செவ்வாய், 22 ஜூன், 2021

போக வேண்டும் அபியின் பாழ்பட்ட அந்தச் சிற்றூருக்கு

 

முழுக்க விபரீதங்களின் காட்சிகளைக் கொண்ட அபியின் இன்னொரு கவிதை இது. ஆனால், மொத்தக் கவிதை கொடுக்கும் அனுபவமோ நேரெதிரானது. நூறு வயது விஷப்பூச்சிகள், வெயிலைக் கிழிக்கும் முள்செடிகள், விறைத்துக் கிடக்கும் எரிந்த குழந்தைகளின் சடலங்கள், வீதிகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் நரபலி தேவதைகளின் பழைய நடன மண்டபம், நீச்சல் குளம், எலும்புகளின் மாபெரும் நூலகம் ஆகியவை இருக்கும் அந்தப் பாழடைந்த சிற்றூருக்குப் போகவேண்டுமென்பது போல உள்ளது.  ஆத்மாநாமின் 'என்றொரு அமைப்பு' கவிதை ஞாபகத்துக்கு வருகிறது. 

அபியின் 'எலும்புகளின் நூலகம்' கவிதை, என்னை அர்த்தப்படுத்த வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது. அதில் இருக்கும் விபரீதச் சித்திரங்களோ, அதில் இருக்கும் விஷப்பூச்சிகளோ நமக்குப் பரிச்சயமான சமூகத்தில் உள்ள விபரீதமோ, விஷமோ அல்ல என்பது மட்டும் உறுதி.

‘மொழிகளை மறந்துவிட்ட மனசுக்குள் தூரதூர தேசங்களின் ரத்தம் வந்து பாய்ந்து கொண்டிருக்கிறது' என்று சொல்லும்போது 'தூரதூர தேசங்களின் ரத்தம்' என்பது என்ன என்ற கேள்வியை மட்டும் எழுப்பிக் கொள்கிறேன். 

பதில் உடனடியாக வேண்டாம் என்பதுபோலத் தான் உள்ளது. தேசத்தின் ரத்தம் என்பதில் என்ன? என்ன? என்ன? என்னவெல்லாம் உள்ளது.

கேள்வி மிகவும் சுவாரசியமாக, மிகப்பெரிய கேள்வியாக சுவாரசியமாக எனக்குத் தென்படுகிறது. ஆமைமுதுகு போல் சாலை இருந்தால் அந்த சாலையில் விரைந்து செல்லமுடியுமா. அது ஆமையின் குணத்தைக் கொண்டிருக்குமா? 

சாலை எப்போதும் ஊராமல் ஒரே இடத்தில்தானே நின்றுகொண்டிருக்கிறது.

மௌனியின் முத்திரை வெளிப்பாடான 'பாழ்பட்ட வசீகரம்' ஞாபகத்துக்கு வருகிறது.

பாழடைந்த அந்தச் சிற்றூரில் எலும்புகளின் நூலகத்தில் யார் படிக்கிறார்கள் புத்தகங்களை?


எலும்புகளின் நூலகம்


பாழடைந்த சிற்றூர் அது


விளையாட்டாய்

ஒரு கல்லைப் பெயர்க்க

அடியில் ஊர்ந்தன

நூறு வயது

விஷப்பூச்சிகள்


வெறும்

முள்செடி விரிப்பின் மீது

வெயில் கிழிந்து கொண்டிருந்தது


எரிந்த குழந்தைகளின்

உடல் விறைப்பைப் 

பார்த்துக் கொண்டிருந்தன

கரிந்த சுவர்கள்


மொழிகளை மறந்துவிட்ட

மனசுக்குள்

தூரதூர தேசங்களின்

ரத்தம் வந்து

பாய்ந்து கொண்டிருக்கிறது


விளையாட்டாய்

வீதிகளைப் புரட்டியபோது

அடியில்

நரபலி தேவதைகளின்

நடன மண்டபம்

நீச்சல் குளம்

ஆமைமுதுகு போல் சாலை

எலும்புகளின் 

மிகப்பெரிய நூலகம்...

நிசப்த ஆழத்துக்குள் அபி கத்தும் சத்தம்

 

அபியின் மாலை வரிசைக் கவிதைகளில், மிக அபூர்வமாக பால்யத்தின் குறிப்புகளைக் கொண்ட சில கவிதைகள் உள்ளன. தனிப்பட்ட பால்யம் ஒன்றின் படமும் நம் எல்லாருடைய பால்யத்தின் பொதுச்சிறு பிரதிபலிப்புகளும் இந்தக் கவிதைகளில் இருக்கிறது.

‘மாலை - என் வடிவு’ கவிதையில் குடும்பத்தினர் அனைவரும் மரக்கட்டிலில் வானம் தெரியும் நடுமுற்றத்தில் நெருக்கி அமர்ந்து அம்மா சொல்லும் கதையைக் கேட்கும் ஓவியம் முதலில் தோன்றுகிறது. பெருந்தொற்று காலம் நெருக்கம் என்பதன் மதிப்பை, அர்த்தத்தை நம் எல்லாருக்கும் உணர்த்தியிருக்கும் காலத்தில், தீண்டாமை என்பது அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் சேர்ந்து நெருக்கி அமர்ந்து இருப்பதன் அருமை தெரிகிறது. 

எத்துணை எளிமையாக கிடைத்தவை, எத்துணை பக்கத்தில் இருந்தவை எல்லாம் தூரத்துக்குப் போய்விட்டதைப் போன்ற காலத்துக்கு நாம் நகர்ந்திருக்கிறோம். 

நெருங்கக் கிடைக்கும்போது நெருங்கிவிடுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. 

