வியாழன், 26 மார்ச், 2015

(மதுரை காமராசர் பல்கலைக் கழகம் --தமிழியற்புலம் - மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை. மார்ச்-5,6-1998)

“பாரதியின் சொல்லும் கருத்தும்”;

          --- கவிஞர் அபி ---


சொல்? மொழி என்னும் வெளியீட்டுக் கருவியின் உறுப்பா? ஆம். அர்த்தத்தைச் சுமந்து திரியும் வாகனமா? ஆம். பேச்சிலும் எழுத்திலும் புழங்கி அங்கங்கே தேய்வு கண்டு, நிறம் கலைந்து சிறுசிறு ஊனங்களுடன் கடமை செய்து கொண்டிருப்பதா? ஆம். பெயர், வினை, இடை, உரி தலைப்புக்களில் இலக்கண அறைகளில், அகராதிகளில் அடைப்பட்டிருப்பதா?ஆம்.

நான் சொல்ல வருவது இந்தச் சொல்லை அல்ல:இதன் மொழியை அல்ல.

இது வேறு சொல் கவிதை மொழியின் சொல். வழக்கமான மொழியிலிருந்து கவிஞன் பிரித்தெடுத்துப் புத்துருவாக்கம் செய்து கொண்ட சொல், ஓவியம் சிற்பம் போன்ற மௌனக் கலைகளிலும், இசைக்கலையிலும் வெளிப்பபடும் அளவுக்குக் கலைஞனின் உணர்வு, கவிதையில் மொழி ஊடகத்தின் வழியே வெளிப்படுவதில்லை. கவிஞனுடைய மிகப்பெரும் ஆதங்கம் இது. ஆனால் வேறு வழியில்லை. மொழியிலிருந்து ஒரு கவிதை மொழியை அவன் உருவாக்கிக் கொள்கிறான். சொல்லை ரசாயனம் செய்து கவிதைச் சொல்லை உருவாக்கிக் கொள்கிறான்.

சொல்லில் சொல்-பொருள் எனப் பிரித்துப் பார்க்க முடியும். கவிதையின் சொல்லில் இந்தப் பிரிவினை சாத்தியமில்லை. ஏனெனில் சொல்லின் அகராதிப் பொருளைத் தாண்டிய அம்சங்களைக் கவிதைச் சொல் தாங்கி நிற்கிறது. அத்துடன் அது என்னிடம் உன்னிடம் அவனிடம் அவளிடம் வேறு வேறு அர்த்தங்களை, படிமங்களை, உணர்வுகளை உருவாக்கக் கூடும். நேற்றிலிருந்து இன்றைக்கு வரும்போது அதன் அர்த்தம், பாவம் மாறிக் காணக்கூடும். ஆக, மொழியினுடைய வேறொரு வடிவம் தான் கவிதைமொழி. கவிதைக்கெனச் சொல் பிடிபடுவது பெரியதவிப்பு.

“சாமீ இவள் அழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்?”
“விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமா?”
“விண்டுரைக்க மாட்டாத விந்தையடா”

வழக்கமான அர்த்தங்களிலிருந்து சொல்லை விலக்கி, அதன் சூழலிருந்து விலக்கிக் கொண்டு வரும்போது, சொல் கவிஞனின் நுட்ப உணர்வுகளைத் தாங்கிக் கொள்கிறது: வேறுசொல்லாகிறது. புழக்கத்திலிருக்கும் அற்ப வார்த்தை, கவிதை வரிகளில், கவிதையின் சுற்றுச்சூழலில் அற்புதம் என நிற்கிறது. பாரதியின் “சொல்புதிது” எனப் பாராட்டப்பட இதுவே காரணம். அவர் கவிதைகளில் எந்தச் சொல் புதிது? எல்லாம் வழக்கிலிருக்கும் எளிய சொற்கள் தானே! புதிது என்றால் வெளியே தெரியும் தோற்றத்திலிருந்து அதன் உள்ளமைப்பு வேறுபட்டுவிட்டது என்பது பொருள்.

“மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் 
           வந்து பரவுதல் போல்”

“நெருப்புச் சுவைக் குரலில்”

“பொன்போல் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்”

“நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள்”

“தீக்குள் விரலைவைத்தால்-நந்தலாலா-நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா”

இங்கெல்லாம் நெருப்பு, மின்னல், கனல் இவற்றுக்கு வழக்கமான பொருள் தானா? கனல்-மணம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்கள். கவிதையில் இவை அருகருகே நிறுத்தப்படும் போது வேறு பிறவி எடுத்துக் கொள்கின்றன. இவை நிற்கும் இடத்தில் கவிதையின் தளம் சட்டென உயர்ந்து விடுகிறது. அர்த்தம் என்பது தேவையில்லையாகிறது. கனலின் மணம் அனுபவத்தைச் சூழ்கிறது.

‘மாயை’யைப் பொய் என வெறுக்கும் பாரதி, “நீ… ஆச்சரிய மாயையடி” என்பதில் அர்த்தம் என்னவரும்? இங்கே மாயை என்னும் சொல், அர்த்தத்தைக் களைந்துவிட்டு, வேறு எவ்விதமாகவும் விளக்க முடியாத ஓர் எக்களிப்பை உணர்த்த வருகிறது.

“தீ எரிக – அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ விரதத்தீ வேள்வித்தீ சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவையனைத்தையும் தொழுகின்றோம்”-

எளிய சொல்- எளிய வெளிப்பாடு. ஆனால் உணர்த்தப்படுவது எளியது அன்று. தர்க்கத்தின் அதிகாரத்திலிருந்து விடுபட்டு நிற்கிறது கவிதை, கண்ணதாசன் பாரதியை “தீயொரு பக்கமும் தேனொரு பக்கமும் தீட்டிக் கொடுத்து விட்டான்” என்று பாராட்டினார் உண்மையில் பாரதிக்குத் தீவேறு தேன்வேறு அல்ல.

“பாம்புக் பிடாரன் குழலூதுகின்றான். இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கிறது. ஒரு நாவலின் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?......... பலவகைகளில் மாற்றி மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டே போகிறான்”
இது என்ன வித உவமை? இந்த உவமை அர்த்தத் தெளிவை நோக்கியதன்று. குழலூதுவது தர்க்கம் செய்வது போல் இருப்பதாக பாரதிக்கு அனுபவப்படுகிறது. சங்கீதம் சுருள் சுருளாகக் குழலிருந்து வெளியேறுவது ஒளிபடைத்த கண்ணுக்குத் தெரிகிறது. அவரவர் அனுபவப் பாங்குக்கேற்ப அவரவர்க்குள் இந்தக் கவிதை, இயக்கம் கொள்ளும்.

அஸ்தமன அடிவானில் கணத்துக்குக் கணம் வேறுபடும் வண்ண ஒளி விசித்தரங்கள், அவற்றை நெடுக வர்ணித்தும் திருப்தியடையாத பாரதி, “உமை கவிதை செய்கின்றாள்” என்று முடிக்கிறார். இங்கே சொல்லப்பட்ட சொற்களிலா கவிதை அடங்குகிறது? நாம் படித்த தமிழ்க்காவியங்களைத்தான் பாரதியும் படித்திருக்கிறார் அவருக்கு அவை தந்த அனுபவம்.

“கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் 
தள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்”

காவியத்தின் சேர்மானமாக இவற்றை யாராவது சொல்லியிருக்கிறார்களா? இளங்கோவிடமும் கம்பனிடமும் தீயை, காற்றை, வானவெளியைக் தேடி எடுக்கும் ரசனையை இந்தக் கவிதை நமக்குள் கற்பிக்கிறது. இது மிக நவீனமான கவித்துவ அனுபவம்.

இந்தக் கவிதைகளிலிருந்தெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கவிதையில், சொல் என்பது சொல்லன்று: சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்கும் கிளியன்று: தனது அர்த்தத்தைக் கொடுப்பதன்று. கவிஞனின் வரம்பற்ற உணர்வு ஆழத்திலிருந்து எட்டியவரை எடுத்து, நாம் வாங்கிக் கொள்ளும் தகுதியின் அளவுக்கு நமக்குக் கொடுக்கும் பாத்திரம் அது.

பாரதி எட்டிப்பிடிக்க விரும்பும் இலட்சியச் சொல் ஒன்று உண்டு. அதுதான் ‘மந்திரம் போல சொல்’, ‘நெருப்பு’ என்றால் வாய் வெந்துபோக வேண்டும் என்பார் லா.ச.ரா. அதுதான் மந்திரச்சொல் எந்தச்சொல் தன் அர்த்த விசிறல்களை ஒரு முனைப்படுத்தி ஒரு புள்ளியில் குவித்துப் புகை எழுப்புகிறதோ, எந்தச் சொல் சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைத்து, செயலுக்குள்ளே நுழைந்து கலந்துவிட முந்துகிறதோ அதுதான் மந்திரச் சொல். சொல்லிய மாத்திரத்திலேயே சொல் மறைந்து அதன் செயல், விளைவு நம்மை ஆக்கிரமிக்கும்.

“ஐந்துறு பூதம் சிந்திப்போம் ஒன்றாகப்-பின்னர் 
      அதுவும் சக்திக்கனியில் மூழ்கிப்போக”

“பாழாம் வெளியும் பதறிப்போய் மெய்குலையச்-சலனம் 
      பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே’’

“ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய-
         வெறித் துறுமித்திரிவாய், 
         செருவெங் கூத்தே புரிவாய்”

“காலத்தொடு நிர்மூலம்படுமூ வுலகும்-அங்கே கடவுள் 
       மோனத்தொளியே தனியாலகும்”

“ஓமென் றுரைத்தனர் தேவர்-ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்று
   வானம் பூமி அதிர்ச்சியுண்டாச்சு-விண்ணைப் பூழிப் படுத்தியதாஞ்             சுழற்காற்று”

பாழாம் வெளி பதறுவதையும், மெய் குலைவதையும், காலம் நிர்மூலமாவதையும் நம் வாழ்வில் நாம் அனுபவம் கொண்டதில்லை. ஆயினும் இந்தச் சொற்களின் தீவிரமும் வேகமும் வாசகன் மனத்தில், முன்னுதாரணம் இல்லாத ஒரு உக்கிர நிகழ்வை அனுபவப்படுத்துகின்றன என்பதை உணரமுடியும்.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்று ஆசைப்படும் பாரதியின் கவிதைகளில் இந்த மந்திரச் சொல்லின் உயிர்ப்பு மிகச்சில இடங்களில் தான் தெரிகிறது. இந்த இலட்சியத்தைத் தன் கவிதைப் பரம்பரைக்கு விட்டுப்போனார் என்று கொள்ளலாம்.

0

பாரதி, மொழியை ஆயுதமாகப் பயன்படுத்திய கலகக்காரர். மரபுவழி மதிப்பீடுகளிலும் கருத்துக்களிலும் ஒவ்வாதவற்றை ஆவேசமாக எதிர்த்து மோதி மிதித்துவிடத் துணிகிறவர். ஆகவே அவருடைய சொல் வெடிப்புறப் பேசும் சொல்லாக, வெப்பம் குறையாததாக இருக்கிறது. கவிதைச் சொல்லில் உரத்த குரலும் அழுத்தங்களும் அடிக்கோடுகளும் இருப்பது பாரதி காலத்தில் குறைபாடுகள் அல்ல.

படிப்பறிவு அதிகமில்லாத சாதாரண மக்களையும் தம் கவிதை ஊடுருவ வேண்டும் எனும் அவரது நோக்கம் காரணமாக அவருடைய சொல் எளிமையாதாகவும் இருக்கிறது.
பாரதியின் வாழ்வு முழுவதுமே ஓர் எதிர்கவிதைதான்

பழைய ஆத்திச்சூடியின் சில சாத்வீக அறவுரைகளை பாரதியின் புதிய ஆத்திச்சூடி இடித்துத் தள்ளுகிறது. “போர்த் தொழில் பழகு”, “முனைமுகத்துநில்”, “வெடிப்புறப்பேசு”,
“தையலை உயர்வுசெய்”- போன்றவை அவை.

“செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பர்
பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்றில் கூதேடா சங்கம்
இத்தரை மீதினில் இந்தநாளினில் இப்பொடுதே முக்தி சேர்ந்திட நாடி”

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும்
      அஃது பொதுவில் வைப்போம்”

“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்”

“கூளத்தை மலத்தினையும் வணங்க வேண்டும்………

“பெண்டிரென்றும் குழந்தையென்றும் நிற்பனவும் தெய்வ மன்றோ”

“தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”

“தேடு கல்வியிலாததோர் ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்”

கவிதைக்குள் தரித்திராமல் தெருவில் இறங்கிக் கலகத்தில் கலந்து கொள்ளத் துடிப்பவை பாரதியின் சொற்கள். அரசியல் மட்டுமின்றி ஆன்மீகம், வேதம், சமூக மரபுகள், ஒடுக்கு முறைகள் கலை இலக்கியக் கோட்பாடுகள் போன்ற எல்லாமே இந்தச் சொல்லடிக்கு இலக்காகின்றன. எதிர்ப்புணர்வே பாரதியின் கவிதைகளை வழி நடத்துகிறது.


