திங்கள், 2 செப்டம்பர், 2013

இந்த அறையில்


என்றென்றும் இல்லை இனி
அலுத்த சுவடுகள்;
அவற்றின்
கறுத்து வெடித்த காலபூமி

முதலில் மிரண்டு
பின் கமனப்படும் வண்ணம்
நுழைவோர் கண்களில் வெறிக்கும்
சுத்தமான வெற்றிடமே இனி

நான் இருப்பதாக
நினைத்துக்கொண்டிருப்பவர்களோடு
இந்த அறையில்
ஏதேனும் பேச்சு நிகழலாம்
தொட்டால்
நாடித்துடிப்பு தெரியாத
பேச்சு

சாட்சிகள் இல்லாத நிகழ்வுகள்
தினிந்து கிடக்கலாம்
வெற்றிடம் சேதப்படாமல்

இந்த அறையில்
வினாக்கள் விளக்கங்கள்
முற்றிலும் அற்ற
தூய்மை நிகழலாம்

வெளிச்சப் பேச்சற்ற ஒளியின்
இருப்பில்
என் இளவயது பிம்பம் மட்டுமே அறியும்
கோடிக்கணக்கான வடிவுகள்
குவிந்துகொண்டே இருக்கலாம்
வெற்றிடம் சேதப்படாமல்
இந்த அறையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக