திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடிந்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது

அடர்வனங்களின்
கூர்க்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்

உண்டு -- இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
00

காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக

என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைபொழுதை விடுவித்து --

காத்திருக்கிறேன்
மறு புறங்களிலிருந்து
வெற்றி   தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை நோக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

     சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற...