திங்கள், 6 ஏப்ரல், 2015

மாலை -- சருகுகளடிப் பொழுது

சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சுமுட்டிய
சுகம்,
எல்லாவற்றாலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததன்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்,
அறியாமையின் மீது
பதியப் பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,

பாட்டிமார் கண்ணிடுக்கில்
விரல் துடிப்பில்
சுருக்கங்களோடு கூடியிருந்த
எளிய அருமை ...

அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது
0-0

மறதியின் மதிப்பு உணராமல்
அதன் அரைவட்ட மூடிக்குள்
உலகளாவியிருந்திருக்கலாம்

பெயர் தெரியாத பறவிகளின்
அந்திப் படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்

சிறுமணிகளின்
இடையற ஒலிபோல் ஒரு கதகதப்பு
அஷ்தமனம் உதிர்த்த சருகுகளடியில்
படர்ந்திருக்கலாம்
0-0

எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞையின் வெற்றிடம்
மாலையின் தடவலில் இணங்கிக்கொள்ள

--அருமையாகவே கழிந்தது
சருகுகளடிப் பொழுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக