத் தொனியுமற்றவை. அவ்வப் போது நிகழும் பேச்சு கூட ஒரே சுயத்தின் இரு வேறு கூறுகள் பிரிந்து நின்று தம்முள் உரையாடிக் கொள்பவையே. ஒரே மனதின் இரு நிலைகளாக இரு தன்னிலைகள் அபி கவிதையில் அவ்வபபோது பேசிக் கொள்கின்றன, முரண்படுகின்றன, பகடி செய்கின்றன, ஒன்றை ஒன்று கண்காணிக்கின்றன, ஆராய்கின்றன, வெல்ல முயல்கின்றன.
அவை அபி தனக்குத் தானே நிகழ்த்தும் பரிசோதனை. தர்க்கம், வடிவம், சாயை, அசைவு இவற்றின் பிரதிநிதியாகி ஒரு குரல் பேசுகிறது. மற்றொரு குரல் தன் எதிர் நிலையின் அடையாளங்களோடு மூர்க்கமாக மோதி வடிவற்ற நிலைக்கு, நிழல் வீழ்த்தா நிலைக்கு, எதிர்வற்ற நிலைக்கு, அறிதலின் நிர்ணயங்கள் கடந்த வெட்ட வெளிக்கு, ‘அந்தர நடைக்கோ’ என்ற ‘ஒன்றுக்கோ’ செல்லத் துடிக்கிறது. இந்த இரண்டு தரப்புக்குமான மோதலின் சாட்சியாக அபியின் கணிசமான கவிதைகள் நிகழ்கின்றன. பௌதிகமான உலகின் அசைவுகளில் ஊன்றி நிற்கும் ஒரு மனதும், முடிவிலியின் அசைவின்மைக்கு சென்ற மீ மனதும் தொடர்ந்து மோதுகின்றன.
    ‘பாவனைகளில் மிக மூத்தஃ
    நான் என்ற பாவனையைஃ
    மெல்ல முகர்ந்துஃ
    விரல் நுனியால்ஃ
    தொட்டுப் பார்த்துக் கொண்டு நான்ஃ
    நான் என்ற பாவனைக்குள் செறிவாய் நுழைந்து திணிந்துஃ
    பார்த்தலும் பார்க்கப்படுதலும்ஃ
    இல்லாமல் நீஃஃ
‘என் ஒரு பகுதிக்குக் குரல் மாற்றம் தந்து உன்னுடையதெனக் கூவித்திரிவேன்ஃ
இன்னொரு நாள் என்னிடமிந்தும் தப்பிஃ
உச்சியிலிருந்து கொண்டு பார்ப்பேன்ஃ
இயக்கம் விலகி நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக் கிடக்கும் என் உருவங்களைஃ
மிதித்தும் தழுவியும் கடித்தும் முத்தமிட்டும் நீ தேடித் திரிவதை வேவு பார்ப்பேன்”
    அபியின் கவிதையில் ஒரு கட்டத்தில் இந்த இரு குரல் தன்மை மறைந்து விடுகிறது. தர்க்கம்-அதர்க்கம், வடிவம்-வெளி என கட்டப்பட்ட முரண்கள் தம்முள் இடையறாது மோதி இருமை விளிம்புகளைத் தாண்டி விடுகின்றன. அங்கு தர்க்கத் தன்னிலைக்கும் அதர்க்கத் தன்னிலைக்குமான போர் முடிவுக்கு வருகிறது. கவிதை ஒரே குரலில் பேசுகிறது. தான் விழைந்த ஒரு மெய்மையை அவதானித்துவிட்ட ஒன்றின் குரலாக மட்டும் அது ஒலிக்கிறது. அதனுள்ளான வேறு வேறு உலகங்களுக்கு அது முகம் கொடுக்கிறது.
    தன் உள்முரண்களின் உரசல்களை காட்டுவதை விடவும் தான் தேர்ந்து கொண்ட விதியின் உவகையயும் வலியையும் மட்டும் அது பகிர்கிறது. அபிகவிதைகள் தொடர்ந்து ஒன்றை எய்துவதற்கான தொனியை கொண்டிருக்கின்றன. எப்போதும் ஒரு நிiலியிலிருந்து வேறு நிலைக்கும் நிகழ் கணத்திலிருந்து நிகழ்வற்ற கணத்திற்கும் அது அவாவுகிறது. ஆனால் கவிதை தன் இலக்காக எதைக் கொள்கிறதோ அதை அடைவதற்காக நிகழும் தர்க்கங்கள், தந்திரங்கள், அதன் வலி, அதன் திட்டம் இவையே கவிதையாகி உரத்துப் பேசப்படுவதும் கணிசமாக நிகழ்கிறது. அபி தான் போக வேண்டிய இடத்திற்கு செய்யும் பிரயத்தனங்களை அவை பேசுகின்றன. இத்தொடர்பில்....
        தனித்து விடப்படும் போது
        சூத்திரங்கள்
        மெல்ல வந்து
        சூழ்ந்து கொள்ளும்

