வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கவிஞர் அபியின் நேர்காணலிலிருந்து… (தீராநதி – ஆகஸ்ட் 2009).

தீராநதி : லா.ச.ரா. படைப்புகள் குறித்து முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தீர்கள். கவிஞரான நீங்கள் வசனப் படைப்பாளியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதன் காரணம் என்ன? அவரோடு நீங்கள் நெருங்கிப் பழகியிருப்பீர்கள். அவரைப் பற்றியும் சொல்லுங்கள்.
கவிஞர் அபி: பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரை என் ஆய்வுத் தலைப்பு தொடர்பாகச் சந்தித்தேன். அவர் என் விருப்பத்தைக் கேட்டார். ‘லா.ச.ரா. படைப்புகள்’ என்று சொன்னேன். ‘வேண்டாம் அது புரியாது, வேறு தலைப்பு சொல்லுங்கள்’ என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பக்கத்திலிருந்த என் நண்பர் பாலசுந்தரம் , ‘இவர் லா.ச.ரா.வை உன்னிப்பாகப் படித்து வைத்திருக்கிறார்’ என்றார். பல்கலைக்கழகத் தமிழுக்கு இலக்கியத் தமிழின் மீதிருந்த அறியாமை – அக்கறையின்மை வருத்தம் தந்தது. ‘புரியாது’ என்று பேராசிரியர் சொன்னதில் தொடங்கி ‘என்னைப் பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி, அவரளவுக்கு ஆழம் என்னால் போக முடியாது’ என்று லா.ச.ரா. என்னைக் குறித்து வேறொருவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுவரை  எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். வாசகன் மீது நம்பிக்கை வைப்பவர் லா.ச.ரா. நேர்ப்பழக்கத்தில் லா.ச.ரா. மிகவும் இனியவர். முதல் தொடர்பிலேயே உடனடி நெருக்கத்துக்கு வந்து விடுவார். அவருடைய துணைவியாரும் பிள்ளைகளும் என்னைத் தங்கள் குடும்ப உறுப்பினன் போலவே நடத்தினார்கள். பல வருஷ இடைவெளிக்குப் பின் 90 வயதை அவர் தாண்டியபோது பார்க்கப் போனேன். அவரைப் பொறுத்தவரை விடுபட்ட இடைவெளி குறித்த பிரக்ஞையே இல்லை. எங்கள் தொடர்பு குறித்து என் நினைவில் இல்லாததுகூட அவர் நினைவில் இருந்தது. பிறப்பதும் இறப்பதும் வேறுவேறல்ல என்று அவர் நம்பி வந்ததற்கு ஏற்றார்போல , அவரது மரணம் சரியாக அவரது பிறந்த நாளிலேயே நேர்ந்தது. எப்போதோ எழுதிய என் கவிதையொன்றில் வரும் சில வரிகள் இந்தச் சந்தர்ப்பத்தில் லா.ச.ரா.வுக்கு அதிசயமாகப் பொருந்துகின்றன.
‘முதலும் முடிவும் மூச்சொன்றிக்
கூம்பிச் சேர்ந்த அம்பு நுனியில்
தேம்பி அடங்குகிறது
தேடல்’
கவிதை தன் இருப்பிலேயே நிலைத்து வருவதில்லை. அது சைகையாகி உலவிக் கொண்டிருக்கும், எதையதையோ தொட்டுத் திறக்கும் என்று நான் சொன்னதற்கு இதுவும் ஒரு உதாரணம். அதற்கப்புறம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் துணைவியார் கண்ணில் நீருடன் சொன்னார். மரணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு ‘நான் போய்விடுவேன். அதற்காக நகை, பட்டுப்புடவை, குங்குமம் எதையும் நீ துறந்துவிடக்கூடாது’ என்றாராம் லா.ச.ரா. எழுத்தைத் தாண்டிப் பார்க்க லா.ச.ரா. பின்னும் மேலானவர்.
தீராநதி : லா.ச.ரா. எழுத்துக்களை எப்போது படிக்கத் தொடங்கினீர்கள்?
கவிஞர் அபி: முதலில் நான் படித்த லா.ச.ரா. புத்தகம் ‘இதழ்கள்’ தொகுப்பு. மாணவ நிலையில் நான் அவரைப் படித்ததில்லை. ஆசிரியப் பருவத்தின் முதல் ஆண்டில் என் மாணவ , வாசக நண்பர் சீனிவாசன் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து தந்தார். அதற்கப்புறம் அவர் படைப்புகளைத் தேடித்தேடிப் படித்தேன். எல்லா வாசகர்களையும் போல நான் முதலில் மயங்கியது அவரது கவித்துவத்தில்தான். ‘கவிதை எனக்குப் பிடிக்காது, ஓரளவுக்கு மட்டும் பாரதி பிடிக்கும்’ என்றார் லா.ச.ரா. ஒருமுறை. அவர் கவிதை வாசகர் இல்லை என்று எனக்குத் தெரிந்தது. அவர் எழுத்தில் கவிதை இருக்கிறது என்று பலரும் சொல்லக்கேட்டு ஆச்சரியமடைந்திருக்கிறார். அந்திவான அழகில் சொக்கி ‘உமை கவிதை செய்கின்றாள்’ என்று பாரதி சொன்ன மாதிரி, லா.ச.ரா. குன்றின் மீது தவழும் மேகப் பொதிகளைப் பார்த்து, ‘அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்து கொண்டிருக்கின்றன’ என்று எழுதியிருக்கிறார். கவிதை பிடிக்காது என்றாலும் ‘கவிதை’ என்பதிலேயே ஒரு மயக்கம் இருந்திருக்கிறது. அதனால் எழுத்து அல்லாத வகைகளில் உள்ள கவிதையை அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. அவர் நடையில் கவிதை இருக்கிறது. சிந்தனைப் பாங்கிலும் அவரிடம் கவிதை இருக்கிறது. மொழியில் சோதனை செய்து வெற்று பெறுகிற எந்தக் கலைஞனும் கவிஞனே. நான் மட்டுமல்ல. பல கவிஞர்கள் லா.ச.ரா.வின் கவித்துவத்தின்மீது ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
***
நன்றி : தீராநதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...