இராசபாளையம் சுதந்திரச் சிந்தனையின் 34 ஆவது நிகழ்வு 28.03.2021 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுதந்திரச் சிந்தனையின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.நரேந்திரகுமார்,
வேலாயுதம் பொன்னுச்சாமி,
தம்பி அருண் ஆகியோர் அபியின் கவிதைகள் குறித்து ஆழமான உரையாற்றினர்.
அதன் பின்னர் கவிஞர் அபி உரையாற்றினார்.
பின்னர் தனது கலந்துரையாடலும், தனது கவிதைக்கு தானே விளக்கம் அளிக்கவும் செய்தார்.

கவிஞர் அபி உரை
நீங்கள் அனைவரும் குழந்தைப் பருவத்தில் கவிஞர்களாக இருந்தீர்கள். குழந்தைகளின் உலகம் மாசுமருவற்ற கவிதைகள் நிரம்பிய உலகம். அந்தக் குழந்தைகளுடைய பாவணைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என் வீட்டிற்குள்ளேயே ஒரு சின்ன உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஒரு நாள் வெளியிலே அளைந்து திரிந்துவிட்டு களைப்போடு வீடுதிரும்பினேன். என் பேத்தி மூன்று வயதிற்கு உட்பட்டவள். வேகமாக வந்து அப்பா (தாத்தா) என்று கையை நீட்டினால். அடடா சாக்லேட் வாங்க மறந்துபோச்சே. என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அப்போது அபி ஆகிவிட்டேன். என்னுடைய சட்டைப் பைக்குள் கையை விட்டு வெளியே எடுத்து அவளது கையில் வைத்தேன். ஒரு வினாடியில் அவளது முகம் மாறிவிட்டது. தன் கையை மூடிக்கொண்டாள். மீண்டும் கையை விரித்து சாக்லேட்டை உரித்துக்கொடுங்கள் என்று கையை நீட்டினால். நானும் அவளது பாவணைக்கு மதிப்புக் கொடுத்து உரித்து, இரண்டையும் தனித்தனியாகக் கொடுத்தேன். மிட்டாயை ஒருகையில் வாங்கிவிட்டு, ஞாபகமாகத் தாளைக் கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டு வந்தாள். மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டாள். அதோடு கதை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாள். எவ்வளவு கிண்டல் பாருங்கள். இந்தக் குழந்தையைவிட வேறு கவிதை என்ன இருக்கிறது. குழந்தையிடத்திலே கவிதை இல்லை என்று சொல்லமுடியுமா? குழந்தைகளிடத்துள்ள பாவணை மிகப் பெரியது. பாவணை என்பதே மிகப் பெரிய விசயம். பாரதி புதுச்சேரியில் குள்ளச்சாமி என்ற ஒரு சித்தரைப் பார்த்தார். அந்தக் குள்ளச்சாமி பிச்சைக்காரன்தான். தெருவில் திரிகின்றவன். அழுக்கு மூட்டைகளை சுமந்துகொண்டு திரிபவன். ஒரு முறை அவனைப் பார்த்து உன்னை சித்தன் எங்கிறார்கள்; பெரியவன் என்கிறார்கள்; பாவணையால் பரவெளிக்கு மேலே தொட்டவன் என்கிறார்கள்; இப்படிக் குப்பைக் கூழங்களையெல்லாம் சுமந்துகொண்டு திரிகிறாயே என்று கேட்டபோது, அவன் எளிமையாகப் பதில் சொன்னான். பாரதிக்கு மண்டையில் அடிக்கிறதுபோல். நான் குப்பைகளை வெளியில் சுமக்கிறேன். நீ உள்ளே சுமக்கிறாய் என்று. அந்தக் குள்ளச்சாமி பாவணையால் பரவெளிக்குமேலே தொட்டவர் என்கிறார் பாரதியார். பாவணை என்றால் என்ன? பாவணை என்பது நான் இன்னொன்றாகப் பாவித்துக்கொள்ளுதல் அல்ல. நான் உங்களில் ஒருவனாகப் பாவித்துக்கொள்ளுதல். வெளியில் இருப்பவராகப் பாவித்துக்கொள்ளுதல். ஒரு கடலாகப் பாவித்துக்கொள்ளுதல். ஒரு மலையாகப் பாவித்துக்கொள்ளுதல். ஒரு தூசியாகப் பாவித்துக்கொள்ளுதல். இது அல்ல பாவணை. எல்லாப் பொருளையும் தன் சொந்த அனுபவத்திற்குள் கொண்டுவந்து, அந்த அனுபவத்தில் அந்தந்தப் பொருள்களுக்குரிய இடத்தில் அதை அமைத்துப்பார்ப்பதுதான் பாவணை. பாவணைக்கு நீங்கள் வெளியே போகவேண்டியது இல்லை. குழந்தைகள் வெளியே போனது