        தமது உருவாக்கத்தின்
        சிறிய பயனை
        எனக்குத் தரத் துடிக்கும்
        என்னைப்
        பேசவிடாமல் தடுக்கும்
       
        நான்கு மூலைகளையும் தொட்டு
        என் அறைக்குள்
        தீவிரமாக நடக்கும்
   
        ஒன்றோடொன்று
        பேசிக் கொள்வது
        ஆனால்
        முன்பே பேசிக்கொண்டது தெரியும்

    காதலித்தும்
    சண்டையிட்டும்
    வடிவிழந்து வடிவுற்று
    வளையவரும்
    துல்யம் என்று சொல்லித்
    தமது கோடுகளைத்
    திரும்பக் கொண்டு வந்து
    சேர்க்கும்......
    போன்ற தருணங்கள் இதன் சாட்சியாகின்றன.

புறவுலகைத் தீவிரமாக வேவு பார்ப்பதிலிருந்துதான் அபியின் அருவ உலகம் உருவாகிறது. புறத்தை மொழிக்குள் அதர்க்க படிமங்களாக்குதல், காட்சிகளைத் தன் அறிநிலையினூடான வௌ;வேறு ஒழுங்குகளில் கலைத்தல், ஒருவிதப் புனைவு நிலையில் தன் அருவத்தை நிகழ்த்தல், நுண்மையான, அரூவ கருத்து நிலையை ரூபமான தளத்தில் வேறொன்றாக்கிப் பிரதிபலித்தல், மறுபுறம் அனுபவத்தின் தூல நிலையை அருவத்திற்கு உருட்டுதல் எனப் பலவாகி இயங்குகிறது அபி கவிதை. அனுபவத்தின் தீய்ந்த விளிம்பிலிருந்து அது வெளிப்படு;ம் போது தன் கவித்துவ சாத்தியங்களை விரித்துக் கொள்கிறது.   
‘இன்னும் சில பொழுதில்ஃ இருளின் அணுக்களைத் தொற்றிக்ஃ காட்டுச் செடிமணம் வந்து உறைக்கும்”

