கவிஞர் அபியின் -கவிதை காலம் - சுள்ளி |
காடு முழுதும் |
சுற்றினேன் |
பழைய |
சுள்ளிகள் கிடைத்தன |
நெருப்பிலிட்டபோது |
ஒவ்வொன்றாய்ப் |
பேசி வெடித்துப் |
பேசின |
குரலில் |
நாளைச்சுருதி |
தெரிந்தது |
அணைத்து, |
கரித்தழும்பு ஆற்றி |
நீரிலிட்டபோது |
கூசி முளைத்துக் |
கூசின இலைகள் |
தளிர் நரம்பு |
நேற்றினுள் ஓடி |
நெளிந்து மறைந்தது |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
கவிஞர் அபியின் -கவிதை காலம் - புழுதி |
எங்கிலும் புழுதி |
வாழ்க்கையின் தடங்களை |
வாங்கியும் அழித்தும் |
வடிவு மாற்றியும் |
நேற்று நேற்றென நெரியும் புழுதி |
தூரத்துப் பனிமலையும் |
நெருங்கியபின் சுடுகல்லாகும் |
கடந்தாலோ |
ரத்தம் சவமாகிக் கரைந்த |
செம்புழுதி |
புழுதி அள்ளித் |
தூற்றினேன் |
கண்ணில் விழுந்து |
உறுத்தின |
நிமிஷம் நாறும் நாள்கள் |
கவிஞர் அபியின் -கவிதை மாலை - காத்திருத்தல் |
விஷப்புகை மேவிய வானம் |
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது |
அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு |
மின்னி இடித்து |
வெறியோடு வருகின்றன |
அல்ல அல்ல அல்ல என்று |
பொழிந்து பிரவகிக்க |
அழித்துத் துடைத்து எக்களிக்க |
வருவது தெரிகிறது |
அடர்வனங்களின் |
குறுக்கும் நெடுக்குமாக |
ஆவேசக் காட்டாறுகள் |
பதறி ஓடி |
வாழ்வைப் பயிலும் |
உண்டு-இல்லை என்பவற்றின் மீது |
மோதிச் சிதறி |
அகண்டம் |
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது |
O |
காத்திருக்கிறேன் |
இதுவே சமயமென |
எனது வருகைக்காக |
என் குடிசையில் வாசனை தெளித்து |
சுற்றிலும் செடிகொடிகளின் |
மயக்கம் தெளிவித்து |
அகாலத்திலிருந்து |
இந்த மாலைப்பொழுதை விடுவித்து- |
காத்திருக்கிறேன் |
மறுபுறங்களிலிருந்து |
வெற்றி தோல்வியின்றித் திரும்பும் |
என் வருகையை எதிர்நோக்கி |
விடைகள் |
விடைகள் |
மிகவும் மெலிந்தவை |
ஏதோ சுமந்து வருவன போல |
முக்கி முனகி வியர்வை துளித்து |
நம் முகத்தில் |
திருப்தி தேடுபவை |
தரையில் கால்பாவாது |
நடக்கவும் |
நீரில் நனையாமல் |
நீந்தவும் |
அறிந்தவை |
முந்தாநாள் |
ஒரு விடையை |
எதிர்ப்பட்டேன் |
என்னைப் பார்த்தவுடன் |
அது |
உடையணிந்து |
உருவுகொண்டது |
தன்னை ஒருமுறை |
சரிபார்த்துக் கொண்டதும் |
எங்களைச் சுற்றி |
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு |
என்னை நேர்கொண்டது |
நான் |
ஒன்றும் சொல்லவில்லை |
நெளிந்தது |
கலைந்து மங்கும்தன் |
உருவை |
ஒருமித்துக் கொள்ளக் |
கவலையோடு முயன்றது |
சுற்றிலும் பார்த்துவிட்டு |
ஒருமுறை |
என்னைத் தொடமுயன்றது |
நான் |
எதுவுமறியாத |
பாவனை காட்டியதில் |
ஆறுதலுற்றுக் |
கொஞ்சம் நிமிர்ந்தது |
எதிர்பாராது வீசிய காற்றில் |
இருவரும் |
வேறுவேறு திசைகளில் |
வீசப்பட்டோம் |
திரும்பப்போய்த் |
தேடிப்பார்த்த போது |
சாமந்திப்பூ இதழ்கள் போல் |
பிய்ந்து கிடந்தன |
சில |
சாகசங்கள் மட்டும் |
கவிஞர் அபியின் -கவிதை மாலை - தணிவு |
காடு எரிந்த கரிக்குவியலில் |
மேய்ந்து களைத்துத் |
தணிந்தது வெயில் |
என்னோடு சேர்ந்து |
இதோ இதோ என்று |
நீண்டு கொண்டே போன பாதைகள் |
மடங்கிப் |
பாலையினுள், முள்வெளி மூழ்கச் |
சலனமற்று நுழைந்துகொண்டன |
விவாதங்கள் |
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன |
வழிகளில் |
அறைபட்டுத் திரும்பின |
முடிவுகள் |
அரைகுறைப் படிமங்களாக வந்து |
உளறி மறைந்தன |
பசியும் நிறைவும் |
இரண்டும் ஒன்றாகி |
என் தணிவு |
வேறொரு விளிம்பைச் |
சுட்டிக் காட்டாத |
விளிம்பில் |
தத்தளிப்பு மறைந்த |
என் தணிவு |
நிகழும் போதே |
நின்றுவிட்ட என் கணம் |
குளிரத் தொடங்கியது |
என் தணிவைத் தொட்டு |
கவிஞர் அபியின் -கவிதை மாலை - எது |
தூசி படிந்த புளியமர வரிசையை |
வைதுகொண்டே |
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள் |
வண்டுகளும் பறவைகளும் |
தோப்புகளுக்குள் |
இரைச்சலைக் கிளறி |
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன |
இருண்டு நெருங்கி வளைக்கும் |
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் |
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித் |
ததும்புகிறது |
என் வலி |
பொழுது நிரம்புகிறது |
ஒரு இடுக்கு விடாமல் |
O |
தூசி படிந்த இரைச்சலுக்கடியில் |
சாத்வீக கனத்துடன் |
இது எது? |
இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில் |
இடறாத என் பாதங்களினடியில் |
இது எது |
என் சாரங்களின் திரட்சியுடன் |
வலியுடன் |
அலங்கரித்த விநோதங்களை |
அகற்றிவிட்டு |
எளிய பிரமைகளின் வழியே |
என்னைச் செலுத்தும் |
இது எது? |
கவிஞர் அபியின் -கவிதை கனவு-அன்று-கனவு |
எல்லாம் முடிந்துவிட்டது எனக் |
கடைசியாக வெளியேறிய போது |
கவனித்தான் |
பின்புலமற்ற |
தூய நிலவிரிவு ஒன்று |
அவனுக்காகக் காத்திருப்பதை |
கனவுபோன்று இருந்தாலும் |
கனவு அன்று அது |
ஒளியிலிருந்து |
இருளை நோக்கிப் |
பாதிவழி வந்திருந்தது |
அந்த இடம் |
கிழக்கும் மேற்கும் |
ஒன்றாகவே இருந்தன |
தூரமும் கூடத் |
தணிந்தே தெரிந்தது |
தெரிந்ததில் |
எப்போதாவது ஒரு மனிதமுகம் |
தெரிந்து மறைந்தது |
ஒரு பறவையும் கூடத் |
தொலைவிலிருந்து தொலைவுக்குப் |
பறந்துகொண்டிருந்தது |
சஞ்சரிக்கலாம் |
மறந்து மறந்து மறந்து |
மடிவுற்றிருக்கலாம் அதில் |
நடக்க நடக்க |
நடையற்றிருக்கலாம் |
ஆயினும் |
உறக்கமும் விழிப்பும் |
துரத்திப் பிடிப்பதை |
அவற்றின் மடிநிறைய |
தலைகளும் கைகால்களும் |
பிதுங்கிக் கொண்டிருப்பதைப் |
பார்க்கும் நிமிஷம் |
ஒருவேளை வரலாம் |
கனவு அன்று எனத் தோன்றினாலும் |
கனவாகவே இருக்கலாம் |
கவிஞர் அபிக்கு, "சிற்பி இலக்கிய விருது' --தினமலர் செய்தி இந்தாண்டுக்கான (2011)"சிற்பி இலக்கிய விருது' கவிஞர்களான அபி, லீனா மணிமேகலை ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.கவிஞர் அபி(எ) அபிபுல்லா, "மவுனத்தின் நாவுகள்', "அந்தர நடை' உள்ளிட்ட கவிதை நூல்களையும், கவிஞர் லீனா மணிமேகலை "ஒற்றை இலை', "உலகின் அழகிய பெண்' உள்ளிட்ட கவிதை நூல்களையும் படைத்துள்ளனர். இவர்களின் மொத்த படைப்புகளுக்காக விருது அளிக்கப்படுகிறது. மேலும், "சிற்பி இலக்கிய பரிசு' "என் வீட்டுத் திண்ணை' நூலுக்காக கவிஞர் சென்னிமலை தண்டபாணிக்கும், "பெரிய புராணம் புதுக்கவிதை' நூலுக்காக கவிஞர் சத்தியமோகனுக்கும் அளிக்கப்படுகிறது. இரண்டு விருதுகளுக்குரிய ரொக்கபணமும், பாராட்டு சான்றிதழும் வரும் 31ல் நடக்கவிருக்கும் "சிற்பி பவள விழா'வில் வழங்கப்படும். நன்றி:
