வெள்ளி, 6 செப்டம்பர், 2013

 தனிமனித உணர்வுக் கவிதைகள்  --கந்தவேல் ராஜன் . ச 
புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் இத்தகைய ஒரு பாகுபாடு இருந்தது. இவ்வகைக்குச் சுட்டிக் காட்டக் கூடிய எடுத்துக் காட்டுகள் இருந்தன. S. வைத்தீஸ்வரன், தி.சொ.வேணுகோபாலன், நகுலன், பசுவய்யா போன்றோர் கவிதைகளில் இத்தன்மையைக் காண முடிந்தது. அடுத்துவந்த காலத்தில் பிரமிள், அபி, தேவதேவன், அப்துல் ரகுமான், ஆனந்த், தேவதச்சன் எனத் தொடரும் ஒரு நீண்ட பட்டியலில் இத்தகைய கவிதைப் படைப்பாளிகளைக் காணலாம். தனிமனித உணர்வு என்பது சமூக உணர்வுக்கு, முற்போக்குக் கருத்துகளுக்கு எதிரானது என்ற கருத்தும் கண்டனமும் மறைந்து போய்விட்ட இந்நாளில் இந்த இருவித வகைகளும் பொருளற்றவை; வரலாற்றுப் பதிவாக மட்டுமே காணக்கிடைப்பவை என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய கவிஞர்களுள் சிலர் மிகவும் தனித்தன்மையான பார்வை கொண்டவர்களாக உள்ளனர். கவிதையில் இதுவரை சொல்லப்படாத தெளிவற்ற உணர்வுகளை அவற்றின் பிறப்பிடத்திற்கே சென்று தொட்டுக் காட்டுகின்றனர். பிரமிள், அபி போன்றவர்களின் கவிதைகளில் இத்தகைய உள்ளாழ்ந்த தன்மைகளைக் காணலாம். பருப்பொருள் உலகுக்கு அப்பாற்பட்டு நுண்ணிலைகளை, அருவ நிலைகளைக் (Abstractions) கவிதையில் அவர்கள் உணர்த்தும்போது கவிதைக்கு இருண்மை இயல்பு சேர்கிறது. வாசகன் புரிந்துகொள்ளத் தவிக்கவேண்டியுள்ளது. கவிஞர்களைக் குறைசொல்வதை விட, வாழ்வின் மறுபுறத்து இயல்புகளைப் புரிந்துகொள்ள வாசகன் மேலும் முயலவேண்டும் என அவனை ஊக்குவிப்பதே சரியானது. இத்தகைய கவிதைகளைச் சொல்லுக்குச் சொல் பொருள் பார்த்துப் புரிந்து கொள்ள முயலாமல் - பொழிப்புரை தேடாமல் - கவிதையின் மொத்த உணர்வு தனக்குள் ஏற்படுத்தும் அசைவுகளை, தனக்கு உண்டாக்கும் அனுபவங்களை நன்றாகக் கண்டு அதுவே கவிதையின் பொருள் என வாசகன் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞன் என்ன நினைத்தானோ அதையே வாசகன் கண்டடைய வேண்டும் என்பதில்லை என்பதுதான் உலக முழுவதும் இன்று உருவாகியுள்ள கவிதைக் கோட்பாடு. மொழிவழியாக வந்துள்ள பிரதி (Text) யில் ஊடுருவிச் செல்லும் வாசகமனம் பல்வேறு விதமாகக் கவிதையை அலசித் தேடும் தேடல், நீடித்த அத்தேடலில் அவனுக்குள் உருவாகும் அனுபவம் இவையே கவிதையின் உட்பொருள். ‘கவிதையின் பொருள் கவிதையின் சொற்களில் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. அதுவும் நம் பக்குவம், அனுபவம் மாறமாற மாற்ற மடையும். ஒரு குறிப்பிட்ட காலம், வெளி, மன நிலைகளில் ஒருவனின் உணர்வை இன்னொருவன் பெறுவது ஒரு போதும் நடவாத காரியம். கவிதை என்றும் மொழிக்கு வெளியேதான் தங்கி நின்றுள்ளது’ என மா. அரங்கநாதன் (பொருளின் பொருள் கவிதை,பக்.71-74) கூறுவது பொதுவாக எக்கவிதைக்கும் பொருந்துமாயினும் மேற்குறித்த அருவக் கவிதைகளுக்கு முற்றிலும் பொருத்தமானதாகும். இவ்வகையில், படிக்கிற வாசகர் எவ்வளவு பேரோ, அவ்வளவு பொருள் கவிதைக்கு உண்டு.