என்றும் ‘த்வனி எதுவுமற்றஃமுரட்டுப் பிரவாகம்ஃதிடுமென சூழ்ந்து கொள்ளும்”
என தூலத்திற்கும் அருவத்திற்கும் சரளமான பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.
அபியின் உலகு மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவுகள் சூன்யமடையும் இடம். அங்கு இன்னொரு சகமனிதனின் நிழல் கூடப் படிவதில்லை. முற்றிலும் மனித விலக்கம் செய்யப்பட்ட அபியின் உலகில் ஒரேயொரு ‘தான்’ வருகிறது. அந்த தானும் தன்னை அழித்து அழித்து வெறுமையில் விரிந்து விரிந்து முடிவற்று செல்லும் அசேதனப் பிரபஞ்சமூம் எதிரெதிர் சந்தித்து நிற்பதன் தருணங்களே அங்கு நிறைகின்றன. பிரக்ஞையை அதன் தூல உறவுகளில் இருந்து துணித்;து ஒரு தனி நிலையாக மிதக்க விடுதல், மனித ஓர்மையின் பிரதிபலிப்பற்று மனிதப் புலன்களின் துழாவலற்று மனிதார்த்தத்தின் எவ்வித அலைகளுமற்று பிரபஞ்சம் தன்னிருப்பில் கொள்ளும் குருட்டுத் தனிமையில் விறைத்து நிற்றல், அகாலத்தின் அனுமானுடப் புள்ளியில் நின்றபடி காலத்தை வேடிக்கை பார்த்தல்.
(‘யுகமுகடுளுக்கே சென்றுஃஅங்கிருந்து நிமிஷ நுரைகளோடு நேரங்கள் சரிவதைப்ஃபார்த்துக் கொண்டிருப்பேன்’), அறிவது என்பதன் எல்லா நிறங்களும் கரைந்தோட ‘வெள்ளை வயிறு காட்n மிதத்தல்’, ‘எங்கிருந்தோ கிளம்பி எங்கோ சென்று கொண்டிருக்கும்’ வெறுமையின் விரிவில் தன்னுணர்வை சிதறடித்தல் என அபியின் உலகு இருள் கொள்கிறது. முடிவற்ற பாழின் முன் மிதக்கும் பிரக்ஞையின் நிலையானது. முனிதன் இந்தப் பேரண்டம் முன் தனி அணுவாகி மோதும் கணம் எத்தகையது. பாழின் விளிம்பில் பதற்றமுறும் மனதுக்கு அபியின் கவிதையில் என்னென்ன நிகழ்கிறது. முதலில் மோதலும் அலைக்கழிப்புமான ஒரு விதத் தவிப்பு, அடுத்தாக ஒரு வகைப் பேருணர்வு, நிறையற்றுப் போதலின் விடுதலைக் கணம், தன்னைத் தானே பிரதிபலித்து நிற்றல், பின் நேரெதிராக தன்னுணர்வின் பிரம்மாண்டம், மற்றொரு கணம் வலியும் பெருந்துயருமாதல், முடிவற்றதன் பாலையில் தன்னிலையின் வெளிறிய கணம் என வேறு வேறு அலைகளை எழுப்பி அபியின் உலகு தன் நிறைவையும் எழிலையும் அடைந்து கொள்கிறது.
        வியர்த்தம்
        வெளியேற வழிதேடி
        அலைவதிலும்
        விளையுமொரு
        வட்டம்

        நம் முயற்சிகளின்
        உள் ஆவி
        கெஞ்சிக் கூடவே வந்து
        வியர்த்த விளிம்புவரை
        புலம்பிப் பார்த்து
        முணுமுணுத்துப்
        பின்தங்கிப்
        புள்ளியாய் மறையும்
    இங்கு ஒரு வித தவிப்பு நிகழ்கிறது. வடிவிலிருந்து வடிவின்மைக்கு, எதையும் பிரதிபலித்து விடாத சவத்தன்மைக்கு போகும் இடைவழியிலான அலைக்கழிப்பும் போராட்டமுமே கவிதையாகி ஒலிப்பதை பல இடங்களில் காண்கிறோம். அதன் இடைவழியில்  பரிசோதனை, விளையாட்டு, முரண்களின் இடையறாத துரத்தல், பலியாகி பலியாகி உயிர்த்தல், அறிதல், பின் அறிதலை அறிதல், என பல வித நாடகங்கள் நடக்கின்றன. அபியின் கணிசமான கவிதைகள் இந்த அலைக் கழிப்பின் பிராந்தியத்தில் எழும் குரல்களை ஒலிக்கின்றன.
    அபியின் தன்னழிப்பின் வசப்பட்ட நிலையும் பேருவகையும் ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. அங்கு அரற்றுதல் இல்லை. தான் அடைந்த ஒரு பேருணர்வின் வெற்றிக் களிப்பு வெளிப்படுகிறது.
            நான் இல்லாமல் என் வாழ்க்கை
            நான் இல்லாமலே
            என் வாழ்க்கை
            எதேச்சையில் அருத்திரண்டது.
            வடிவ விளிம்புகளைக்
            கற்பிக்க
            நான் இல்லாததால்
            நீல வியாபகம் கொண்டது

            எதைத் துறந்தோம் என்று
            அறிய வேண்டாத
            நிம்மதியில் திளைத்தது

            உணர்வுகளின்
            பொது ரீங்காரம் மட்டும் தொடர
            நிழல் வீழ்த்தாமல் நடமாடியது.

            கூரைகளுக்கு மேலே
            தன்மைகளின் எதிர்ப்பை
            அலட்சியம் செய்து
            அசைவு தெரியாமல்
            பறந்து திரிந்தது.
           
            பூமியைத் துளைத்து
            மறுபுறம்  வெளிவந்தது.

            பிம்பங்களின் துரத்தலுக்கு
            அகப்படாமல்
            நுட்பம் எதுவமற்ற
            சூன்யத்தை அளைந்தது


            மரணப் பாறையிலிருந்து
            குதித்து விளையாடியது.