|
வெள்ளி, 6 செப்டம்பர், 2013
|
தனிமனித உணர்வுக் கவிதைகள் --கந்தவேல் ராஜன் . ச |
புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் இத்தகைய ஒரு பாகுபாடு இருந்தது. இவ்வகைக்குச் சுட்டிக் காட்டக் கூடிய எடுத்துக் காட்டுகள் இருந்தன. S. வைத்தீஸ்வரன், தி.சொ.வேணுகோபாலன், நகுலன், பசுவய்யா போன்றோர் கவிதைகளில் இத்தன்மையைக் காண முடிந்தது. அடுத்துவந்த காலத்தில் பிரமிள், அபி, தேவதேவன், அப்துல் ரகுமான், ஆனந்த், தேவதச்சன் எனத் தொடரும் ஒரு நீண்ட பட்டியலில் இத்தகைய கவிதைப் படைப்பாளிகளைக் காணலாம். தனிமனித உணர்வு என்பது சமூக உணர்வுக்கு, முற்போக்குக் கருத்துகளுக்கு எதிரானது என்ற கருத்தும் கண்டனமும் மறைந்து போய்விட்ட இந்நாளில் இந்த இருவித வகைகளும் பொருளற்றவை; வரலாற்றுப் பதிவாக மட்டுமே காணக்கிடைப்பவை என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். |
இன்றைய கவிஞர்களுள் சிலர் மிகவும் தனித்தன்மையான பார்வை கொண்டவர்களாக உள்ளனர். கவிதையில் இதுவரை சொல்லப்படாத தெளிவற்ற உணர்வுகளை அவற்றின் பிறப்பிடத்திற்கே சென்று தொட்டுக் காட்டுகின்றனர். பிரமிள், அபி போன்றவர்களின் கவிதைகளில் இத்தகைய உள்ளாழ்ந்த தன்மைகளைக் காணலாம். பருப்பொருள் உலகுக்கு அப்பாற்பட்டு நுண்ணிலைகளை, அருவ நிலைகளைக் (Abstractions) கவிதையில் அவர்கள் உணர்த்தும்போது கவிதைக்கு இருண்மை இயல்பு சேர்கிறது. வாசகன் புரிந்துகொள்ளத் தவிக்கவேண்டியுள்ளது. கவிஞர்களைக் குறைசொல்வதை விட, வாழ்வின் மறுபுறத்து இயல்புகளைப் புரிந்துகொள்ள வாசகன் மேலும் முயலவேண்டும் என அவனை ஊக்குவிப்பதே சரியானது. இத்தகைய கவிதைகளைச் சொல்லுக்குச் சொல் பொருள் பார்த்துப் புரிந்து கொள்ள முயலாமல் - பொழிப்புரை தேடாமல் - கவிதையின் மொத்த உணர்வு தனக்குள் ஏற்படுத்தும் அசைவுகளை, தனக்கு உண்டாக்கும் அனுபவங்களை நன்றாகக் கண்டு அதுவே கவிதையின் பொருள் என வாசகன் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞன் என்ன நினைத்தானோ அதையே வாசகன் கண்டடைய வேண்டும் என்பதில்லை என்பதுதான் உலக முழுவதும் இன்று உருவாகியுள்ள கவிதைக் கோட்பாடு. மொழிவழியாக வந்துள்ள பிரதி (Text) யில் ஊடுருவிச் செல்லும் வாசகமனம் பல்வேறு விதமாகக் கவிதையை அலசித் தேடும் தேடல், நீடித்த அத்தேடலில் அவனுக்குள் உருவாகும் அனுபவம் இவையே கவிதையின் உட்பொருள். ‘கவிதையின் பொருள் கவிதையின் சொற்களில் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. அதுவும் நம் பக்குவம், அனுபவம் மாறமாற மாற்ற மடையும். ஒரு குறிப்பிட்ட காலம், வெளி, மன நிலைகளில் ஒருவனின் உணர்வை இன்னொருவன் பெறுவது ஒரு போதும் நடவாத காரியம். கவிதை என்றும் மொழிக்கு வெளியேதான் தங்கி நின்றுள்ளது’ என மா. அரங்கநாதன் (பொருளின் பொருள் கவிதை,பக்.71-74) கூறுவது பொதுவாக எக்கவிதைக்கும் பொருந்துமாயினும் மேற்குறித்த அருவக் கவிதைகளுக்கு முற்றிலும் பொருத்தமானதாகும். இவ்வகையில், படிக்கிற வாசகர் எவ்வளவு பேரோ, அவ்வளவு பொருள் கவிதைக்கு உண்டு. |
எழுத்து இதழுக்குப் பின்னர் |
க.நா.சு.வின் ‘இலக்கிய வட்டம்’, சேலத்திலிருந்து வெளிவந்த ‘நடை’, ‘கணையாழி’ இலங்கை இதழ் ‘மல்லிகை’ போன்றவை புதுக்கவிதை வளர உதவியவை. 1970இல் தோன்றிய ‘கசடதபற’ இதழ் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. இடதுசாரிக் கருத்துகள் கொண்ட கவிதைகளுக்குத் ‘தாமரை’ இடமளித்தது. இடதுசாரிக் கண்ணோட்டத்தை கவிதைக் கோட்பாடாகக் கொண்டு ‘வானம்பாடி’ எனும் விலையிலாக் கவிமடல் 1971இல் தோன்றியது; இயக்கமாகவே வளர்ந்தது. மேலும் ‘ஞானரதம்’, ‘அஃ’, ‘சதங்கை’, ‘தெறிகள்’ போன்ற பல இதழ்கள் மூலம் புதுக்கவிஞர்கள் பலர் ஊக்கம் பெற்று எழுதினர். ஞானக்கூத்தன், கலாப்ரியா, நா. காமராசன், சிற்பி, இன்குலாப், மேத்தா, புவியரசு, தமிழன்பன், மீரா போன்ற பலப்பல கவிஞர்களின் கவிதைகளால் தமிழ்ப் புதுக்கவிதை உலகம் விரிவுகண்டது, இதழ் அல்லது இயக்கம் சாராத அப்துல் ரகுமான், அபி போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. 1980களுக்குப் பின்னர் ‘மீட்சி’, ‘கனவு’, ‘விருட்சம்’, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற பல இதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்காற்றின. கவிஞர்கள், எண்ணிக்கையும் கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கையும் பெருகின. ஆத்மாநாம், தேவதேவன், சுகந்தி சுப்ரமணியன், பிரம்மராஜன், பழமலை, சுகுமாரன், எம்.யுவன், யூமாவாசுகி, குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், மாலதி மைத்ரி போன்ற தனித்தன்மை மிக்க கவிதைப் படைப்பாளிகள் பலர் தமிழ்ப் புதுக்கவிதையை வளப்படுத்தியவர்கள் ஆவர். ஈழத்தைச் சார்ந்த வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம், சேரன், சோலைக்கிளி, மு. பொன்னம்பலம், அ. யேசுராசா, எம். ஏ. நுஃமான் எனப் பல கவிஞர்கள் புதுக்கவிதையில் சாதனை படைத்துள்ளனர். மாணவர்களே! இன்று எழுதிவரும் கவிஞர்களின் முழுப்பட்டியலைத் தரப் பாட அளவு இடம் தராது. ஆகவே உங்கள் வாசிப்பில் நீங்கள் சந்திக்க நேரும் எந்தப் புதுக்கவிஞரையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள். |
புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றி இதுவரை நாம் பார்த்தவற்றிலிருந்து புதுக்கவிதை 1930களில் வசன கவிதையாகத் தோன்றி, தொடக்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே கையாளப்பட்டு, அறுபதுகளுக்குப் பின்னர் வடிவத்தில் செறிவடைந்து புதுக்கவிதையாகி, மிகப்பலரும் ஏற்றுப் போற்றும் கவிதை வகையாக வளர்ந்துவிட்டதையும், இன்ன பொருள் என்றில்லாமல் எல்லாப் பொருளையும், இன்ன முறை என்றில்லாமல் எம்முறையிலும் வெளிப்படும் தன்மையைப் பெற்றிருப்பதையும் அறிந்தோம். இனிப் புதுக்கவிதையின் வகைமை பற்றிக் காண்போம். |
நட்புடன், |
கந்தவேல் ராஜன் . ச (groups.google.com/forum/#!msg/muththamiz/NmdqAns_iPs/5XlpwOej9YoJ) |
அபி
கவிதைகள் - --- அய்யனார் . |