கவிதையில் சொல்லுக்கு, வழக்கமான பொருள் இல்லை என்பதோடு, சிலசமயம் கவிஞனை முன்னுக்குப் பின் முரணானவன் என்று காட்டும் அதிர்ச்சி இயல்பும் உண்டு. பாரதியிடம் இத்தகைய முரண்கள் உண்டு. முரண்படுவது என்பது தவறான நடவடிக்கை எனும் பொது நியதியைக் கவிதையின் மீது பாய்ச்சி, முரண்பாட்டுக்காகக் கண்டனம் செய்வதோ, இல்லது ஏதேதோ விளக்கங்கள் சொல்லி முரண்பாடு இல்லை என்று கவிஞனைப் பாதுகாக்க முயல்வதோ வாசக விமர்சன வழக்கமாக இருந்து வருகிறது. இது தேவையற்றது.

கருத்துக்களுக்குள் எச்சரிக்கையோடு புழங்கும் தத்துவ ஞானிகள் முடிச்சுகளை அகற்றி, மிகுந்த முயற்சிக்குப்பின், இழையின் இருமுனைகளையும் இணைத்துத் தர்க்கம், பகுத்தறிவு, முழுமை என்று தமக்கும் பிறர்க்கும் திருப்தி தேடுவார்கள்.

கவிஞனோ முன்பின் அற்றவன்: அந்தந்தக் கணத்தை அந்தந்தக் கணத்தில் வாழ்ந்து மடிபவன். ஒரு பிறவியில் அவனுக்கு ஆயிரக்கணக்கான பிறவிகள் உண்டு. ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்கும் இடையே சில சிந்தனைகளில் முரண் தோன்றக் கூடும். இரண்டுமே அந்தந்தக் கணத்தின் உண்மைகள்.

பிரக்ஞையின் ஆழத்திற்கேற்ப உண்மை, வேறு வேறு தோற்றம் தருகிறது. வௌ;வேறு தளங்களில் தெரியும் முரண்படு தோற்றங்களைச் செயற்கையாக ஒன்றுபடுத்த முயலாமல், அப்படியே கவிதையில் பதிவு செய்கிற அக நேர்மையாளனை நாம் குற்றவாளியாக்கிவிடக் கூடாது. கவிஞனின் இலக்கணம் தனக்குத் தான் முரண்படாதிருப்பதன்று, தனக்குத்தான் உண்மையாக இருப்பது.

“கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டைக் கதைபேணோம்
கடமை அறியோம் தொழிலறியோம் கட்டென்பதனை                 வெட்டென்போம்
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவு மற்றிவைபோல்
கடமை நினைவும் தொலைத்திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே”

பெரும்பாலும் செவியதிரக் குரல் கொடுக்கும் பாரதி இங்கு ஏதோ சைகை செய்வது போல் தோன்றுகிறது. “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்று பிரகடனம் செய்தவர் “கடமை அறியோம் தொழிலறியோம்” என்று ஒதுங்குகிறார். வசனத்தில்,

“மனிதன் வேலை செய்யப் பிறந்தான். சும்மா இருப்பது சுகம்
என்றிருப்பது தவறு…. ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்காகவே
பிறந்திருக்கிறான் காரியம் செய்யாதவனைக் காண்பதும் தீது”

என்று அழுத்தமாகப் பேசியிருக்கிறார்.

“வாழ்வு முற்றிலும் கனவு”
“கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும்”

என்று விரக்தி கொள்ளும் பாரதி, ‘உலகமே பொய் என்று சந்நியாசிகள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். குடும்பத்தில் இருப்போர் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ நிற்பது நடப்பது பறப்பது – கனவா தோற்றமா மாயையா? வானம் வெயில் மரச்செறிவு வெறும் காட்சிப் பிழையா?..... நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? என்றும் கேட்கிறார். வாழ்வு கனவு எனக் கண்டதும், வாழ்வு கனவன்று எனக்கண்டதும் வேறு வேறு
மன எழுச்சிகள்.

“யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பினேன்” என்னும் கவிஞர், “கொடுமையை எதிர்த்துநில்”, “சீறுவோர்ச்சீறு”, “உலுத்தரை இகழ்” என்றும் சொல்கிறார். “சினம் கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்” எனத் தணிப்பவரும் “ரௌத்திரம் பழகு” என்று முடுக்குபவரும் ஒருவரே.

பார்வைக்கு முரண்போலத் தோன்றுகின்ற, ஆனால் தத்துவத் தளத்தில் முரண் என்று ஆகாதவற்றை வசன கவிதைகளில் நிறையக் காணலாம்.

“இளமை இனிது முதுமை நன்று.. உயிர் நன்று. சாதல் இனிது……
இன்பம் துன்பம் பாட்டு… புலவன் மூடன் இவை ஒரு பொருள்”

“காத்தல் இனிது. காக்கப்படுதலும் இனிது
அழித்தல் நன்று. அழிக்கப்படுவதும் நன்று
உண்பது நன்று உண்ணப்படுதலும் நன்று”

     “உணர்வே நீ வாழ்க….. உள்ளதும் இல்லாதும் நீ. அறிவதும் அறியாததும் நீ.
     நன்றும் தீதும் நீ” 

0
   
கவிதையின் மூலம் எது? எவ்வாறு பிறப்பெடுக்கிறது?- உலக முழுவதிலும் நிறையக் கவிஞர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வுகள் பெருகியுள்ளன. பாரதியின் வாக்கு மூலமும், கவிதைகளாகிய சாட்சிகளும் மிகத் தெளிவானவை. பாரதியைத் தீர்மானித்தது காலம்: அதற்கு இசைவு கொடுத்தது அநீதிகளுக்கெதிரான அவரது போர்க்குணம்: அவரது கவித்துவம் முற்றிலும் புதிய தடங்களை உருவாக்கிக் கொண்டதன் காரணம், அவர் புலவராக ஒதுங்கி வாழாமல் சாதாரண மக்களோடு நெருங்கி வாழக் கிடைத்த பத்திரிக்கைத் துறைத் தொடர்பு, விடுதலை இயக்கம், இயல்பாகவே கருத்துப் பரப்பலில் அவருக்கிருந்த ஆர்வம், பிறமொழி, இலக்கிய அறிவு போன்றவை. பாரதியின் பெரும்பாலான கவிதைகள் தெளிவாக உருவாகிவிட்ட கருத்துக்கள் கவித்துவக் கிளர்ச்சியின் வழியே வெளிவந்தவை தாம் சில கவிதைகள் முன் தீர்மான மற்று நிகழ்ச்சி தந்த உந்துதலில் கருத்தும் உணர்ச்சியும் ஒட்டிக் கொண்டே பிறந்தவை.
மிகச்சில கவிதைகள் கருத்துரு என்று எதுவும் தெளிவாக இல்லாமலே, தீவிரத்தன்மை வாய்ந்த உணர்வுக் கொதிநிலைகளில் கவிஞனின் பிரக்ஞை பூர்வமான முயற்சியை அதிகம் வேண்டாமல் தாமே பிறந்து கொண்டவை.

தனது கவிதை மொழியைக் கண்டறிவது ஒன்றே கவித்துவ வாழ்வாக அமைகிறது கவிஞனுக்கு எழுதி எழுதித்தான் அவன் தன் சொல்லைச் செதுக்கிக் கொள்கிறான். பின்வரும் சந்ததிக்கு மேலும் தீட்டிக் கொள்ளக் கொடுத்துப் போகிறான். இன்று பாரதியின் சொல் என்னவாக இருக்கிறது? பாரதிதாசனைத் தாண்டி வந்தபின் அது எங்கே போயிற்று?

“பாரதிக்குப் பின்பிறந்தார் பாடைகட்டி வச்சிவிட்டார்
ஆரதட்டிச் சொல்வார் அவரிஷ்டம் நாரதனே” 

என்று புதுமைப்பித்தன் மிகைப் படுத்திச் சொல்கிறார். பாரதிக்குப்பின் அந்த அளவு வேகம், வெறி, தீவிரம் கொண்ட கவிதை இயக்கம் எதுவும் தோன்றவில்லைதான். ஆனால் குரல் உயர்த்தாத, படபடக்காத, வெளித்தெரியாத வீரியம் கொண்டகவிதைகள், விமர்சனமும் அங்கதமுமாய் அமைந்தவை, உள்நுழையும் தேட்டம் கொண்டவை எனப் பலவாறு கவிதைகள் வளர்ச்சி கண்டுள்ளன. எனினும் பாரதிக்குப்பின் அறுபதாண்டுக்கால வளர்ச்சிக்கு இவைகளைக் கொண்டு கணக்குக் காட்ட முடியாது என்பது உண்மை.

                       ¥¥¥¥¥¥¥¥¥


மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - தமிழியற்புலம் - மகாகவி பாரதியார் கருத்தரங்கம்
மார்ச்-5,1998. 


(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை)
                                                  


                                         பாரதி – ஒலியும் மௌனமும்

                                                                                           --- கவிஞர் அபி ---

பாரதியைப் பற்றி நினைக்கும் போது பெரும்பாலும் அவரை ஓசை-ஒலிகளுடன், சந்தங்களுடன், இடி, மின்னல், மழை, போலாட்டம் எதிர்ப்புணர்வு ஆவேசங்களுடன் சம்பந்தப்படுத்தவே தோன்றும். உள்ளேயே இருக்கும் கடவுளுடன் கூட அவரது பேச்சு ஓங்கி உரத்து ஒலிக்கிறது. பாட்டின் ரசிகர்: கவிதையைப் பாட்டு என்றே சொல்லி வந்தவர்: ராக தாளக் கட்டமைப்புகளில் புழங்கியவர் பாரதி.

“ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம்     உவமையிலா இன்பம்” எனக் கண்டிருந்தவர். “வெடிப்புறப் பேசு” என்பதையே தமக்குப் படைப்பு நெறியாகக் கொண்டவர்.

தேசியகவியாக, சமூக சீர்திருத்தக் கவியாக, புரட்சிக் கவியாக,அடிமைத்தனத்தையும் கீழ்மையையும் அச்சத்தையும் வறுமையையும் மனிதகுலப் பொது எதிரிகளாகக் கண்டு கவிதைகளால் போரிட்ட போராட்டக் கவியாக, முன்னோடி இல்லாமல் புதிதாகத் தோன்றிய உரத்த ஆளுமை பாரதி. தமக்குள் எப்போதும் சுதந்திரத்தை நிலவ விட்டிருந்தார். மீறல்களுக்குத் தயங்காதவராக இருந்தார். சொந்த வாழ்விலும் கவிதை வாழ்விலும் இலக்கணங்களை மீறினார்: மரபுகளை மீறினார்: தமது காலக் கருத்தோட்டங்களை எளிதாக மீறினார். இந்த மீறல்கள் எல்லாம் வெப்பமாகவும் அதட்டலாகவும் இருக்கின்றன. ‘சீறுவோர்ச் சீறு’, ‘சோதிடந்தனை இகழ்’, ‘நையப்புடை’, ‘ரௌத்திரம் பழகு’, ‘புதியன விரும்பு’, ‘வேதம் புதுமை செய்’ - இவைகள் மீறல்களே.

        “செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
        சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
        பித்த மனிதர் அவர்சொல்லும் சாத்திரம் பேயுரையாம்” –

சாத்திரங்கள், பொய் வேதம், சாதி-மதக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனம் இவைகளை எதிர்ப்பது பாரதி காலத்தில் பெரும் மீறலேயாகும். சொல்லின் ஓசையை மீறிக் கொண்டு இந்தக் கருத்துக்களே பேரொலி எழுப்பக் கூடியவை.


கடவுளோடு பேசினாலும், மனதோடு பேசினாலும், மனிதரிடம் பேசினாலும் உரத்துப் பேசுவதே பாரதிக்கு வழக்கம்.

“தேவதேவா சிவனே கண்ணா வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா…. வாணீ காளீ அபயம் அபயம் நான் கேட்டேன்”

“சொல்லடி சிவசக்தி”, “சொல்லடீ சொல்லடீ மலையாள பகவதீ”, “பேதை நெஞ்சே” “பேயாய் உழலும் சிறுமனமே”- என்பன போன்றே இந்த அழைப்புக்கள், தெருக்கள் தாண்டிக் கேட்கும் கூவலாக இருக்கின்றன.