            காலத்தின் சர்வாதிகாரம்
            புகைந்து அடங்குவதை
            வேடிக்கை பார்த்தது
            தத்துவச் சுமை கரைந்து
            தொலை தூரத்து வாசனையாய்
            மிஞ்சிற்று

            எனது குறியீடுகளின்
            குறுக்கீடு
            இல்லாது போகவே
            தன்னைத் தனக்குக்
            காட்டிக் கொண்டிருப்பதையும்
            கைவிட்டது.
    ‘வடிவ விளிம்புகளைக் கற்பிக்க நான் இல்லாததால் நீல வியபகம் கொண்டது’ என்பது அபியின் வசப்பட்ட தருணமாகிறது. இங்கு அபி தன் இலக்கை அடைந்துவிட்டதன் பெருமிதம் தொனிக்கிறது. ஒரு வாக்குமூலத்தன்மை வெளிப்படுகிறது. இதற்கு முந்தைய கட்டங்களில் வெளிப்பட்ட தவிப்போ, மோதலோ அது பற்றிய பேச்சோ மறைந்து விடுகிறது. அபி தன் களிப்பை மட்டுமே பகிர்கிறார். ஏதுமற்றுப் போவதன் விடுதலைப் பரவசம் பெருங்குரலெடுக்கிறது.
    வெறுமையை அளைந்து பாழைத் துழாவி நிற்கும் எந்த மனதுக்கும் இதற்கு நேரெதிர் காத்திருப்பது ஆற்றொனா பெருந்துக்கமும் தான் என்பதையும் அபி கவிதை சொல்லிவிடுகிறது.
            இருண்டு நெருங்கி வளைக்கும்
            மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
            இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
            ததும்புகிறது
            என் வலி
            பொழுது நிரம்புகிறது.
            ஒரு இடுக்கு விடாமல்
    இந்த வலிநிலை அபி கவிதைக்குள் மனிதக் கதகதப்பைத் தக்க வைக்கிறது. தன் அருவம் அறிவின் மிகை மீறிய திளைப்போ, பனிமூடிய உறைநிலையோ மட்டுமல்ல என்பதுணர்த்துகிறது. பேரிருப்பின் முன் மங்கி நிற்கும்போதும் மனித வீச்சு அங்கு நிகழ்கிறது. பேரிருப்பின் மீது தன்னை எதிரொலித்து அபி தனக்கான அழகும் மெய்மையும் அடைந்து தன் சுயம் எடையற்று விளையாடுவதையும் வேடிக்கை பார்க்கிறார்.
    அவசரமில்லாத சிறிய ஓடைகள் நடுவே
            கூழாங்கற்களின் மீது
            என் வாழ்வை
            மெல்லத் தவழ விட்டேன்...
            வீட்டு முற்றத்தில்
            கூழாங்கற்களின் நடுவே
            ஓடைகளின் சிரிப்போடு
            வெளி – உள் அற்று
            விரிந்து போகும் என் வெட்ட வெளி
    என அவர் தனது சாரம்சத்தை புற வெளியில் எறிந்து அலைவுறும் கணங்கள் கவித்துவத்தின் இசைமை கூடியவை.
    அபி கவிதையில் ஒரு பகுதி சாரமான அனுபவப் புலத்திலிருந்து பருண்மையின் வண்ணங்களோடு எழும்போதே மறுபகுதி தர்க்கத்தில் விளையாடுவதும் நிகழ்கிறது. அவரது கவிதையாக்கத்தில் ஒரு பகுதி பேச்சு நிறைந்ததாகவும் இன்னொருபகுதி பேச்சற்ற வெறிப்பாகவும் உள்ளது. கவிதை என்பது தான் எதைப் பிரதிபலிக்கிறதோ அதைத் தனக்குள் வேறொரு அறிநிலையில் வேறொரு ஒழுங்கில் புத்துருவாக்குகிறது. ஆனால் எதைப் பிரதிபலித்ததோ அதன் குறிகளும் நிழல்களும் அதில் படிந்தே இருக்கின்றன. அபியின் அருத்திரண்ட உலகில் - எது பிரதிபலிக்கப்பட்டதோ அதன் மூலதடங்கள் ஒரு எல்லையில் துடைத்தழிக்கப்பட்டு, பின் பிரதிபலிப்பை பிரதிபலித்தல் என்பதன் பல நிலைகளில் அதீத கருத்துநிலைக்கு செறிவூட்டப்பட்டு அருத்திரள்கிறது. அங்கு கருத்தியலின் விளையாட்டு நிகழ்கிறது. இந்த இடத்தில் கவிதை சிலபோது தர்க்கிக்கத் தொடங்கி விடுகிறது. கொஞ்சம் ஆரவாரம் புரிகிறது. அங்கு கவிதையின் கிளர்ச்சி, கருத்தின் அருவத் தர்க்கமும் அபியின் அதர்க்க ஒழுங்கும் சார்ந்ததாக இருக்கிறதே அன்றி அனுபவத்தின் பருநிலை சார்ந்ததாக இல்லை.
            பின்னணி  உண்டு
            மாற்றிக் கொள்வோம்
            உன்னுடையதை நான்
            என்னுடையதை நீ
            மாற்றிக் கொண்ட இடைப்பொழுது
            பின்னணி இல்லாதது
            இடைப் பொழுதுகளையும்
            மாற்றிக் கொள்வோம்
            உன்னுடையதை நான்
            என்னுடையதை நீ
           