அம்மா சொன்ன கதை, திரைச்சீலைகளுக்குப் பின்னால் அந்தக் குட்டிப்பையனுக்கு நிழல்களாக நிகழ்த்திக் காண்பிக்கப்படுகிறது. அவனும் நிழலாக, கதை கொடுத்த மனவிரிவில் திரவமாகத் ததும்பி இருக்கிறான். காவேரி ஆச்சி வளவில் இருட்டில் கதைசொன்ன அருணாசலத்தம்மாள், கதிர்காமம் முருகன் கோயிலுக்குச் செய்த பயணத்தைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லியும் எங்களுக்குத் தெவிட்டியதே இல்லை. அங்கே திரைச்சீலையில் வரையப்பட்டவர் தான் முருகனாகக் கும்பிடப்படுகிறார். திரைச்சீலைக்குக் கீழே தேங்காயை தட்டில் வைத்து தள்ளினால், தேங்காய் உடைக்கப்பட்டு வெளியே வரும் என்று அவள் சொன்னதும், திரைச்சீலைக்குப் பின்னால் பார்க்க முயல்பவர்கள் தலை சுக்குநூறாக உடைந்துவிடுமென்றும் அருணாசலத்தம்மாள் சொல்லியிருக்கிறாள். நூறு வயதுக்குப் பிறகு வாழ்ந்து ஒரு கட்டைவிரல் அளவுக்கு சிறுத்துப் போய், மாடக்குழியில் இருந்து இரண்டு சோற்றுப் பருக்கைகளே போதுமான கிழவி பற்றிய கதையை அவள் இருட்டில் சொல்லியபோது நானும் என்னொத்த பிள்ளைகளும் இப்படித்தான் திரவமாக உருகினோம். உடலை வாதிக்கும் நோய்களோடு, துயரமும் பச்சாதாபமும் நிழலாகப் படிந்திருக்கும் வீட்டைவிட்டு அடிக்கடி தப்பித்து பயணம் வழியாகவே சுதந்திரத்தை அடைந்து, மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கால்போன போக்கில் சிறுவயதில் அலைந்த கதைகளை, சுந்தர விலாசத்தின் மொட்டைமாடியிலிருந்து சுந்தர ராமசாமி சொன்னபோதும் அந்த திரவநிலையை அடைந்திருக்கிறேன். சுந்தர ராமசாமி, முன்னே கால்களைக் குவித்து அமர்ந்திருக்க, கண்ணாடி மினுங்கும் முகம் கோடாக இருட்டில் தெரியும். 

அம்மா சொன்ன கதையால், திரவம் போல ததும்பியும் தன்னிடத்தை மறக்காததால் தன் வடிவில் இருக்கிறானாம் அந்தக் குழந்தை. 

‘என்னிடம் இருந்ததால் என் வடிவில் இருந்த நான்’ என்று ஆரம்பிக்கும் பாதியில் அபியின் அணக்கமும் சத்தமும் தோற்றம் கொண்டுவிடுகிறது. நிசப்தத்துக்குள் தன் சத்தத்தை இப்படித்தான் ஏற்படுத்துபவர் அபி.

அப்புறம் அது ஆழ்ந்த ஆர்ப்பரிப்பை நோக்கிச் செல்கிறது. அந்தச் சத்தம் விரிகிறது.

மாலையோடு பேசித் தளிர்க்கும்

கதை

என் வடிவில் இருந்த கதை

இந்த இடத்தில் சத்தம் அதீதமாகிக் கெக்கலிக்கத் தொடங்குகிறது ஆழத்தில். எனக்குக் கேட்காத எனக்குள் பெருகும் சத்தம் அது.

யோசிப்பும் நின்றுபோன

மௌனம்

என் வடிவில் இருந்த மௌனம்.

கடைசியில் வலி உறுத்தும் சத்தம், கடைசியில் குவிந்து தாக்குகிறது. என் வடிவில் இருந்த மௌனம் என்று முடிக்கும்போது சத்தத்தின் சுத்தமான இலக்கான நோக்கத்தில் செருகப்பட்டு விடுகிறது. மௌனத்தின் உலோகத்தால் செய்யப்பட்ட கத்தி அது. கத்திச் செருகப்பட்டு விட்டது. யோசிப்பும் நின்றுபோகும் அந்த மௌனத்தின் வடிவம் தான் என் வடிவம். அங்கே நீயோ, உனது வடிவமோ சாத்தியம் இல்லை. அதுதான் அபியின் வடிவம்.

மாலை - என் வடிவு

வானம் தெரியும் நடுமுற்றம்

மரக்கட்டிலில் நெருக்கி அமர்ந்து நாங்கள்      


சமையலறைச் சுவருக்குப்போக மிஞ்சிய

கொஞ்சம் சிமினி விளக்கு வெளிச்சம்

எங்களருகில், பராக்குப் பார்த்துக் கொண்டு


அம்மா சொன்ன கதை

வழக்கம் போல

மெல்லிய திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து

நிகழ்ந்து காட்டியது


திரவமாகித் ததும்பிய நான்


என்னிடம் இருந்ததால் 

என் வடிவில் இருந்த நான்


மாலையோடு பேசித் தளிர்க்கும்

கதை

என் வடிவில் இருந்த கதை


யோசிப்பும் நின்றுபோன

மௌனம்

என் வடிவில் இருந்த மௌனம். 

அபி கண்ட ‘தெளிவு’


தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே  .

- திருமூலர்

காண்பவர்கள் எல்லாம் கண்டவர்கள் அல்ல. கண்டவர்கள் எல்லாம் அதை விண்டுசொல்ல முயன்றாலும் சொல்ல முடிந்தவர்களோ சொல்லியவர்களோ அல்ல. காண்பதற்கும் கண்டுசொல்வதற்கும், காண்பவர்களுக்கும் கண்டுசொல்பவர்களுக்கும், அணுக்கமான ஊடகமாக கவிதை எல்லா கலாசாரங்களிலும் எல்லாப் பிரதேசங்களிலும் இருக்கிறது. அதனால்தான் இருப்பின் அடிப்படையை நோக்கி, அது இன்னமும் விலக்காமல் வைத்திருக்கும் ரகசியங்களின் அந்தகாரத்தைக் கிழிக்க, மொழியின் குதிரையில் ஏறிப் பயணிக்க முயற்சித்த எந்தக் கவிஞனும், நன்மை, தீமை என்று அவன் கையாண்ட உள்ளடக்க வேறுபாடின்றி, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு சமயத்தன்மையை அடைந்துவிடுகிறான். கிறிஸ்துவை எதிர்த்து, கிறிஸ்துவைக் கிழித்து அவன் பிறப்பதற்கு முன்பாக இருந்த ஒரு மானுடத்தோடு தம்மை இனம்கண்டு கொண்ட பாதலேரும், ஆர்தர் ரைம்போவும் கிறிஸ்துவின் தன்மையை அடைவது போன்றது அது. 