மக்கள் கூட்டத்தை நோக்கி எத்தனைக் கட்டளைகள், வேண்டுகோள்கள்! “கொடுமையை எதிர்த்து நில்”, “குன்றென நிமர்ந்து நில்”, “சிறுமை கண்டு பொங்கு”, ‘தீது செய்ய அஞ்சு’, “ஊதேடா சங்கம்” “ஊதுமினோ வெற்றி ஒலிமினோ வாழ்த்தொலிகள்”, “ஜெயபேரிகை கொட்டடா” ‘வாழ்க ஒழிக வளர்க வெல்க’- செவிப்பறை அதிர்கிறது பாரதி எழுத்தில். உறுதிமொழிகளையும் பிரகடனங்களையும் ஏதோ போர்க்களத்து ஆர்ப்பரிப்புகள் போலத்தான் வெளியிடுகிறார்.

“யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்”, “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை”, “முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடியும் வீழ்வோம்”, “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”.

சுயமான கருத்து வீரியத்தில் பாரதிக்கு எப்போதும் சந்தேகம் வந்ததில்லை. ‘தனியொருவனுக்கு உணவில்லையா, ஜகத்தினை அழித்துவிட வேண்டும்’. ‘கல்வி இல்லாத ஊரா, அதை எரித்துவிட வேண்டும். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனியது எங்கும் இல்லை’ ‘சாதிகள் இல்லை’ மாயை என்பது வெறும் பொய்: மனைவி மக்கள் மாயையா? காண்பது சத்தியம், இந்தக் காட்சி நித்தியம்’ ‘கற்புநிலை- அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’ – உறுதிப்பட்டு கெட்டிப்பட்டுவிட்ட இந்தக் கருத்துக்களின் வெளியீடு ஒலித்தீவிரம் கொண்டது என்பதை வாசகன் எளிதில் காணமுடியும்.

‘தேசபக்தி’ பாரதியின் பக்திமார்க்கம் - பராசக்தியும் பாரத தேவியும் வேறுவேறில்லை. தேசபக்திப் பாடல்கள் எல்லாம் பாரதி பாரதியாகச் சேர்ந்த ஒரு பெரும் பாரதிக் கூட்டத்தின் கூட்டுக்குரல். இயல்பிலேயே சுதந்திரனாக இருந்ததும், சூழலின் உணர்ச்சிக் கொதிநிலையை உள்வாங்கிக் கொண்டதும் தேசபக்திப் பாடல்களின் சத்திய ஆவேசத்துக்குக் காரணம்.

    “என்று தணியுமிந்த சுதந்திர தாகம்-என்று மடியுமெங்கள் அடிமையில்       மோகம்
     என்றெம தன்னை கை விலங்குகள் போகும்”
    “நாமிருக்கும் நாடு நமக்கே உரிமையாம்”
    “பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்”
    “ஏழையென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில்”

தேச விடுதலை நோக்கத்தைத் தாண்டியும் பாரதி கவிதைகள் ஒலிக்கின்றன. புதிய கோணங்கியாக வரும் பாரதி, “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்”- பேச்சு மொழியை ஏச்சு மொழியாக்கி விடுகிறார்.

சரி. பாரதி ஓசைமயமானவர் என்பதைப் பார்த்து விட்டோம்ஃ பேச்சும் பாட்டும் கூட்டுக் கலவை ஓசைகளும் ஆட்டங்களும் கொண்டு நிரம்பிய பாரதிக்கு அழுத்தமான வேறொரு பக்கம் இருக்கிறது.

“வாயே  திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே”  என்ற ஆசை,
“நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந்திட நீ செயல்வேண்டும்” என்ற வேண்டுகோள்! பாரதியின் மௌனப் பகுதி அதிகம் பார்க்கப்படாதிருக்கிறது.

ஒலியும் மௌனமும் எதிரெதிர்த் திசைகள் என்றால் பாரதியைத் தேடி எந்தப் பக்கமாகப் போவது?
இப்போது ஒரு தெளிவு செய்து கொள்ளலாம். எது மௌனக்கலை, கவிதை? ஒரு வகையில் எல்லாக் கலை வெளிப்பாடுகளும் மூல ஊற்றில் மௌனத்திலிருந்து வெளிப்படுபவைதாம். பிறவியின் மௌனவாசனை அவற்றில் இருப்பது தேர்ந்த வாசகனுக்குத் தெரியக் கூடும். எந்தக்கலை, தன் பிறவியின் ஊற்றை நோக்கி வாசகனை ஈர்த்துச் செல்கிறதோ, அது மௌனக்கலை. சில கணப்பொழுதேனும் வாசகனைத் திடீரென ஒரு மௌனநிலைக்குள் ஆழ்த்திவிடும் வாய்ப்பு அதில் இருக்கும். இராமன் நிமிர்ந்து பார்த்த ஒரு பார்வையில் ஆலமரத்துப் பறவைகள் சட்டென ஆர்ப்படங்கி மௌனமானது போல இது நேரலாம். எந்தக்கலை, தரமானதேயாயினும், கவிஞனது உள்ளாழ்ந்த மூலைக்கு உங்களை அழைப்பதில்லையோ அது ஒலியைத் தலைமைப்படுத்தும் கவிதை எனக் கொள்ளலாம்.

மௌனம், ஓசை-ஒலிகளின் எதிரியா? நிசப்தம்தான் ஓசை ஒலிகளின் எதிரி. நிசப்தம் வேறு, மௌனம் வேறு. மௌனமோ, சப்தம், நிசப்தம் உள்ளிட்ட பிரபஞ்ச சலனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம். அண்டவெளி ஓசையற்றதா? நம் புலனுக்கு அறிவுக்கு முற்றிலும் எட்டாத ஓசைப்பெருக்கு அல்லவா இந்த அண்டவெளி! ‘பிரபஞ்ச வெளியில் மௌனம் பயங்கரத்தை எழுப்புகிறது’ என்றார் பாஸ்கல் என்னும் அறிஞர் (வுhந ளுடைநnஉந ழக உழளஅiஉ ளியஉந ளவசமைநச வநசசழச) இந்த மௌனத்தை நேரடியாக அனுபவம் கொள்ள முடியாது. உருவற்ற சலன மயத்தில் நாமே கற்பித்துக் கொள்ளும் சில இடைவெளிகள், உறை நிலைகள் தாம் நமக்கு மௌனத்தை அனுபவப்படுத்துகின்றன. இத்தகைய உறைநிலைகளைக் கவிஞன் தனது ஆயிரம் ஓசைகளுக்கு நடுவேயும் வைத்திருந்தால் அந்தக் கவிதை மௌன அனுபவத்தை நமக்குத் தந்துவிடும். அப்படித் தரும்போது கவிதையும் நாமும் மொழியைத் தாண்டலாம்: மொழி உறுதிப்படுத்தி வைத்திருக்கின்ற கால, வெளி வடிவங்களையும் தாண்டி விடலாம்.

‘எல்லா உணர்வும் ஒன்றே’ என்றார் பாரதி. பல்வேறுபட்ட உணர்வுகளையும் அவற்றின் ஆதிவடிவில், ஒரேவடிவில் தரிசித்ததனால் தான் இவ்வாறு சொல்ல முடிந்தது. அது போலவே, அனைத்து ஓசை ஒலிகளும் அவற்றின் ஆதிவடிவில், ஒரே ஒலியாக, மௌனத்தின்  ஒலியாக இருப்பதைக் கவிஞன் காண்கிறான்.

மொழி, சிந்தனை, கருத்துருவாக்கம் என்பவை மேல்மட்டப் பிரக்ஞை அசைவுகள். இவற்றில் அடங்காத மிகப்பெரும் சக்தி கடலடிப் பனிப்பாறை போல மறைந்து பிரபஞ்ச மொழியில்தான் இருக்கிறது. பிரபஞ்ச மொழி மௌனம். இந்த மொழியைத் தொடும் போதுதான, கவிஞன், நம்மைச் சுற்றிலும் நமக்குள்ளேயும் நாமறியாமல் நிரம்பிக் கிடக்கும் அருவங்களையும், அகாதத்தையும், அகாலத்தையும் உணர்த்தத் துணிகிறான்.
--------
புறவுலகின் அனைத்து ஈர்ப்புகளுக்கும் இடையில் தன்னுள்ளிருக்கின்ற உள்மனிதனோடு உள்ள தொடர்பில் இடைவெளி விடாமல் பார்த்துக் கொள்பவனே கவிஞன், பாரதி உள்ளும் புறமுமாக மாறிமாறியோ, சில அற்புதக் கணங்களில் அகம்-புறம் என்ற பிரிவினையற்ற ஒருமையிலோ இருந்து வந்தவர். அவரது மௌனம் ஒலிகளுக்கு எதிர்த்திசையில் இல்லை: ஒலிகளின் உட்புறத்தில் இருக்கிறது.

        “உட்செவி திறக்கும்: அகக்கண் ஒளிதரும்:
          அக்கினி தோன்றும்: ஆண்மை வலியுறும்”

நவீனத் தமிழ்க் கவிதையின் முதல் கவிஞரான பாரதிக்குக் கிடைத்த சூழல் வளமானது. ஷெல்லி, விட்மன் போன்ற புரட்சிகரக் கருத்தோட்டங்கள் ஆங்கிலத்திலிருந்தும், வேதம், உபநிஷதம், கீதை போன்றவை சமஸ்கிருதத்திலிருந்தும், புரட்சிகரமான ஆன்மீகத் தடங்கள் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றவர்களிடமிருந்தும் கிடைத்தன. பாரதியின் உள் உலகம் இவைகளைச் செரித்துக் கொள்ளும் பக்குவம் கொண்டிருந்தது. புதுவையில் சந்தித்த குள்ளச்சாமி, ‘வேதாந்த மரத்தில் ஒரு வேராக’, ‘பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டவராகப் பாரதிக்குத் தோன்றினார்.
    “பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால் பேரின்ப மெய்துவதே ஞானம்” என்ற குள்ளச்சாமியின் உபதேசம், பாரதிக்குள் முன்பே இருந்துவந்த பாதையை வெளிச்சமிட்டுத் திறந்திருக்கிறது. அதற்கப்புறமும் பாரதி பேசிவந்தார். பேச்சை நிறுத்திவிடவில்லை. ஆனால் பேச்சினுள் மந்திரச் சொற்களின் ஊடாட்டம் தொடங்கிவிட்டது. ஒலிகளின் உலகத்திற்குள் மௌனத்தின் நிறமற்ற உலகம் விரியத் தொடங்கிவிட்டது.

சொல்லைத் தேடுகிறாh பாரதி. ‘அது தேவசக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல், மந்திரம் போன்ற சொல்’, ‘மனிதனின் ரஸம் வாக்கு’, ‘பரப்பிரமத்தின் சக்தி வாக்கு ரூபமாக உபாசிக்கப்படுகிறது’ என்ற உபநிஷத்தின் வழியில் பாரதிக்கு இத்தேடல் அமைந்திருக்கலாம். அதனால்தான் “சொல்லில் விளங்கும் சுடரே சக்தி’ என்றார். சொல்வதன் அதிகபட்ச சாதனையை- அர்த்த விசறல்களை, கூர்மையை, ஆழத்தை நிகழ்த்தினால் அது கவிதைச் சொல் சொல்ல முடியாததை வாசகன் மனசுக்குள் பாய்ச்சும் சாதனையை நிகழ்த்தி விட்டால் அது கவிதைச் சொல்லினும் மேலான மந்திரச் சொல். சொல் அர்த்தத்தைச் சுமந்தோ அர்த்தத்தைத் தேடியோ சுற்றித் திரியாமல் நேரடியாகச் செயல் வடிவிற்கு வந்து விடுகிறது. எவ்வளவு ஆங்கார ஓசைகளின் நடுவே இருந்தாலும் அந்த மந்திரச் சொல் மௌன சக்தியின் வெளிப்பாடுதான். சாந்தத்தோடு சம்பந்தப்படுத்தப்படும் பிரணவநாதம் பாரதி பாட்டில், உலக வெடிப்பாகச் சீறி வெளிவருகிறது.

    “ஓமென்றுரைத்தனர் தேவர்: ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்
     பூமி அதிர்ச்சி உண்டாச்சு: விண்ணைப் பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று”

சொல் பிறக்கும் போதே செயல் பிறந்து விடுகிற இடைவெளியற்ற தன்மையை இங்கே உணர முடிகிறது.

மந்திரச் சொல் எங்கே கிடைக்கிறது? அகராதிகளிலிருந்து வெடித்து வெளியேறிக் கவிஞனுக்குக் கிடைக்கிறது. காதலின் தளத்திலிருந்து ஆன்மப் பெருவெளிக்கு நம்மை ஒரு மின்வெட்டில் தூக்கி எறியும் சொற்கள் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வேறு சில கவிதைகளிலும், எதிர்பாராத இடங்களில் திடுமென எதிர்கொள்கின்றன.