            பின்னணிக்குத் தளங்கள் உண்டு
            மாற்றிக் கொண்ட பின்
            மாற்றிக் கொள்வோம்
            தளங்களை

            தளங்களில் நடமாட்டங்கள் உண்டு
            மாற்றிக் கொள்வோம்
            நடமாட்டங்களை
   
            நடமாட்டங்களில்
            பின்னணி
            சூழலாக மாறியிருக்கக் கூடும்
   
            சூழலில்
            எனது உனது சாயைகள்
            நிர்ணயம் நோக்கி
            வீண் முயற்சிகளில்
            அலைந்து திரியக் கூடும்
            மாற்றிக் கொள்வோம்
            சாயைகளை

            எனத உனது இன்றி
            எதாவதாகவோ
            இருக்க நேரிடும்
            மாற்றிக் கொள்வோம்
            எதாவதுகளை
            வேகம் வேகமாக

            மாற்றல் நிரந்தரப் படுகிறதா
            உடனே மாற்றிக் கொள்வோம்
            மாற்றல்களை
இங்கு கவிதை ஒரு தர்க்க விளையாட்டாக நிகழ்வது தெரிகிறது. அனுபவப் புலம் தொலை நிறுத்தப்பட்டு அதன் பிரதிபலிப்பு மட்டும் தனக்குள்ளாகவே பல எதிரொலிப்புகளை நிகழ்த்திக் கொள்கிறது. இதே சாயலில் அமைந்த கணிசமான ஒரு பகுதி கவிதைகள் உள்ளன. இதே போல அபி சில போதுகளில் தன் கவிதையில் சார்ந்த பேச்சையே தனிக் கவிதையாக வடித்துவிடும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
            கோடு
            கோடு வரைவதெனில்
            சரி வரைந்து கொள்
   
            இப்புறம் அப்புறம்
            எதையேனும் ஒன்றை
            எடுத்துக் கொள்

            எடுத்துக் கொள்ளாதது
            எதிர்ப்புறம் என்பாய்

            இப்போதைக்கு
            அப்படியே வைத்துக்கொள்
            முதலிலேயே
            மறுபுறத்தை எடுத்துக் கொண்டிருந்தால்?

            மாறி மாறி
            எதிர்ப்புறக் குழப்பம்

            இருபுறமும் உனது?
            இருபுறமும் எதிர்ப்புறம்?
            எதுவும்
            எவ்வாறும்
            இல்லை என்று
            சலிப்பாய்
            களைந்து உறங்கும் உலகம்

            ஆரம்பத்திலேயே
            முடிவைத் தடவியெடுக்க நின்றாய்

            இது என்றோ அது என்றோ
            இரண்டும் இல்லையென்றோ
            வருகிறது
            உன்முடிவு

