வியாழன், 26 மார்ச், 2015

(தமிழ்ப் பொழில் --- மாத இதழில் வெளிவந்த கட்டுரை)“கவிஞர் அபியின்   மந்திரக்கவிதைகள்”
                      -செ.சு.நா.சந்திரசேகரன்.

உணர்வுகளை மெல்லவருடி அதை அப்படியே பிண்டமாய் தந்துவிடுவது கவிதையின் தன்மை. பிண்டத்திற்கு உருவமைத்து உலாவிடுவது நம்  கையில்தான் உள்ளது. தனிமையை சமூகம் வெகுகாலமாய் அனுபவம் செய்திருக்கின்றது. அதைப் பதிவு செய்ய அது தவறிருக்கலாம் “அபி” எனும் ‘மௌனத்தின் பிரச்சாரகன்’ அதைப்பதிவு செய்திருக்கின்றார். தனிமையின் விஷம் எனக்குப் பழக்கமாகி விட்டதெனக் காட்சியைத் தெளிவாக்க அவரால் மட்டுமே முடிகின்றது.

எழுத்துக்களுக்கு மீறிய உணர்வுகளை அப்படியே உணரத் தந்துவிடுவதன்றி அதை விவரிக்கும் முகமாக விவாதிக்வோ, நிறுபிக்கவோ, எடுத்துக்காட்டவோ, முயல நினைத்ததில்லை. கவிதைக்கென பிறரால் கையாளப்பெறும் வடிவங்களையோ மிதமிஞ்சிய அழகுகளையோ ஆடையாக அணிவிக்கவில்லை. பெற்ற குழந்தையின் சிரிப்பை நுன்மையாய் இரசிக்கும் தாயின் உணர்வே கவிதை வெளிப்பாட்டில் தெரிகிறது. “புதிய பார்வை”யில் வெளிவந்த “அவன்” எனும் கவிதையில்,
‘தெளிவு’ என்பதன் பொருள் விளக்க நிலையாக,

   “வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்
    மறுத்துக் கொண்டேயிருந்து
    கடைசியில்
    எந்தச்சுரங்கத்திலும் நுழையாமல்
    இருந்த இடத்தில் 
    திரும்பவே நேர்ந்தது
    வார்த்தைகள் இப்போது 
    கற்படிவங்களாய் கிடந்தன”

என்று கவிதைகளுக்கு நடுவே சென்று திரும்பும் இருவழிப்பாதையையும் கவிதையின் உள்ளீடு குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். அனுபவத்தைத் தாண்டிச் சென்று அதனுள் பிரண்டு, மூழ்கி, நீந்தி உணர்வுகளின் தெரியப்படாத உருவங்களைத் தொட்டுப்பார்த்துச் சுவடுகளாய் பதிந்து கிடக்கும் வார்த்தைகள் முழுங்கிவிடும் உள் அனுபவப் பிரதிபலிப்பே கவிதைகளாக உள்ளன.

அகச்சலனமிலாத மனிதனும் உயிரினங்களும் இல்லையென்பது அறிவியல். அச்சலனத்தைப் பாடுபொருளாக்கித் தனிமையுணர்வோடு ஆன்மீகச் சாயலையும் உள்தெளிந்து, “இல்லாமையிலிருந்து தோற்றங்களைப் பெற்று” உலவ விடுவது கவிப்பாதையின் புதிய சுவடுகள்.