காதல் “கொன்றிடுமென இனிதாய். இன்பக் கொடு நெருப்பாய், அனற் சுவையமுதாய்” இருக்கிறது. கண்ணன் குழலோசை. ‘காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு” ஆக இருக்கிறது. காதலி, “ஏழுலகும் இன்பத் தீ ஏற்றுகிறாள். இங்கெல்லாம் சொல் இருக்கிறது: பொருள் இருக்க வேண்டிய இடத்தில் அனுபவமே திரண்டு நிற்கிறது. காக்கைச்சிறகு, பார்க்கும் மரங்கள், கேட்கும் ஒலி எனச் சாதாரணமாக வந்து கொண்டிருந்த கவிதை, ‘தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்று ஒரு பெரிய தளமாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. அழகுணர்ச்சியின் உச்சநிலைகூட இதுபோலவே தளமாற்றம் காண்கிறது. வெண்ணிலாவின் ஒளியில் “கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள்ளொன்று” கூடியிருப்பதாகக் காண்கிறார். ‘கொல்லும் அமிழ்தம்’- பாரதியின் தனிப்பட்ட கருத்துருவாக்கம்.

வசன கவிதைகளிலும் வேறு கவிதைகளிலும் பல இடங்களில் நெருப்பு, கனல், அனல், மின்னல், சாவு, கள், அமுது, நஞ்சு போன்ற சொற்களை உருவேற்றி உருவேற்றி மந்திரச் சொல்லாகவே நிலவ விட்டிருக்கிறார் பாரதி எல்லாத்தீயையும் வணங்க வேண்டும் என்பவர் அறத்தீ அறிவுத்தீ என்பவைகளுடன் சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ என்பவைகளையும் சேர்க்கிறார். உணர்வுகளின் குணபேதங்களை ஊருவிப்போய் அவற்றின் மூலத்தை அடையும் போது கண்ட ஒருமையை – எல்லா உணர்வும் ஒன்றே என்ற உண்மையை - இவ்வாறு வெளிப்படுத்துகிறார். நல்லது-கெட்டது, வன்மை-மென்மை, எதிர்மறைகள் என்று எவையும் இல்லை என்பதை மந்திரச் சொற்கள் சுட்டிக் காட்டுகின்றன.

பாரதியின் உள்மனிதனுக்கும் வேலை nவிளியல்தான் இருக்கிறது. ஞான ஆகாசத்தின் நடுவே நின்று ‘பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக. துண்பம் மிடிமை நோவு வாவு நீங்கி உயிர்கள் இன்புற்று வாழ்க’ என்று பாரதி கட்டளை இடுவாராம். கடவுள் ‘அங்ஙனே ஆகுக’ என்று சொல்ல வேண்டுமாம். ‘வையந்தழைக்க வைப்பேன்: வானம் மூன்று மழைதரச் செய்வேன்’. ‘இனி வையத் தலைமை எனக்கருள்வாய்’- இவைகள் விநோதக் கற்பனை, நிறைவேறாதவை என்ற சிந்தனை பாரதியிடம் இல்லை. சொல்லைச் சொல்லிப் பார்க்காமல், சொல்லை வாழ்ந்து பார்க்கும் அவரது உள்மனிதனின் செயல்பாடு இது: உள் மனிதனின் பேச்சு இது.

வேதம் புதுமை செய்து வேதவாழ்வினைக் கைப்பிடிக்க உறுதி கொண்டவர் பாரதி. வேதவாழ்வு என்பது வியனுலகனைத்தையும் அமுதென நுகர்வது: படைப்பின் அனைத்துப் பொருள்களையும் ஒன்றே என உணர்ந்து, அந்த ஒன்று ‘தான்’ என்பதைக் கண்டு ‘தானே தெய்வம்: தான் அமுதம்: தான் இறவாதது’ என்ற பேருண்மையில் திளைப்பதுதான் வேத வாழ்வு. ‘புள், விலங்கு, மரம், காற்று, விண்மீன், வெட்டவெளி – எல்லாமே நான்’ ‘மனிதர் தேவர், ஞாயிறு, சுவர், மலை, கடல், இன்பம்-துன்பம் உயிர்-இறப்பு இவை ஒருபொருள்’. ‘மனம், சித்தம், உயிர், காடு, அருவி, நிலம், நீர், காற்று, தீ, வான்- எல்லாமே தெய்வங்கள்’ ‘உணர்வு அமுதம் உணர்வே தெய்வம்’ “அவனியிலே பொருளெல்லாம் ‘அது’வாம்: நீயும் அதுவன்றிப் பிறிதில்லை” “சாமிநீ சாமிநீ கடவுள் நீயே”- இவ்வாறெல்லாம் உபநிஷத் வழியில் பிரம்மத்தை விளக்குகிறார். எல்லாமே தெய்வமென்றால், படைப்பில் உள்ள தீயவை, கீழ்மை, கொடுமை, ஒவ்வாமைகள் பற்றி என்ன முடிவு செய்வது என்ற சந்தேகம் வரலாமல்லவா! பாரதிக்கு அந்தச் சந்தேகம் இல்லை. ‘கழுதை. கீழான பன்றி, தேள், கூளம், மலம்- வணங்கத்தக்கவையே! “புன்னிலை மாந்தர் பொய்யெலாம் நான், துன்பம்நான், நான் எனும் பொய்யை நடத்துவோன் நான்” “கவுரவரும் அவனே, அர்ச்சுனன் தேர் ஓட்டியாக நின்றவனும் அவனே” “குரு மட்டுமின்றிப் புலையனும் சிவம்தான்”- மனித தர்க்கத்தைத் தள்ளிவிட்டுக் கவித்துவ அதர்க்கத்தின் துணையோடு படைப்பின் ஒருமையை உணர்த்துகிறார்.

பொருள்கள் எல்லாம் ஒன்றே என்பது போல, நிகழ்வுகள் எல்லாம் ஒன்றே என் உணர்ந்த உண்மை பாரதியைத் தரைகாணாத ஆழத்தில் கொண்டு சேர்க்கிறது. ‘காத்தல்-காக்கப்படுதல், அழித்தல்-அழிக்கப்படுதல், உண்ணல்-உண்ணப்படுதல், வாழ்தல்-சாதல் எல்லாம் ஒன்றே. தெய்வங்களிடம் பாரதி சொல்கிறார்: “எம்மை உண்பீர்- எமக்கு உணவாவீர்! உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்”- இங்கே உண்ணுதலும் உண்ணப்படுதலும் ஒரே செயல், ஒரே பொருளான பிரமத்தின் ஒரே செயல். எதுவும் அழிவதும் இல்லை: அழிப்பதும் இல்லை. அதனால்தான் “உயிர்நன்று, சாதல் இனிது” என்கிறார்.

    “காற்றே உயிர்: காற்று உயிர்களை அழிப்பவன்
     காற்றே உயிர்: எனவே உயிர்கள் அழிவதில்லை”

சாவு உண்டு. அழிதல் இல்லை என்றால், எல்லா நிகழ்வும் ‘இருத்தல்’ என்ற ஒரே நிகழ்வின் பிம்பங்களே. ஒருவகையில் இருத்தல் என்பது ஒரு நிகழ்வுமன்று: அது ஓர் உண்மை, பேருண்மை எனப் புரிந்து கொள்ள முடியும். சமூகத்தினின்றும் தமது அன்றாடச் சூழலினின்றும் விலகித் தனித்துப் போகாமலே பாரதிக்குத்  தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அவர் உபதேசங்களாகவோ, ஆசிரமச் சரக்குகளாகவோ ஆக்கி விடவில்லை: தம்மை இயக்கிக் கொண்டிருக்கும் கவிதையனிடமே ஒப்படைத்து விட்டார்.
‘நான்’ என்பது எப்படியோ விரிவாகித் ‘தான்’ என ஆகிவிடக் கண்டிருக்கிறார். “என்னுளே நானெனும் பொருளாய், நானையே பெருக்கித் தானென மாற்றும் சாகாச் சுடராய்”த் தேவி நிற்கிறாள் என்கிறார். தரிசனங்கள் தமது முயற்சி அல்ல என்கிறார். “என்கண்ணை மறந்து உன் இரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின் கண்ணால் புவியெல்லாம் நீயெனவே நான் கண்டு” எனக் குறிப்பிடுகிறார். ‘பரசிவ வெள்ளம்’ என்ற கவிதையில் அவர்கண்ட ஒரு அரூபதரிசனம் இடம் பெறுகிறது. பொருள்களுக்கு. உணர்வுகளுக்குத் தனித்தனியே ‘தன்மை’கள் (இயல்புகள்) உண்டு இல்லவா! ஏதோ ஒரு கணத்தில் பொருள்களைப் பிரிந்து தன்மை தனியாகிறது: பிரமத்தில் இணைகிறது. பிரம்மம் தன்மையற்றது அல்லவா! ஆகவே ‘தன்மை’ என்பதும் இல்லாமல் போகிறது. பல தன்மைகளையும் உட்கொண்டு;ம் தன்மையற்றிருக்கும் பிரமத்தின் அனுபவம் பாரதியின் கவிதை வரிகளில் விரிகிறது:


 “தன்மையெலாம் தானாகி தன்மையொன்றில்லது வாய்த் தானே
  ஒரு பொருளாய் தன்மை பலவுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே”

கண்ணன் பாட்டு ஒரு பாவனை உலகம்: இனிய ஓசை ஒலிகளும் வண்ண வெளிச்சங்களும் உலாவும் உலகம்: சொற்கள் எல்லாம் கள்ளம் கபடமில்லாமல் ஆடல் பாடல்களில கலந்து கொள்கின்றன: சூழ்நிலை இசைமயமாக இருக்கிறது. பரவசமோ, மகிழ்சியோ, பெருமூச்சோ, அழுகையோ, கலகலப்போ,  ஈரமோ இல்லாத இடமே இல்லை. அந்த உலகில் நுழையும் வாசகன் எவனுக்கும் புலன்கள் நிரம்பிக் கனக்காமல் போவதில்லை. இவ்வளவு இருந்தும், ‘பாவனை’ என்ற அடிப்படை காரணமாக, ஓசை ஒலிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்மை. நமக்குள்ளிருக்கும் மௌனத்தை நோக்கி நகர்த்தும் பாடல்களும் வரிகளும் கண்ணன் பாட்டில் உள்ளன.

ஓர் அனுபவம். அதைக் கனவு நிலையாகச் சித்திரிக்கிறார் பாரதி. உருத்தெளிவில்லாத- அல்லது உருவமே இல்லாத ஒன்று வந்து தொடுகிறது. அது இன்னது என்ற தெளிவு இல்லை. சொல்லுக்கும் சிந்தனைக்கும் அகப்பட மறுக்கிற அது, உணர்வில் கலந்து புதிய சாந்தி பிறக்கச் செய்கிறது. சாதாரணமான காதலைச் சொல்கின்ற காதல் வரிகளில் ‘சாந்தி’ என்ற சொல்லைக் கொண்டு ஆன்ம அனுபவத்தைப் பாரதி புலப்படுத்துகிறார்.

    “கண்ணுக்குத் தோன்றாமல், இனம் விளங்காமல் எவனோ
    என்னகம் தொட்டு விட்டான்: எண்ணும் பொழுதிலெல்லாம் -
    அவன்கை இட்ட இடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ-புதிய
    சாந்தி பிறந்ததடீ”

தரிசனங்கள் நீடிப்பதில்லை: மங்கலாகி மறைகின்றன., நினைவைக் கொண்டும் உணர்வைக் கொண்டும் உள்ளே துழாவித் தேடுகிறார்.

    “ஆசைமுகம் மறந்து போச்சே…நேசம் மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
    நினைவு முகம் மறக்கலாமோ?...கண்ணில் தெரியுதொரு தோற்றம்
    அதில் கண்ணன் அழகு முழுதில்லை”

வெளியே கேட்காத ஒரு ஓலம் இந்தக் கவிதையில் நிறைந்திருக்கிறது. தரிசனம் நழுவுகின்ற கடுமையான ஆன்ம நெருக்கடி நிலை இது.

    “மோனத்திருக்கதடீ-இந்தவையம் மூழ்கித் துயிலினிலே
    நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ”

என்ற வரிகளில் மேலோட்டமாகக் காதலின் கனத்த பிரிவுத்துயரம் தெரிகிறது. “நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சாதேனே” என்ற குறுந்தொகைத் தலைவியின் துயரம் போல்தான் தோன்றுகிறது. உலகம் முழுவதையும் ஒருதட்டில் வைத்து, மறுதட்டில் தன்னை வைத்துப் பார்த்துக் கொள்ளும் ஒப்பீட்டில் வையகம் தேடுதலற்று உறங்கிக் கொண்டிருக்கும் போது தனக்கு மட்டும் நேர்ந்திருக்கிற ஆன்ம விழிப்பு அந்த அவஸ்தை நரகமாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையில் துயரமோ நரகமோ அன்று. ‘கொன்றிடுமென இனிதாக’ இருக்கும் நிலை “ஏக மவுனம் இயன்றது காண்: மற்றதிலோர் இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால்” என்ற துன்ப இன்பம்: அல்லது இரண்டுமற்ற நிலை.

வானவெளி வியப்புகள் பாரதியை எப்போதும் களிப்பில் ஆழ்த்தி  வந்திருக்கின்றன. அவருக்குள்ளேயே வெளி வியாபித்துக் கிடக்கிறது. வசன கவிதைகளில் வானவெளி அனுபவங்கள் உக்கிரமடைந்து வானவெளியாகவே ஆகிவிடுகிறார். “வெட்டவெளியின் விரிவெலாம் நான்” என்று பேருணர்வு கொள்கிறார். கண்ணம்மாவின் காதலோ, சக்தியின் காட்சியோ விரிந்த வானவெளியாகவே அனுபவமாகின்றன. அண்டவெளியும் ஆன்ம உள்வெளியும் வேறானவை அல்ல என்ற உபநிஷச் சாரம் பாரதியிடம் படிந்துள்ளது. வானம் அண்ணாந்து பார்ப்பதில் இல்லை: சுற்றிலும் பார்க்கலாம்: ‘மண்ணிலும் வானம்தானே இருக்கிறது: ஆகவே மண்ணில் வேலிபோட்டால் வானத்தில் வேலி போட்டது போலத்தான்’ என்று சொல்கிறார். வெளி பற்றிய விஞ்ஞான உண்மைகளும் பாரதிக்கு உடன்பாடு சொல்கின்றன. அவ்வப்போது உள்-வெளி பேதம் உடைந்த களிவெறியில் பாரதியைக் காண முடிகிறது.

ஒலியையும் சொல்லையும் ஏன், அர்த்தத்தையும் தாண்டிய அனுபவம் தான் கவிஞனின் சோதனைக்களம். அவனது கவித்துவத்தின் முடிவுறாத இறுதி வரிகளை இந்தக் களம்தான் தீர்மானிக்கிறது.

பிரபஞ்சங்கள் தோன்றி விரிவது எப்போதோ குவிந்து ஒடுங்குவதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. காலமும் வெளியும் அண்டங்களும் ஏதோ ஒரு பொழுதில் அழியக்கூடும். விஞ்ஞானம் இந்த நிகழ்வுகளைத் தொலைதூரக் கலங்கல் காட்சிகளாகச் சொல்ல முயன்று கொண்டிருக்கிறது. இந்தச் சொல்லும், தகவலும், அறிவும் பாரதிக்குத் திருப்தி தரவில்லை., அண்டங்களின் அழிவை அவர் பார்க்க வேண்டும். சொல்லோ பொருளோ துணை வராவிட்டால் என்ன? சொல்லையும் பொருளையும் தாண்டிய சுத்தக் கவிதை அவரிடம் இருக்கிறது. சுதந்திரம் வருமுன்பே கற்பனையில் அதை அடைந்த விட்ட பாரதி, ஊழி வருமுன்பே அதை அனுபவம் காண்கிறார். ஊழிக்கூத்து என்ற கவிதை பாரதியின் கவித்துவ உச்சம்.

அண்டகோளங்கள் வெடித்துச் சிதறுதல், வெற்று வெளியில் பூதங்களி;ன் ரத்த வெறியாட்டம், ஐந்து பூதங்களும் நொறுங்கி ஒரே பூதமாதல், பின் அதுவும் சக்திக் களியில் மூழ்குதல், பாழ்வெளி உருவம் குலைதல், சக்திப் பேய் தலையொடு தலை முட்டி அன்னையின் வழி நெருப்பில் எரிதல், காலம் நிர்மூலமாதல் - கவிதையை வரிவரியாக அல்ல, அணு அணுவாக வாசிக்க வேண்டும். அணுவின் ஆற்றல் அதில் நிரம்பிக் கிடக்கிறது.

சந்தச் சொடுக்காலும் வார்த்தை வெறியாலும் இக்கவிதை, ஓசையின் உச்சம் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கும் மேலாக காலம் வெளி இரண்டும் ஒன்றாக அழிகிற நிர்மூலம் என்பது யுகயுமாகச் சேமிக்கப்பட்ட அவ்வளவு ஓசைகளின் ஒரே வெடிப்பு. அதை மௌனம் என்றுதான் சொல்ல முடியும். பாரதி அப்படித்தான் சொல்கிறார்: “காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும்-அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்” மோனம் என்பது பாரதிக்கு எல்லாவற்றுக்குப் பின்பு எஞ்சியிருக்கும் உவமையில்லாத ஒளி-வெளிச்சம். கவிதையில் வரும் நிகழ்வுகள் நம் கருத்து வரம்பிற்குள் கொண்டு வரப்பட முடியாதவை. “ஐந்துறு பூதமும் சிந்திப் போய் ஒன்றாதல்”, உருவற்ற பாழ்வெளி அந்த உருவற்ற ‘உருவும் குலைதல்’, ‘காலம் நிர்மூலமாதல்’ இவை எப்படிச் சிந்தனைக்குள் வரும்? அன்னையின் பாத ஒலியில், பூதங்களின் பாடல் பொருள் கலந்து விடுகிறது. சொல்லின் (பொருளின்) பயங்கர மௌனமும் சக்திக் கூத்தின் பயங்கர ஆவேசமும் ஒன்று கலந்து விடுகின்றன. சக்தியின் நடன வேகமோ ‘சிந்தை நழுவும் வேகம்’ முடிவில் எதுவுமற்ற ஏதோ ஒன்றில் அன்னையின் கூத்து தொடர்கிறது.

இப்படி, உணர முடியாததை உணர்ந்த, சொல்ல முடியாததைச் சொன்ன கவிஞனின் அகவிழிப்பு, ஓசையின் உச்சம் மௌனம் என்ற அரூபத்தைக் கண்டு கொள்கிறது.

எந்த நல்ல கவிஞனும், தனக்குப் பின்வரும் காலத்திற்கென்று, தனது கவித்தவத்தின் ஆகக் கூர்மையான பகுதியை வழிகாட்டியாக விட்டுப் போவான். பாரதியிடமிருந்து அப்படிக் கிடைத்தவைகளில் ஒன்று ‘அக்கினிக் குஞ்சு’.


     “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
    அங்கொரு காற்றிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு-தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

குறிப்பிட்ட ஓர் அர்த்தத்தின் கையில் கவிதையைப் பிடித்துக் கொடுத்து விடாமல், கால-இடவெளிகளில், சொல்லின் மர்மச் சுழல் பாதைகளில் சுதந்திரமாகக் கவிதையை அலைய விடலாம் என்பதைப் பாரதிக்குப் பின்வந்தவன் இந்தக் கவிதை மூலமாகப் புரிந்து கொண்டான். ‘அக்கினிக்குஞ்சு’ கவிதைக்குப் பொருள் சொல்வோர் எத்தனையோ குறியீட்டுப் பொருள்கள் சொல்லலாம்ஃ அது முக்கியமில்லை. பாரதிக்கு நேர்ந்த தரிசனத் தீவிரம்தான் முக்கியம். தரிசன அனுபவம் வெளிப்பட வேண்டுமானால் மொழியின் சுவர்களை உடைக்க வேண்டும் என்கிறார்கள் அறிஞர்கள். கவிதை முடியும் போது கேட்கிற ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்பதை மொழியின் சுவர் உடைபடுகிற ஓசையாகவே கொள்ளலாம். மேலும் சொல்லச் சொல் கிடைக்காத நிலையில், சொல்ல வேண்டிய மிச்சத்தை உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் எழுந்து நின்று தாண்டவம் ஆடத் தொடங்கி விடுகிறான் கவிஞன். ஒலியும் மௌனமும் எதிரெதிர்த் திசைகள் என்றால் பாரதியைத் தேடி எந்தப் பக்கமாகப் போக வேண்டும்? இப்போது குழப்பம் விடுபடுகிறது. ஒலியும் மௌனமும் எதிரெதிர்த் திசைகள் என்ற மரபான கருத்து பாரதியிடம் பொய்யாய்ப் போகிறது. ஓசைகளின் ஆழத்திலும், உச்சியிலும் தான் மௌனம் இருக்கிறது என்பதைப் பாரதியின் கவிதை கண்டுபிடித்திருக்கிறது. ஆகவே பாரதியைக் காண ஒரே திசையிலேயே போகலாம்.

மௌனத்தை நோக்கி நகரும் கவிதைகளை அடையாளம் காண்பது எப்படி? எங்கே மொழி அதன் வெளிப்புற வியாபகத்துக்குப் போகவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறதோ, எங்கே உணர்வுகளும் எண்ணங்களும் சொல்லைத் தேடி அலைந்ததற்கான சுவடுகள் இல்லையோ அங்கெல்லாம் மௌனத்தை நோக்கிய நகர்வு இருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை
               ----------------------------------------------------------------------------------------------
(தமிழ்ப் பொழில் --- மாத இதழில் வெளிவந்த கட்டுரை)“கவிஞர் அபியின்   மந்திரக்கவிதைகள்”
                      -செ.சு.நா.சந்திரசேகரன்.

உணர்வுகளை மெல்லவருடி அதை அப்படியே பிண்டமாய் தந்துவிடுவது கவிதையின் தன்மை. பிண்டத்திற்கு உருவமைத்து உலாவிடுவது நம்  கையில்தான் உள்ளது. தனிமையை சமூகம் வெகுகாலமாய் அனுபவம் செய்திருக்கின்றது. அதைப் பதிவு செய்ய அது தவறிருக்கலாம் “அபி” எனும் ‘மௌனத்தின் பிரச்சாரகன்’ அதைப்பதிவு செய்திருக்கின்றார். தனிமையின் விஷம் எனக்குப் பழக்கமாகி விட்டதெனக் காட்சியைத் தெளிவாக்க அவரால் மட்டுமே முடிகின்றது.

எழுத்துக்களுக்கு மீறிய உணர்வுகளை அப்படியே உணரத் தந்துவிடுவதன்றி அதை விவரிக்கும் முகமாக விவாதிக்வோ, நிறுபிக்கவோ, எடுத்துக்காட்டவோ, முயல நினைத்ததில்லை. கவிதைக்கென பிறரால் கையாளப்பெறும் வடிவங்களையோ மிதமிஞ்சிய அழகுகளையோ ஆடையாக அணிவிக்கவில்லை. பெற்ற குழந்தையின் சிரிப்பை நுன்மையாய் இரசிக்கும் தாயின் உணர்வே கவிதை வெளிப்பாட்டில் தெரிகிறது. “புதிய பார்வை”யில் வெளிவந்த “அவன்” எனும் கவிதையில்,
‘தெளிவு’ என்பதன் பொருள் விளக்க நிலையாக,

   “வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்
    மறுத்துக் கொண்டேயிருந்து
    கடைசியில்
    எந்தச்சுரங்கத்திலும் நுழையாமல்
    இருந்த இடத்தில் 
    திரும்பவே நேர்ந்தது
    வார்த்தைகள் இப்போது 
    கற்படிவங்களாய் கிடந்தன”

என்று கவிதைகளுக்கு நடுவே சென்று திரும்பும் இருவழிப்பாதையையும் கவிதையின் உள்ளீடு குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். அனுபவத்தைத் தாண்டிச் சென்று அதனுள் பிரண்டு, மூழ்கி, நீந்தி உணர்வுகளின் தெரியப்படாத உருவங்களைத் தொட்டுப்பார்த்துச் சுவடுகளாய் பதிந்து கிடக்கும் வார்த்தைகள் முழுங்கிவிடும் உள் அனுபவப் பிரதிபலிப்பே கவிதைகளாக உள்ளன.

அகச்சலனமிலாத மனிதனும் உயிரினங்களும் இல்லையென்பது அறிவியல். அச்சலனத்தைப் பாடுபொருளாக்கித் தனிமையுணர்வோடு ஆன்மீகச் சாயலையும் உள்தெளிந்து, “இல்லாமையிலிருந்து தோற்றங்களைப் பெற்று” உலவ விடுவது கவிப்பாதையின் புதிய சுவடுகள்.

சோவியத் கவிஞன் ‘மயாகோவஸ்கி’யின் கவிதைகள் குறித்தானச் செறிவுமிக்க கட்டுரைக்கு இணையாகப் ‘படைத்தல்’ எனும் கட்டுரை விளங்குகிறது. படைப்பானது பல்வேறு உணர்வாளர்களிடம் பல்வேறு புரிதல்களுடன் எடுத்துச் சொல்வதுதான் உண்மை. கவிதை ஒரு அனுபவத்தூண்டல் மட்டுமே. படைப்பாளிகளின் ஒட்டுமொத்த அடிநிலைப்பாங்கையும் வாசகன் பெற்றுவிட எத்தனிப்பதுதான் கவிதையின் வெற்றி என்பது மாயையே. எழுத்தாளனுக்கும், எழுத்துக்கும் வாசகனுக்கும் இடையிலான முப்பரிமாணக் கூட்டு முயற்சியை இதைவிட யாரும் இதற்குமேல் இலக்கணம் வகுத்துவிட முடியாது. பல்வேறு கவிதைகள் ஒரு கருத்தை முன்வைக்கின்றன. தெளிவோடு இருந்தலென்பது சாயங்கராகவே இருப்பதாகப்படுகிறது. சாயம் வெளுக்கவும் அச்சாக இல்லாதிருக்கவும் தெளிவற்ற பாங்கோடு இருப்பதே சுகமாக இருக்கும். ‘தெளிவைத்தேடி பிடிவாதம் ஏறி பாமரப்பயிற்சிகளால்களைத்துப் போய் விடுதல்’ என்பது வாழ்க்கையாகிறது. யாருமற்ற சாயலும் சுயமும் தேடும் யாருக்குத்தான் தெளிவு கிடைத்திருக்கிறது? ஒவ்வொருவரும் அவரவருக்கென்று அவருக்குள் எதையோ பிறப்பித்துக் கொண்டு ‘இதுதான் நான்’ என்று கூறுவதல்லாமல் நானிருக்கின்றேன் என்ற தெளிவை ‘ஏற்பாடு’ கவிதை உணர்த்துகின்றது.

உலாவி வருவனயாகவும் உண்மையல்ல என்று மவுனம் சாதிப்பதும், வாழ்வைச் சாவினின்றிப் பிரித்துப் பாதுத்தும் நிகழ்ச்சியினூடே சலனமற்று இருந்தும், எதற்கும் வசப்படாதிருக்கும் அறியாமையை உணர்த்தும் உண்மைநிலை காணவேண்டும் என்று ஆன்மீகத் தடத்திலிருந்து வரும் புதிய கோணங்களாகவும் கவிதைகள் அமைத்து சிறப்பிக்கின்றன. தத்துவார்த்த கவிதைகளோ என எண்ணத் தோன்றும் பிரபஞ்ச ஞானக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாய்,

“பிரக்ஞையில்
அறா விழிப்பு
இரவிலிநெடு யுகம்
இடந்தொலைந்த ஆழ்வெளி
சிறையிருப்பது
காலமும் தான்
----------------------------


தன்நீள்சதுர உருவம்
மங்க மங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்”  (காலம்-அந்தரநடை)

எனும் கவிதையை கூறலாம். இருத்தலிசக் கவிதையை போல பல கவிதைகள் இனம் காட்டப் பெற்றிருக்கின்றன. தனிமனிதனின் அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே பாடு பொருளாகாது உலகப் பொதுமைக்குமுள்ள அவ்வுணர்ச்சிகளை  படையலாக்கித்; தருவதுதான் சிறந்த தன்னுணர்ச்சிப் பாடலாகும். அதைக் கவிதைத் தொகுதிகள் முழுமைக்கும் காண முடிகின்றது. ‘ஜோசப்பிராட்ஸ்கி’யின் உள்முகக் கவிதைக் கட்டுரைகளும், வர்சீனியா உல்ஃப், வான்கோக் போன்றறோர்களின் ஆன்மதரிசனக் கட்டுரைகளும் கலந்ததான கலவைத் தொகுதி எப்படியானதோ அதைப் போன்றது இவைகள்.

கலைக் காட்சித் தன்மை அல்லது படிமவடிவம் (ஊழnஉசநவநௌள யனெ iஅயபளைவ கழசஅ) கொண்ட கவிதையாக

“வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய் திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது”     (வயது-அந்தரநடை)

எனும் கவிதை காணப்படுகின்றது. கவிதைகளின் இடைஇடையே பல இலக்கிய வகைகளையும் கண்டு கொள்ள முடிகின்றது. ஹைக்கூ கவிதைகளின் அம்சத்தைத் தனக்குள் கொண்ட பல கவிதைகள் உள்ளன. உதாரணமாக

“எதிர் எதிர்
தன்னைத் தான் முட்டிக் கொண்டு
காற்று”

என்ற இக்கவிதையைக் கூறலாம். கவிதைகளில் ‘எங்கிருந்தோ, எங்கா, சூன்யம், இருள், ஆன்மா, பிரபஞ்சம், அனுபவம் எனச் சொற்கள் மிகுதியாகக் கையாளப் பெறுவதற்குக் காரணம் ஆசிரியருக்கு இச்சொற்களிலுள்ள இலயிப்பும், இச்சொற்கள் தரும் ஆழமான பொருள் விளக்க வெளிப்பாடுமாக இருக்கலாம். இச்சொற்களை ‘அபியின் மந்திரச் சொற்கள்’ எனலாம்.

‘ஒரு படைப்பாளியின் அகஉலகின் அலாதியான கூறுகளுக்கெல்லாம் இடமளிக்கும் வடிவமாகக் கவிதை இருந்தாலும் கூடவே அது பல சிக்கலான சவால்களையும் முன்வைக்கக் கூடியது’ என்ற வாதத்திற்கு அப்பாற்பட்டு வாசகமனத்திற்குத் தளமாற்றமாவதில் இக்கவிதைகள் வெற்றியடைந்திருக்கின்றன. பொருளும், அனுபவமும் உள்ளத்தில் வளையம் வளையமாக, கரும்புகைக்கு நடுவிலுள்ள வண்ணக்கலவையாகப் பதியமிடப்பட்டிருக்கின்றன. கவிதையெனும் வசீகரத்தில் மௌனத்தின் பிரச்சாரங்கள் உலா வரும்போது எழுவகைப் பெண்டிரானப் பிறதுறைக் கவிஞர்களும் காதலிக்காமல் இருக்க முடியுமா என்ன?

திருகிய-மனப்போக்குகளை, செயல்முறையிலும் சற்று சுழற்சியாகவே நடையிலும் ஒரு சிக்கல் தொனிக்க பேச்சு நிலைக்கும் முந்தின ஒரு மனவோட்டத்தை அதாவது பிரக்ஞை நிலைக்குப் பிந்தியும், திட்டவட்டமான நினைப்பாக சொல் உருவத்திற்குள் அடைப்படுவதற்கு முந்தியும் உள்ள உணர்வு நிலையை எடுத்துக் கொண்டு அதிலே கதாபாத்திரங்களின் அறிவு உணர்ச்சிப் பரிமாறுதல்களை, மோதல்களை, போராட்டங்களை சித்தரிப்பர்.

‘எழுத்து அனுபவங்கள்’ எனும் கட்டுரையில் சி.சு.செல்லப்பா அவர்கள் ‘லா.ச.ரா’வின் படைப்புக் குறித்து மேல் குறிப்பைக் கொடுத்திருக்கின்றார். இக்குறிப்பே அபியின் கவிதைப் பாதையாகவும் எனக்குத் தெரிகிறது. புதுமைப் புகுத்திய லா.ச.ராவும் அபியும், அந்தந்தத் துறையில் ‘பிதாமகராக’ இருக்கின்றார்கள்.
 
                                                 ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

------------------------ தமிழ்ப் பொழில் மாத இதழ் ஜீலை-2001 பக்-548-553
       
   
 
 

ஞாயிறு, 22 மார்ச், 2015

காலம் -- வாசனை


சுத்தமாய் ஒருநாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்

அது
பரபரப்பதும்
பரிதவிப்பதும்
பார்த்திருப்போம்

ஜரிகையில் எழுதிய
தன்பெயர்
அழிய அழிய
அது பொருமிப்
பெருமூச்சு விடக்கூடும்

தன் நீள்சதுர உருவம்
மங்கமங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்

வானம் தொட்டு நிமிர்ந்தும்
மண்ணில் குருகி நெளிந்தும்
தன் மின் சக்தியால்
எங்கும் துழாவக்கூடும்
ஒதுங்கி நிற்போம்

தன்னுள்
செறிந்து பறக்கும்
துகள்களுள்
பதுங்கி மறைந்துள்ள
சப்தங்களை வருடிச்
சரி பார்க்கலாம்

உலகின் முழுச்சாயையும்
தேமல்போல் படர்ந்து
தினவு தருவதை
உணர்ந்த்தோ உணராமலோ
தன்னைத் தேய்த்துவிட்டுக் கொள்ளலாம்

சிரித்துக் கண்ணீர் சிந்தித்
திமிறி
தப்ப முடியாதென்க் கண்டு
கடைசியில்
அது
வாய்திறந்து
பேசி,
பேச்சின் வாசனையில் கரைந்து
தப்பிவிடக் கூடும்

அதுவரை
சுத்தமாய் ஒரு நாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்

காலம் -- சிறை


பிரக்ஞையின்
அறாவிழிப்பு

இரவிலி நெடுயுகம்
இடந்தொலைத்த ஆழ்வெளி

சிறையிருப்பது
காலமும்தான்

காலம் -- கறுப்புச் சூரியன்


இந்த
ஒளியின் பயங்கரத்தில்
வழிகண்டு போக
கண்மறைத்துப் போக
ஒரு கறுப்புச் சூரியன்
உண்டு
ஒவ்வொருவரிடமும்

காலம் -- புழுதி


எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென் நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் கடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

புழுதி அள்ளித்
தூற்றினேன்

கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்

காலம் -- எல்லாம்தான்


எல்லாம்தான்
ஈரம் உள்வாங்கிப்
பழுத்து மினுமினுக்கும்

உடனே
சதைவற்றி
இசைத்தட்டுக் கோடுபோன்ற
ரேகைனெரிசலில் சலித்து
உட்கார்ந்து விடும்

உடனே
புதிதாஇ கண்திறப்பவற்றில்
தம்மை
ஒற்றிக் கொடுத்து அனுப்பும்

எல்லாம்தான்

காலம் -- மறுபடி


யார்சொன்னது
அந்த நாட்கள் போயினவென்று

தொற்றிய முள்ளையும்
பூவிதழ்களையும்
தோலுக்குள் மறைத்து
இந்த
ஒற்றையடிப் பாதையில்
மறுபடி வரும்
புதிது போல

காலம் -- நீச்சல்


குறுக்கும் நெடுக்குமாய்
நீந்தலாம்

முடிவில்லாதது
ஆழமு மாகாது
அதனால்
திரும்ப வராமல்
ஆழவும் செய்யலாம்

அப்புறம்
எப்போதாவது
வெள்ளைவயிறு காட்டி
மிதக்கலாம்

வேறென்ன செய்ய

காலம் -- சுள்ளி


காடு முழுதும்
சுற்றினேன்

பழைய
சுள்ளிகள் கிடைத்தன

நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின

குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது

அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்து
கூசின இலைகள்

தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

சித்திர கூடம்


கதவு திறந்து
உள் நோக்கினேன்

சித்திரங்கள்
ஒன்றனுள் ஒன்று
நகங்களால் கிருக்கின

கதவை
இறுகப் பற்றி நின்றேன்

பேச்சுக்கள்
நொறுங்கிப்
பறாற்குவியல்

பூரணத்துவத்தைத்
தோண்டியெடுக்க
வெட்டிய பள்ளங்கள்
எங்கும்

சித்திரங்களின் சிரிப்பு
சிரிப்பு
சிவந்து கனலும் அலறல்

தம் ஒலங்களில்
தம் நிறம் முழுவதும்
கரைத்துப் பாய்ச்சும்

ஆயிரம் வருஷங்களைச்
ஷாலையாய் நீட்டிச் சொல்லி
ஓரடி வைத்தவுடன்
உடல் தெரித்து விழும்

சூரியன் உரங்கிற்றோ ?"
கிள்ளிப் பார்க்கும்

சூரியன் உதிர்த்த ப்ரக்ஞை
கணங்களாய் ஊரும்
நாற்புறமும்

உருவம் வேண்டி
கணங்களிடம் இரக்கும்
ஓவியங்கள்

சூழவும் உரசி உரசிக்
காற்றைச் சிராய்த்துப்
புண்ணாக்கும் சில ...

ஒத்தி ஒத்திக்
கண்ணீர் தடவி
ஆற்றவரும்
சில ..