இல்லை. பாவணைகளைத் தங்களுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘குட்டி இளவரசன்’ என்றொரு குறுநாவல். அது ஒரு /பிரென்ச் நாவல். சிபிராம் மொழிபெயர்ப்பில் வந்தது. நான் ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படித்துவிட்டு, அதை என்மாணவர்களுக்கு அதைக் கட்டாயம் படிக்கவேண்டும். அதைப் பற்றிய கருத்தினைக் கூற வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தேன். அது ஒரு பாலைவனம் அந்தப் பாலைவனத்தில் தனி விமானி தன்னுடைய விமானத்தைத் தனியே இயக்கி, தனியாக வந்திருக்கிறான். அது எஞ்சின் கோளாறு காரணமாக தரையிறக்கிவிட்டான். ஒரு ஏழெட்டு நாட்களுக்கு அவருக்கு நீரும் உணவும் இருக்கிறது. அதற்குள் அவர் அதை சரிசெய்ய வேண்டும். மும்முரமாக அதை சரிசெய்துகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் தொட்டது போல் தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் சின்னஞ் சிறுவன். அவனது தோற்றம், உடை அமைப்பைப் பார்த்தால் அது ஒரு இளவரசனின் தோற்றம். அவன்தான் குட்டி இளவரசன். அவன் எங்கிருந்து வாந்தான், எப்படி அங்கு இருந்தான் என்பதெல்லாம் நாவலில் வரவில்லை. வரவேண்டியதும் இல்லை. நாவலின் தளமே வேறு. அது பாலைவனம். நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டபோது நான் பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் இருக்கிறேன் என்கிறான் அந்தப் பையன். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை வளர்கிறது. ஒரு நாள் கேட்கிறான். எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி ஓவியம் வரைந்து கொடுக்க வேண்டும் என்று விமானியிடம் கேட்கிறான். விமானி வேலையோடு வேலையாக ஒரு தாளில் ஒரு ஆட்டுக்குட்டியின் படத்தை வரைந்து கொடுக்கிறார். அவன் வாங்கிப் பார்த்துவிட்டு இது என்னுடைய ஆடு இல்லை என்கிறான். திரும்பவும் வேறு ஒன்று வரைந்து கொடுக்கிறார். அதுவும் என்னுடைய ஆடு இல்லை என்கிறான். நான்கைந்து படங்கள் ஆகிவிட்டது. அந்தப் படங்களையெல்லாம் நாவலில் போட்டுக்காட்டியிருப்பார்கள். அதற்குப் பின் என்னசெய்வதென்று விமானிக்குத் தெரியவில்லை. இறுதியாக அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. கடைசியாக ஒரு படம் வரைந்து கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவுடன் குட்டி இளவரசன் குதித்தான். ஆஹா நான் என்னுடைய ஆட்டைப் பார்த்துவிட்டேன். படத்தில் என்ன இருக்கிறது என்றால் ஒரு தகரப் பெட்டி. மூடி போட்டு முடப்பட்டிருக்கின்றது. அதில் எப்படி ஆடு. அவன் கண்டுகொண்டான். விமானி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் அவன் கண்டுகொண்டான். இதற்குள்தான் என்னுடைய ஆடு இருக்கிறது என்று கண்டுகொண்டான். அது என்ன குழந்தையா? இல்லை, அது கவிதை. அது கவித்துவம். தன்னுடைய ஆடு வெளியில் இருக்கின்ற எந்த ஆட்டையும்போல் இல்லாமல் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் ஆடு நல்ல எனக்குரிய ஆடு என்று கற்பனை செய்துகொள்கிறான். அது கற்பனையே அல்ல. அதுதான் பாவணை. அதோடு இன்னொன்றும் சொல்கிறான் நல்லவேளை பெட்டிக்குள் வைத்திருக்கிறீர்கள். வெளியில் விட்டால் நான் வளர்த்திருக்கிற இந்தப் பூசசெடிகளைத் தின்றுவிடும் என்றுவேறு சொல்கிறான். இதேபோல்தான் குழந்தைகள் சின்ன வயதிலேயே கவித்துவத்திற்கு ஆட்பட்டுவிடுகின்றன. போர்ஹே என்ற பெரிய எழுத்தாளரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிகச் சிறந்த எழுத்தாளர். அவருடைய