சோவியத் கவிஞன் ‘மயாகோவஸ்கி’யின் கவிதைகள் குறித்தானச் செறிவுமிக்க கட்டுரைக்கு இணையாகப் ‘படைத்தல்’ எனும் கட்டுரை விளங்குகிறது. படைப்பானது பல்வேறு உணர்வாளர்களிடம் பல்வேறு புரிதல்களுடன் எடுத்துச் சொல்வதுதான் உண்மை. கவிதை ஒரு அனுபவத்தூண்டல் மட்டுமே. படைப்பாளிகளின் ஒட்டுமொத்த அடிநிலைப்பாங்கையும் வாசகன் பெற்றுவிட எத்தனிப்பதுதான் கவிதையின் வெற்றி என்பது மாயையே. எழுத்தாளனுக்கும், எழுத்துக்கும் வாசகனுக்கும் இடையிலான முப்பரிமாணக் கூட்டு முயற்சியை இதைவிட யாரும் இதற்குமேல் இலக்கணம் வகுத்துவிட முடியாது. பல்வேறு கவிதைகள் ஒரு கருத்தை முன்வைக்கின்றன. தெளிவோடு இருந்தலென்பது சாயங்கராகவே இருப்பதாகப்படுகிறது. சாயம் வெளுக்கவும் அச்சாக இல்லாதிருக்கவும் தெளிவற்ற பாங்கோடு இருப்பதே சுகமாக இருக்கும். ‘தெளிவைத்தேடி பிடிவாதம் ஏறி பாமரப்பயிற்சிகளால்களைத்துப் போய் விடுதல்’ என்பது வாழ்க்கையாகிறது. யாருமற்ற சாயலும் சுயமும் தேடும் யாருக்குத்தான் தெளிவு கிடைத்திருக்கிறது? ஒவ்வொருவரும் அவரவருக்கென்று அவருக்குள் எதையோ பிறப்பித்துக் கொண்டு ‘இதுதான் நான்’ என்று கூறுவதல்லாமல் நானிருக்கின்றேன் என்ற தெளிவை ‘ஏற்பாடு’ கவிதை உணர்த்துகின்றது.

உலாவி வருவனயாகவும் உண்மையல்ல என்று மவுனம் சாதிப்பதும், வாழ்வைச் சாவினின்றிப் பிரித்துப் பாதுத்தும் நிகழ்ச்சியினூடே சலனமற்று இருந்தும், எதற்கும் வசப்படாதிருக்கும் அறியாமையை உணர்த்தும் உண்மைநிலை காணவேண்டும் என்று ஆன்மீகத் தடத்திலிருந்து வரும் புதிய கோணங்களாகவும் கவிதைகள் அமைத்து சிறப்பிக்கின்றன. தத்துவார்த்த கவிதைகளோ என எண்ணத் தோன்றும் பிரபஞ்ச ஞானக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாய்,

“பிரக்ஞையில்
அறா விழிப்பு
இரவிலிநெடு யுகம்
இடந்தொலைந்த ஆழ்வெளி
சிறையிருப்பது
காலமும் தான்
----------------------------


தன்நீள்சதுர உருவம்
மங்க மங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்”  (காலம்-அந்தரநடை)

எனும் கவிதையை கூறலாம். இருத்தலிசக் கவிதையை போல பல கவிதைகள் இனம் காட்டப் பெற்றிருக்கின்றன. தனிமனிதனின் அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே பாடு பொருளாகாது உலகப் பொதுமைக்குமுள்ள அவ்வுணர்ச்சிகளை  படையலாக்கித்; தருவதுதான் சிறந்த தன்னுணர்ச்சிப் பாடலாகும். அதைக் கவிதைத் தொகுதிகள் முழுமைக்கும் காண முடிகின்றது. ‘ஜோசப்பிராட்ஸ்கி’யின் உள்முகக் கவிதைக் கட்டுரைகளும், வர்சீனியா உல்ஃப், வான்கோக் போன்றறோர்களின் ஆன்மதரிசனக் கட்டுரைகளும் கலந்ததான கலவைத் தொகுதி எப்படியானதோ அதைப் போன்றது இவைகள்.