மூலவெறி சுமந்து
நரம்பு விறைத்தெழச்
சுவர்களைச் சுரண்டிச்
சதைமணக்க
மூச்சயிர்க்கும்
சில ...

குருட்டு வெளிச்சத்தில் கூசிக்
கண்மூடிக் கொண்டு
உள்கதவை நோக்கி
விரல் சுட்டி

நம்பிக்கையோடு
அமர்ந்திருக்கும்
மிகச்சில

எல்லாம்
நெரிசலில்
நெரிசலை
மறந்து போகும்

அனுபவங்களைத்
தமதாக்க
ஒன்றையொன்று
தழுவிச்
சண்டையிடும்

சண்டை
சப்தங்கள் கீறிய வடு
உயிர்த்து அலறச்
சண்டை

பின்
தம் எல்லையின்மையில்
கொளுத்தி
ஒன்றன்மேலொன்று
பந்தங்கள்
எறிந்து விளையாடும்

அவற்றின்
பேதைக் குழந்தைகளோ
உப்புப் பனிசில் எறிந்து
விளையாடும்

0000

உள்ளே இன்னும்
எட்டி நோக்கினேன்

கூடவே பிறந்த
வினாக்களை
முதுகில் சுமந்து
வாயோரம்
சூனியம் நுரைக்கும்
எல்லாம்
000

நோக்கினேன்

மூலைகள் வெடித்துப் பெருகி
இன்னும் இன்னும் மூலைகள்

மூலைகளில்
ஒன்றன் நிழலை
ஒன்று உடுத்துக் கொண்டு
தம்மை விரித்துப்
படுத்துக் கொள்ளும்

அங்கங்கே
ம்
றதி வாய்பிளக்கும்
உள்ளிருந்து
மரணம் தன்
கொடுக்கால் குறிபார்க்கும்

குருட்டு வெளிச்சம் எட்டாமல்
உள்ளின் உள்ளிருந்த
அவன்
தன் மௌன வெளியை
விலக்கிப் பிரித்து
ஒருகணம்
நோக்கினான்

முறுவலிட்டு

மௌன வெளியால்
மூடிக்கொண்டு
மீண்டும்
உள் மறைந்தான்

நான்
கதவைச் சாத்தி
வெளியேறினேன்

அதுதான் சரி


எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றே   தானென்று
தெருவிலொரு பேச்சு
காதில் விழுந்தது

ஏதும் அறியாமல்
இருப்பதுவே சரி
என்று தோன்றிற்று

இருந்தால்
இருப்பதை அறியாமல்
இருப்பது
எப்படி

அதனால்
இல்லாதரியுப்பதே
சரியென்று பட்டது

இல்லாதிருந்தால்
ஒரு  வசதி
தெருப்பக்கம்
போக   வேண்டியதில்லை
இல்லாதிருப்பதும்
இருப்பதும்   ஒன்றே
என்றோரு பேச்சைக்
கேட்டுக் குழம்பும்
குழப்பம் இல்லை.

ஓய்வு


நெருப்பு ஒரு நாள்
செத்துப் போனது

சூரியனை உதைத்து
விலகிப் போயின
அண்டஞ் சுற்றிகள்

உறைந்தப்பிய இருளில்
குளிர்ந்து
மடிந்து
ஒய்வுகொள்ள வெறிகொண்டன

இடம்வழி பொழுது
தேடி அலைந்தன

அலைச்சல்லில் உழன்று
புது அலுப்புற்றன

'ஒய்வினும் பெரிய
உலைச்சல் எது'
'உளைச்சல் இல்லதது
என்ன உண்டு'

கூடின பேசின
பேசின பிரிந்தன கூடின

ஒய்வுக்காக
ஒய்வற்று முயன்றன

முயலும்போதே
உள்ளே

திருட்டு ஆசை
முளைவிட்டது

'சூரியன் மறுபடி
விழிக்காதா'

உடனாளிகள்


வருத்தம் என்ன
இதில்

வாழ்க்கையின்
'பச்சை வாசனை'
தவறிப் போகலாம்

சுற்றிலும் பெருகி
நுரைத்துத் ததும்பும்
குரல்களில்
-நான் நீக்களில்-
காகித ஓடம் விடும் விளையாட்டு
நின்று போகலாம்

ஒரு நாள்
சப்பாட்டு வேளை
தவறிப் போகலாம்

போகட்டுமே

சோதனைக் குழாயில்
மிச்சமிருக்கும்
நம் உடனாளிகளுடன்
பேசப்போகலாம்
வா

உள்பாடு


இந்தப் பழக்கம்
விட்டுவிடு

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலெனும்
புள்ளியொன்று கிடக்க கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும் --

இந்தப் பழக்கம் விட்டுவிடு

முடிந்தால்
புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள் நுழைந்து
விடு

வெளிப்பாடு


நீறூற்றிச் சலித்தது
கை

தன்னைக் கீறி
வெளிவளர்ந்த
விதையை
வியந்து நோக்கிற்று
மண்

விதைபருத்து
பிரமாண்டமாய்த்
தன்னை விழுங்குவது கண்டு
விதிர்த்தது வெளி

மரமாய்க் கிளையாய் விழுதாய்
அன்றி
'வெறும் விதையாகவே'
வளர்கிறது
இன்னும் இன்னும்

ஒட்டி நின்றேன்
உள்ளே அடர்த்தியாய்ப் பேச்சுக்குரல்

மாப்பிள்ளைகள்


உள்ளே வா
குளிரா நடுக்கமேன்

நிமிர் குனி
சிரி
நட ஆடு பாடு பேசு

இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
இன்னும் கொஞ்சம் துடிப்பாய்
ஆமாம், இன்னும் கொஞ்சம் மணமாய்
இருந்திருக்கலாம்

பார்வைக் கூர்மை
இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாம்

இன்னும் ...
இன்னும் ...

சரி, பரம்பரைச் சொத்தென்ன
உன் சொத்து எவ்வளவு

சமயத்தில்
சஞ்சீவிமலை சுமப்பாயா

ஊஹூம் போதாது
போதாது போபோ

பாவம் வார்த்தைகள்
மலடு வழியும் முகத்தோடு
வெளியேறும்

வெளியேற்றத் திறந்த
கதவிடுக்கு வழியே
முட்டிமோதிப் பீறிடும்
கன்னி மனம்.

வலி


தார் இளகிப்
புகை நெளிந்து

புதைந்து மறைந்ததுடல்

இரவுதான்

மூட்டுக்களுள்
இடைவிடாது துருவிக்குடையும்
பிசிறு பிசிறான அலறல்
சுவர்க்கோழி?

கிசுகிசுக்கும் வெளிச்சத்தைக்
கலக்கி
இருட்டிவிட்டு
வரும் சலனம் - - தூரத்துக்குரைப்பு,
முதுகுத் தண்டில்
பல்தீட்டும்
ஒநாய்க்கு வந்த
கேள்வியா பதிலா?

மூளைப் புதரிலிருந்து
சீறிச் செல்லும் பாம்புகளை
மூலை முடுக்குகளில்
மறைந்திருந்து
குத்திச் சுருட்டுகின்றன
வேட்டைக் கரங்கள்

குறுகிய தெருக்களில்
ரத்தத்தின் சங்கீதத்தை
வெட்டி, நசித்து
ஓடுகின்றன,
மூட்டைக்கனம் தாங்கும்
திருட்டுக் கால்கள்

நிசப்தத்தின்
சவ்வு கிழித்துப் பாய்ந்த
தோட்டத் துளைகள்.
துளைகள் வழி வழிவது
நசுங்கிய கண்களின்
புலம்பல்

வலி
வலி
வலி

வலி

அடையாளம்


எங்கெல்லாமோ
தேடினாய்

நான்கு அடிவானங்களிலிருந்து
பூமியை வாலைசுருட்டி
மடியில் கொட்டி ஆராய்ந்து

கொம்பு நுனிமுதல்
வால் நுனி வரை
அலசிப் பாய்ந்து

பல்லில் நகத்தில் பதுங்கியிருந்து

சதைகளைப் பிளந்து பிளந்து

இருளைக் கடித்துச்
சுவைத்துத் துப்பி

எங்கெல்லாமோ
தேடினாய்

என்னுள்
புதர்விலக்கித் துருவிக்
கண்டுபிடித்ததென்ன, உன்
சிதறல்களேயன்றி

கிடைத்தேனா
ஏது .. .. எனக்கு
அடையாளம் ஏது

சூழ்வெளியின் உளரல்கள்
என் கண்ணில்
கீறியதுதான்
என்னிடம் உண்டு
அடையாளம் ஏது

நம் கரைசலில் நீ
மீட்ட என் நிழல்களும் கூட
சிரிப்போடு
ஆவியாகிப் போயின

கிடைத்தேனா

நிறுத்துங்கள்

பிடியுங்கள் குழந்தையை

சூழவும்
ரத்தப்புரி சுற்றிய
பிரசவ வேதனையையும் சேர்த்தே
பிடியுங்கள் இவனை

நம் அடையாளம்
நம்மிடம் ஏது.

அடையாளம்


எங்கெல்லாமோ
தேடினாய்

நான்கு அடிவானங்களிலிருந்து
பூமியை வாலைசுருட்டி
மடியில் கொட்டி ஆராய்ந்து

கொம்பு நுனிமுதல்
வால் நுனி வரை
அலசிப் பாய்ந்து

பல்லில் நகத்தில் பதுங்கியிருந்து

சதைகளைப் பிளந்து பிளந்து

இருளைக் கடித்துச்
சுவைத்துத் துப்பி

எங்கெல்லாமோ
தேடினாய்

என்னுள்
புதர்விலக்கித் துருவிக்
கண்டுபிடித்ததென்ன, உன்
சிதறல்களேயன்றி

கிடைத்தேனா
ஏது .. .. எனக்கு
அடையாளம் ஏது

சூழ்வெளியின் உளரல்கள்
என் கண்ணில்
கீறியதுதான்
என்னிடம் உண்டு
அடையாளம் ஏது

நம் கரைசலில் நீ
மீட்ட என் நிழல்களும் கூட
சிரிப்போடு
ஆவியாகிப் போயின

கிடைத்தேனா

நிறுத்துங்கள்

பிடியுங்கள் குழந்தையை

சூழவும்
ரத்தப்புரி சுற்றிய
பிரசவ வேதனையையும் சேர்த்தே
பிடியுங்கள் இவனை

நம் அடையாளம்
நம்மிடம் ஏது.

இருத்தலில் நடத்தல்


நடக்கும்போதே ஒரே நொடியில்
ஒரு கோடாய் மறித்
தெருவில் நடப்பது

பேச்சுக் குரல்களின்
மடியில் பதுங்கி
அவை உறங்கின பின்
பசியுடன் வெளியேறுவது

பரவிப்பெருகிய பகலில்
கூடிப்பேசி மோதும்
இமைகளின் இடையே
நறனறத்து அறைபடுவது --

இவை வருத்தம்  தான் எனிலும்
பெரிய வருத்தம்:
போகும் வழியெங்கும்
சுருண்டு கீறலுற்ற
கிறுக்கல்களுக்கிடையிருந்து
முகம் நிமிர்த்தித்
திருப்திப்புன்னகை தெரிவிக்கும்
பாமரனைச்
சந்திக்க நேர்வது

இடம் ஒழித்து வைத்துப்
பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்
தொலைதூரத்து மலையிடுக்கில்
தீபம் அசைத்து மறையும்
உருவிலிகள்
ஒன்றுகூடப்
பிடிபடாமல் போவது

இப்படியாயிற்றே என்று ஓடிக்
காற்றில் கரைந்துவிட முனைந்தால்
காற்றும் சதைபூசி
வண்ணம் போர்த்து
செருப்புக்கு ஆணி தேடி
அலைவது

கீழ்க்கல்லும் மேல் கல்லும் உரசிப்
பொறிசெய்து என்
திரி கொளுத்தி வலம்  வருகையில்
கர்ப்ப  காலத்திலேயே
என் வயிற்றுள்ளிருந்த
இருட்டுப் பிசாசு
அலறுவது.