தமிழ்க் கவிதையிலும் மாணிக்கவாசகர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார், பாரதி என அண்மை வரை ஓர் மரபும், நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஆனந்த், தேவதச்சன் என ஒரு புதிய மரபும் உள்ளது. இவர்களில் காண்பவர்களும் கண்டவர்களும் உண்டு. பின்னால் நான் சொன்ன புதிய மரபில் ‘கண்டவர்’ என்று துல்லியமாக கவிஞர் அபியை மட்டுமே எனக்கு இப்போதைக்குச் சொல்லமுடிகிறது. மொழி, கற்பனை, கவித்துவ உச்சம் எனக் கவிதை சார்ந்த அம்சங்களின் அடிப்படையில் இந்தக் ‘கண்டவர்’-ஐ நான் வரையறை செய்யவில்லை. அபி, கவிதை என்ற ஊடகத்தின் வழியாக வாசிப்பவனுக்குத் தரும் அமைதி, தான் கண்டதை தனது கவிதை ஊடகத்தின் வழியாக, பெரிய சேதாரம் எதுவும் இன்றி பெறுமதியோடு பரிமாற்றம் செய்துவிடும் அநாயசம் ஆகியவற்றால் அபியை ‘கண்டவர்’ என்று மதிப்பிடுகிறேன். அபியின் கவிதையை வாசிக்கும்போது, அந்தக் கவிதையில் விவரிப்பவனுக்கு நிகழ்வது எல்லாம் வாசிக்கும் எனக்கும் நிகழ்கிறது. அந்தத் ‘தெளிவு’தான் அபி ‘கண்டது’.

தெளிவு

பிம்பங்களிலிருந்து 

விடுபடவும்

என் மலையடிவார நகரின்

மாலைக்காற்று வந்து வருடவும்

சரியாயிருந்தது


என்றைக்குமில்லாமல் இன்று

பின்னணி ஓசைகள் இன்றி

முனகலின்றி

வந்து நின்றது இருள்


சாம்பல்நிறம் மாறுமுன்

விடைபெற்றுக் கொண்டது வானம்


சொல் அவிதலும்

இரவு அவிழ்தலும் 

இசைவாகின

இங்கேயும் ஒன்று உள்ளேயும் புறத்தேயும் சரியாய் இணைகிறது. 


யாருடையதென்றிலாத 

சோகம்

அரைக்கண் பார்வைபோல்

கிறங்கித் திரிந்தது


எதையும் தொட்டிராத

என் புதிய கைகள்

எங்கெங்கும் நீண்டு

எதையும் தொடாது

திளைத்தன


தனித்தலின் பரவசம்

அனுபவத்தின் கையிருப்பில்

அடங்காது

நழுவி

விரிவு கொண்டது


தெளிவு என்பது பொய்

என அறியாது

தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்

பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த

பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்.


காணும் காட்சிகள் நமக்கு அவதியைக் கொடுக்கின்றனவா என்ன? பிம்பங்கள்தான் துயரைத் தருகின்றன. பிம்பம் என்னில் விழுகிறது. என்னையும் சேர்த்துக் கொண்டு விழுவதால் என் ரத்தக்கறையும் அதில் ஏறிவிடுகிறது. காட்சி என்பது அதனளவில் நன்மையையோ தீமையையோ சந்தோஷத்தையோ துயரத்தையோ தருவதில்லை. அதனால் காட்சிகளிலிருந்து நாம் விடுபடவும் வேண்டியதில்லை என்பதை ‘தெளிவு’ கவிதையின் முதல் அடியே, கடைசி ஆணியைப் போல எனது சவப்பெட்டியை அறைகிறது. நான் சந்தோஷமாக செத்துப்போவதற்கு அதனால்தான் திரும்பத் திரும்ப அபியிடம் வருகிறேன்.

பிம்பங்களிலிருந்து 

விடுபடவும்

என் மலையடிவார நகரின்

மாலைக்காற்று வந்து வருடவும்

சரியாயிருந்தது

ஆமாம். எது முதலில் நிகழ்கிறது. எது காரணமாக எது காரியமாக இருக்கிறது. அது நடந்து இது நடக்கவில்லை. உள்ளே ஒன்று விடுபடுவதும் மாலைக்காற்று வெளியிலிருந்து வந்து வருடவும் ஒரே தருணத்தில் நிகழ்வது அதிசயமல்ல. ஆனால், அப்படி நிகழ்வது இங்கே எனக்குப் பகிரப்பட்டுவிடுகிறது. நான் அந்த அனுபவத்துக்குள் மறந்து கிறங்கத் தொடங்கிவிடுகிறேன்.

சொல் அவிதலும்

இரவு அவிழ்தலும் 

இசைவாகின

இங்கேயும் ஒன்று உள்ளேயும் புறத்தேயும் சரியாய் இணைகிறது. 

யாருடையதென்றிலாத 

சோகம்

அரைக்கண் பார்வைபோல்

கிறங்கித் திரிந்தது

என்று சொல்லும்போது உண்மையிலேயே அது சோகமானதா என்று சந்தேகம் தோன்றுகிறது. அந்தியின் பொன்னைக் கருக்கொண்ட சிவப்பில் தனிப்பட்ட துயரமோ, தனிப்பட்ட இனிமையோ மட்டுமா சேமிக்கப்பட்டிருக்கிறது. பீம்சென் ஜோஷியின் ஓங்கார குரல் எடுப்பில் ஒருவனது, ஒருத்தியினது ஏக்கமும் தாபமும் மட்டுமா குடிகொண்டிருக்கிறது. யாருடையதென்றில்லாமல் ஆகும்போது அது சோகம் மட்டும்தானா? 

அதன் போதை, விட்டு இறங்கிப் போய்விடாதே என்றல்லவா கெஞ்ச வைக்கிறது. ஆனாலும், அதைத் தாங்கிக் கொள்ள எனது தனியுடல் போதாது என்றும் தெரிவதால் அதை வெளியே வளியில் இசையாக, கவிதையாக, பெருமூச்சாக இறக்கிவிடுகிறேன். 

அப்போது அங்கே புலன்கள் எல்லாம் புதுமை கொள்கின்றன.