            அதனால்
            கோடு வரைவதெனில்
            வரைந்து கொள்
    இது அபியின் கவிதை நெறி குறித்த தன் விளக்கமும் அறிவுறுத்தலுமாகி நிற்கிறது. அபியின் உள் உலகில் வெறியூறும் ஒருபித்து இன்றி நேரடியாக செயல்விளக்கம் புரிகிறது. அது அபியினுடையதாக மட்டுமன்றி ஒரு காலகட்டத்தின் நெருக்கடியையும் காட்டுகிறது. புதுக்கவிதையின்  முன்னோடிகள் என்ற அடிப்படையில் பேசும் போது அதன் ஒரு காலத்துக்குள் இயங்கிய எல்லா படைப்பாளிகளுக்குமே தன் கவிதையியலை எதிர் நிலைகளோடு நின்று சண்டையிட்டு கட்டமைக்க வேண்டியிருந்துள்ளது. பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.மணி, சுந்தர ராமசாமி என் பலரும் தன் கவிதை எத்தகையது அதன் குணாதிசயங்கள் என்ன, அதன் கோட்பாடு என்ன என்பதையும் கவிதையிலேயே உரத்துப் பேசியுள்ள சந்தர்ப்பங்கள் தவிர்க்க இயலாமல் இருந்துள்ளன.
    அபிகவிதைகள் உதிரிகளாக அணுகப்படுவதைக் காட்டிலும் அதன் பலவாறான உறவுகளோடும் தொடர்ச்சிகளோடும் தன் கவி உலகின் மொத்தத்துவத்தோடே அணுக வைக்கின்றன. அபி கவிதைகள் தம்மிடையே ஒரு கோடிட்டு இரண்டாகப் பிரிந்து நின்றால் ஒரு பகுதியில் அலைகளும் மறுபகுதி மௌனமுமாக திரள்வது தெரிகிறது. அபி தனது பரிசோதனைகளை செய்வது, தர்க்கத்தோடும் வடிவத்தோடும் மோதுவது, நிலைப்பாட்டைப் பேசுவது, முரண்பாடுகளை அலசுவது, தீர்ப்பது, தனது இலக்குக்கு அவாவது, தன்னுரையாடலில் சலிப்பது என் அலைகள் நிகழும் பகுதி ஒன்று. இங்கு கவிதை தன்னைப் பற்றியும் தன் பிரச்சனைகள் பற்றியுமான பேச்சில் இறங்குகிறது. மௌனத்தின் மறுபகுதியில் நிகழ்வது அதீத கண்காணிப்பின் வெறிப்பு. இங்கு கவிதை தனது உரையாடலை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறது. அருவத்தின் விளம்பில் நின்றபடி அகண்டத்தையும் அகாலத்தையும் வருடுகிறது.
    ஏதுமற்றதில் திளைக்கிறது. தனது மெய்மையின் உச்சத்தில் நின்று அனுபவத்தின் மூலங்களை மீண்டும் ஊடுருவும் போது கவிதைக்குள் பெரும் பதற்றம் சூழ வார்த்தைகள் ஓடி மறைகின்றன. அபி தனக்கு கவிதை ஒரு பொருட்டல்ல வெறும் சாக்குதான் என உணர்த்தும் கணமாக அது உள்ளது. ‘பரிமாணங்களிலிருந்த பரிமாணங்களற்ற நிலைக்கு செல்வதுதான் கவிதை’ என்னும் அபியின் கூற்று இங்கு உணரத்தக்கதாகிறது. அபி மொழியை சலிப்பது அதை nவிளயேற்றிவிடதான் என்பதும் கவிதையை செய்வது அதனைக் கடந்து செல்லத்தான் என்பதும் அவரது போத நிலை அபோதத்தை குறிவைத்துதான் என்பதும் புரிகிறது. அபியில் எப்போதும் நாடப்படும் மௌனமும் வெட்ட வெளியும் கவிதையின் எல்லாவித தந்திரங்களையும் செயலிழக்கச் செய்துவிட்டதான நிலையை யாருக்கும் சொல்வதை விடவும் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை அதன் கணத்திலேயே விட்டு விடுகிறார்.
            எனது பாறைப் பிரவேசத்துடன்
            தனித்து நான்
            மலைக்குடுவைகள்
            குனிந்து கீழே இறங்க
            சாலையோரக் குழிகள்
            குழியினின்றும் வெளியேற
            இதுவே பதற்றம் தணிக்கும் பரவசம்

            இதோ
            பிறை பிறந்ததும்
            எங்கிருந்தோ ததும்பி
            வெள்ளம்
            எனது பாறைப் பிரதேசத்தை
            மூழ்கடிக்க இருக்கிறது
            பிரதேசம் எதுவுமின்றி
            நான் சூழ்ந்து நான்.....