வெகு ஜன ஊடகத்தில் பரவலாய் இயங்காத அபி தமிழின் ஒரு முக்கியமான அடையாளம். அபி யைப் புரிந்துகொள்ள பரந்த வாசிப்பனுபவமும் அக ரீதியிலான தேடல்களைக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது. வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையுள்ள வெளி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அகம் சார்ந்த தெளிவும் உள் விழிப்பும் இல்லாத வாசகனுக்கு அபி ஒரு புதிர்தான். |
‘அந்தர நடை’ ‘என்ற ஒன்று’ ‘மெளனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து சில கவிதைகள் அத்துடன் 3 கட்டுரைகளும் சேர்ந்து இந்த தொகுப்பு வெளிவந்திருக்கிறது. முன்னுரை பிரம்மராஜன் எழுதியிருக்கிறார்.அதுவே சிறப்பான ஒரு கட்டுரையாகவும் கவிதை பற்றிய தெளிவான அனுகுமுறையை முன் வைப்பதாகவும் அமைந்துள்ளது. |
கோஷங்களாகவும் வார்த்தைப் பந்தல்களாகவும் துனுக்குகளாகவும் உருவானவை கவிதைகளாக ஆக மறுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் அடையாளத்தை இழந்து போகிறது.அபி மெளனத்தைப் பேசுகிறார். தனிமையின் தியானமாகவே அமைந்திருக்கிறது அவரின் பெரும்பாலான கவிதைகள்.இவரின் கவியுலகப் பார்வை அகம் சார்ந்தும் மிக நுட்பமானதாயும் நெகிழ்வு தன்மையையும் கொண்டிருக்கிறது. அதே சமயம் வெகுநுட்பமான அதிர்வை இவரது கவிதைகள் ஏற்படுத்தத் தவறவில்லை. |
காட்சிப் படிமங்களை விரும்பாத அபி இங்கும் அங்குமாய் சில காட்சிப் படிமங்களை பயன்படுத்துகிறார். |
"வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு |
வாசற்படியில் |
வாயில் விரலுடன் |
நின்றது குழந்தை |
வீடும் வாய் திறந்து |
குழந்தையை |
சப்பி நின்றது.. |
கண்களை மூடிக் கொண்டேன் |
மூடிய இமைகளுல் |
முலைக்காம்பின் உறுத்தல்" |
….. |
மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் அபி யின் கவிதைகள் அரூப வெளியில் பயணிக்கின்றன.முரணெதிகளின் உக்கிரம் அதிகமாக விரிந்து ஒரு எல்லையில் அவை முரணற்ற தன்மையை தானாகவே இழக்கிறது.அபியின் அகத் தேடலின் வசீகரம் கீழ்கானும் கவிதைகளில் உணர முடிகிறது. இவை ஞானத்தன்மைக்கு வெகு அருகிலிருப்பதும் புலனாகும். |
“எல்லாம் தெரிவதும் |
ஏதும் அறியாததும் |
ஒன்றேதானென்று |
தெருவிலொரு பேச்சு…” |
“கொஞ்சம் கொஞ்சமாக |
விலகி |
விலகலில் நீடித்தாயென்றால் |
நீ வாழ்கிறாய்” |
அபியின் கவிதைகள் அதிகம் பேசுவதில்லை.”என் கவிதைகளுக்குப் பேச்சை யாரும் கற்பிக்கவில்லை.நான் உட்பட”எனும் அபி இவரது கவிதையை பின் வருமாறு முன்நிறுத்துகிறார்.”என் கவிதை உணர்வுகளின் ரூப நிலையிலிருந்து அரூப நிலைகளை நோக்கி விழைகிறது.அனுபவ நிலைகளிலிருந்து அனுபவங்களற்ற நிலையை நோக்கிப் போக முயலுகிறது” முப்பது ஆண்டுகளாக கவிதை தளத்தில் இயங்கும் அபியின் கவிதைகள் எண்ணிக்கை அளவில் குறைவுதான் எனினும் அவற்றின் தாக்கங்கள் பல மடங்காகி கணக்க வைக்கிறது. |
மாலை என்ற தலைப்பில் 30 கவிதைகளை தொகுத்துள்ளார்.ஒளியும் இருளும் கலக்கும் அற்புதப் பொழுதை வெவ்வேறு மனோபாவங்களில் அனுகி இருப்பது பிரம்மிப்பைத் தருகிறது. |
மாலை-தணிவு |
“காடு எரிந்த கரிக்குவியலில் |
மேய்ந்து களைத்துத் |
தணிந்தது வெயில் |
என்னோடு சேர்ந்து |
இதோ இதோ என்று |
நீண்டு கொண்டே போன பாதைகள் |
மடங்கிப் |
பாலையினுள்,முள்வெளி மூழ்கச் |
சலனமற்று நுழைந்து கொண்டன |
………………. |
நிகழும்போதே |
நின்றுவிட்ட என் கணம் |
குளிரத் தொடங்கியது |
என் தணிவைத் தொட்டு” |
இத் தொகுப்பில் என்னை நிலைகுலைய வைத்த சில பார்வைகள் |
“இந்த தருணங்களின் விளிம்பிலிருந்து |
எட்டிப்பார்க்கையில் |
செய்தி ஒன்றும் தெரிவிக்காத |
அமைதிப் பள்ளத்தாக்கு” |
“இப்படித்தான் என்று |
நிதானமாகப் |
பிறந்து கொண்டிருப்பேன் |
எனது மலைவேரின் |
ஒரு சிறு நுனியிலிருந்து” |
'அபி ' என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி மே மாதம் 2000- இல் ஓய்வு பெற்றார். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, 'டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.தமிழில் பிரமிளுக்கு அடுத்தபடியாக படிமக் கவிதைகளை கையாண்டதில் அபி மற்றும் தேவதேவனின் பங்கு மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி உள்ளது.கவிதைகளின் அடுத்தகட்ட இடம்பெயர்தலின் சாத்தியக்கூறுகள் தன் நம்பகத்தன்மையை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட நிலையில் காதல் வயப்படல் மட்டுமே கவிதை எழுதுவதற்கான ஒரே தகுதி என்ற மனோபாவத்திலிருந்து நாம் வெளிவர வேண்டியதின் அவசியத்தையும் இங்கே பதிவிக்கிறேன். |
கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளிட்டுள்ளது முதல் பதிப்பு வெளிவந்த வருடம் 2003. |
ஒப்பீடு |
சமரசம் இதழ் ஜனவரி 2000 ல் வெளிவந்த அபியின் நேர்காணல் |
மெளனமும்
ஓசையின் உபாசனையும் – பிரம்மராஜன் கட்டுரை ---------------------- ayyanaarv.blogspot.in ---------------------- |
வியாழன், 5 செப்டம்பர், 2013
‘படிமக் கவிஞர்’ அபி பேட்டி
‘படிமக் கவிஞர்’ அபி |
17/03/2009 இல் 09:20 (அபி, பேட்டி) |
சமரசம் – ஜனவரி 2000 இதழில் வந்த நேர்காணல். அதே வருடம்‘திண்ணை‘யில் பிரசுரமாயிற்று. 2007 ஆரம்பத்தில் நண்பர் யெஸ். பாலபாரதி மீள்பதிவிட்டிருந்தார். |
*** |
நேர்காணல்:- “கவிஞர் அபி” |
சமரசம் – ஜனவரி 2000 இதழிலிருந்து |
‘அபி ‘ என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். (வரும் மே மாதம் 2000- இல் ஓய்வு பெறுகிறார்). லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, ‘டாக்டர் பட்டம் பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதிவரும் அபியின் கவிதைகள் மூண்று தொகுதிகளாய் வெளிவந்துள்ளன. |
1. மெளனத்தின் நாவுகள். (1974) |
2. அந்தர நடை (1978) |
3. என்ற ஒன்று (1987) |