எதையும் தொட்டிராத

என் புதிய கைகள்

எங்கெங்கும் நீண்டு

எதையும் தொடாது

திளைத்தன.

எனக்குக் கைகள் வெட்டப்பட்டால் நான் முடவன் தான். ஆக்டோபஸுக்கு வெட்டப்பட்டால் திரும்பக் கைகள் வளரும். அந்தப் புலன்களின் புதிய கைகளைத் தான் அபி சொல்கிறார் போலும். இருள் அடையும் அந்தியை அவை எங்கேயும் தொடாது தரிக்காது திளைத்து நீண்டு சுருங்குபவை.   

தனித்தலின் பரவசம்

அனுபவத்தின் கையிருப்பில்

அடங்காது

நழுவி

விரிவு கொண்டது.

‘தனித்தல்’ என்று அபி சொல்வது எனக்குப் புதிதாக இருந்தது. தனித்திருத்தலுக்கும் தனித்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பைவிடக் குறைந்த ஓர் அனுபவத்தை அவர் சுட்டுகிறார். இருத்தலை விட மங்கலாக நுண்மையாக அது இருக்கிறது போல.  தனித்து அலைவதும் அல்ல அது. 

அனுபவத்தின் கஜானாவை எல்லையற்றது என்று அது கருதிக்கொண்டிருக்கும் இறுமாப்புக்கும் வேட்டுவைத்து, அதன் கையிருப்பிலிருந்து அடங்காது நழுவி விரிவு கொள்கிறது, ஒரு ஜெல்லி மீனைப் போல அந்தப் பரவசம்.

கவிதையின் இறுதிப்பத்தி தோட்டா போல, கபாலத்தில் இறங்குவது. தெளிவுக்கு நேரெதிராகச் சென்று, ஆனால் தெளிவது.


தெளிவு என்பது பொய்

என அறியாது

தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்

பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த

பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன். 

அபி மறுவரையறை செய்யும் பரட்டை

 அபியின் ‘மாலை’ வரிசைக் கவிதைகளில் பரட்டை என்ற தலைப்பும் பரட்டை என்பதற்கு சேர்க்கும் உருவமும் அர்த்தங்களும் என்னை மிகவும் ஈர்த்தது.

புழுதி பறக்க அடிக்கும் ஆடிமாதக் காலம் நெறுநெறுவென்று வெளிப்படுகிறது அபியிடம். 

வெளி வீடு ஆகி கூரை வீட்டின் அரண் ஆக ஆன அர்த்தத்தை மீண்டும் ஆடிமாதக் காற்று கலைக்கிறது; இங்கே அது விபரீதமாக, வாழ்வின் பறிபோதலாக அல்ல. கூரைகளும் சுவர்களும் எங்கோ சரித்திரத்தின் சுழிப்பில் சிறையாகி விட்டது போலும். கூரைகளின் கீழ் நெரிந்து கிடந்தவை அதுவரை பேச முடியாததை பேசியிராததைப் பேசிப் பறக்கிறது.

எது நாம் காணும் காட்சியை, நம் மனத்தில் நிலையென்று நினைத்த காட்சியை மாற்றுகிறதோ தலைகீழாக ஆக்குகிறதோ அங்கே நாமும் தலைகீழாகிறோம் சுழல்கிறோம். 

ஒட்டுமொத்த இடத்தை நினைவை அதைச் சுற்றி நாம் எழுப்பிய வரலாற்றை, தேசத்தை புழுதித் துகள்களாக மாற்றும் ஆக்கும் காற்று அபியின் காற்று. தன் நிலத்தை இழந்த துகளுக்கு இருட்டைத் தவிர விரிக்க ஒன்றுமில்லை. 

எல்லாம் பரத்திப் போடப்படும்போது, அங்கே பரட்டை தோன்றுகிறது. பரட்டை என்பது சமூக அர்த்தத்தில் வெளியிலிருப்பவன், விலக்கத்துக்குள்ளாகும் இயல்புகளைக் கொண்டவன், மையத்துக்கு வருவதற்கான பண்பட்ட நடத்தைகள் இல்லாததை வாராத படியாத பரத்திய தலைமுடி மூலமே தெரியப்படுத்துபவன். 

ஆடிக் காற்றின் புழுதியோ எல்லாரையும் எல்லா நிலங்களையும் சில கணங்கள் பரட்டையாக்குகிறது. பரட்டைக் காற்றோடு வறண்ட மாலையும் சேர்ந்து கொள்கிறது. 

எனது ஊரில் சிவந்திப்பட்டி மலையின் பின்னணியில் ரோஜா நிறப் பின்னணியில் அடிக்கும் புழுதிக் காற்றும் என்னையும் தன்னையும் சுழற்றும் நிலமும் ஞாபகத்துக்கு வருகிறது. 

முன்பின்கள் கலைந்து 

முறையென்று ஆகிய பரப்பின் மீது

சொல் கலைந்து வீசிய சூறையை

அளைந்து பேசுவதற்கா?

வரமாட்டேன்

முன்பின்னாக எவை கலைகின்றன? எண்ணத்தையும் நினைவுகளையும் கருத்துகளையும் அர்த்தங்களையும் தவிர கலைவதற்கு நம்மிடம் என்ன இருக்கின்றன? வரமாட்டேன் போ என்று சொல்வது மறுப்பாகத் தெரியவில்லை. ஊடலாகவும் அன்பின் இசலல் உறவாகவும் தெரிகிறது. ஆனால் அந்தப் பரட்டையோடு பேசும் பேச்சு நாம் அறிந்த அர்த்தமுள்ள பேச்சு அல்ல. சுத்தமாய் வெறுமையாய்க் குருட்டொலிகளால் ஆன பேச்சாம் அது. 


பரட்டை என்ற உருவத்துக்கு நாம் கொடுத்திருக்கும் இதுவரையிலான அர்த்தம் மாறுகிறது. பரட்டை என்பதின் மேல் பரிவான புரிதலை நோக்கி நமது பார்வையும் விரிகிறது.

அங்கே எப்போதும் கலையாதிருக்கும் ஒரு கருமணல் விரிவைக் காணத் தருகிறார். அங்கே ஒலி, வெளியின் மீது அலாதியான தாக்கத்தைச் செலுத்துகிறது. வெடியோசை ஒரு இடத்தின் பொருண்மையை மாற்றுகிறதுதானே. 

ஆனால் இந்தக் குருட்டொலிக்கு எங்கிருந்து அப்படிப்பட்ட சக்தி வந்தது. 

மாலை -- பரட்டை

நெறுநெறுவென்று பேசும்

ஆடிமாதம்


கூரைகள் பறக்கும்; கூடவே

கூரைகளின்கீழ் நெரிந்து கிடந்தவை

என்றும் பேசியிராததைப்

பேசிப் பறக்கும்


செம்புழுதி கலந்து சிவக்கும் என்

சுழற்சிகள்

கண்காதுகளில் நிறைகின்றன

00

ஒருதுகள் மிஞ்சாமல்

பறந்து போய்விட்ட

முதிய பொட்டல்வெளி

மெல்லிய இருள் விரித்து,

'அமர்ந்து பேசலாம் வா'

என்கிறது


பரட்டையாய் வறண்ட மாலை

இட்டுச் செல்கிறது

நான் திரும்பும் போதெல்லாம்

வழிவிட்டு விலகி


'முன்பின்கள் கலைந்து

முறை என்று ஆகிய பரப்பின்மீது

சொல் கலைத்து வீசிய சூறையை

அளைந்து பேசுவதற்கா?

வரமாட்டேன்'


ஆயினும்

பரட்டையோடு மட்டும் பேச்சு

எனக்குண்டு

சுத்தமாய் வெறுமையாய்க்

குருட்டொலிகளால் ஆன பேச்சு

00


குருட்டொலிகளின்

அலைவீச்சில்

யுகயுகமாய்ச் சேகரமான

வேறொரு

கருமணல் விரிவு


கலையாதிருப்பது

கருமணல் விரிவு மட்டுமே 

அபியின் அ-புண்ணியர்கள்

 

அபியின் 'தெருவில் நாம்' கவிதையில் முகம், உடல் இல்லை. முகங்கள், உடல்களின் தொகுதி  சினிமாவாக விரிகிறது. தொகுதியாகும் போது தனியியல்பு அனைத்தும் பிரமாண்டம் கொள்கிறது. 

தீர்மானத்தின் வலு கொண்டு வரையப்பட்ட கவிதை இது. வருவோம் போவோமாய்த் தெருவை நிறைப்போம் என்று சொல்லும் ஆட்கள் அல்ல செயல்களாகத் தெரிகிறது. 

தெரு கனத்துத் திகைக்க அவர்கள் நிறைகிறார்கள், ஏணியில் ஏறத்தொடங்கும் சித்திரம் நம்முன்னர் வரையப்படுகிறது. வாசல், திண்ணை, படிகளில் வான்வெளி முழுவதும் நெரிந்து பெருகுவோம் என்ற தீர்மானம் அந்தச் செயலில் இருக்கிறது. 

பிம்பங்களும் குரல்களும் பார்வைகளும் எண்ணங்களும் பாவனைகளும் சாயைகளுமாய் அடையாளம் குலையாது அடர்ந்து செறிவோம் என்று சொல்லும்போது முரண் ஏற்படுகிறது. இத்தனையும் சேர்ந்தபிறகும் மிஞ்சும் சுயம்தான் எது அய்யா?

காலம் ஒற்றியெடுத்துப் பரிமாணங்களுள் அடைத்த நகல்கள் அழித்த பின்னரும் அழியாத அசல்களாகத் தெருவை நிறைக்கும் அந்த ஆசை எந்த சுயத்தின் ஆசை?

கேள்விகள் தோள்களில் பற்றித் தொடரத்தான் செய்யும் ஆனாலும் எங்கும் இல்லாதிருந்து எங்கும் வருவதும் போவதுமாய் தெருவை நிறைக்கத்தான் வேண்டும். 

பாற்கடலில் அமுது எடுக்கும் சித்திரம் கவிதையின் இறுதியில் வருகிறது. அங்கேயும் திரிதல் நடக்கிறது. 

நஞ்சின் திரிதல் அது. திளைப்பு தான் நஞ்சாகத் திரிகிறதா? 

போக்கும் வரவும் இல்லாத புண்ணியர்கள் அல்ல அந்தக் கவிதையில் வருபவர்கள். அவர்களிடம் நமதின் சாயலும் உள்ளது. போக்கும் வரவும் அந்த வழியில் பிம்பங்களும் குரல்களும் பார்வைகளும் எண்ணங்களும் பாவனைகளும் சாயைகளும் நெரிக்கும்போதும் அடையாளம் குலையாதிருக்க ஏங்கும் அ-புண்ணியர்களின் பயங்கர கணங்கள் வன்மையாகத் தெரியும் படம் இந்தக் கவிதை.  

இந்தக் கவிதையில் கவிதையைச் சொல்லும் தரப்புக்கு மோதுவதற்கும் சேருவதற்கும் இன்னொரு தரப்பு ஒன்று உள்ளது. அவர்களுக்கு முகம் உள்ளது. அவர்கள் யார் என்று எனக்குத் தெளியவில்லை.  

தெருவில் நாம்

வருவோம் போவோமாய்த்

தெருவை நிறைப்போம்


தெரு கனத்துத் திகைக்க

படிகளில்

வான்வெளி முழுவதும்

நெரிந்து பெருகுவோம்


பிம்பங்களும் குரல்களும்

பார்வைகளும் எண்ணங்களும்

பாவனைகளும் சாயைகளுமாய்

அடையாளம் குலையாது

அடர்ந்து செறிவோம்


ஜன்னல் கதவை

ஒருக்களித்துத் திறப்போர்

முகங்களில் அறைவோம்


தெருவிலிறங்கி நடக்கத் துணிவோரை

மொய்த்துக் கொண்டு

பரவச மூட்டுவோம்


காலம் ஒற்றியெடுத்துப்

பரிமாணங்களுக்குள் அடைத்த

நகல்கள் அழிந்த பின்னும்

அழியா அசல்களாய்த்

தெருவை நிறைப்போம்


தெரு கனத்துத் திகைத்து அமிழ

கேள்விகளை

உதறி விசிறி விடுவோம்

நிரந்தரமாக அவை

தோள்களின் மீது

தொற்றித் தொடர


எங்கும் இல்லாதிருந்து

எங்கும் 

வருவோம் போவோமாய்த்

தெருவை நிறைப்போம்


தீர்மானங்களைக் 

கடைந்து எடுத்துவிடாத

சுழற்சி

திளைப்பு என்றில்லாத

திரிதலில்

தெருவை நிறைப்போம்


அபியின் மலைக்கு வேர் உண்டு


பொருட்கள், உறவுகள் தமது கனப்பரிமாணம், நிறங்கள், வாசனைகளைப் படிப்படியாக என்னிடத்தில் இழக்க ஆரம்பிக்கும் போதே, பரிச்சயம் கூடக் கிட்டாமல் ஆழத்து மூலையில் கிடந்த அபியின் கவிதைகள், வெகுகாலம் கழித்து, என்னை அணுகி நெருங்கத் தொடங்குகின்றன. எனக்குத் தெரிந்த உலகத்தின் மறுபுறத்தை, அந்த உலகில் நிகழும் வேறு அனுபவங்களை அதையெல்லாம் விட அங்கேத் துள்ளித் துடிக்கும் உயிர்த்தன்மையைப் பரிச்சயம் கொள்வதற்கு எனக்கு இத்தனை நாட்கள் தேவையாக இருந்திருக்கின்றன. 

அபியின் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கும் நகுலனின் கவிதையையே துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது நகுலனின் யாருமற்ற இடத்தில். அபியின் இடமோ யாரும் இருக்க முடியாத இடம்; என்ன நடக்கிறது என்று இருப்பாக இருந்து பார்க்க முடியாத அளவு நுண்ணிய இடம் அபியின் இடமாகத் தோன்றுகிறது. இங்கு நடப்பது எல்லாம் அங்கும் நடக்கிறது. இங்கு நடப்பதின் பிரமாண்டம் அங்கும் இருக்கிறது. ஆனால் பிறப்பு - இறப்பு, குணம் - குற்றம், வெற்றி- தோல்வி ஆகிய பிரிவினைகள் இன்றி அந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அபியின் சாயங்காலத்தில் மயங்குகின்றன. 

அந்தச் சாயுங்காலம் தொடங்கும் போது, இந்த உலகத்திலிருந்து தான் தொடங்குவதைப் போன்ற சாயல்களை தோற்றத்தை அபி எழுப்புகிறார்.

‘மாலை - என் மலை’ கவிதையில் 

வாசலில்

சிறுசிறு சந்தடிகளுடன் இசைந்து

வெளிச்சம் குறைந்துகொண்டுவரும்


தொடுதல்களைக்

கணக்கிட்டுக் கொண்டிருக்கும் இருப்பு

மங்கியும் தெளிந்தும்

ஒருநிலையற்று இருக்கும்


வெளியேறத் துடிப்பேன்


ஆனால் எப்படி?


கதவு சுவர் கூரை எலாம்

வெளிஏறி மறைந்துபோயிருக்கும்


எனத் தொடங்குகிறது.


வாசலில் வெளிச்சம் படிப்படியாகக் குறையும் சாயங்காலத்தின் சிறுசிறு சந்தடிகளையும் கேட்டும் பார்த்தும் உணரும் ஒன்று தான் சாயங்காலத்தை உரைக்கத் தொடங்குகிறது. தொடுதல்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் இருப்பாக மங்கியும் தெளிந்தும் நிலைகொள்ளாமல் வெளியேறத் துடிப்பேன்? ஆனால் எப்படி என்று கேள்வி கேட்கும்போது நபர் ஆகிவிடுகிறது. 

அந்த நபர் நமக்குத் தெரிந்த நபரா?

வெளியேறுவதற்குத் துடிப்பதெனும்போது முதலில் நமது உடல் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், அபியில் கதவு சுவர் கூரை எல்லாம் வெளியேறி மறைந்துபோகிறது. 

எல்லாம் வெளியேறிய பிறகும் வெளியேறாத ஒன்று அடுத்து தெரியவருகிறது. வெளியேறுவதற்குத் துடித்த ஒன்று அடங்கியதாகத் தெரிகிறது. 

வெளியேறுதல் 

இல்லை என்று ஆனபின்

எனக்காகக் காத்திருந்த என்மலை

சற்று அசைந்து

குவடுகளால்

எனதொரு எல்லையை வருடும்


இங்கே படரும் இருளைச் 

சிறிது சுண்டினால் கூட

என்மலை எனக்குப் பதில்சைகை தரும்.

எனக்கு இன்னொரு எல்லையை என் மலை காண்பிப்பதற்கு, அந்த மலை சின்னதாகச் சுண்டினால் கூட முழுமையாகப் பதில் அளிப்பதற்கு வெளியேறுதல் இல்லையென்பதை நான் அறியவேண்டியிருக்கிறது. இருப்பின் அநிச்சய பாவத்தில் இது எது ஒரு சுகம் என்று சொல்லக்கூடிய சுகம் இருக்கிறது. 

இப்படித்தான் என்று

நிதானமாகப்

பிறந்து கொண்டிருப்பேன்

எனது மலைவேரின்

ஒரு சிறு நுனியிலிருந்து.

மலைக்கு வேர் உண்டா. அபி காண்பிக்கும் உலகில் உள்ள மலைக்கு வேர் உண்டு. எனதின் உனதின் வெளியேறாத பொருளால் பண்பால் ஆன அந்தப் பழைய மலையின் வேர்நுனியில் நான் நிதானமாகப் பிறந்துகொண்டிருப்பேன்.

பிறந்துகொண்டே இருக்கும் நீண்ட ஓர் பிறப்பல்ல அது. நிதானமாக தொடர்ந்து உயிர்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.          

     

   

ஊழிதான்; ஆனால் அது அபியில் இனிமை கொள்கிறது

 


அபியின் ‘மாலை - காத்திருத்தல்’ கவிதையின் துவக்கமே வன்மையாக உள்ளது. ‘விஷப்புகை மேவிய வானம் மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது’ அரண்ட ஓலமாகத் தொனிக்கிறது. அபியின் தாண்டவமும் நாடகமும் உச்சமாகக் கொண்ட கவிதைகளில் ஒன்று இது.

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு மின்னி இடித்து வெறியோடு வருகின்றனவாம், அல்ல அல்ல அல்ல என்று. அறிந்தவையின் மறுபுறமோ இன்னும் பயங்கரம் போலும். 

அடர்வனங்களின் குறுக்கும் நெடுக்குமாக ஆவேசக் காட்டாறுகள் பதறி ஓடி வாழ்வைப் பயிலும் எனும்போது குறுக்கும் நெடுக்குமாக பதறி ஓடி ஆவேசக் காட்டாறுகள் பிரமாண்ட ரூபம் கொள்கின்றன. ஆனால், அவை வாழ்வைப் பயில்கின்றன என்று சொல்லும் போது, அந்த ஆவேசக் காட்டாறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரப்பாகவும் இருக்கலாம் என்று மிக நுண்மை காட்டுகின்றன.

அகண்டம் ஒரு புதிய விரிவுக்குத் தயாராக உண்டு, இல்லையின் கபாலம் உடைபடத்தான் வேண்டும். தாமதமென்றாலும் சுந்தர ராமசாமி சொல்வது போல சிதறடிக்கப்பட வேண்டிய கபாலங்கள் தான் அவை.

இனிமேல்தான் கவிதை, விஷத்திலிருந்து அமிர்தத்துக்கு, ஊழியிலிருந்து துவக்கத்துக்கு புறத்திலிருந்து அகத்துக்கு குணப்படத் தொடங்குகிறது.

காத்திருக்கிறேன்

இதுவே சமயமென

எனது வருகைக்காக

ஆமாம். தீர்க்கதரிசிகளின் வருகைக்காக, மனுஷகுமாரனின் வருகைக்காக, தேவனின் வருகைக்காகக் காத்திருந்த ஓர் உலகம் சிதறி விட்டது. 

அறிந்தவையின் விஷப்புகையால் மயக்கம் கொண்ட செடிகொடிகளையும் தெளிவித்து அகாலத்தில் சிறைப்பட்டிருக்கும் மாலைப்பொழுதையும் விடுவித்து காத்திருக்கிறேன் என் வருகைக்காக.

காத்திருக்கிறேன் 

மறுபுறங்களிலிருந்து

வெற்றி தோல்வியின்றித் திரும்பும்

என் வருகையை எதிர்நோக்கி

அறிந்தவையின் மறுபுறங்களில் இந்தக் காத்திருப்பு நிகழவில்லை. இந்த ‘மறுபுறம்’ எதுவென்று கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால் அங்கே வெற்றி தோல்வி இல்லை என்பது மட்டும் தெரிகிறது.


மாலை - காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்

மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது


அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு

மின்னி இடித்து

வெறியோடு வருகின்றன

அல்ல அல்ல அல்ல என்று

பொழிந்து பிரவகிக்க

அழித்துத் துடைத்து எக்களிக்க

வருவது தெரிகிறது


அடர்வனங்களின்

குறுக்கும் நெடுக்குமாக

ஆவேசக் காட்டாறுகள்

பதறி ஓடி

வாழ்வைப் பயிலும்


உண்டு - இல்லை என்பவற்றின் மீது

மோதிச் சிதறி

அகண்டம்

ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது


000

காத்திருக்கிறேன்

இதுவே சமயமென

எனது வருகைக்காக


என் குடிசையில் வாசனை தெளித்து

சுற்றிலும் செடிகொடிகளின்

மயக்கம் தெளிவித்து

அகாலத்திலிருந்து 

இந்த மாலைப்பொழுதை விடுவித்து.


காத்திருக்கிறேன்

மறுபுறங்களிலிருந்து

வெற்றி தோல்வியின்றித் திரும்பும்

என் வருகையை எதிர்நோக்கி

000 

காலமும் நீங்கும் தொல்பொருள் -அபி

 

அபியின் ‘மாலை’ வரிசைக் கவிதைகளைப் படிக்கும்போது அந்தக் கவிதைகளையும் அவற்றை எழுதிய அபியையும் காலமும் நீங்கும் தொல்பொருள் என்று உணர்ந்தேன். 

‘மாலை - மாற்றுருவம்’-ல் காலம் பருவுடல்களாகத் தோற்றம் கொள்கிறது. பெருமூச்சொலி ஒளியுடன் வினைபுரிகிறது. 

ஆமாம், மழையில் ஒப்பாரிக் குரல் உட்பட எல்லாம் மூழ்கித்தான் இருக்கின்றன- சித்தார்த்தன், ஆற்றில் எல்லாருடைய எல்லாவற்றின் ஓசையையும் கேட்பது போல.

நான் எனது இருபது வயதின் தொடக்கத்தில் கழிப்பறையில் குழாய் நீர் சத்தத்தில் என் அம்மா அப்பாவுடன் கூக்குரலிட்டு அழும் சத்தத்தைத் திடீரென்று கேட்டிருக்கிறேன். பைப்பை மூடியதும் வீட்டின் நிசப்தம் தற்காலிக ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. தூறல் தர்க்கிக்கத்தான் செய்கிறது.

நினைவு தரும் புழுங்கல் இதம்; பெயர் இல்லாத தவிப்பு ஒரு இதம்; இன்னும் மொழியாகாமல் உயிர்வேதிப் பாகு கொப்பளித்துக் கொண்டிருக்கிறதா? 

தவிப்பைத் தவிர என்னால் சுயமாக உருவாக்கிக் கொள்ளக்கூடிய சிறந்த உயிர்ப்பொருள் வேறெதுவும் உண்டா?

மாலைக்கும் வந்து படர்வதற்கு மாற்று இடம் இல்லை. எனக்கும் பற்றிக் கொள்ள மாலையைத் தவிர வேறெதுவும் இல்லை. 

ஏனெனில் நான் மிக ஏழை.

எனக்கு மாற்றுருவமும் இல்லை; மாற்றுடையும் இல்லை. 


மாலை - மாற்றுருவம்


வீட்டு வாசலைத்

தொட்டுத் ததும்பிய மழைவெள்ளம்


முன்பொரு சமயம் கேட்ட

நள்ளிரவு ஒப்பாரிக் குரல்

கரைந்திருந்தது அதில்


மூழ்கினவை என

ஆளற்ற பேச்சுக்குரல்கள்,

மழையோசையுடன் போட்டியிட்டுக்கொண்டு


நனைந்து 

மாற்றுடையின்றி

மாற்றுருவமு மின்றி

இருந்தேன்.