            முடிவுகள்
            அரைகுறைப் படிமங்களாக வந்து
            உளறி மறைந்தன
   
            பசியும் நிறைவும்
            ஒன்றாகி
            என் தணிவு
            வேறொரு விளிம்பைச்
            சுட்டிக் காட்டாத
            விளிம்பில்
            தத்தளிப்பு மறைந்த
            என் தணிவு

            நிகழும்போதே
            நின்றுவிட்ட என்கணம்
            குளிரத் தொடங்கியது
            என் தணிவைத் தொட்டு....
    மாலை என்ற வரிசையில் அமைந்த இத்தன்மையிலான கவிதைகளில் அபியின் அருவம் என்பது தனது அதி கருத்துருவ நிலையிலிருந்து விலகி அனுபவத்தின் அழகடர்ந்த சாத்தியப்பாதைகளைத் திறந்து செல்கின்றன. அது காட்சிகளும், மாந்தர்களும் கொண்ட இடமாக உள்ளது. உருவத்தின் அழகுகளை உரையாடி அருவம் உருவாகிறது. மாலை என்பது அபிக்கு ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும் விளிம்பாக இருக்கிறது. வரம்புகளின் எல்லை முடிவாக இருக்கிறது. செயல்பாட்டின் ஓய்வு நிலையாகவும் நிர்ணயங்களும் குறிப்பீடுகளும் கலைந்துவிட்ட எல்லையின்மையாகவும் இருக்கிறது.
    அபி புலனுலகின் விளிம்பில் நின்று அகண்டத்தின் பள்ளத்தாக்கை எட்டிப் பார்க்கும் கணமாக அது இருக்கிறது. ஊர், ஊரின் எல்லை, காடு, வீட்டு முற்றம், விளிம்பு வரைந்து நிற்கும் மலைகள், முரட்டு இருள், முகமற்ற பேச்சு என மாலை பலவேறாகி அசையும் இடங்களில் அபியின் உலகில் பொதுவாக விலகி நிற்கும் தூலத்தின் அசைவுகள் அழுத்தமாக முகம் காட்டுகின்றன. ஆனால் ஊர், இருள், காடு எல்லாம் தமது பொதுவான அடையாளங்கள் தேய்ந்து கவிதையின் பூடக சாயல்களாக இடம்பெறுகின்றன. அவை அபியின் பேச்சுக்கான சொற்களாக மாறி விடுகின்றன.

    எந்த படைப்பாளியிடமிருந்தும் வாசகன் பெறுவது சொற்களோ, உத்தியோ, வடிவமோ அல்ல. படைப்பாளியின் ஒரு சாராம்சம் மற்றும் அவன் தனதேயாக உருவாக்கிய ஒரு உலகம் மட்டுமே. அப்படி அபி என்ற ஒரு சாராம்சம் அபித்தன்மை என்ற ஒன்று அவரது உலகில் நீக்கமற நிறைந்துள்ளன. ஆனால் மனித நிலை அதன் லௌகீக கோலங்கள் அபி உலகில் பெறும் இடம் என்ன.

    மனிதனின் நன்மை தீமைகள் பற்றி அதன் விசாரணைகள் என்ன. அதன் நீதி நிலைப்பாடுகள் என்ன காமம், பசி, வன்முறை, போன்ற மானுட விலங்கின் ஆதார உணர்வெழுச்சிகளின் சிறு முனகலுமற்று அதீத தியானத்தின் பனிப் வெளியென அது உறைந்துகிடக்கும் நிலை பீதி கிளப்புவதாகவே உள்ளது. ஆனால் லௌகீகத்தின் சலிப்பான உழல்வுகளைத் தான் கவிதை நாடவேண்டுமா. நமது மொழிப் பிரக்ஞை, மனித ஞாபகம் என்னும் சிறுபுலத்திற்கு அப்பால் விரிந்து கிடக்கும் முடிவின்மையில் திறந்து கொள்ளவும், அந்தரத்தில் மிதக்கவும் துணிந்த தனித்துவமான ஒரு கவிமனத்தின் அதிர்வுகள் தமிழ்க் கவிதையில் முன்னும் பின்னுமற்ற ஒரு தனித்த பிரதேசம்.

 நன்றி -
இடைவெளி இதழ் ஜீலை 2017
பக்கம் -138-145

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...