புள்ளி


வாய் பிளந்து
காலத்தின் இடைத் திட்டில்
காத்திருந்தது
ஒரு புள்ளி

சுற்றிலும்
சீறி மின்னிச் சென்ற
அணுத்துகளில்
ஒன்று
சட்டென நின்றது

புள்ளியுள் நுழைந்தது

கறுத்து  மேலும்
சிறுத்துச் சுழன்றது
கனத்த புள்ளி

சப்த வியாபகத்தில்
ஆணியால் கிறுக்கிய
வெளுத்த சித்திரங்கள்
சுற்றிலும்  மிதந்தோட,

இடைத்தட்டில்
காத்திருக்கிறது
கனத்த புள்ளி

காத்திருக்கிறது
தூரிகையின் ஒரு
நார் நுனி தேடி

இமை


செத்துப்போனது போலிருந்த
இமை
மெல்ல
மெல்ல
உயிர்த்து, மேலிருந்து
அசயப் பார்க்கிறது

வறட்சி

பார்வையில்
சூரியப் பொருக்கு உதிர்ந்து
வலியில் ஊறிக்
குவியல் சுற்றிலும்

கயிரு தின்று மிஞ்சிய
முளைகள்
உமிழ்நீரில்
மீண்டும் தளிர்க்க
வெறிகொள்கின்றன

வர்ணங்கள்
பற்றிக் கொண்டு
வெறும் கரும்புகையுடன்
எரிகின்றன

மூலை இருள் தோறும்
சலனங்கள் சந்தித்து
அவசரமாய்ப்
பேசிப்பிரியும்

நினைவுகள்
ஏதோ ஒளிவலைப்பட்டு
ரத்தமும் வேர்வையுமாய்க்
கண்ணில் பரபரத்தவை,

இன்று, கண்சலிக்கவும்,
தம்மைச் சந்தேகித்து

புறம் பிளந்து புரண்டு சுழன்று
அகம் வெளியாய்ப் புறம் உள்ளாய்
ஆகியும்

எதும் புரியாது, தம்
மையத்துள்
சருகி ஒடுங்குகின்றன

நினைவின்மை 2


புதருக்கு
நெருப்பு வைத்து
ஒதுங்கிக் கொண்டேன்

நெருப்பைத்  தன்
வேரில் கட்டிப் போட்டுச்
சிரித்தது புதர்.

வெட்டிச் சாய்ப்போமென
முயன்ற  போது
அரிவாள் கூரில்
முசுமுசுவென வளர்ந்தது

நடுவே அமர்ந்து
மண்ம்லூடி நான்
வெட்ட வெளியைச்
சுற்றிலும் விரித்துக்கொள்ள, என்
புற இமை தடவி
அனுதாபமாய்க் கவனித்தது
புதர்

பேசாமலிருந்து விட்டேன்
பெருந்தன்மையாய்

சமையல்


என்
புகைக்கூண்டின்  வழியே
என்  சதைக்  கருகலை
மோப்பம் கொண்டு
உள் நுழைந்தன,
தம் அலகுகளைத் தின்று தீர்த்த
அராஜகப் பசிகள்

நான் என்
உல் பின்னல்களுக்குள்
பதுங்கிச் சுருண்டேன்

தோட்டாக்கள்
புதைந்து மக்கிய
தழும்புகளை  நக்கிக் கொண்டன

ஆகாச வலையை
அரித்துத் தின்றும்
அடங்காமல்
கண் சிவந்து
ரத்தம்  பதறித்
தம்மேல்  படரும்
வெளிச்சத்தைத்
தேய்த்து உருட்டித்
தின்றன
0 0 0
என் பொம்மை  வீட்டின்
சகாக்களுக்கு
இன்று  சமையல் இல்லை
என்று சொல்லி  விடலாம்
0 0 0

ஒரு  வகையில்
சற்றுச் சதை கருகியது
நல்லதே ஆயிற்று

"இருந்தும்
இருந்ததுள் நுழைந்ததும்
நான்" --
சூசகம்
மின்னோடிற்று
"வெளியுமில்லை உள்ளுமில்லை"
0 0 0
இனி
பொம்மை வீட்டின்
சகாக்களுக்கு
என்றுமே சமையல் இல்லை

பிரிவினை


வார்தைகள்
பிறந்த மேனியிலேயே
பிரிந்து தொடர்பற்று
எங்கேனுமொரு
அனாதை ஆசிரமத்தின்
சவ்வுக்கதவு தட்டும்

கால்கள்
திடுமென விழித்துக்கொள்ளும்;
அடிவான் மறைந்து
அங்கே
காரியம் கவிழ்ந்து
காரணத்தைக் கூடிக் கலந்து
இரண்டும் ஆவியாகித் தொலைவது
கண்டு
திடுக்கிடும்;
சுற்றி சூழ்ந்த
நார்க்காட்டிடையே
இரண்டு நாக்குகளையும்
உதறி எறிந்துவிட்டுப்
படுத்துக்கொள்ளும்
தம் அடையாளம் மறந்து

கடித்துக் கவ்விய காம்புகளுடன்
கடைவாயில்
பால்கலந்து ரத்தம் வழிய
கன்றுகள்.

கன்றுகள்
பிரளயமாய்க் குரலுடன்
இருளுடன்.
தாயாக உன்மனம்
தனிக்கும்

இருந்தும் எப்படியோ
உருவம் சுமந்து
இடந்தோறும்
கணந்தோறும்
நிறுத்திவைத்து

மேலும் மேலும்
உருவம் சுமந்து
போகிறாய்

உன்னைப் பிரிந்து விலக்கிக்கொண்டே
உன்னைத்தேடி
உன் தவம் மட்டும் உடன்வரப்
போகிறாய்

உன் வற்றலிலிருந்து
கெட்டியாய்ச் சொட்டிவிடும்
காலத்தின்
கடைசிச் சொட்டு.

கணம் உலரும் அக்கணம் - -
கண்ணில் ஒரு படலம் கிழிய
வாலைச் சுழற்றி
ஆங்காரமாய் அடித்துவிட்டுப்
புற்றுக்குள் விரையும்
பெயர் உ ரித்த
ஒரு பசி

நீ உன் தவமும் களைவாய்

வயது


ஒருநாள்
தரை காணாமல் போனபோது --
சுருங்கி வற்றிச் சுண்டிக்
காணாமல் போன போது --

பின் வாங்கிப் போகுமுன்
திசைகள் துப்பிப்போன
சூன்.யம்
என்னை அப்பிக்கொண்ட போது --

ஒரு மாதிரியாய்த் திரிந்தேன்

பெரிய முதுகு வளைத்து
வியர்த்த தலைகுனிந்து
உரத்த குரல்போல யாரோ
பார்த்தார் என்னை

சிரித்தார் நீலம் பீறிட

"ஒஹோ
தப்பிப்
பின்னோடப் பார்க்கிறாயோ?
பிரிந்து சுழன்று
பிரிந்து சுழன்று
விரைந்தது நீயன்றோ
எனினும்
நீ நீத்துவந்த வயதுகள்
வினாடிகள் மொய்த்து --
விட்ட இடத்தில்தான் மிதக்கும்
போய் கூடிக் கொள்"

திரிந்தபோது கண்டேன்
வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு;
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய்திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது .. .. ..

கண்களை மூடிக் கொண்டேன்
மூடிய இமைகளுள்
முலைக்காம்பின் உறுத்தல்

இன்னும் அவர்
நரைத்த தலை குனிந்து
நீலம் பீரிடச் சிரித்தார்

பார்த்தால் --
அவர் முகரேகைப் பின்னால்
குழந்தையின்
கண்ணில் நெளிந்தது

கிலுகிலுப்பை


கிலுகிலுப்பை
பழுப்பேறிய வெளிச்சத்தைப்
போட்டுக் குலுக்கி

முகமெல்லாம் மணக்க மணக்க
கண்ணெல்லாம் இனிக்க இனிக்க
ஆடுவேன் ஆடினேன்
கிலுகிலுப்பை

சப்தம்
வழுவழுத்துப்
பிதுங்கி வழிந்து
சளியோடையாய்
நகர்ந்து நுழைந்தது

விளையாட்டு
திருகி முறுக்கிற்று
விடவில்லை
குழந்தை
நான்

சப்தம் சளியோடை
நகர்ந்து உள்நுழைந்து
பரபரத்தது

உள் எங்கும்
கதிர்கள் நனைந்து
நுனிமழுங்கிச் சுருண்டன

ஆடினேன் கிலுகிலுப்பை

சூழ்ந்து செறிந்திருக்கும்
தன் அணுக்களின்
முகச்சோர்வு சகியாது
அவன் வெளிவந்தான்

"சீ
என்ன செய்கிறாய்
நான் துயில் எழவில்லை
உறக்கம் கலைந்தேன்"
என்றான்

கிலுகிலுப்பையைத் தூர எறிந்தேன்
பரல்கல் தம் பெயர்சொல்லித் தெறித்தன

"ஹிரே ராம ஹரே கிருஷ்ணா"

0

இன்னும்
ஒரு விளையாட்டைத் தேடி
வியர்க்கிறேன்

மருந்து 


அசட்டு ஒளி
பிஞ்சில் வெம்பிய தன் நிறங்களைப்
பிதுக்கிப் பார்த்துச்
சிரித்திருந்தது

மண்ணில் மூழ்குதல்
உறிஞ்சு பாறைகளிடை
உரமிழத்தலே
என்று
வாடிக்கையாயிற்று

நின்ற இடத்தில்
நிண்டு கொண்டே
ஒயாத பயணம்
அபத்த மென்பதில்
சிரிப்பும் மூண்டது

பின்
சட்டென்று ஒருநாள்
என்னையறியாமலே
இதனிடம் ஒப்புவித்தேன்
என்னை

இளம் சூடு

கண்முன்
தொனிகளின்
மயக்கு வடிவங்கள்

சுற்றிலும்
நூறுவருஷ நீளத்துக்கு
இதன்
ஷ்பரிச சுகத்தில்
அரூபமுற்ற
சுருதி

மூச்சடக்கி ஸ்தம்பித்த
வினாடி நுனியில்
திசையற்று நீண்ட கரங்களில்
நான்

புலன் பூட்டுடைத்து
மிருது மூர்க்கமாய்
உள்நுழைந்து
உருவம் உருவிச்
சுருட்டி எறிந்துவிட்டு

என்னைத்
தன் மேலொரு
படலமாக்கிப்
படர்ந்திற்று
மெளனம்

காற்றுஅலைகளைச்
சிக்கின்றி வாரிய காற்று
கரைமீது
என்னை விசாரித்தது

வெறிப்பு மாறாமலே
சூரியனைக் கைகாட்டினேன்

நீலத் தகிப்புடன்
கண்சிமிட்டி
என்மேல் ஊசிகள் எய்தான்

தரையாய்
அகன்று விரிந்து படுத்துப்
புரண்டு
உருத்தெரியாமல்
காற்றை நசுக்கினேன்

ஒ ஒ ஒ வென்ற
அலையிரைச்சல் பாய்ந்து
என்னுள்
கற்கள் நீர்த்துப்
புகைந்தன

0

யாருக்கும் நான் சொல்வது:
"பாம்பை முழுங்கினால்
பெருமூச்சு விடவும்
படம் விரிக்கவும்
சட்டை உரிக்கவும்
மறுபடி பாம்பை
முழுங்கவும்
தெரிந்து கொள்வாய்"

0

ஒருநாள்
கூந்தல் இழைகளிடை
காற்று
பிணங்களை
இழுத்துக்கொண்டோடியது

வியர்வை புலர்ந்த
புறங்கழுத்தின் உப்பைத்
துண்டால் துடைத்தேன்

பசிமுத்தங்கள் கரைந்தன

எதிதுருவ இருள்
தலையேதுமின்றி
உடலே கூவலாய்
அழைத்தது

0

உன்னுள்
புகை சுருண்ட மயக்கு

என் நாவுகல்
கசப்புச் சுட்டுத் திரும்பின

முன்பு
என் தனியெல்லைக் கற்கள் இருந்த
குழிகளில்
அவற்றின் விசுவாசங்கள்
அசைந்து
கிசுகிசுப்பதைத்
திடீரெனக் காண்கிறேன்

இந்த என் புழுக்கம்
கனத்துக் கனத்து
எந்த வினாடியின் அலகுநுனிக்குக்
காத்திருக்கிறதோ

வெடிக்கும் சிதறலில்
உன் ச்பரிசக் குளறல்கள்
இருந்தால்
கண்டுகொள் -- மீட்டுக்கொள்

இவை
தம் இருப்பின்
அவஸ்தை தாங்காமலே
மோகம் கருகிய பாலையில்
கண்ணீர்தேடி
அலைகின்றவை

நம்மைச் சுற்றிப் போர்த்திய
காற்றின்
கந்தல்
இதோ காலடியில்
கறையானை எதிர்நோக்கி

வெல்லம்தான் (நாம்
யாவரும்)
வொவ்வொரு துளியிடையுலும்
கண்படாதொரு சவ்வு
0

எனினும் இதோ --
பசி
பசி

சட்டையுரித்துப்
பளபளத்துத் திரியுமதன்
நிழல்
நம் இருளுக்குள்
சரசரக்கிறது

வா  வா .. .. ..

வளர்ந்து வளர்ந்து
அடிவான  விளிம்பில் போ
வழியும் உ ன் கூந்தலை
அள்ளிக் கொண்டு

வா   வா .. .. ..

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...