எழுத்து இதழுக்குப் பின்னர்  
க.நா.சு.வின் ‘இலக்கிய வட்டம்’, சேலத்திலிருந்து வெளிவந்த ‘நடை’, ‘கணையாழி’ இலங்கை இதழ் ‘மல்லிகை’ போன்றவை புதுக்கவிதை வளர உதவியவை. 1970இல் தோன்றிய ‘கசடதபற’ இதழ் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. இடதுசாரிக் கருத்துகள் கொண்ட கவிதைகளுக்குத் ‘தாமரை’ இடமளித்தது. இடதுசாரிக் கண்ணோட்டத்தை கவிதைக் கோட்பாடாகக் கொண்டு ‘வானம்பாடி’ எனும் விலையிலாக் கவிமடல் 1971இல் தோன்றியது; இயக்கமாகவே வளர்ந்தது. மேலும் ‘ஞானரதம்’, ‘அஃ’, ‘சதங்கை’, ‘தெறிகள்’ போன்ற பல இதழ்கள் மூலம் புதுக்கவிஞர்கள் பலர் ஊக்கம் பெற்று எழுதினர். ஞானக்கூத்தன், கலாப்ரியா, நா. காமராசன், சிற்பி, இன்குலாப், மேத்தா, புவியரசு, தமிழன்பன், மீரா போன்ற பலப்பல கவிஞர்களின் கவிதைகளால் தமிழ்ப் புதுக்கவிதை உலகம் விரிவுகண்டது, இதழ் அல்லது இயக்கம் சாராத அப்துல் ரகுமான், அபி போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. 1980களுக்குப் பின்னர் ‘மீட்சி’, ‘கனவு’, ‘விருட்சம்’, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற பல இதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்காற்றின. கவிஞர்கள், எண்ணிக்கையும் கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கையும் பெருகின. ஆத்மாநாம், தேவதேவன், சுகந்தி சுப்ரமணியன், பிரம்மராஜன், பழமலை, சுகுமாரன், எம்.யுவன், யூமாவாசுகி, குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், மாலதி மைத்ரி போன்ற தனித்தன்மை மிக்க கவிதைப் படைப்பாளிகள் பலர் தமிழ்ப் புதுக்கவிதையை வளப்படுத்தியவர்கள் ஆவர். ஈழத்தைச் சார்ந்த வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம், சேரன், சோலைக்கிளி, மு. பொன்னம்பலம், அ. யேசுராசா, எம். ஏ. நுஃமான் எனப் பல கவிஞர்கள் புதுக்கவிதையில் சாதனை படைத்துள்ளனர். மாணவர்களே! இன்று எழுதிவரும் கவிஞர்களின் முழுப்பட்டியலைத் தரப் பாட அளவு இடம் தராது. ஆகவே உங்கள் வாசிப்பில் நீங்கள் சந்திக்க நேரும் எந்தப் புதுக்கவிஞரையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள். 
புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றி இதுவரை நாம் பார்த்தவற்றிலிருந்து புதுக்கவிதை 1930களில் வசன கவிதையாகத் தோன்றி, தொடக்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே கையாளப்பட்டு, அறுபதுகளுக்குப் பின்னர் வடிவத்தில் செறிவடைந்து புதுக்கவிதையாகி, மிகப்பலரும் ஏற்றுப் போற்றும் கவிதை வகையாக வளர்ந்துவிட்டதையும், இன்ன பொருள் என்றில்லாமல் எல்லாப் பொருளையும், இன்ன முறை என்றில்லாமல் எம்முறையிலும் வெளிப்படும் தன்மையைப் பெற்றிருப்பதையும் அறிந்தோம். இனிப் புதுக்கவிதையின் வகைமை பற்றிக் காண்போம்.
நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச
(groups.google.com/forum/#!msg/muththamiz/NmdqAns_iPs/5XlpwOej9YoJ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...