இலக்கியச் சிற்றிதழான ‘படிகள் ‘, அந்தர நடை பற்றி ‘ஆன்மீகத்தடத்திலிருந்து ஒரு புதிய குரல் ‘ எனக் குறிப்பிட்டது. சொல், பொருள் விவாதம், விளக்கம், கால-இட-வெளி- இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனை, ஒரு சூஃபியின் மனக்கண்ணுடன் தனது கவிதைகளில் தேடியவாறே இருக்கிறார் அபி. உள்மன வாழ்வை, பல உட்பரிமாணங்களுடன் ஆழமான தளத்தில் தீண்டுபவை அபியின் கவிதைகள். மிகக் குறைவான சொற்களில், பல சமயங்களில் சொற்கள் துறந்து, லேசாய் கோடி-காட்டுவதுடன் நின்று விடுகின்றன இவரின் கவிதைகள். வாசகன்தான் கவிதையின் முழு உலகையும் தன்னுள் எழுப்பி கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆழமான படைப்பும் ஒரு தீவிர வாசகனிடம் வேண்டி நிற்கும் குறைந்தபட்சத் தகுதிதான் இது. ஒரு கவிதை (அசல் கவிதை), அது கவிதை ஆக, கவிஞன் மேற்கொண்ட மன ஓர்மை, உழைப்பு, கற்பனைவீச்சு, பாய்ச்சல், அறிவு நுட்பம், உணர்வாழம், காட்சியாய் காணல்- இவற்றை வாசகனிடம் வேண்டி நிற்கிறது. அபியின் கவிதைகள், இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, ‘நீ எழுதுவது எனக்குப் புரியவில்லை. யாருக்கு நீ எழுதுகிறாய் ? ‘ என வெடுக்கெனத் தீர்ப்பை வீசி எறிந்துவிடும் நமது வழக்கமான மனப்பான்மையை உதறிவிட்டு, நிதானமாய், அமைதியாய் அபியின் கவிதைகளை அணுக வேண்டியது அவசியமாகிறது. பட்டிமன்றங்களில் சொல் ஜால வித்தைகளையோ, இசை இரைச்சல்களில் நசுங்கித் திணறும் சினிமாப்பாடல்களில் சொல் உருட்டல்களையோ அபியின் கவிதைகளில் காணமுடியாது. தேடினால் வாசகன் ஏமாந்து போவான். மேடைகளில், பத்திரிக்கைகளில், டிவி-யில் வாய்ப்புக் கிடைக்காதா கிடைக்காதாவென தேடி அலைந்து, வாய்ப்புகளை உருவாக்கி, ‘என்னைப் பார்… என் கவிதை பார் ‘ என மார்க்கட் பண்ணும் கவிஞர்கள் மத்தியில், ‘ எழுதுவதுடன் என்வேலை முடிந்துவிட்டது. இனி கவிதைகள் பேசிக் கொள்ளட்டும் ‘ என விட்டேற்றியாக இருக்கிறார் அபி. இது துறவு மனமா ? அல்லது ஓர் கலைஞனின் சிருஷ்டி கர்வமா ? ‘ |
சமரசத்திற்காக அபியைச் சந்தித்தபோது…. |
எழுதுவதற்கெனக் குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ? |
தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வதில்லை. மனதில் நிற்காதவைகளை விட்டுவிடுவது எனக்குப் பழக்கம். இரவு-சப்தமின்மை மிக மங்கலான வெளிச்சம். அறைத்தனிமை எழுத எனக்கு உகந்த சூழல். கவிதையை முழுதாக எழுதிவிடுவதும் உண்டு. அரை குறையாக நின்று பின் எப்போதோ நிரப்புவதும் உண்டு நள்ளிரவு விழிப்பு நேரங்கள் தூண்டுதலானவை. தலையணைக் கருகில் இருக்கும் டைரியில் பென்சிலால் இருளிலேயே எழுதி வைப்பதும் உண்டு. |
‘அபி ‘ என்பது தங்களின் புனைப் பெயரா ? இதனைத் தேர்ந்தெடுத்தமைக்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா ? |
இது புனைபெயரில்லை. அர்த்தம் ‘பொதிந்த ‘ புனைப்பெயர்களில் எனக்கு ஆர்வமில்லை பள்ளி, கல்லூரி நாட்களில் என் நண்பர்கள் அபிபுல்லா என்ற பெயரை ‘அபி ‘ என்று சுருக்கி அழைத்தார்கள். கவிதை வெளிவந்த போது அதிகம் யோசிக்காமல் அந்தப் பெயரையே இருக்கவிட்டு விட்டேன். |
தங்களின் முதல் கவிதையை எப்போது எழுதினீர்கள் ? அது எதுபற்றிப் பேசிற்று ? |
‘கவிதை ‘ என என் ஆமோதிப்பைப் பெற்றவைகளுக்குள் ‘மெளனத்தின் நாவுகள் ‘ தொகுப்பில் உள்ள ‘இன்னொரு நான் ‘ என்பதுதான் என் முதல் கவிதை. ஆண்டு 1967 என்று நினைக்கிறேன். என்னுள் நெரிந்து குவிந்துகொண்டேயிருக்கும் என் சாயைகளில், அப்போதைய பக்குவத்தில் எனக்குப் பிடிபட்ட ஒரு சாயையைச் சொல்வது அந்த கவிதை. |
சாயை ? |
கணந்தோறும் இடந்தோறும் வாழ்வு அனுபவத் தொடுதல் ஒவ்வொன்றிலும் உருவாகி, உருமாறி ஒன்றுடன் ஒன்று பின்னி நமக்குள் நிறைந்து கிடக்கும் நம் பிம்பங்களைச் சாயைகள் என்கிறேன். தோற்றங்களிலிருந்து உண்மையை நோக்கிச் செல்லும் பாதையில் இவை இயங்கிக் கொண்டிருக்கும், நம் கட்டுப்பாட்டில் இல்லா இவைகளைப் பிரித்து விலக்கி பார்த்து சிலவற்றை ‘உண்மை ‘ எனக்கொண்டு நிறைவு காண்பதும், ‘இல்லை ‘ என ஏமாற்றம் கொள்வதும் அவரவர் தாகத்தின் தன்மையைப் பொறுத்தது. இவை அத்தனையையும் வெளியேற்றிவிட்டு, ‘நான் ‘ என்பது ஒரு பாவனை எனக்கண்டு, அதனையும் தாண்டி. ‘நான் என்பது ஒன்றுமில்லை ‘ என்ற ‘பனா ‘ நிலைக்கும் போகலாம். ஆனால் என் கவிதை எட்ட முடிந்த எல்லையில் சாயைகளை இனம்பிரித்தும் ப்ரிக்காமலும் தொட்டுத் தடவி பேசி ஊடுருவி உணர்ந்தது எனக்கு அனுபவம். இவைகளைத் தாண்டிப் போகிற சிறுசிறு விடுவிப்புகளில் நான் உணர்ந்த மெளனம் என் கவிதைகளில் படிந்திருக்கிறது. |
அப்படியானால், இப்போதைய உங்களின் abstract கவிதைதளத்திற்கு உங்களைக் கொண்டு வந்து சேர்த்தவை உங்கள் ஆரம்பகாலக் கவிதைகள்தான் என்று கொள்ளலாமா ? பரிணாம வளர்ச்சியாக, உங்கள் கவிதைகளுக்கிடையே ஒரு தொடர் கோட்டினை இழுக்க முடியுமா ? அல்லது ஒரு திடார் அகநிகழ்வு இந்தத் தளத்திற்கு உங்களைத் தள்ளிற்றா ? |
ஒரு வாசகப் பார்வையில், என் மூண்று கவிதைத் தொகுப்புகளிடையே தொடர்பு எதுவும் இல்லை என்று தோன்றக்கூடும். வெளியீட்டு பாங்கில் இருக்கும் வளர்ச்சி முக்கியமான ஒரு காரணம். ஆரம்பகாலக் கவிதைகளில் பேச்சும் பேசும்விதமும் என்று இரண்டு கூறுகள் தெளிவாக இருந்திருப்பதைப் பார்க்கிறேன். அடுத்து வந்த கவிதைகள் பேச்சும் பேசும் விதமும் வேறுபடுத்திக் காணமுடியாத ஒன்றிப்பில் பிறந்திருக்கின்றன. அதன் பின்னர், என் கவிதைகள் முடிந்தவரை, பேசாமலும் தங்களின் ‘விதம் ‘ இன்னதென்று அறியாமலும் பிறந்திருக்கின்றன. இரண்டாவது காரணம், விஷயத்தைப் பார்க்கும் பார்வையில் வளர்ச்சி வாழ்வு அனுபவம் உருக்கி உருக்கி விஷயங்களை வேறு வேறு மாதிரியாக காட்டுகிறது. பக்குவ முதிர்ச்சி இந்தத் தோற்றங்களை ஏற்றும் மறுத்தும் புதுவிதமான பார்வைகளைப் படரவிடுகிறது இந்த நிலையில் இவையெல்லாம் பழையதின் வெளிச்சமான தொடர்ச்சியா என்று கேட்டால் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை ‘ என்றும் சொல்லலாம். தொடர்கோடு இழுக்க முடியாது, நீந்துகிறவன் தலைவிட்டு விட்டுத்தெரிவது போன்ற ஒரு விதத் தொடர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். என் கவிதைகள் என்னை ஊடுருவும் கூர்மையிலும், ஊடுருவலால் நான் அவற்றினுள் சிதறிக்கொள்ளும் வெடிப்பிலும் இலக்கணச் சுத்தமாக இல்லாத ஒரு பரிணாமம் இருக்கும் என்று தோன்றுகிறது. ‘திடார் அகநிகழ்வு ‘ பற்றிக் கேட்டார்கள். திடார் ‘நிகழ்வு ‘ என ஒன்றும் இருக்கமுடியாது. நிகழ்வுகள், உணர்வுகள், விஷயங்கள் எல்லாம் பிரபஞ்ச இயக்கத்தில் என்றென்றுமாய் இருந்து கொண்டிருக்கின்றன. நாற்புறமும் இருந்து நம்மை ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. நமக்கு உறைக்கும் போதுதான் அவை உருவாயின என்று சொல்லமுடியாது கவித்துவ உணர்வு தவ இறுகலில் இருந்திருக்கும், எடிசன் கண்டு பிடிக்குமுன் பிரபஞ்சத்தில் இருந்த மின்சாரம் போல. Unexpected, Unpredicted, Unpredeterminable என்று நவீனப் படைப்பு பற்றிச் சொல்லப்படுவதை என்மனம் ஏற்க மறுக்கிறது. இல்லாதிருந்து, இருப்பதானது என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இல்லாதிருந்ததும் இருந்ததும் ஒன்றே என்று என் கவிதைகள் எனக்கு உணர்த்துகின்றன.இன்னுமொன்று இன்றைய என் கவிதைகளுக்கு என் முந்தைய கவிதைகளைவிடவும் அதிகம் பொறுப்பாளிகளாக இருப்பவை என் இளவயது பிம்பங்கள். என்னுடன் எப்போதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் என் சிற்றிளம் பருவத்துக்குள் நான் நுழையும்போது- அறிவினிடம் ஒன்றிப் போகும்போது – அனுபவங்களிலிருந்து விடுபட்டு அவை அருகிக் கிடந்த, பெயரிடப்படாத வெற்றிடத்தில் நழுவிக் கொள்ளும்போது – தன்மைகளின் பிடிப்பிலிருந்து தன்மையற்ற ஆதியை நோக்கிப் போகும்போது என் கவிதைகள் அருவம் கொள்கின்றன. |