வாழ்க்கையையும் படைப்பையும் பற்றி எஸ். இராமகிஷ்ணன் ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் போர்ஹேயின் சிறு வயது அனுபவம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். போர்ஹே சிறுவனாக இருந்த போது அவனது சிறிய அறையில் பேச்சுக் குரல்கள் பெற்றோர்களுக்குக் கேட்டுள்ளது. பெற்றோர்கள் அவனை மிகச் சுதந்திரமாக விட்டுள்ளார்கள். அவன் வெளியே வந்தபிறகு அவனிடம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாயே யார் அது? என்று கேட்டார்கள். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் என்று சொன்னான். சிறிது நாட்கள் சென்ற பின்பு அந்தப் பேச்சுக்கள் நின்று விட்டது. அப்பொழுது அந்தப் பெற்றோர்கள் கேட்டார்கள். என்ன உன்னுடைய நண்பர்களின் பேச்சுக்கள் கேட்கவில்லையே ஏன் என்று. அதற்கு அவன் என் நண்பர்களை எனக்குப் பிடிக்கவில்லை. போகச்சொல்லிவிட்டேன் என்றான். உண்மையில் நடந்தது என்னவென்றால் அங்கு யாருமே வரவில்லை. நண்பர்கள் வந்ததாகவும் அவர்கள் போய்விட்டதாகவும் போர்ஹேவின் பாவணை அவனைச் சொல்லத் தூண்டியிருக்கின்றது. இந்தக் கவிதையை ரசித்து, அவனது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவனது கற்பனையின் வழியே அனுமதித்தார்கள். சிக்மண்ட் பிராய்டு படைப்பும் படைப்பாளிகளையும் பற்றிச் சொல்லும்போது ‘‘குழந்தை விளையாட்டு இருக்கிறதே அது படைப்புச் செயல். குழந்தையும் கவிஞனும் வேறுவேறு இல்லை’’ என்று சொல்லுவார். என்னுடைய படைப்பு அனுபவம், என்னுடைய கவிதை அனுபவம் இவற்றையெல்லாம் இந்த அடிப்படையில்தான் பரிசீலித்துப் பார்த்தேன். என்னுடைய வீட்டு நடுவிலே பெரிய முற்றம். அங்கே ஒரு மரக்கட்டில் இருக்கும். மாலை நேரங்களில் இரவு நேரங்களில் மள்ளாக்கப் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களைப் பார்ப்பேன். அந்தச் சின்ன வயதில் அந்த நட்சத்திரங்கள் எல்லாம் எனக்குச் சொந்தம் என்ற உணர்வு இருக்கும். வீட்டிற்கு வெளியே போனால் அவையெல்லாம் வேறு யாருடையதோ. என்னுடைய வானம் பார்க்கின்ற பகுதியில் இருக்கின்ற எல்லா நட்சத்திரங்களும் என்னுடைய நட்சத்திரங்கள். எல்லா இரவு நேரங்களிலும் என்னுடைய தாய் நான்கைந்து குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு கதைகள் சொல்லுவார்கள். அதில் எத்தனையோ விநோதங்கள் வந்திருக்கின்றன. அந்தக் கதைகளெல்லாம் எனக்கு உண்மைகள். எதுவும் கற்பனை இல்லை, எதுவும் வித்தியாசம் இல்லை, எதுவும் விநோதம் இல்லை. அந்த சிறுவனுக்கு அனைத்தும் உண்மைகள். இந்தவிதமான கதைகளின் மூலமாகவே அவன் கதைகளுக்குள்ளே நுழைந்து தான் என்பது இல்லாமல் ஒரு தனிமை என்று ஆகிவிட்டான். ஒரு தனிமை வடிவம் அவனுக்குக் கிடைத்துவிட்டது. அந்தத் தனிமையின் இறுகளில் ஏதோ ஒரு கவித்துவத்தின் விரல் நுனி அவன் மீது பட்டிருக்க வேண்டும். இதை நான் உறுதியாகச் சொல்லவில்லை. ஒரு யுகமாகவே சொல்லுகிறேன். இப்படித் தான் நடந்தது என்று சொல்லவில்லை. இப்படி இருந்திருக்க வேண்டும். அதற்குப் பின்னார்தான் என்னுடை அந்தச் சிறுவன் அந்தப் பருவத்திலேயே கவிதையினால் தொடப்படுகின்ற பேறுபெற்றவனாக இருந்திருக்கின்றான் என்று நான் பின்னாளில் உணர்ந்திருக்கிறேன். அன்று முதல் இன்று வரை என்னுடைய பாதையில் நான் பயணம் செய்கின்ற எல்லா இடங்களிலும் ஒரு இணைகோட்டில் அவனை நடத்திக்கொண்டு வந்திருக்கின்றேன். இப்பொழுதுகூட அவன் இங்கு எங்கேயோதான் இருக்க வேண்டும். இந்தச் சிறுவனுடைய மாசுமறுவற்ற மனத்தூய்மையை மிகுந்த சிரமப்பட்டு பாதுகாத்துக்கொண்டிருக்கின்றேன். அவனுடைய முக்கியமான எதிரி யார் என்று கேட்டால் என்னுடைய அறிவு தான். என்னுடைய அறிவைக் கொண்டு அவனை மாசுபடுத்தாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அப்துல்ரகுமான் ஒரு கவிதை சொன்னான். ‘‘புத்தகங்களே /சமர்த்தாய் இருங்கள் / குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’’. குழந்தைகளைக் கிழித்துவிடுவது எது. அவர்கள் வளர்ந்தபின் வரும் அறிவும் ஆற்றலும். ஆனால் குழந்தைமையைக் கொன்றுவிடாமல் இணைகோட்டிலேயே அருகிலேயே கொண்டுவருபவனுக்கு இறுதிவரைக் கவிதைகளைத் தந்துகொண்டே இருக்கும். அந்தச் சின்னப் பருவத்தில் அவனுக்குள் இருந்த நிழலாட்டங்கள், இனம் புரியாத நடமாட்டங்கள் ஏதோ காரணமரியாத ஒரு துக்கம் எல்லாம் அப்படியே பின்னால் வந்தபோது எனக்குக் கவிதைகளாகக் கூடும் என்பது தெரிந்தது. அப்படி வந்தவைகளைத் தான் பின்னாளில் கவிதை ஆக்கினேன். அவன் பார்த்திருந்த தினமும் வாசல் படியில் இருந்து பார்த்தால் எதிரே பெரிய மலை இருக்கின்றது. என்னுடைய ஊர் போடிநாயக்கனூர். அந்த மலை அவனுக்குச் சொந்தமான மலை. மாலை வந்தபிறகு இருள் கவியத் தொடங்கிய பிறகு அந்த மலையோடு பேச்சு இருப்பதுபோல் தோன்றும். அந்தப் பேச்சுக்குச் சற்று மாற்றி கவிதைக்கு வேறுவிதமாக மாற்றிக்கொண்டேன். இங்க இருக்கும் இருளை சிறிது சுண்டினால்கூட என்னுடைய மலை எனக்கு பதில் சைகை தரும் என மாற்றிக்கொண்டேன். எனக்குப் ஒரு பதில் சைகை வருகிறது. அந்தப் பையன் நடந்து திரிந்த காட்டுப்பக்கமான ஒற்றையடிப் பாதை இரண்டு பக்கமும் புல் அடர்ந்திருக்கும். அந்தப் குழந்தை என்னிடம் அதை மீண்டும் காட்டும்போது அடடா இந்தப் பாதைப் புரண்டு படுக்க இடமில்லாமல் சலித்துக்கொண்டிருக்கின்றது. பரிதாபமாக இருக்கின்றதே. நான் ஏழாவது படிக்கின்றபோது ஆற்றில் இரங்கி குளித்திருக்கின்றேன். அப்பொழுது நடு ஆற்றில் தெளிந்த நீரில் அடியில் தெரியும் வண்டல் மண்ணை அள்ளிப் பிசைந்திருக்கின்றேன். இப்பொழுது தெரிகின்றது அப்படி நான் பிசைந்தபோது அந்தப் பிசைவில் மாலையின் துடிப்பைக் கணித்திருக்கிறேன். அந்தக் கவிதை எனக்கு இப்பொழுது வருகின்றது.



தாஸ்தவஸ்கியின் சிறுகதையில் வருகின்ற கதாநாயகன் உலாவப் போகிறான். ஒரு குறிப்பிட்டத் தெருவழியாகத் தினமும் உலாவப் போகிறான். அந்தத் தெருவில் இருக்கின்ற வீடுகள் எல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டன. அந்தத் தெருவில் அவன நுழைகின்ற போது அந்தத் தெருவில் இருக்கின்ற வீடுகள் எல்லாம் ஒரு அடி முன்னால் வந்து அவனை வரவேற்கின்றன. ஒரு வீடு சொல்கின்றது. இப்பொழுதுதான் வருகிறாய? வா… வா… என்ன செய்தி என்று கேட்கின்றது. அடுத்த வீடு சொல்கிறது அடுத்த வீடு சொல்கிறது உனக்குத் தெரியுமா? எனக்கு மே மாதத்தில் எனக்கு இன்னொரு மாடி கட்டப்போகிறார்கள் என்று. அடுத்த வீடு கொஞ்சம் நோஞ்சான் வீடு போல. நாளை என்னைப் பழுதுபார்க்கப் போகிறார்கள். இன்னொரு வீடு சொல்கிறது. நீங்கள் நான்கைந்து நாள் வரவில்லையா? நான் தீப்பிடித்து எரிந்துபோகப் பார்த்தேன். அஞ்சி நடுநடுங்கிவிட்டேன். இதை யார் சொல்கிறது என்றால் தாஸ்தவஸ்கியின் கதையில் வருகின்ற ஒரு பாத்திரம் சொல்கின்றது. அப்பொழுது தாஸ்தவஸ்கியும் தனது குழந்தைப் பருவத்தைத் தக்கவைத்துக் கொண்டிருகிறான். அந்தப் பருவம் இல்லாமல் எவனும் கவிஞனாக, எழுத்தாளனாக முடியாது. அந்தப் பருவம் இருந்துகொண்டிருக்கின்றது.
நாம் எல்லாரும் பிம்பங்கள் கொண்டவர்கள்தான். இங்கிருக்கின்றவர்கள் நாம் நமது வடிவத்தில் இருக்கின்றோம். நான் இங்கிருந்து போன பின்பு இந்த நாற்காலிகள் காலியாக இல்லை. உங்களது பிம்பங்களைக் கொண்ட நாற்காலிகளாக இருக்கும். அதற்கு மேல் யாரும் உட்காரலாம், கழுவலாம். ஆனால் அந்தப் பிம்பங்கள் அங்கு இருக்கும். எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் நமது பிம்பங்களை விட்டுவிடாமல் போனதே இல்லை. இது எனக்கு அழுத்தமான நம்பிக்கை. இப்பொழுது எனது ஊருக்குப்போனால், இப்பொழுது 1968க்குப் போனால் நான் எங்கெல்லாம் இருந்தேனோ அங்கெல்லாம் என்னுடைய பிம்பங்கள் இருக்கின்றன. அநேகமாக எதையும் நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்கும்போது அதை நெகிழ்ச்சியாகப் பார்க்கமாட்டீர்கள். காட்சியாகத்தான் பார்ப்பீர்கள்.
10 வருடத்திற்கு முன் நடந்ததை நினைத்துப் பார்க்கின்றபோது உங்கள் மனதில் காட்சிதான் ஓடும். அந்தக் காட்சியில் நான் எப்படி இருந்தேன், என்ன உடை அணிந்திருந்தேன் என்று என்னைப் பற்றிய பிம்பங்கள் வரும். இந்தப் பிம்பங்களின் பெருங்கம் அளவுகடந்து செல்கின்றது. அதைக் கணக்கிடவே முடியாது. நான் ஒருவன் அல்ல பல. எல்லாம் நான். எல்லாவற்றிலும் நான் இருக்கின்றேன். நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்று வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்லியதை நான் இப்பொழுது எனக்கு ஆதரவாக எடுத்துக்கொள்கின்றேன். இந்த நான்களில் சில சமயங்களில் நிகழ்காத்து நான் அது இந்தக் கூட்டத்தில் எங்காவது தவறிப்போய்விடும். அது பிம்பங்களின் நானைவிட்டுத் தவறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் என்னை இழந்துவிட்டேன்; என்னைத் துறந்துவிட்டேன்; நான் இல்லாமல் ஆகிவிட்டேன். என் கவிதையின் பெரும்பகுதியில் நான் திரும்பத் திரும்பச் சொல்லுவது, இருத்தலும் இல்லாது இருத்தலும் என்பது. நான் இருக்கும் போது இல்லாது ஆகிட்டேன். ரூமி சொன்னார் ‘‘மரணமடைவதற்கு முன்னலேயே மரணமடையுங்கள்’’ என்றார். அந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கின்ற வெளிச்சமும் பேரின்பமும் வேறு எதற்கும் கிடைக்காது. அப்படிச் சில தருணங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கும். அந்தத் தருணங்களை என் கவிதையின் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். அது அந்தத் தருணங்களை மேய்ந்து தன்னை நன்றாக வரைந்துகொள்கின்றது. அப்படி என் கவிதை அந்தத் தருணங்களை வரைந்துகொண்டிருக்கும்போது கைகட்டி நின்று என் கவிதையின் முன் வேடிக்கை பார்க்கின்ற பார்வையாளனாக இருந்துகொண்டிருக்கின்றேன். சுயானுபவப் பெருவெளியில் ஒளியும் இருளுமே என் கவிதையை வழிநடத்தப்போதுமானவை என்பதை நான் வெகுகாலத்திற்கு முன்பாகவே கண்டுவிட்டேன். அதனால்தான் நான் அகம் சார்ந்த இந்தக் கவிதைகளின் பக்கமாக எப்போதும் திரும்பினவனாக இருக்கிறேன்.
