வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பிரிதல் - பிரிவுறுதல்

விரல்களிலிருந்து
இறங்கி வெளியேறி
அந்தப் பாதை
போய்க்கொண்டிருந்தது

அதன் கபடற்ற விறைப்பில் தெரிந்தது
அதனிடம் மர்மம் எதுவும்
இல்லை என்பது

வயல்வெளிகள் தாண்டி
தென்னந்தோப்புகள் தாண்டி
சுனை நிரம்பி வழியும்
ஓடைகளில் இறங்கி ஏறிப்
போனது

அதன் தயக்கமின்மையில் தெரிந்தது
அதனிடம் அர்த்தம் எதுவும்
இல்லை என்பது

மலைமீது பாதிதூரம் ஏறும்வரை
தெரிந்தது பிறகு
காடுகள் சூழ்ந்து
மறைந்துவிட்டன

அதன் மறைவில் தெரிந்தது
பிரிந்து சேரிந்து பிரியும்
யுகங்களின்
இருள் அரசாட்சி

விரல்கள் இப்போது
தவிக்கின்றன
வெளியுகத் தொடர்பு
துண்டிக்கப்பட்டு

விரல்கள் இப்போது
களிகொள்கின்றன
வெளியுகத் தொடர்பு
துண்டிக்கப்பட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)

நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...