சிற்றிளம் பருவம் இன்றுவரை உங்களை வளர்த்துக் கொள்டிருப்பதாக்ச் சொல்கிறீர்கள். தங்களின் இளமைக்காலம் பற்றி- பெற்றோர் பற்றிச் சொல்லுங்கள். பெற்றோரின் கண்டிப்புகள்/ நெருக்குதல்களால் இளவயதில் மகிழ்ச்சியை இழந்துபோனவர்களாக நிறையப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். பின்னால் இவர்களின் படைப்புகள் ஆழமானவையாக, அகவுலகு சார்ந்தவையாக அமைந்திருக்கின்றன. இளவயதில் மகிழ்ச்சியை இழந்து போவது, ஆழமான படைப்புகளுக்கு அடிப்படை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. தங்களின் இளமைப் பருவம் எவ்விதம் இருந்தது… |
என் இளமைப் பருவம் குடும்பத்தின் இயலாமைகளைப் புரிந்து கொண்டு நிராசைகளை விழுங்கி வைத்திருந்தது. குறைந்த வருமானம், எட்டுக் குழந்தைகள். கண்ணியம் குலையாமல் குடும்பம் நடத்திய என் பெற்றோரின் உளைச்சல்களை-சிம்னி விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுவதும் தொழுது கொண்டிருந்த என் தாயின் பெருமூச்சுகளை கனம் உணரத்தெரியாமல் பார்த்திருக்கிறேன். பற்று, பாசம், அன்பு, அணைப்பு- இந்த மாதிரியான வார்த்தைகளும் இவற்றின் விளம்பரச் சார்பான விளக்கங்களும் அவர்களிடம் இருக்கக் கண்டதில்லை. ஆனால் அவர்களது ‘துவா ‘ எங்களுக்காகவே இருந்தது. நாங்கள் வாழ்ந்த பகுதியின் சுற்றுச் சூழல் – அதன் முரட்டுப் பழக்க வழக்கங்கள் காரணமாக நான் வெளியே பிள்ளைகளுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அப்போதே அது சரிதான் என உணர்ந்திருந்தேன். தனிமைக்குழந்தையாக எனக்குள் திரும்பியிருந்தேன். நான் introvert ஆனதற்கு என் இயற்கையுடன் பெற்றோரின் கண்டிப்பும் காரணம். |
உங்களுக்குள் திரும்பியிருந்த அனுபவம் எப்படி ? அது அந்தச் சிறுபருவ அனுபவம் சார்ந்ததாகத்தானே இருக்க முடியும் ? |
ஆம். அந்த ‘அறியாப்பருவம் ‘ சார்ந்ததுதான். அறியாப்பருவத்தில்தான் சிந்திப்பது என்ற ‘செயல் ‘ இல்லாமல், உணரமுடியும்; உள்ளே உருவற்று வரையறைகளற்று நிகழும் அரையிருள் நடமாட்டங்களைப் புரியாத வண்ணம் பார்த்துக் கொண்டிருக்க முடியும். |
அதுமாதிரியான ‘அறியா ‘ நிலையில் வெளிப்புறம் என்ற ஒன்று இருக்க முடியாது. சரிதானா ? |
சரி. குழந்தை, தனக்கு வெளியேயிருப்பது தானல்லாதது என உணராது. அந்த நிலை சிற்றிளம் பருவத்தில் தொடரும்போது சில விசித்திரங்கள் நிகழ்கின்றன. புறவுலகம் புறப்பொருள்கள் பற்றிய அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் போதே சில உணர்வு நிலைகளில் உள்-வெளி பேதங்கள் மறந்து போய்விடும். அது மாதிரியான நேரங்களில் நான் வீட்டு வாசலில் இருந்துக் கொண்டு, மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்த மலைகளுடன் ஒருவித உறவு கொண்டிருக்கிறேன். ஊரைச் சுற்றியிருந்த காடுகளும் மலைகளும் ஓடைகளும் கடுங்குளிரும் நிசப்த நள்ளிரவு நட்சத்திரங்களும் எனக்கே உரியவை போல நெருக்கம் கொண்டிருந்தேன் அவை எனக்கு உள்ளேதான் இருந்தன. அவையும் சேர்ந்த ‘நான் ‘ அப்போது எனக்கு இருந்தது. |
கவிதைப் பயணத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் (தமிழில்) யார் ? |
ஆதர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Poets ? என் படிப்பு மிகவும் குறைவு; அதில் எனக்கு மிகுந்த வருத்தமும் கூச்சமும் உண்டு. என் ஆரம்பப் பொழுதில் என்னைப் பாதித்தவர்கள் கவிஞர் வரிசையில் இல்லாத லா.ச.ரா-வும் மெளனியும்; தாகூரும் ஜிப்ரானும் பாதித்திருந்தார்கள். பிறகு இந்தப் பாதிப்புகள் விடுபட்டுப் போய் விட்டன. பின் ஐரோப்பியக் கவிஞர்களின் மீது ஈடுபாடு, வாஸ்கோ போபா, பால்செலான், நெருடா போன்றவர்கள் கவர்ந்தார்கள். நான் ரொம்பவும் விரும்புகிறவர்களுடன் சில அம்சங்களில் ரொம்பவும் வேறுபடுகிறேன். எனக்கு ஆதர்சம் என்று தனித்த ஒருவரைச் சொல்ல முடியவில்லை. |
சமகாலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் ? |
பலர். பிரமிள், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, அப்துல் ரகுமான், சுகுமாரன், தேவதேவன்…. |
‘கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ‘ இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிரக்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ? |
திட்டமிடுதல் என்பது ஒரு வரைபடம் போல நாற்புறஎல்லை, ஒவ்வொன்றின் அளவுகள், முன்பின்கள் எனறு அர்த்தமானால்- எந்தப் படைப்புக்குமே ‘திட்டமிடல் ‘ என்பது இருக்க முடியாது. ஒரு லேசான உசும்பலோடு கவிதை தொடங்க-அந்த உசும்பலே ‘திட்டம் ‘ என்றால் போகிறபோக்கில் கவிதை அந்த அற்ப வரையறையைக் கலைத்துவிட்டுப் போய்விடுகிறதே ‘ விஷயத்திற்கு முதன்மை கொடுத்து இதை இந்த விளைவை நோக்கிக் கொண்டு போக வேண்டும் என்று ‘திட்டமிட்டு ‘ எழுதுபவர்கள்கூட, தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்பவைகளைத் திட்டமிட மாட்டார்கள். விஷயத்தை ஞாபகம் கொண்டிருந்த கவிஞனைத் தன்வழியே இட்டுச் செல்லும் கவிதை சில சந்தர்ப்பங்களில் ‘திட்டம் ‘ தங்களிடமே நின்றுவிட்டதையும் கவிதை தங்களைத் தாண்டிப் போய்விட்டதையும் அவர்கள் (உணர்ந்திருந்தால்) சொல்லக்கூடும். |
குறிப்பாகச் சொல்லுங்கள். கவிதை எழுதுவதற்கு முன்னால் மனசில் விஷயமே இருக்காதா ? |
இருக்கலாம், இல்லாமலும் போகலாம். முன்பே நான் சொல்லியிருக்கிறேன். மனசைத் தீவிரமாகப் பாதித்து நிறைந்திருக்கும் ஒரு விஷயம், தனக்குச் சாதகம் தரும் உணர்ச்சியைக் கிளர்வித்துக் கவிதையாக வெளிவரலாம். அப்போது அது விஷயமல்ல; கவிதை விஷயத்தின் ஒருமை, முழுமை எனும் வடிவத் தெளிவுகள் கவிதையின் அந்தகாரத்தில் காணாமல் போய்விடலாம். இன்னொன்று: எந்த விஷயமும் மனசில் இல்லாமல், அடிப்படைக் கவித்துவ உணர்ச்சியின் வேகச் சுழற்சியில், அந்த வேளையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டு கவிதை வெளிவந்து விடலாம். முயற்சி, திட்டம், தீர்மானம் இல்லாமலும், அப்படி இருந்தால் அவைகளைத் தப்பியும் பிறந்துவிடும் ஒன்றை ‘நேர்வது ‘ என்னாமல் எப்படிச் சொல்வது ? மற்றபடி கவிதையின் எழுத்து வடிவாக்கத்தில் பிரக்ஞை மட்டத்தில் கவிஞனின் அடித்தல் திருத்தல் கூட்டல் குறைத்தல் நிகழ்கின்றன. இவை கவிஞனின் ‘உழைப்பு ‘ அல்ல. பிறந்த கன்றை ரொம்பநேரம் நக்கிக்கொண்டிருக்கும் பசு அவன். |
அடிப்படையானது ‘கவித்துவ உணர்ச்சி ‘ என்று சொன்னீர்கள். சரி. கவிதை ஆக்கத்தில் எது உங்களை உடனடியாகப் ‘பக் ‘கெனப் பற்றிக் கொள்கிறது ? சப்தம், சொல், காட்சி, sensation, feeling, கனவு, fantasy இவைகளில் எது ? |
நிச்சயமாக சொல்லும் சப்தமும் அல்ல. fantasy, கனவு, உணர்வு என்றெல்லாம் பிரித்துணர முடியாதபடி, உருத்தெளிவற்ற காட்சிகளாக நிகழ்ந்து கொண்டேயிருப்பது, ஏதோ ஒரு கணத்தில் ‘நானா ‘க இருப்பவனை ‘நான ‘ற்று ஆக்கிவிடுகிறது. பிறகு இது கவிதையாக வெளிவரும் வாய்ப்பு நேர்கிறது. சங்கீதத்தில்கூட, நான் அனுபவிக்கும் நாதம் சப்தம் அல்ல; கேட்டுக் கொண்டிருக்கும்போதே சங்கீதம் நம்மை இழுத்துக் கொண்டு மெளனத்தினுள் நுழைந்து விடுகிறது. படைப்பு அனுபவமும் அதுதான். |
உங்களின் சங்கீத ஈடுபாடு- உங்கள் கவிதைகளில் சங்கீதத்தை நோக்கிய குறிப்புகள் உள்ளன. சங்கீதப் பயிற்சி பெற்றீர்களா ? |
இல்லை. ஓரளவு கேள்வி ஞானம்தான். ஞானம் என்று கூடச் சொல்ல மாட்டேன். அது எனக்குத் தரும் அனுபவம்-அது என்னுள் எழுப்பும் அருவங்கள், அகாலம், அகாதம்- என் மெளனத்தில் அதன் இடையறாத இருப்பு-இவை நான் உணர்வன. என் சொற்களில் என்னையறியாமல் அது கமழ்கிறது. கவிதைகளில் அங்கங்கே தெரியும் சங்கீதம் தொடர்பான குறிப்புகள் சாதாரணமானவையே ஆனால் என் உணர்வுப் போக்கையும், மொழியையும் சங்கீதம் நிர்வாகம் செய்து வருகிறது என்பதுதான் முக்கியம். |
இன்றைய கவிதையில் படிமத்தின் செல்வாக்கு பற்றி – உவமை உருவகம் இவையெல்லாம் உபயோகமற்ற கடந்தகாலச் சரக்குகளாய்விட்டனவா ? இவற்றின் இடத்தைப் படிமம் பிடித்துக் கொண்டதா ? வலிந்து திணிக்கப்பட்டு, துருத்தியவாறு கவிதையின் இணக்கத்தை / Unity ஐ குலைத்து விடாதா ? படிமம், உவமை, உருவகம் இவற்றை வாசகர்களுக்காக உதாரணத்துடன் சொல்லுங்கள். |
அன்றாடப் பேச்சிலேயே ஏராளமாய்ப் படிமங்கள் புழங்குகின்றன. எல்லை மீறிப் போகிறான்; கண்டு கொள்ளாதே; விட்டுப் பிடிக்கலாம்; எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது இப்படிப் போகும் பேச்சில் எல்லை, காணுதல், பிடித்தல், கை-எல்லாம் படிமங்கள்தாமே ‘ மொழியே படிம வசப்பட்டிருப்பதுதான். கவிதைப் படிமம் என்பது (poetic image) பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது. நான் முன்பு சொல்லியிருப்பது போல, ‘இரண்டு பொருள்களை அடுத்தடுத்து நிறுத்தி ஒப்புமை காட்டுகிறவை உவமையும் உருவகமும். ஆனால் ஒன்று மற்றொன்றினுள் தடந்தெரியாது கலந்து மறைந்ததன் பின், ஒன்றன் செழிப்பு இன்னொன்றின் வடிவத்திற்குள் தொனித்துத் தோண்றுவது படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது ‘. |
‘செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே ‘ |
‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ‘ – இவை உவமைகள். |
சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா செல்வக் களஞ்சியமே ‘ – உருவகம். |
கவிதைப் படிமம் உவம-உருவகச் சார்பானதாகவும் இருக்கலாம்; அவைகளுக்குத் தொடர்பில்லாமலும் இருக்கலாம். |
‘வயிறு வெடிக்கச் சிரிக்கும் பூசணிகள், நடுத்தெருவில் ‘ இது ஓரளவு உவமைச் சார்புள்ள படிமம். இன்றைய கவிதையில் உவமை- உருவகச் சார்பில்லாமல் பல்வேறு விசிறல்களாய் வரும் படிமங்களே அதிகம். பழங்கவிதையிலும் இவை உண்டு. ‘கானம் காரெனக் கூறினும் ‘- காடு இது கார்காலம் என்று பொய் சொல்கிறது என்கிறாள் குறுந்தொகைத் தலைவி. |
பல்வேறு விசிறல்களாய்ப் படிமங்கள்- உதாரணம் சொல்லுங்கள்… |
‘பாம்புப் பிடாரன் சுருள் சுருளாக வாசிக்கிறான் ‘ – பாரதியின் படிமம், இசையை கண்களில் கொண்டு வந்து நிரப்புகிறது. ‘ தந்தையைப் பிரிந்து/ கூர்ந்து கூர்ந்து போய் / ஊசி முனைப் புள்ளியில் கிறங்கி / நீடிப்பில் நிலைத்தது கமகம் ‘ இது கமகத்தின் இயக்கத்தைக் காட்சிப் படுத்துகிறது. ‘அவள் செளந்தர்யம் எதில் அடங்கிக் கேட்காது முணுமுணுக்கிறது என்பது தெரியவில்லை ‘ மெளனி கண்ணுக்குரியதைக் காதால் கேட்கச் செய்கிறார் புலன்கள் மாறிப் போவதால் விஷயம் தரும் அனுபவம் புதிய பரிமாணம் ஒன்றைக் கொள்கிறது. ‘சங்கு- அடிபருத்து அவசர்மாய் நுனிகுறுகி ‘ சங்கின் அவசரத்தை ஆர்வத்தை லா.ச.ரா.- கவனித்திருப்பதைப் படிமம் காட்டுகிறது. ‘கூழாங்கற்களின் மெளனம்- கானகத்தின் பாடலை உற்றுக் கேட்பது ‘ – இதுவும் அப்படிப்பட்ட படிமம். கவிஞனுடைய உலகில் அஃறிணை என்பது இல்லை. |
‘மூலைகள் வெடித்துப் பெருகி இன்னும் இன்னும் மூலைகள் ‘ |
‘ஒருகை மீது இப்போது மழைவீழ்கிறது, மற்றதிலிருந்து புல் வளர்கிறது ‘ |
‘ஒரு நாள் கூந்தல் இழைகளிடை காற்று பிணங்கள் இழுத்துக் கொண்டோடியது ‘ |
இந்த சர்ரியலிசப் படிமங்கள் தம் இருப்பிடங்களில் ‘விநோதம் ‘ என்று தோன்றாமலே வித்தியாசமான உணர்வுகளை எழுப்பக் கூடியவை ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது ‘ இன்னவகை என்று தீர்மானிக்க முடியாத நுட்பம் – தர்க்கத்தில் அடங்காத உள்தர்க்கம் இந்தப் படிமத்தில் செயல்படுகிறது. ‘ஐந்து பொறிகளும் என்மீது கிறுக்கிக் கொண்டே இருக்கின்றன ‘ |
‘என் பிடறியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது ‘ – இப்படி நல்ல கவிதைப் படிமங்கள் ஏராளமாகச் சொல்லிப் போகலாம். மொத்தத்தில் இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மெளனத்தைத் தொடமுயல்பவை. இந்தவிதமான நுண்மையைக் உவமை உருவகம் கொண்டு சாதிக்க முடியாது. அவை செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு காரணம், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது; அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது. |
