வெள்ளி, 3 ஏப்ரல், 2015

தேடல்


எதைத்   தேடினேன்?

000

கைவிடப்படும்   போதெல்லாம்
நுரையீரல்களில்
குளிர்  ததும்புகிறது

கடைசி வார்த்தைகளின்
சில துகள்கள் மட்டுமே
எழும்பித் திரிகின்றன

பின்வாங்கிப் போன உக்கிரம்
உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிற
சிறிய குழிகளை
விட்டுப் போயிருக்கிறது
000

தீர்மானித்துக்  கொண்டும்
தலைப்பிட்டுக்   கொண்டும்
ஆடம்பர அலைச்சல்
எதை அலைந்தேன்?

நாள் மாதம் வருஷம் எல்லாம்
அகன்று பரவத் தெரியாதவையாய்க்
கோடுபாய்ந்து போகின்றன

எங்கிருந்து எனத்தோண்டாது
மேலே கவியும் உரத்த அடர்த்தி
பிரக்ஞயின் வேரில்
பேசிக்கொண்டே நழுவி இறங்குகிறது

சுற்றிலும் திகைப்புகள்
இயல்பே என
ஒடுங்குகின்றன
000

திசைப் பாய்ச்சல் அற்று
இயக்கம் தன் உச்சியில்
உறைவு காண்கிறது

உள்னுழைய அறியாமல்
முதலும் முடிவும் மூச்சொன்றில்
கூம்பிச் சேர்ந்த அம்புனுனியில்
தேம்பி அடங்குகிறது
தேடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)

நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...