கலைக் காட்சித் தன்மை அல்லது படிமவடிவம் (ஊழnஉசநவநௌள யனெ iஅயபளைவ கழசஅ) கொண்ட கவிதையாக

“வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய் திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது”     (வயது-அந்தரநடை)

எனும் கவிதை காணப்படுகின்றது. கவிதைகளின் இடைஇடையே பல இலக்கிய வகைகளையும் கண்டு கொள்ள முடிகின்றது. ஹைக்கூ கவிதைகளின் அம்சத்தைத் தனக்குள் கொண்ட பல கவிதைகள் உள்ளன. உதாரணமாக

“எதிர் எதிர்
தன்னைத் தான் முட்டிக் கொண்டு
காற்று”

என்ற இக்கவிதையைக் கூறலாம். கவிதைகளில் ‘எங்கிருந்தோ, எங்கா, சூன்யம், இருள், ஆன்மா, பிரபஞ்சம், அனுபவம் எனச் சொற்கள் மிகுதியாகக் கையாளப் பெறுவதற்குக் காரணம் ஆசிரியருக்கு இச்சொற்களிலுள்ள இலயிப்பும், இச்சொற்கள் தரும் ஆழமான பொருள் விளக்க வெளிப்பாடுமாக இருக்கலாம். இச்சொற்களை ‘அபியின் மந்திரச் சொற்கள்’ எனலாம்.

‘ஒரு படைப்பாளியின் அகஉலகின் அலாதியான கூறுகளுக்கெல்லாம் இடமளிக்கும் வடிவமாகக் கவிதை இருந்தாலும் கூடவே அது பல சிக்கலான சவால்களையும் முன்வைக்கக் கூடியது’ என்ற வாதத்திற்கு அப்பாற்பட்டு வாசகமனத்திற்குத் தளமாற்றமாவதில் இக்கவிதைகள் வெற்றியடைந்திருக்கின்றன. பொருளும், அனுபவமும் உள்ளத்தில் வளையம் வளையமாக, கரும்புகைக்கு நடுவிலுள்ள வண்ணக்கலவையாகப் பதியமிடப்பட்டிருக்கின்றன. கவிதையெனும் வசீகரத்தில் மௌனத்தின் பிரச்சாரங்கள் உலா வரும்போது எழுவகைப் பெண்டிரானப் பிறதுறைக் கவிஞர்களும் காதலிக்காமல் இருக்க முடியுமா என்ன?

திருகிய-மனப்போக்குகளை, செயல்முறையிலும் சற்று சுழற்சியாகவே நடையிலும் ஒரு சிக்கல் தொனிக்க பேச்சு நிலைக்கும் முந்தின ஒரு மனவோட்டத்தை அதாவது பிரக்ஞை நிலைக்குப் பிந்தியும், திட்டவட்டமான நினைப்பாக சொல் உருவத்திற்குள் அடைப்படுவதற்கு முந்தியும் உள்ள உணர்வு நிலையை எடுத்துக் கொண்டு அதிலே கதாபாத்திரங்களின் அறிவு உணர்ச்சிப் பரிமாறுதல்களை, மோதல்களை, போராட்டங்களை சித்தரிப்பர்.

‘எழுத்து அனுபவங்கள்’ எனும் கட்டுரையில் சி.சு.செல்லப்பா அவர்கள் ‘லா.ச.ரா’வின் படைப்புக் குறித்து மேல் குறிப்பைக் கொடுத்திருக்கின்றார். இக்குறிப்பே அபியின் கவிதைப் பாதையாகவும் எனக்குத் தெரிகிறது. புதுமைப் புகுத்திய லா.ச.ராவும் அபியும், அந்தந்தத் துறையில் ‘பிதாமகராக’ இருக்கின்றார்கள்.
 
                                                 ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

------------------------ தமிழ்ப் பொழில் மாத இதழ் ஜீலை-2001 பக்-548-553
       
   
 
 

1 கருத்து:

  1. Google இல் ஏதோ தேடப்போய் இங்கு வந்தேன். கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்க வந்தவனுக்கு முத்து கிடைத்த ஆனந்தம்.
    நன்றி

    பதிலளிநீக்கு

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...