துருத்திக் கொண்டு நிற்கும் படிமங்கள் பற்றி ? மிகைபற்றி ? தேவையின்மை பற்றி ? |
மிகையாகப் படிம அடுக்குகளைக் கையாள்வது இப்போது குறைந்திருக்கிறது. ‘பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து ‘ என்பது போன்ற படிமம் அடுக்குகள் இப்போதைய கவிதைகளில் இல்லை. ஆயினும் நல்ல படிமங்களைக் காண்பதும் அரிதாகி வருகிறது. கவிதையில் ‘படிமத்தை அமைப்பது ‘ என்பது தவறானது. படிமமே கவிதையாக உருவாக விட்டு விடுவது என்பது சரி. இப்படி வரும்போதுதான் விஷயம் படிமத்தினுள் கரைந்து, படிமத்தின் புத்துணர்ச்சி காரணமாக இதுவரை வெளித்தெரியாதிருந்த தன் உள்ளுருவைக் காட்டும் இங்கே படிமம் துருத்தி நிற்காது. |
படிமம் விஷயத்தின் உள்ளுருவைக் காட்டும் என்கிறீர்கள், உங்கள் கவிதைகள் பேசாமலும், பேசும் விதம் இன்னதென்று அறியாமலும் பிறந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். தன்மைகளின் பிடிப்பிலிருந்து விலகும் போது அவை abstract ஆகின்றன என்கிறீர்கள். இவைகளை உங்கள் கவிதை ஒன்றின் பிறப்பைக்கொண்டு விளக்குங்கள். |
‘நான் இல்லாமல் என் வாழ்க்கை ‘ என்ற கவிதை (அருகில் வெளியாகியுள்ளது பார்க்கவும்) எதையும் பிரித்துப் பார்த்தல், எதிலிருந்து விலகி தனித்தல், இருப்பதிலிருந்து விலகி இல்லாதிருத்தல் – இவை என் நிரந்தர உளச்சல்கள். எதிலிருந்து விலகி இல்லாதிருப்பது ? இருத்தலிருந்து. இருத்தல் எது ? இந்த வாழ்க்கை. இந்த மாதிரியான நினைவுப் போக்கில் ஒருநாள், நான் விலகி நின்றால் என் வாழ்க்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது. எழுந்த கணத்தில் என் முன் என் வாழ்க்கை அனைத்துப் பரிமாணங்களிலிருந்தும் விடுபட்டு வரம்பற்ற சுதந்திரத்தோடு, பேரானந்தத்தோடு இயங்குவதைப் பார்த்தேன். அதற்கு வடிவம் இல்லை; தன்மை இல்லை; தன்னை உணரும் / தன் ஆனந்தம் இன்னதென உணரும் அவசியமும் இல்லை. |
இந்த கவிதை உங்களிடம் எதையும் சொல்லவில்லை; நான் அதற்கு எந்தக் கருத்தையும் தயாரித்துக் கொடுக்கவில்லை; அது ஒரு உயிர் பொருளாக உங்கள் முன் நிற்கிறது. இந்தக் கவிதையில் தனித்துவிடப்பட்ட வாழ்க்கையின் இயக்கங்கள் காட்டப்படுகின்றன. அருத்திரளுதல், நீல வியாபகம் கொள்ளுதல், சூன்யத்தை அளைதல், நிழல் வீழ்த்தாமல் நடமாடுதல், தன்மைகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்து பறந்து திரிதல்-இந்த இயக்கங்கள் இன்னதென்று தெளிவுபடாத, நிழல்தனமான, ஒரு படிமத்தை மனத்திரையில் உருவாக்கிக் காட்டுகின்றன. இந்த படிமம் விஷயத்திலிருந்து வேறுபட்டதன்று; விஷயமேதான் படிமம் உணர்த்துகிறது. இனிமேலும் சொல்வது கவிதை அனுபவத்தைப் பாதிக்கும். நீங்களே படித்து பாருங்கள். |
பிரார்த்தனை, வணக்கம், வேண்டுதல், சடங்குகள் போன்ற வெளியரங்கமான இறைவழிபாட்டைத் தாண்டி, இறைவனை சூன்யமாக, மகத்துவமாக, மெளன வெளியாக, எல்லையின்மையாக, தங்களின் கவிதைகள் தீண்டுகின்றன. ஆன்மீகத்தில் இது உயர்ந்த படித்தரம். ஞானிகளும், சித்தர்களும், சித்தீக்குகளும் தேடிய, தாண்ட உன்னிய படித்தரம். தங்களுக்கு இவர்களுடன், இவர்களின் தத்துவத்தில் ஆர்வமுண்டா ? |
நிறைய உண்டு. எந்த அளவு உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று உணரத் தெரியவில்லை. என் சிறு வயதில் என் தந்தை குணங்குடியார் பாடல்களை இனிமையான குரலில் ராகத்துடன் பாடியதைக் கேட்டு அப்போதே அவைகளைப் படித்திருக்கிறேன். இன்னதென்று தெரியாமலே இளம் மனது ஈடுபாடு கொண்டது. வளர்ந்தபின் சித்தர்கள், அத்வைதிகள், சூபிஞானிகளின் தத்துவங்கள் எனனை ஈர்த்தன. என் கவிதைகள் அவைகளை அப்படியே பிரதிபலிப்பதில்லை; கண்டு கொண்டதையல்ல, காண தவிப்பதை, காண தவறுவதை என் கவிதைகள் உணர்த்துகின்றன எனக்கு தெரிந்தோ தெரியாமலோ கூட அவை சில எல்லைகளைத் தாண்டி எங்கெங்கோ போய்வருகின்றன. என்னுள்ளிருக்கும் படைப்பாளி எனக்குக் கட்டுபடாதவன்; என்னை மீறியவன்; கணத்துக்குக் கணம் தன்னை மீறிக்கொண்டிருப்பவன். அதே நேரம் வெளியரங்க வழிமுறைகளையன்றி வேறறியாத என்னுடன் அவன் முரண்பட்டுக் கொள்வதும் இல்லை. ஆயிரம் பாக்குகளிடையே எனது ஈமான்- அதை உறுதிப் படுத்த என் கவிதைகள் துணை நிற்கின்றன. அவற்றின் கைபிடித்துக் கொண்டு எங்கே போனாலும், அனுபவத்தின் விளிம்புகளைத் தாண்டிய விரிவில் சில கணங்களேனும் சஞ்சரிக்க வாய்த்தாலும் என் கவிதைகள் திருப்தியில்லாமல் இருக்கின்றன எனப்பார்க்கிறேன். நிறைவின்மை என் கவிதைகளின் குணம்; என் குணமும் கூட. இந்த நிலையில்தான் என் தத்துவம் என்னை கனத்த மெளனத்துள் இறுக விடுகிறது; ஒன்றும் புரியாதிருக்கிற மெளனம். |
லா.ச.ரா. நாவல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளீர்கள். அவரின் எழுத்துக்களில் தங்களின் ஈடுபாட்டினைப் பற்றிச் சொல்லுங்கள்… |
லா.ச.ரா. தம் எழுத்தைத் தவம் என்பவர். தவத்தின் லட்சியம் தவம் அல்ல. மொழியைத் தாண்டின உன்னதத்தை அவர் எழுத்து லட்சியமாகக் கொள்வது. வாழும் யதார்த மனிதனைக் கண்ணெதிரே நிறுத்துவதைவிட, சாகாத மானிட உணர்வுகளை உருவகமாக்கி உலவ விடுவதே அவர் நோக்கம். புறக்காட்சிகளின் வழியாக ஆழ்ந்த அகக்காட்சிகளுக்கு வாசகனை இட்டுச் செல்கிறவர். எழுத்தை மனோதத்துவப் பாதையில் ரொம்பதூரம் கொண்டு சென்று ஆழ்ந்த உள்ளுணர்வு, தரிசன நிலைகளில் திளைக்கச் செய்தவர். நனவோடையில் இந்தியத் தத்துவத்தை அற்புதமாக இணைத்தவர். நம் காலத் தமிழ்நடைக்கும் எழுத்து முறைக்கும் உள்ளடக்கப் புதுமைக்கும் பாரதி, புதுமைப்பித்தன் போல லா.ச.ரா.வும் ஒரு முக்கியப் பொறுப்பாளி. இன்று எழுதும் பலருடைய மொழியில் லா.ச.ரா. தமிழ் ஊடுருவல் செய்திருக்கிறது என்பது உண்மை. முறையான தமிழ் இலக்கியப் பயிற்சியுடன் கல்லூரியிலிருந்து வெளிவந்த நேரத்தில், அது வரை நான் அறியாதிருந்த புதிய தமிழை எனக்கு அறிமுகம் செய்வித்தவர் லா.ச.ரா.தான். |
‘பாரதிக்குப் பின் பிரமிள் ‘ என்கிற குரல் கேட்கத் துவங்கி விட்டதே… தங்களின் அபிப்பிராயம் என்ன ? |
பிரமிளின் கவித்துவ சாதனையை மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஆனால் ஒரு உண்மையைக் கவனிக்க வேண்டும். பாரதிக்கு முன்பு / பாரதி காலத்தில் இல்லாத அளவு வசன் இலக்கிய எழுச்சி பாரதிக்குப்பின் வந்து விட்டது. தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணங்களை வசன இலக்கியம் தந்திருக்கிறது. உலக இலக்கியத் தரத்தை நம் வசனத்தில் காணமுடிகிறது. பாரதிக்குப் பின் என்ற கணக்கீட்டிற்குத் தனியொருவரை நிறுத்த முடியாது. பாரதிதாசன் என்ற கவிஞரையும் புதுமைப்பித்தன், லா.ச.ரா. மெளனி, ஜெயகாந்தன் போன்ற வசன படைப்பாளிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போது இந்த வரிசையில் தவறாமல் இடம் பெறும் தகுதி பிரமிளுக்கு உண்டு. |
கண்ணதாசனைப் பற்றி எழுதுகையில் ‘தமிழ் அவரிடம் தங்கி இளைப்பாறிற்று ‘ என்கிறார் ஜெயகாந்தன். தங்களின் கணிப்பு என்ன ? கண்ணதாசன் என்றாலே புருவச் சுளிப்புடன் ஒதுக்கித் தள்ளிவிடுகிற மனோபாவம் சரிதானா ? |
கண்ணதாசன் potential அளவுக்கு அவர் எழுத்து இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம். தன் எழுத்துக்கு மேற்பட்ட ஆற்றல், தகுதி அவருக்கு இருந்தது என்பதை உணர அவர் எழுத்து ஆதாரம். முயற்சியில்லாத அநாயாச வெளியீடு அவரிடம் இருந்தது. திரைப்பட பாடல்களில் அப்படங்களின் தரத்துக்கு பொருந்தாத உயர் தரத்தில் அற்புத வரிகள், த்வனிகள், மின்வெட்டுகள் அமைந்து கிடக்கின்றன. ஆனால் அவரால் முடியாதது selection செயல்திறன். எழுத்து அவரது ஆதிக்கத்துக்கு பணிந்துவிட்டது; அவர் சூழலின் ஆதிக்கத்துக்கு பணிந்துவிட்டார். நாவல், கதை என்று அவர் எழுதியவற்றில் தரம் சொல்லும்படியாக இல்லை. எப்படியிருப்பினும் கண்ணதாசன் என்றவுடன் புருவச் சுழிப்பு ஏன் என்று எனக்குப் புரியவில்லை. விமர்சனம் நல்லதைக் கண்டுபிடிக்கத் தெரியாததா ? சிறுபத்திக்கைப் புழக்கத்தில் விமர்சனம், ஒழித்துக்கட்டல், இருட்டடிப்பு செய்தல், குழுமனோபாவம், சுயபிரமைகள், கொள்கைகோட்பாடு சார்ந்த பிடிவாதங்கள் நிரம்பியதாகியிருப்பதை அறிவீர்கள். |
மரபு கவிதையின் சகாப்தம் முடிந்துவிட்டது எனக் கருதுகிறீர்களா ? |
இந்த பிரிவினையை (மரபு-புதியது) நான் ஒப்புக் கொள்வதில்லை. பழங்கவிதையை மரபுக் கவிதை என்ற பெயரில் அடையாளம் காட்டுபவர்கள்தான் பிடிவாதமாக இந்தப் பிரிவினையை வற்புறுத்துகிறார்கள். கவிதை என்றும் ஒன்றே. இன்றைய கவிதை உலகக்கவிதைத் தாக்கங்களுடன், புதிய அறிவுத்துறைகள்-தத்துவத் துறைகளுடன், அழகுணர்ச்சியின் புதிய விளக்கங்களுடன், வாழ்வின் புதிய பார்வைகளுடன் தன் பெரும் செல்வத்தை நம் மர்பில் கலந்து விட்டிருக்கிறது. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்தபின் தமிழ்க்கவிதை என்ற பெயர் மாறி, தமிழில் கவிதை என்ற பெயர் உருவாகும். உலகில் தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, ரஷ்யன், சீனம் என்ற மொழிகளின் பட்டியலில் கவிதை என்பதும் ஒருமொழியாக இடம் பெற்றுக் கொள்ளும். அதனால் பழங்கவிதைப் பாணியை மட்டும், அதன் பழைய உள்ளடக்கத்துடன் மரபுக் கவிதை என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் சொல்கிறேன், ‘உங்கள் மரபுக் கவிதையின் சகாப்தம் முடிந்துதான் போய்விட்டது ‘. |
தங்களின் தாய்மொழி எது ? உர்து ? இந்த கேள்வியை deliberate ஆகத்தான் கேட்கிறேன். ஏனெனில் ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கை உலகு முழுவதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவன் காலாகாலமாக தான் வாழும் மண், அதன் மனிதர்கள், அதன் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி இவை சார்ந்த ஆதாரமான கூறுகளிலேயே வேர் கொள்கிறான். ஒரு தமிழ் பேசும் முஸ்லிமுக்கும், ஒரு சவூதி அரேபிய முஸ்லிமுக்கும் கடலளவு வேற்றுமைகள் இருக்கின்றன. இந்த வேற்றுமைகளைத் தக்க வைத்துக் கொள்வது மிக முக்கியமானதென நினைக்கிறேன். முஸ்லிம்களை ஒரு Homo genius Community யாகக் கண்டு அவனை முஸ்லிம் என்ற ஒரே ஒரு அடையாளத்தில் மட்டுமே அடைத்து விடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? |
என் தாய்மொழி தமிழ். உர்துவாக இருந்தால் கூட நான் தமிழனாகத் தானே இருப்பேன் ‘ நீங்கள் சொல்லும் ஆதாரக் கூறுகள் இயல்பானவை; அவரவர் தளத்தில் அவரவரைப் பிணைத்து வைத்திருப்பவை. மொழியும் இனமும் கலாச்சாரமும் மன உள்ளமைப்பை உருவாக்கி நிரவியிருப்பவை. எனினும் எனக்கு ஒரு எண்ணம். மனிதன் என்று பார்க்கும் போது அவன் சக மனிதனுடன் கொள்ளும் உறவில் உருவாகிறான்/ உருமாகிறான். ஆனால் ஒரு முஸ்லிம் என்று பார்க்கும்போது தனக்கும் தன்னைப் படைத்தவனுக்கும் இடையேயுள்ள நிரந்தர உறவில் அடையாளம் கொள்பவன். ஒரு முஸ்லிமுக்கும் மற்றொரு முஸ்லிமுக்கும் இடையே கலாச்சார வேற்றுமை கடலளவு இருந்தாலும் (ஒரு கலாச்சாரத்துக்குள்ளேயே பிணக்குகள் ஏராளம் ‘) வானளவு ஒற்றுமை-தம் இறைவனுடன் உலகமுழுதும் ஒரு மொழியில் நேரடிப் பேச்சுக்குரியவர்கள் என்ற ஒற்றுமை-இருக்கிறதல்லவா ‘ இந்த ஆன்மிகத் தளத்தை அடிப்படையாகக் கொண்டால் முதலில் முஸ்லிம்களுக்கிடையேயாவது ஒற்றுமை வரக்கூடுமே ‘ அப்படி ஆன்ம ஒருமையை உணரும் பட்சத்தில் வேற்று மதத்தவர்களுடன் இணக்கம் காண்பதிலும் சிரமம் இராது என்று நம்புகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது எங்கும் எப்போதும் பொருந்தும் வாழ்வியல் வாசகம். |
நான் இல்லாமல் என் வாழ்க்கை |
நான் இல்லாமலே |
என் வாழ்க்கை |
எதேச்சையில் |
அருத்திரண்டது |
வடிவ விளிம்புகளைக் |
கற்பிக்க |
நான் இல்லாததால் |
நீல வியாபகம் கொண்டது |
எதை துறந்தோம் என்று |
அறிய வேண்டாத |
நிம்மதியில் திளைத்தது |
உணர்வுகளின் |
பொது ரீங்காரம் மட்டும் |
தொடர |
நிழல் வீழ்த்தாமல் |
நடமாடியது |
கூரைகளுக்கு மேலே |
தன்மைகளின் எதிர்ப்பை |
அலட்சியம் செய்து |
அசைவு தெரியாமல் |
பறந்து திரிந்தது |
பூமியை துளைத்து |
மறுபுறம் வெளிவந்தது |
பிம்பங்களின் துரத்தலுக்கு |
அகப்படாமல் |
நுட்பம் எதுவுமற்ற |
சூன்யத்தை அளைந்தது |
மரணப் பாறையிலிருந்து |
குதித்து விளையாடியது |
காலத்தின் சர்வாதிகாரம் |
புகைந்து அடங்குவதை |
வேடிக்கை பார்த்தது |
தத்துவச் சுமை கரைந்து |
தொலைதூரத்து வாசனையாய் |
மிஞ்சிற்று |
எனது குறியீடுகளின் |
குறுக்கீடு |
இல்லாது போகவே |
தன்னைத் தனக்குக் |
காட்டிக் கொண்டிருப்பதையும் |
கைவிட்டது. |
*** |
நன்றி:- சமரசம், திண்ணை , யெஸ்.பாலபாரதி , அபியின் புகைப்படம் தந்தமரவண்டு |
*** |
ஒரு சுட்டி : |
மெளனத்தின் நாவுகள் [கவிதைத் |
जाया कलई अरिवियल लल्लुउरी |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
-
(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...