ஞாயிறு, 22 மார்ச், 2015

வயது


ஒருநாள்
தரை காணாமல் போனபோது --
சுருங்கி வற்றிச் சுண்டிக்
காணாமல் போன போது --

பின் வாங்கிப் போகுமுன்
திசைகள் துப்பிப்போன
சூன்.யம்
என்னை அப்பிக்கொண்ட போது --

ஒரு மாதிரியாய்த் திரிந்தேன்

பெரிய முதுகு வளைத்து
வியர்த்த தலைகுனிந்து
உரத்த குரல்போல யாரோ
பார்த்தார் என்னை

சிரித்தார் நீலம் பீறிட

"ஒஹோ
தப்பிப்
பின்னோடப் பார்க்கிறாயோ?
பிரிந்து சுழன்று
பிரிந்து சுழன்று
விரைந்தது நீயன்றோ
எனினும்
நீ நீத்துவந்த வயதுகள்
வினாடிகள் மொய்த்து --
விட்ட இடத்தில்தான் மிதக்கும்
போய் கூடிக் கொள்"

திரிந்தபோது கண்டேன்
வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு;
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய்திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது .. .. ..

கண்களை மூடிக் கொண்டேன்
மூடிய இமைகளுள்
முலைக்காம்பின் உறுத்தல்

இன்னும் அவர்
நரைத்த தலை குனிந்து
நீலம் பீரிடச் சிரித்தார்

பார்த்தால் --
அவர் முகரேகைப் பின்னால்
குழந்தையின்
கண்ணில் நெளிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...