அபி சொல்கிறார் ‘இந்தக் கவிதை என் கவிதை இல்லை’’ என்று சொல்லுகிறார். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் அதுதான் உண்மை. நம்முடைய ஆழத்து உணர்வுகள் முழுமையும் நமக்குச் சொந்தம்தானா என்று யோசனை செய்துபாருங்கள். ஒரு வழக்கான உதாரணம் சொல்வார்கள். மனிதன் கற்காலத்தில் இருந்து இன்று வந்துள்ளான். அந்தக் கற்கால மனிதன் நம்முள் இருக்கிறான? எப்படி?. அவசர ஆத்திரத்திரத்திற்குக் கல்லைத் தூக்குகிறோம். அந்த இடத்தில் அந்த மனிதன் இன்னும் இருக்கிறான். இதை நான் சொல்லவில்லை. இதைச் சொன்னவர் யூங் என்ற உளவியல் மேதை. அவர் சொல்லுகிறார் ‘‘ஒருவருக்குள் அவனது முன்னோர்; அவனது முன்னோன்; அவனது முன்னோன் என லட்சக்கணக்கான முன்னோர்கள் இருப்பார்கள்’’ என்று. அவ்வளவு பேரும் இவனது தலைக்குள்தான் இருப்பார்கள். அப்படி என் முன்னோன்களில் எந்த முன்னோனுக்கு எந்தவிதமான கவித்துவம்; எந்த நேரத்தில் இருந்தது என்று தெரியாது. எந்த முன்னோன் என் கவிதையை வழிநடத்தினான் என்பது தெரியாது. என் கை உருவாக்கிற்று. என் மனம் சொன்னது. என் நாக்குள்ளே நான் உச்சரித்துக்கொண்டேன். நான் பயின்ற தமிழ்ச் சொற்கள். ஆனால் அந்தக் கவிதையினுடைய உரிமையாளன் நான் இல்லை. எனக்கு முன்னால் இருந்த யாரோ ஒருவர். இதைத்தான் யூங் ‘தொகை நினைவிலி’ என்று சொன்னார்.
நண்பர் ஒருவர் என்னிடம் உங்கள் பிறந்தநாள் எது? என்று கேட்கும்போது நான் சொன்னேன், என்னுடைய பிறந்தநாள் எது? என்று எனக்குத் தெரியாது. முதல் மனிதன் தோன்றியபோதே நானும் தோன்றிவிட்டேன். அது உண்மையில்லை என்று எவரும் மறுக்க முடியுமா? முதல் மனிதனிடமிருந்துதானே நாம் வந்திருக்கிறோம். தோன்றிய எதுவும் அழிவதில்லை. அன்றைக்கு மனித சமூகம் முழுவதும் தோன்றிவிட்டது என்று சொன்னால் அது என்னையும் சேர்த்துத்தான். ஆனால் தாய் வயிற்றில் பிறப்பதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் காத்திருந்தேன். நான் இடையில் இருந்த ஆண்டுகள் நான் இல்லாத ஆண்டுகள் இல்லை. நான் காத்திருந்த ஆண்டுகள். இதிலிருந்து நான் இன்னொற்றையும் யூகிக்கின்றேன். என்னுடைய கவிதையும் இதேபோன்று எப்போதோ? எங்கோ? பிறந்து; எனது வருகைக்காகக் காத்திருந்து; என்னை அடையாளம் கண்டு; என்னை வந்து சேர்ந்துகொண்டது என்று நான் நினைக்கின்றேன். இதை நான் எழுதியும் இருக்கிறேன். இது ஒரு திரைப்பாடப் பாடலில் வந்துள்ளது. ‘‘இன்று வந்த என்கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’’ என்று. இது ஆழம் தெரிந்து சொன்ன வார்த்தையா என்று எனக்குத் தெரியாது. இதுபோன்று சிலருக்கு அற்புத வரிகள் எங்கிருந்து சட்டென்று வந்துவிடும். நான் லா.சா.ராவிடம் ‘‘நிமிசத்தின் சிமிலிலிருந்து மையை எடுத்துப்போட்டுகொண்டு வருசங்களைப் பாரத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று எப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டேன்.அதுஅபி சார் ‘‘விருட்டுனு வாயில வந்துட்டது’’ என்றார். விருட்டுனு வந்ததால் அது கவிதை ஆகாது என்று சொல்லிவிடமுடியாது. ஆகவே பலபேரின் சேகரத்தினால் வந்த என்னுடைய கவிதை முழுமையாக என் கவிதை என்ற சொல்லிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் பத்திரிக்கையில் என்னுடைய கவிதைக்குப் பக்கத்தில் புகைப்படத்தைப் போட கேட்டபோது தரமறுத்துவிட்டேன். அதன் காரணம் கேட்டபோது ‘‘அதை எழுதியவனது போட்டோ என்னிடம் இல்லை. இந்தக் கவிதையின் பக்கத்தில் இதை எழுதாத என்னுடைய போட்டோ போடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை’’ என்றேன்.
எனது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில் ஒன்று எழுதியிருந்தார்கள். ‘‘அபியின் கவிதை உணர்வுகளின் அரூபப் பிறப்பு நிலைகளைக்கொண்டு இயங்குவது’’ என்று. ஜெயமோகன் போன்றவர்கள் என்னை அரூபக் கவிஞன் என்றும், என்னுடைய கவிதையை அரூபக் கவிதை என்றும் வகைப்படுத்தினார்கள். அரூபம் என்றால் என்ன?. உருவம் இல்லாதது எல்லாம் அரூபம் என்று சொன்னால் இந்தப் பிரபஞ்சத்தில் எது அதிகம்?. எல்லாமே அரூபம் தான். அதேசமயம் இவை அனைத்தும் கவிதைக்கு ஏற்றவை என்று சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் அரூபங்கள் கூட உருவங்கள் பெற்றுவிடும். அன்பு என்பது தொட்டுப்பார்க்கும் பொருள் இல்லை. அது அரூபம் தான். அந்த அரூபத்திற்கு காந்தியின் படத்தைப் பார்த்தால் அன்பின் ரூபமாகத் தெரிகின்றது. இப்படி அரூபங்களுக்கு உருவம் கிடைத்துவிடுகின்றது. இன்னும் சில அரூபங்கள் உருவம் பெறுவதை நான் பார்த்திருக்கின்றேன். ஞாயிறு, திங்கள் என்று கிழமை சொல்லுகிறோம் அல்லவா இதற்கொல்லாம் வண்ணம் நான் பாரத்திருக்கிறேன். ஞாயிற்க் கிழமை சற்று கரும்பச்சை நிறமாக இருந்தது. திங்கள் கிழமை ஆரஞ்சு நிறமாக இருந்தது. செவ்வாய்க் கிழமை பச்சை நிறமாக இருந்தது. இப்படிக் கிழமைகளை நான் நிறங்களாகப் பார்க்கின்றேன். ஆனால் சில அரூபங்களுக்கு நம்மால் உருவம் தர முடியாது. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் கா.நா.சுவும் சி.சு.செல்லப்பாவாவும் ஒரு கருத்தை என்னிடம் சொன்னார்கள். சங்க அக இலக்கியத்தைக் காதல் இலக்கியம் என்று சொல்லுவார்கள். அகம் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘‘அகம் என்பது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தங்களுக்குள் ஒன்று கூடி மகிழ்ந்து, அந்தக் கூட்டத்தினுடைய பேரின்பம் (இன்றைக்கு இதைச் சிற்றின்பம் என்கிறார்கள்) இத்தகையது என்று தங்களுக்குள் பேச முடியாதது’’ என்று விளக்கம் தந்தார். சொல்லமுடியாததை அகம் என்றார்கள். கா.நா.சுவும், சி.சு.செல்லப்பாவும் காதலுக்கு மட்டுமல்லா இல்லை. இப்பொழுது புதுக்கவிதைகளில் சொல்லமுடியாத உணர்வுகள் சொல்லப்படுகின்றன அல்லது சொல்ல முயற்சிக்கப்படுகின்றன அல்லது சொல்வதற்கு ஆசைப்படுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். சொல்லிவிட்டு இந்தக் கவிதைகளையும் அகக் கவிதைகளாகச் சேர்க்கலாம். அகக் கவிதைக்கும் அரூபக் கவிதைக்கும் வித்தியாசம் இல்லை என்றார்கள். இப்படிச் சொன்னாலும் சங்க அகக்கவிதைகளை அரூபக் கவிதைகளாகச் சொல்லமுடியுமா?. அதில் தலைவன், தலைவி, தோழி என்றெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் கூர்ந்து அகக் கவிதையைக் கவனித்தால் தலைவியை வர்ணிக்கும் போதும் ஒரே மாதிரியாகவும் தலைவனை வர்ணிக்கும்போது ஒரே மாதிரியாகவும் இருப்பதைக் காணலாம். தொல்காப்பிய இலக்கணத்தில் யார்? யார்? என்ன? என்ன? பேச வேண்டும் என்பதை வரையறுத்துள்ளார். அப்படியென்றால் அவர்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டிருந்ததா? என்ற கேள்வி எனக்குள் எழுகின்றுது. ஒரு பொது உருவம் கொடுக்கப்பெற்றிருக்கின்றது. மற்றபடி அவை அருவங்கள். அவர்களின் பேச்சுக்குரல்கள் அரூபக் குரல்களாகக் கேட்கின்றன. அதையும் இன்றைய பார்வையில் அக்கவிதைகளை நான் அரூபக் கவிதைகளாக ஏற்றுக்கொள்வேன். சொல்லில் சொல்வதற்கு இருக்கின்ற தவிப்பு இருக்கின்றதல்லவா அப்படி ஒரு தவிப்பு பாரதிக்கு வந்தது. பராசக்தியைப் பாடுவதற்கு பாரதி முயற்சிக்கிறார். ஆனால் கவிதை வரவில்லை. அப்பொழுது தன் மேல்தான் அவருக்கு எரிச்சல் வரவேண்டும். ஆனால் பராசக்தி மீது ஆத்திரம் வருகின்றது. ‘‘சொல்லினிற்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்’’ என்று சொல்கிறார். இதெல்லாம் அரூபக் கவிதையின் அம்சங்கள். கு.ப.ரா ஒரு கவிதையில் ‘‘கண்கவருவது காண்பதற்குக் குறைவுதான்’’ என்பார். நம் காட்சியில் இருப்பது கண் அளவிற்குத்தான். இதிலிருந்து இருக்கின்ற எல்லாவற்றிலும் நான் எவ்வளவு எடுத்துக்கொடுப்பதற்கு முயன்றாலும் என்னால் எடுத்துக்கொடுக்க முடித்ததோ அவ்வளவுதான் என் கவிதையில் வருகின்றது. அதைத்தான் அவர் அப்படிச் சொல்கிறார். இதைப்போன்ற கவிதைகள் என்னுடைய சொந்த அனுபவமும் கூட. உள்ளிருந்து வெளிவரும்போது அப்படியே வெளிவந்துவிடுவது இல்லை. கிணற்றில் ஓட்டை வாளியை விட்டு தண்ணீர் இரைக்கும்போது முழுவதும் வராமல் பாதி கீழே போய்விடுகின்றது அல்லவா. அதைப்போல உணர்வு நுட்பங்களை வெளியே மொழியின் மூலமாக எடுக்கும்போது, மொழி ஓட்டை மொழி என்பதால் பெரும்பகுதி உள்ளே போய்விடுகின்றது. கவிதையைக் காகிதத்தில் பார்க்கின்ற கவிஞன் ஏமாந்துபோகின்றான். கவிதையைப் படிக்கின்ற வாசகன் அற்புதமான கவிதை என்கிறான். மொளனத் நாவுகள் கவிதைத் தொகுப்பில் ‘‘அவனது புண்களை வண்டுகள் பூக்களென்று மொய்க்கின்றன’’ என்று கவிதை எழுதியுள்ளேன். அவனைப் பொறுத்து அது புண். ஆனால் வண்டுகளுக்கு அது பூ.

கவிதை எப்படிப் பிறக்கின்றது என்று பலரும் கேட்பார்கள். நான் எனது மாணவர்களுக்கு ஒரு நாள் ‘சும்மா’ என்று தலைப்பு கொடுத்தேன். பலரும் பலவாறு எழுதியிருந்தார்கள். அதில் ஒரு மாணவன் எழுதியிருந்தான் சும்மா என்று தலைப்பிட்டு ‘‘இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள்’’ என்று. எவ்வளவு கவித்துவம் பாருங்கள். அந்தக் கவித்துவத்தைத்தான் நாம் தூண்ட வேண்டும். எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு கவிஞரின் கவிதையைச் சொல்லாம். ஒரு பறவை பறந்துபோய்க்கொண்டிருக்கின்றது. கீழே இருப்பவன் அந்தப் பறவையைப் பார்த்து எப்படி பறப்பது என்று சொல்லிவிட்டுப்போ என்கிறான். உடனே பறவை சொன்னது கீழே இருக்கும் போது அதைச் சொல்லமுடியாது. என்னுடன் பறந்துவா சொல்கிறேன் என்றது. பறந்து பாதி தூரம் சென்ற பின்பு இப்பொழுது சொல் என்றான். இப்படித்தான் என்றது. அட ஆமா என்றான் கீழே கிடந்தான். இது படைப்பது எப்படி என்பதற்கு இது ஒரு சின்ன விளக்கம். ‘‘புகைமூட்டத்தைப் புணர்ந்து கருத்தரி’’ என்றார் சுந்தர ராமசாமி. ஒரு ஜென் குருவிடம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல என்ன வழி என்று சீடன் கேட்டான். அந்த வழியை அந்த இடத்திற்குப் போனால் தெரிந்துகொள்வாய் என்றார். இதுவெல்லாம் நீ செய்யவேண்டியதைச் சொல்கின்றது. படைப்பது எப்படி என்று யாரிடமும் கேட்கக்கூடாது. மனது மிகவும் புழுங்கி கனத்துக்கொண்டிருக்கும். கவிதையின் பிரசவநிலை அதுதான். லா.சா.ரா என்னிடம் ஒரு முறை சொன்னார். அவர் ஒரு நாள் அலுவலகம் விட்டு வெளியே வந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்டார் தியேட்டரின் வெளியில் உள்ள போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவர் மனதிற்குள் ‘‘அடே’’ என்ற ஒரு ஆங்காரக்குரல் கேட்டிருக்கின்றரு. அது அவர் அனுபவித்தது. அதை அவர் சொல்லும்போது அவரது உடல் புல்லரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் தன்வசத்தில் இல்லை. அப்படியே வீடு திரும்பியவர் தான். சில நாட்களில் ‘அடே’ என்று ஆரம்பித்தே புத்திர என்ற நாவலை எழுதினார். அது சபிக்கின்ற ஒரு விதவையின் குரல். ஒரு கூவலில் ஒரு நாவல் பிறந்திருக்கின்றது. இதைப்போல்தான் படைப்பு எப்படிப் பிறக்கின்றது என்று சொல்லமுடியாது. எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம்.
நன்றி.
கவிஞர் அபி அபியின் கவிதைக்கு விளக்கம் கூறுதல்
இரண்டு கவிதைகள் அனைவருக்கும் படி எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று ‘‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’’ மற்றொன்று ‘‘இப்பொழுதுதான் நான்’’