ஓயாது தர்க்கிக்கும் தூறல்


கசங்கிக் கலைந்து கிடக்கும்

நாட்களின் குவியலிலிருந்து

எழும் புழுங்கல் வெப்பம்

இதவு


மாட்டுக் கொட்டகையிலிருந்து

சிற்றிருளை உராய்ந்துகொண்டு வரும்

பெருமூச்சு

ஆசுவாசம்


தலைப்பில்லாத ஒரு தவிப்பு

தவிப்பின் தனி இதம் 


நனைந்து

மாற்று இடமில்லாதிருந்த

என் மாலையைப் பற்றிக்கொண்டு

மாற்றுருவம் இல்லாதிருந்த நான்


அபி ஊர்

 சென்னையில் நான் பார்த்திராத அபூர்வக் காட்சி அது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகான நாள். ப்ரவுனியை சாயங்கால நடைக்கு அழைத்துச் செல்லும் சீதாபதி நகர் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் முனையில், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இன்றுவரை இயங்காத இஸ்திரி வண்டிக்குப் பக்கவாட்டில் இருக்கும சிமெண்ட் பலகை இருக்கையில் மூன்று மூதாட்டிகள் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்கள். யார் வீட்டுக்கும் சொந்தமில்லாமல், வேப்பமரத்தின் நிழலில் அமைந்திருக்கும் இருக்கை அது. மூன்று பாட்டிகளும் வெற்றிலை போட்டு சாயங்காலத்துக்குள் விரைந்து கொண்டிருக்கும் பொழுதில் சன்னமாக ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடுகளில் பணிசெய்யும் மூதாட்டிகள் அவர்கள். இருக்கையின் ஓரத்தில் பையில் கரும்பு இருந்தது. அவர்கள் முகங்களில் இருந்த சுருக்க ரேகைகளும் மூக்குத்தியும் அசைபோடும் வாயும் வேப்பமரமும் சேர்ந்து அங்கு ஏற்படுத்தியிருந்த அமைதியும் அந்த இடத்தை விச்ராந்தியாக  ஆக்கியிருந்தது. அந்த மூன்று பெண்களும் வேப்பமரமும் அதிலிருந்து உதிர்ந்த இலைகள் படிந்த தெருவும் படர்ந்து கொண்டிருந்த மாலையும் நகரத்துக்கு வெளியே இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதற்குப் பிறகு தற்செயலாகப் படிக்கத் தொடங்கிய அபி கவிதைகளில் ‘மாலை - ஊர்’ என்ற கவிதையைப் படித்தேன். ‘பொழுதின் நினைவும் நினைவின் பொழுதும் இடைச்சுவர் தகர்ந்து ஒன்றினுள் ஒன்றாகி ஊர் ஆகின்றன’ என்று அதில் எழுதியிருந்தார். எனக்கு ஏற்பட்ட உணர்வு தொடர்பில் கூடுதல் புரிதலை இந்தக் கண்டுபிடிப்பின் வழியாக ஏற்படுத்துகிறார். பொழுதின் நினைவு என்று சொல்லும்போது புரிவது போன்று இருப்பது நினைவின் பொழுது என்று சொல்லும்போது தோன்றிப் புரிந்து மயங்கிவிடுவதாக இருந்தது. அரூபம் திரையிட்டு விடுகிறது. பொழுதின் நினைவிலும் நினைவின் பொழுதிலும் இருக்கும் அந்த மூன்று பெண்கள் அந்த இடத்தை ஊராக்குகிறார்கள் போல. யாதும் ஊர் ஆவது அது. அபி கண்ட ஊர் அது. அந்த இடத்தை உற்றுப்பார்த்தால் அது எவருடைய ஊரும்தான்.  

விசுவாச வாலசைப்புகள் பின்தொடர என்று அபி எழுதும்போது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர் நாயென்று சொல்லவில்லை. வாலசைப்புகள் என்று சொல்கிறார். ஒரு வால் அசைப்பா அது. அதில் என்னுடைய ப்ரவுனியின் வாலசைப்பையும் காணமுடிகிறது அதில். 


மாலை - ஊர்

அபி


வேட்டைக்குப் போனவர்கள்

திரும்பி வருகிறார்கள்

மான் முயல்கள் வேறேதோ பிராணிகளைச் சுமந்து

விசுவாச வாலசைப்புகள் பின்தொடர

தாரை தப்பட்டை முழங்க

பந்தங்களின் வெளிச்சத்தில்

எவர் வெற்றியிலோ எவரெவர் சோர்வுகளோ

மழுங்கித் தெரிய.

000


மாலைநேரம் சுறுசுறுப்படைகிறது

இருந்த இடத்திலேயே.

முடிவின்மையின் சேமிப்புக்கு

ஒருபுள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது

000

சிறுவர்கள் என்ற எங்களின் விளையாட்டினுள் நுழைந்து

வியர்வையைச் சீண்டிய

விநோதக் கனவு மயம்…

000

இருள் பூசப்பூச

மரங்களும் கூரைகளும் குட்டிச் சுவர்களும்

முகங்களும் அவற்றின் உரையாடல்களும்

கனத்து

யுகாந்திரங்களின் ரகசியம் அழுத்தி

மயங்குகின்றன

ஊர் மேடிட்டுக் கொள்கிறது

யாதும் ஊர் ஆகிறது

பகல்வேனிலின் சீற்றம்

அலறிப் புடைத்த ஆவேசம்

மூலைகளை மோதி அசைத்த காற்று

யாவும் ஊர் ஆகின்றன

பொழுதின் நினைவும்

நினைவின் பொழுதும்

இடைச்சுவர் தகர்ந்து

ஒன்றினுள் ஒன்றாக

ஊர் ஆகின்றன


பேசுவதற்கு என்ன இனி

தணிந்தடங்கிய யாவும் இதோ

ஊர் ஆகின்றன


உலக உருண்டை உருவிலகி 

ஊர் ஆகிறது

ஊர் 

தன் மிகச்சிறிய புள்ளியில். 

000

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...